Monday, March 31, 2008

பாமகவே ஆட்சிக்கு வரட்டும்..கருணாநிதி

தமிழகத்தில் பாமகவே ஆட்சிக்கு வந்து கள்ளுக்கடை, பிராந்திக் கடைகளை ஒழித்துக் கட்டி கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்களைப் பிடித்து எண்ணைக் கொப்பரையில் போட்டுத் தண்டிக்கட்டும். எல்லாப் பெருமையும் அவர்களையே சேரட்டும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை,

கேள்வி: 2011ல் பா.ம.க. தலைமையிலான ஆட்சி அமையும் என்றும் அந்த ஆட்சியின் முதலமைச்சர் போடுகின்ற முதல் கையெழுத்து மது விலக்கு கொண்டு வரும் ஆணையாகத் தான் இருக்குமென்றும் பாமக தலைவர் கூறியுள்ளதைப் பற்றி?

பதில்: அந்த வாய்ப்பு அவருக்கு வர வேண்டும் என்பதற்காகத்தான், நாங்கள் மது விலக்கு பற்றி அவர் பேசுவதையெல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அவர்களே ஆட்சிக்கு வந்து கள்ளுக்கடை, பிராந்திக் கடைகளை ஒழிக் கட்டும். கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்களைப் பிடித்து எண்ணைக் கொப்பரையில் போட்டுத் தண்டிக்கட்டும். எல்லாப் பெருமையும் அவர்களையே சேரட்டும்.

கேள்வி: மத்திய பட் ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ரூ.60,000 கோடி பயிர்க்கடன் ரத்து. மயக்க மடைந்த விவசாயிக்கு முகத்தில் தெளிக்கும் தண்ணீரைப் போன்றதென்றும், இதனால் எந்தப்பலனும் இல்லை என்றும் பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் சொல்லியிருக்கிறாரே?

பதில்: மயக்கம் அடைந்தவன் முகத்தில் தண்ணீரைத் தெளித்து அவனை எழுப்புவது தான் முதல் கடமையாகும். அந்தக் கடமையை நிறைவேற்றிய மத்திய அரசைப் பாராட்டுவது தான் மனிதநேயப் பண்ணாடு. அதனால் எந்தப் பலனும் இல்லை என்று ஒரு 'டாக்டர்' சொல்லக்கூடாது!. மருத்துவ துறையின் பாலபாடமே 'முதல் உதவிதானே''!!

கேள்வி: திமுக அமைச்சர்கள், சரித்திரம் தெரியாமல் பேசுகிறார்கள் என்று ஒரு தலைவர் கூறியிருக்கிறாரே?

பதில்: திமுக அமைச்சர்களுக்கு மட்டுமல்ல, திமுகவின் சாதாரண தொண்டனுக்கும் கூட சரித்திரம் மிகத் தெளிவாகவே தெரியும்; உதாரணம் வேண்டுமானால்- மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்ற ஆணையிட்டதற்காகப் பிரதமர் பதவி யிலிருந்து இறங்கும் நிலை பெற்ற வி.பி.சிங்குக்கு தமிழ்நாட்டில் திமுக சிவப்புக் கம்பள வரவேற்பு வழங்கி மாநில முழுவதும் பிரமாண்டமான கூட்டங்களை நடத்திய போது, வி.பி.சிங் கூட்டத்திற்கு யாரும் போகக் கூடாது, வீட்டிலிருந்து கூட அவரை யாரும் பார்க்கவும் கூடாது. கதவையும் திறக்க கூடாது என்று ஆணையிட்டு அறிக்கை விட்ட ஜனநாகத் தலைவர் ஒருவரும் தமிழகச் சரித்திரத்தில் இடம் பெற்றவர்தான் என்பதை அவர்கள் அறிவார்கள்.

கேள்வி: அண்மையில் பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு வழங்கும் நிவாரணத் தொகையை ஏக்கருக்கு ரூ. 7,000 உயர்த்தித் தர வேண்டுமென்று தமிழகக் காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி சொல்லியிருக்கிறாரே?

பதில்: தமிழக அரசு தன்னால் முடிந்த அளவிற்கு நிவாரணத் தொகையை உயர்த்தியுள்ள நிலையில், மத்திய அரசில் பிரதான ஆளுங்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர், மத்திய அரசிடமும், பிரதமரிடமும், சோனியா காந்தியிடமும் வலியுறுத்தி மத்திய அரசின் மூலமாக அவர் கோருகின்ற தொகையைப் பெற்றுத் தந்தால் அவர் தெரிவித்த ஆலோசனையை சுலபமாக நிறைவேற்றிட இயலும். சொல்வது சுலபம், செய்வது கடினம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

நன்றி: Thatstamil