Tuesday, November 3, 2009

செயல்படாத எதிர்கட்சித் தலைவர்கள் - முதலிடம் ஜெ.

இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் வரலாறு காணாத வகையில் செயலிழந்து போயுள்ளன அல்லது சிதறிப் போய்க் கிடக்கின்றன. இதனால் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் ஆளுங்கட்களின் செயல்பாடுகள் கேட்க நாதியில்லாமல் இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

உட்கட்சிப் பூசல், கூட்டணிக் கட்சிகளை சமாளிப்பதில் ஏற்படும் சிரமங்கள், ஆளுங்கட்சிகளின் ஆதிக்கம் அதிகரித்திருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் எதிர்க்கட்சிகளுக்கு இப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டிருப்பதாக அரசியல் திறனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து டெல்லி பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறை தலைவர் பித்யூத் சக்ரவர்த்தி கூறுகையில், இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் முழுமையாக சிதறிப் போய்க் கிடக்கின்றன.

மத்தியிலும் கூட இதே நிலைதான். எதிர்க்கட்சி என்பது அரசைக் கட்டுப்படுத்துவதில், கண்காணிப்பதில் கடிவாளம் போல இருக்கும் என்ற தோற்றம் தற்போது மறைந்து விட்டது. மத்தியிலும் சரி, மாநிலங்களிலும் சரி எதிர்க்கட்சிகள் செயலிழந்து போய்க் கிடக்கின்றன.

மத்தியப் பிரதேசத்தில், 2வது முறையாக பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆனால் திறமையாக செயல்பட வேண்டிய காங்கிரஸ் அங்கு உட்கட்சிப் பூசலில் சிக்கித் தவிப்பதால் எதிர்க்கட்சியாக அதன் செயல்பாடு பூஜ்யமாக உள்ளது.

ராஜஸ்தானில், அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசின் செயல்பாடுகளுக்கு நிகராக எதிர்க்கட்சியான பாஜக இல்லை. தேங்கிப் போய்க் கிடக்கிறது பாஜக.

தமிழகத்தில் நிலைமை மிக மோசமாக உள்ளது. இங்கு கிட்டத்தட்ட எதிர்க்கட்சியே இல்லாத அளவுக்கு தோற்றம் அளிக்கிறது. வழக்கமான முறையிலான எதிர்ப்புகளையோ அல்லது போராட்டங்களையோ, அரசின் மீதான விமர்சனங்களோ கூட இங்கு கேட்பதில்லை. அடுத்து வரப் போகும் சட்டசபைத் தேர்தல் குறித்தும், இடைத் தேர்தல் குறித்தும், கூட்டணிகள் குறித்துமே அத்தனை பேரும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த ஆறு மாதங்களாகவே முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவின் தலைவர் சென்னையில் இல்லை. சமீபத்தில்தான் அவர் கொடநாடு போய் திரும்பி வந்தார்.

பிரதான எதிர்க்கட்சியின் செயல்பாடு கடந்த ஆறு மாதங்களாக இல்லாததால் திமுக அரசின் செயல்பாடு எந்தவிதத்திலும் பாதிப்பை சந்திக்கவில்லை. கிட்டத்தட்ட எதிர்ப்பே இல்லாமல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது திமுக. மேலும் வெற்று அறிக்கைகள் மூலம் மட்டுமே அரசை விமர்சித்து வரும் ஜெயலலிதாவால் ஆளும் கட்சி்க்கு எந்த நெருக்கடியும் இல்லை.

இதேபோல கர்நாடகத்திலும், ஆந்திராவிலும் முறையே காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகியவை திறமையான எதிர்க்கட்சிகளாக செயல்படாத நிலை காணப்படுகிறது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் இன்னும் முழுமையான எதிர்க்கட்சியாக செயல்படாமலேயே உள்ளது என்றார் சக்ரவர்த்தி.

அதேசமயம், மேற்கு வங்கம், உ.பி ஆகிய மாநிலங்களில் எதிர்க்கட்களின் செயல்பாடுகள் சுறுசுறுப்பாக உள்ளன. ஆனால், திரிணமூல் காங்கிரஸ் அரசின் தவறுகளை விமர்சிப்பதற்குப் பதில், வளர்ச்சி நடவடிக்கைகளை ஸ்தம்பிக்க வைக்கும் வகையில் செயல்படுவதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதேபோலத்தான் உ.பியில் சமாஜ்வாடிக் கட்சி ஆக்கப்பூர்வமாக செயல்படாமல், வளர்ச்சி நடவடிக்கைகளே செயல்படாத வகையில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

மேற்கு வங்க அரசு எதைச் செய்தாலும் அதைக் கடுமையாக எதிர்க்கிறார் மமதா பானர்ஜி. இதனால் அங்கு வளர்ச்சி நடவடிக்கைள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.

இந்தியாவிலேயே உருப்படியான எதிர்க்கட்சி உள்ள மாநிலம் எது என்றால் ஜம்மு காஷ்மீரைத்தான் சொல்கிறார்கள் அரசியல் நிபுணர்கள். அங்கு மெஹபூபா முக்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி தேவையில்லாத பிரச்சினகைளுக்கெல்லாம் போராட்டம் நடத்தாமல், மக்கள் விரோத நடவடிக்கைகளை மட்டுமே எதிர்த்து அரசியல் செய்து வருகிறது.

தீவிரவாத மனப்போக்குள்ளவர்களையும், தேசியத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களையும் அனுசரித்து நடந்து கொள்கிறது மக்கள் ஜனநாயகக் கட்சி. இன்னும் சொல்லப் போனால் தீவிரவாத மனப்போக்குள்ளவர்களை மாற்றி தேசியத்திற்கு அது அழைத்து வரும் பணியையும் கூடவே செய்கிறது.

மக்கள் ஜனநாயகக் கட்சி எப்போதும் விழிப்புடன் இருப்பதால் ஆளுங்கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சி தவறுகள் செய்யாமல் தவிர்ப்பதில் அக்கறையுடன் உள்ளது. இப்படி ஆளுங்கட்சி தனது பணியில் கவனத்துடன் இருப்பதாலும், எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி ஆளுங்கட்சியை தொடர்ந்து கண்காணித்து வருவதாலும் அங்கு தவறுகள் நடப்பது வெகுவாக குறைந்துள்ளது.

கடந்த 2002ம் ஆண்டிலிருந்தே ஜம்மு காஷ்மீரில் எதிர்கட்சிகளின் செயல்பாடுகள் சிறப்பாகவே உள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

செய்தி: நன்றி:தட்ஸ்தமிழ்

Sunday, October 25, 2009

தன் முகமூடியை தானே கிழித்த கருணாநிதி - ஜெ

கலைஞர் உயிர் காக்கும் திட்டம் தொடர்பான விளம்பரத்தில் எம தர்மனின் படத்தை வெளியிட்டதன் மூலம் முதல்வர் கருணாநிதியின் கடவுள் நம்பிக்கை வெளிப்பட்டுள்ளது. இதன் மூலம் தன் முகமூடியை தானே கிழித்துக் கொண்டுள்ளார் கருணாநிதி என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

பெரியாரின் பகுத்தறிவுப் பாசறையில் படித்தவர், காஞ்சிப் பாசறையில் வளர்ந்தவர் என்று தனக்குத்தானே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் கருணாநிதி, தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தில் எமதர்மர் உயிரைப் பறிப்பதைப் போலவும், அதை இவர் தடுப்பது போலவும் சித்தரித்து தன்னுடைய முகமூடியை தானே கிழித்துக் கொண்டு தன்னுடைய சுயரூபத்தை தன்னுடைய உண்மைத் தன்மையை தானே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

குங்குமப் பொட்டு வைத்துக் கொள்ளும் திமுகவினரையும், தீ மிதிக்கும் கட்சிக்காரர்கள் மற்றும் அமைச்சர்களையும் அவ்வப்போது கண்டிப்பதோடு மட்டுமல்லாமல், இந்து சமயக் கடவுள்களை கொச்சைப் படுத்தியும், நிந்தித்தும் தன்னை ஒரு நாத்திகர் போல் காட்டிக் கொண்டிருந்தார் கருணாநிதி.

ஆனால் கருணாநிதி குடும்பத்தினரோ இறைவழிபாட்டில் தனிக் கவனம் செலுத்துவதிலும், ஜோதிடர்களை கலந்தாலோசித்து அவர்கள் சொல்லும் பரிகாரங்கள் அத்தனையையும் செய்வதிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்து வருகின்றனர்.

கருணாநிதி மஞ்சள் துண்டு அணிவதும் இதனால் ஏற்பட்டதே. அதனால்தான் மஞ்சள் துண்டு அணிவதன் மர்மத்தை கருணாநிதி இன்று வரை வெளிப்படுத்தவில்லை. பகுத்தறிவு பாசறையில் வளர்ந்தவர் என்றால் கருப்பு துண்டுதானே அணிய வேண்டும் என்று பலர் வினாக்களை எழுப்பியும் அதற்கு சரியான விளக்கத்தை கருணாநிதி இன்று வரை அளிக்கவில்லை.

கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் குலதெய்வம் கோயிலுக்குச் சென்று வழிபட்டதை பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டன.

இவருடைய வேடத்தை மெய்ப்பிக்கும் விதமாக திருக்குவளையில் உள்ள அங்காளபரமேஸ்வரி கோயில் சார்பில் அளிக்கப்பட்ட பூரண கும்ப மரியாதையை கருணாநிதி பெற்றுக் கொண்ட காட்சிகள் புகைப்படத்துடன் பத்திரிகைகளில் வெளிவந்தன.

ஆனால் தற்போது பகுத்தறிவுக் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிராக எமதர்மர் உயிரை பறிப்பது போலவும், அதை கருணாநிதி தடுப்பது போலவும் தமிழக அரசு சார்பில் விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது.

இவ்வளவு நாள் இலைமறை, காய்மறையாக இருந்த கருணாநிதியின் கடவுள் நம்பிக்கை தற்போது வெட்டவெளிச் சத்திற்கு வந்திருக்கிறது. தனது முகமூடியை தானே கிழித்துக் கொண்டிருக்கிறார்.

தானும், தன் குடும்ப உறுப்பினர்களும் தொடர்ந்து வளம் கொழிக்கும் அரசுப் பதவிகளை வகிக்க வேண்டும். அதன் மூலம் உலகப் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் இடம் பெற வேண்டும், என்பதுதான் கருணாநிதியின் ஒரே குறிக்கோள், ஒரே கொள்கை.

இதற்காக எந்தக் கொள்கையையும் கருணாநிதி விட்டுவிடத் தயாராக இருக்கிறார் என்பது அவருடைய நடவடிக்கைகளின் மூலம் தெளிவாகத் தெரிகிறது. அதனுடைய உச்சக்கட்டம்தான் உயிரைப் பறிக்கும் எமதர்மனையே தடுப்பவராக தன்னை காட்டிக் கொண்டிருக்கிறார். இதன் மூலம்தான் கொள்கை பிடிப்பு இல்லாதவர், உறுதியற்ற தன்மை உடையவர் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தான் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காக அண்ணாவின் கொள்கைகளையும், பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளையும், ஜனநாயகக் கோட்பாடுகளையும், தமிழர்களின் உரிமைகளையும் குழிதோண்டிப் புதைத்துக் கொண்டிருப்பவர் தானே கருணாநிதி .கருணாநிதியின் இந்த இரட்டை வேடத்தை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? என்று கேட்டுள்ளார் ஜெயலலிதா


செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்

Wednesday, October 21, 2009

காலம் / எருமை மாடு படம் போட்டு 'கலைஞர் காப்பீட்டுத் திட்டம்'

காலம் / எருமை மாடு படம் எல்லாம் போட்டு 'கலைஞர் காப்பீட்டுத் திட்டம்'

காலம் ? காலன் ??

திட்டம் நல்ல திட்டம் தான். ஆனா அரசு எமன்/எருமை படம் எல்லாம் போட்டு ? அதுவும் பகுத்தறிவு பேசும் அரசு ? தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாத அரசு ? ஹும்.




படம்: நன்றி: தினகரன்

அதிமுகவுடன் கூட்டணி இல்லை - கம்யூனிஸ்ட் கட்சிகள்

அதிமுகவுடன் இடது சாரி கட்சிகளுக்கு நிரந்தரமான கூட்டணி இல்லை என்றும் நாடாளுமன்ற தேர்தலில் வெறும் தேர்தல் உடன்பாடு மட்டுமே வைத்துக் கொண்டன என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்து உள்ளன.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக, இடது சாரி கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிட்டன.எனினும், இந்தக் கூட்டணி தேர்தலில் பெரிய அளவுக்கு வெற்றி பெற முடியவில்லை.

இதனையடுத்து, பாமக அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தது. இது பற்றி அண்மையில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதிமுக கூட்டணியிலிருந்து பாமக வெளியேறியதால் எந்த பாதிப்பும் இல்லை என்று ஜெயலலிதா பதில் அளித்தார். இடதுசாரி கட்சிகள் கூட்டணியில் இருக்கின்றனவா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, இது பற்றி நீங்கள் அவர்களைத்தான் கேட்க வேண்டும் என கூறினார்.

இந்நிலையில் கூட்டணி பற்றி ஜெயலலிதா கூறிய கருத்துக்களுக்கு பதில் அளிக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன், அதிமுகவுடன் செய்து கொண்ட உடன்பாடு கடந்த தேர்தலுடன் முடிந்து விட்டது என்று கூறினார்.அது தேர்தல் உடன்பாடே தவிர கூட்டணி அல்ல என்று அவர் தெரிவித்தார்.

மத்திய, மாநில அரசுகள் மக்கள் விரோத போக்கை கடைபிடித்தால் இடதுசாரி கட்சிகள் ஒத்த கருத்துக்கள் உள்ள கட்சியுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் என்று வரதராஜன் கூறினார்.

இதுபற்றி கருத்து தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், கடந்த தேர்தலில் தனது கட்சி அதிமுகவுடன் வெறும் தொகுதி உடன்பாடு மட்டுமே வைத்துக்கொண்டது என்றும், அக்கட்சியுடன் நிரந்தர கூட்டணி ஏதுமில்லை என்றும் பதில் அளித்தார்.

ஏற்கனவே பாமக வெளியேறி விட்ட நிலையில் அதிமுக கூட்டணியில் இடதுசாரி கட்சிகளும் இல்லை என்று தெளிவாகியிருப்பதையடுத்து அந்த கூட்டணியில் தற்போது மதிமுக மட்டுமே உள்ளது.

செய்தி: நன்றி: மாலைச்சுடர்

Thursday, October 15, 2009

எம்பிக்கள் பயணத்தின் பின்னணி

திமுக கூட்டணி எம்பிக்களின் இலங்கை பயணத்தின் பின்னணி பற்றிய பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பயணத்துக்கு முன்பு இலங்கை அதிபர் ராஜபக்சே பல்வேறு நிபந்தனைகளுடன் முதலமைச்சர் கருணாநிதிக்கு எழுதிய கடிதம் பற்றியும் தற்போது தெரிய வந்துள்ளது..
.
இலங்கையில் முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள தமிழர்களை சந்திப்பதற்காக இலங்கை சென்ற திமுக கூட்டணி எம்பிக்கள் குழு நேற்று சென்னை திரும்பியது.

சர்வதேச அளவில் கடும் நெருக்கடி எழுந்த போதும், முகாம்களில் உள்ள தமிழர்களை சந்திக்க இதுவரை யாரையும் அனுமதிக்காமல் இருந்த அதிபர் ராஜபக்சே, தமிழக எம்பிக்கள் குழுவை மட்டும் எப்படி அனுமதித்தார் என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் தற்போது கசியத் தொடங்கியுள்ளன.

இது தொடர்பாக இலங்கை அதிபர் ராஜபக்சே அண்மையில் முதலமைச்சர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் இந்திய அரசின் சார்பாகவும், தமிழக அரசின் சார்பாகவும் பிரதிநிதிகளை அனுப்பினால் அவர்களை முகாம்களில் உள்ள தமிழர்களை சந்தித்து நிலைமைகளை கண்டறிய அனுமதி அளிப்பதாக ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இந்த பிரதிநிதிகள் குழுவில் தமிழக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளோ, தமிழர் அமைப்பின் பிரதிநிதிகளோ இடம் பெறக்கூடாது என்று அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாக தெரிகிறது.இந்த கடிதத்தை முதலமைச்சர் கருணாநிதி, பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதன் பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் சென்னை வந்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்பின் போது இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழு , இந்திய அரசின் சார்பாகவோ, தமிழக அரசின் சார்பாகவோ செல்லத் தேவையில்லை என்று சிதம்பரத்தின் வாயிலாக முதலமைச்சரிடம் பிரதமர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதன்படி திமுககாங்கிரஸ் ஆகிய கட்சிகளின் எம்.பி.க்கள் இக்குழுவில் இடம் பெற்றனர். அதே சமயம் இக்குழுவில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இடம்பெற காங்கிரஸ் தரப்பில் முதலில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.

கூட்டணி கட்சியின் தலைவர் என்ற முறையில் அவரை குழுவில் இடம் பெற செய்ய டெல்லியில் பேசி முதலமைச்சர் கருணாநிதி அனுமதி பெற்று தந்ததாக கூறப்படுகிறது. அந்த அடிப்படையிலேயே தமிழக எம்பிக்கள் குழுவில் திருமாவளவன் இடம் பெற்றார் எனத் தெரிகிறது. இந்த எம்.பி.க்கள் குழு இலங்கை செல்லும் முன் கருணாநிதியை சந்தித்துப் பேசினர்.

அப்போது இலங்கையில் அந்நாட்டு அரசுப் பிரதிநிதிகள் வழிகாட்டுதலின் பேரில்தான் செயல்பட வேண்டும் என்றும், அங்கு யாரையும் தன்னிச்சையாக சந்தித்து பேசவோ, விவரங்களை சேகரிக்கவோ கூடாது என்றும் பத்திரிகையாளர்கள் யாரையும் சந்தித்து பேசக்கூடாது என்றும் கருணாநிதி எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.

குறிப்பாக திருமாவளவனை எம்.பி.க்கள் குழுவை விட்டு எங்கும் வெளியே போகக்கூடாது என்று முதல்வர் தெரிவித்து அனுப்பியதாக பரபரப்பாக பேசப்படுகிறது.

5 நாள் சுற்றுப்பயணம் முடிந்து சென்னை திரும்பிய எம்.பி.க்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசக்கூடாது என்பதற்காகவே கருணாநிதி விமான நிலையத்திற்கு முன்கூட்டியே சென்று சுமார் 40 நிமிடம் காத்திருந்து அவர்களை அழைத்து கொண்டு அறிவாலயம் வந்ததாகவும் கூறப்படுகிறது.

அந்த குழு வந்த சிறிது நேரத்திலேயே அவர்கள் யாரையும் பத்திரிகையாளர்களை சந்திக்க அனுமதிக்காமல் முதலமைச்சர் கருணாநிதி நிருபர்களை சந்தித்து பேசியதிலும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

5 நாட்கள் பயண விவரங்களை எம்.பி.க்கள் குழு வந்த 40 நிமிடத்திலேயே எப்படி அறிக்கையாக தயாரித்து தர முடிந்தது என்ற கேள்வியும் பலமாக எழுந்துள்ளது. இது தொடர்பாக திருமாவளவனை பத்திரிகையாளர்கள் தொடர்பு கொண்டு பேச முயன்றுள்ளனர். ஆனால் பத்திரிகையாளர்களால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இந்த நிகழ்வுகளை எல்லாம் ஒட்டுமொத்தமாக வைத்து பார்க்கும் போது தமிழக எம்பிக்கள் குழுவின் இலங்கை பயணம் அந்நாட்டு அரசுக்கு சார்பாக திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கை என்றே அரசியல் பொது நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்

செய்தி: நன்றி: மாலைச்சுடர்

Wednesday, October 14, 2009

திமுக- காங்கிரஸ் எம்.பிக்கள் with ராஜபக்சே

இலங்கை சென்றுள்ள திமுக - காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் எம்.பிக்கள் குழுவினர் அதிபர் ராஜபக்சேவை சந்தித்து அளவளாவினர். அவருக்குப் பொன்னாடை போர்த்தினர். தமிழ் மக்களை விரைவில் அவரவர் இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

அப்போது தமிழர் பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றிய பிறகே முகாம்களில் வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அந்தப் பகுதிகளில் மீண்டும் குடியமர்த்தப்படுவர் என தமிழக குழுவிடம் ராஜபக்சே தெரிவித்தார்.

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பல்வேறு முகாம்களில் உள்ளனர். அவர்களின் நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக திமுக கூட்டணி எம்.பி.க்கள் குழுவினர் கடந்த 10ஆம் தேதி மதியம் கொழும்பு புறப்பட்டுச் சென்றனர்.

முதலில் விடுதலைப்புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்கள் குழுவினருடன் ஆலோசனை நடத்திய தமிழக குழுவினர், கடந்த 11ஆம் தேதி யாழ்ப்பாணம் சென்று, தமிழ் மக்களிடம் குறை கேட்டனர்.

மாலையில், வவுனியாவில் உள்ள மானிக் பார்ம் வளாகத்தில் உள்ள 5 முகாம்களில் தங்கி இருக்கும் தமிழர்களை தமிழக குழுவினர் பார்வையிட்டனர். 5 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆய்வு நிகழ்ச்சி, முழுமையாக வீடியோ படமாக எடுக்கப்பட்டது. பின்னர் குழுவினர் பல பிரிவுகளாக சென்று தமிழ் அகதிகளிடம் குறை கேட்டனர்.

பின்னர் இந்திய வம்சாவளி தமிழ் தொழிலாளர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மலையகப்பகுதிக்கு தமிழக குழுவினர் திங்கட்கிழமை சென்றிருந்தனர். இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அழைப்பின் பேரில் அங்கு சென்றனர்.

திங்கள்கிழமை ஹட்டன் நகருக்கு வந்து சேர்ந்த அவர்களுக்கு, வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் திரண்டு வந்து வரவேற்பு கொடுத்தனர்.

தேயிலை தோட்டங்கள் நிறைந்த நுவரேலியாவுக்கும் தமிழக குழுவினர் சென்றனர். தொண்டமான் பெயரில் அமைந்துள்ள தோட்டப்பயிர் பயிற்சி மையத்தையும் குழுவினர் பார்வையிட்டனர். இரவில், மலையக பகுதியில் தமிழக குழுவினர் தங்கினார்கள்.

அதிபர் ராஜபக்சேவை தமிழக குழுவினர் திங்கட்கிழமை சந்தித்து பேசுவதாக இருந்தது. அதில் மாற்றம் செய்யப்பட்டு, நேற்று அந்த சந்திப்பு நடந்தது.

ராஜபக்சேவை சந்தித்த திமுக - காங்கிரஸ் கூட்டணிக் குழுவினரை ராஜபக்சே, அவரது தம்பி பசில் ராஜபக்சே ஆகியோர் வரவேற்றனர். ராஜபக்சேவுக்கு தமிழக குழுவினர் பொன்னாடை போர்த்தினர். பசில் ராஜபக்சேவை, டி.ஆர். பாலு, கட்டித் தழுவிக் கொண்டார்.

தமிழர்களை அவர்களது சொந்த இடங்களில் விரைவில் குடியமர்த்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பின்னர் திமுக - காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் எம்பிக்கள் ராஜபக்சேவிடம் வலியுறுத்தினர். சந்திப்பின் போது இலங்கை அமைச்சர் [^] ஆறுமுகம் தொண்டமானும் உடனிருந்தார்.

முகாம் நிலை குறித்து திருப்தி!:

இந்த சந்திப்பு குறித்து இலங்கை அரசின் தகவல் தொடர்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், அதிபரை சந்தித்த தமிழக குழுவினர், இடம் பெயர்ந்தோருக்கான அகதிகள் முகாம்கலில் உள்ள வசதிகள் குறித்து திருப்தி தெரிவித்துக் கொண்டனர்.

தங்களுக்கு இலங்கைக்கு வருவதற்கு அழைப்பு விடுத்ததற்காகவும், போதிய ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தற்காகவும் அவர்கள் அதிருபருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். தங்களை சந்திக்க அனுமதி அளித்ததற்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

தமிழ் மக்களை மறு குடியமர்த்தும் நடவடிக்கையை வேகப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர்கள், அதுதொடர்பாக இலங்கை அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகளையும் பாராட்டினர்.

மழைக்காலம் நெருங்கி வருவதால், அதற்குள் தமிழர்களை இடம் பெயரச் செய்ய வேண்டியது அவசியம் என்றும் திமுக - காங்கிரஸ் [^] கூட்டணிக் குழுவினர் அதிபரைக் கேட்டுக் கொண்டனர். அதற்குத் தேவையான நடவடிக்கை [^]கள் எடுக்கப்பட்டுள்ளதாக ராஜபக்சே தெரிவித்தார்.

அவர்களிடம் அதிபர் பேசுகையில், எந்தவகையான தீர்வாக இருந்தாலும் அது அனைத்து சமுதாயத்தினராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும்.

இலங்கை பன்முக இனப் பிரிவுகளால் ஆன ஒரு நாடாகும். கொழும்பு நகரில் கிட்டத்தட்ட 65 ஆயிரம் தமிழர்கள் [^] வாழ்கிறார்கள்.

தமிழகத்திலிருந்து எம்.பிக்கள் குழு வந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. இங்குள்ள மக்களின் நிலையை நீங்களே வந்து பார்த்து புரிந்து கொள்வது அவசியமாகும். ஏனென்றால் இடம் பெயர்ந்தோர் முகாம்கள் குறித்து வெளியில் அவதூறு பரப்பப்படுகிறது. விஷமப் பிரசாரம் செய்து வருகிறார்கள். தவறான தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதை சரி பார்த்துக் கொள்ள இந்தப் பயணம் உதவியிருக்கும் என்றார்.

பின்னர் அதிபரின் ஆலோசகரும், தம்பியுமான பசில் ராஜபக்சே கூறுகையில், இன்னும் 2 நாட்களில் முகாம்களில் உள்ள இட நெருக்கடி, கூட்ட நெரிசல் குறையும் என்றார்.

செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்

Friday, October 9, 2009

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு


செய்தி: நன்றி:

Times of India

BBC

Thatstamil

அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு

2009ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபர் [^] பாரக் ஒபாமாவுக்கு வழங்கப்படுகிறது.

அமைதி நோபல் பரிசுக்காக மொத்தம் 205 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. அதிலிருந்து பாரக் ஒபாமாவை நோபல் விருதுக் கமிட்டி தேர்வு செய்து அறிவித்துள்ளது.

இதுகுறித்து நோபல் கமிட்டி வெளியிட்டுள்ள செய்தியில், மக்களுக்கிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தியமைக்காகவும், சர்வதேச ரீதியில், அணு ஆயுதப் பரவலைத் தடுக்க பாடுபட்டமைக்காகவும், சர்வதேச நாடுகளிடையே நல்லெண்ணத்தை உருவாக்க பாடுபட்டமைக்காகவும் பாரக் ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசு பெறும் ஒபாமாவுக்கு 1.4 மில்லியன் டாலர் பரிசும், தங்கப் பதக்கமும், சான்றிதழும் வழங்கப்படும்.