இனியும் இந்த வீட்டில் இருக்கக் கூடாது. ஆட்சிக்கும், உயிருக்கும் ஆபத்து என்று ஜோதிடர் கூறியதால்தான் கோபாலபுரம் வீட்டை தானம் தருவதாக கூறி அங்கிருந்து வெளியேறப் போகிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
திருமணங்களை நடத்தி வைத்து ஜெயலலிதா பேசுகையில் சிறுதாவூர் நிலப் பிரச்சினை, தன் மீதான வழக்குகள், முதல்வர் கருணாநிதி தனது கோபாலபுரம் வீட்டை மருத்துவமனையாக மாற்றுவதன் பின்னணி, புதிய சட்டசபைக் கட்டடத்திற்கு அவசரம் அவசரமாக மாறியதற்கான பின்னணி உள்ளிட்டவை குறித்து பரபரப்பாக பேசினார்.
ஜெ.வின் பேச்சிலிருந்து சில பகுதிகள்..
வாழ்க்கை என்பதே ஒரு சவால். வெற்றி - தோல்வி, இன்பம் - துன்பம், சாதகம் - பாதகம் ஆகியவை, கலந்தது தான் வாழ்க்கை. வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை, துணிச்சலுடன் எதிர்கொள்ள, நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். பிரச்சினைகளைக் கண்டு, துவண்டு விடக் கூடாது. அவற்றை துணிவுடன் எதிர்த்தால், வெற்றி நிச்சயம்.
சவால்களை எதிர்கொள்ளும் மனோபாவம் தான், வெற்றிக்கு வழி வகுக்கும். சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றல், பாரதிக்கு இருந்ததால் தான், அவர் மகாகவியானார். பகுத்தறிவுக் கொள்கைகளை, மக்களிடம் துணிந்து பரப்பியவர், தந்தை பெரியார்.
வாழ்க்கை என்ற பயணத்தில், எல்லாமே நமக்கு சாதகமாக நடந்துவிட்டால், பிரச்சினை இல்லை. ஆனால், அப்படிப்பட்ட வாழ்க்கை, யாருக்கும் அமைவதில்லை. சவால்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. அந்தச் சவால்களையே நமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்வது தான், வாழ்க்கையில் வெற்றி அடையும் ரகசியம்.
சவாலை எதிர்த்து போராடும் துணிவே, நம்மை வாழ வைக்கிறது. இன்று வாழ்க்கையை தொடங்கியிருக்கும், 5 திருமண ஜோடிகளுக்கு மட்டுமல்ல, இன்றைய அரசியலுக்கும் பொருந்தும்.
திடீரென்று கருணாநிதி தான் வள்ளலாகி மாறிவிட்டதாக ஒரு தோற்றம் அளிக்கப்பார்க்கிறார். தான் குடியிருக்கும் வீட்டையே தானம் செய்யப் போகிறாராம். முதலில் என்னுடைய காலத்திற்குப் பிறகு, என் மனைவி காலத்திற்குப் பிறகு என்று சொன்னவர் இப்போது ஒரு ஜோதிடர் கூறிய அறிவுரையை கேட்டு அவசர அவசரமாக வீட்டை விட்டு வெளியேறி வேறு எங்கோ குடியேறப்போகிறார்.
இந்த வீட்டில் ஜூன் மாதத்திற்கு மேல் தங்கக் கூடாது. அப்படி தங்கினால் ஆட்சி பறி போய் விடும் என்பதால்தான் அவசரம் அவசரமாக இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதேபோல, திடீரென்று அரைகுறையாக ஒரு புதிய தலைமை செயலகம் சட்டமன்ற வளாகம் திறக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய கட்டிடத்தை அவசர கதியில் யாராவது கட்ட நினைப்பார்களா?. சென்னைக்கு திருஷ்டிப் பரிகாரமாக அமைந்திருக்கிறது இந்தக் கட்டிடம். கேரளா மாநிலத்தில் அவ்வளவு கலை ரசனையோடு பண்பாட்டிற்கு ஏற்றவாறு அழகான ஒரு கட்டிடத்தைக் கட்டி இருக்கிறார்கள். அங்கே தான் சட்டப் பேரவையும், தலைமைச் செயலகமும் செயல்படுகிறது. கர்நாடகாவைப் பாருங்கள், விதான சவுதா, காலாகாலத்திற்கு கம்பீரமாக தோற்றமளித்து மெஜஸ்ட்டிக்காக நிற்கிறது.
ஆனால் கருணாநிதியிடம் ஒரு ஜோதிடர், பழைய சட்டமன்றத்தில் ஜூன் மாதத்திற்கு மேல் தங்கினால் ஆட்சி பறி போய் விடும். மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கே வர முடியாது என்று கூறியுள்ளார். இதனால்தான் அவசர அவசரமாக கட்டி முடிக்கப்படாத ஒரு கட்டிடத்தை கட்டி முடித்ததாக அறிவித்து திறப்பு விழா நடத்தி அங்கே போய் சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த இரு மாற்றங்களிலும் கருணாநிதியிடம் பொதுநலம் தெரியவில்லை. மாறாக சுயநலம்தான் மேலோங்கி நிற்கிறது.
என் மீது புனைந்த சொத்துக் குவிப்பு வழக்கை நான் தாமதப்படுத்தி 13 ஆண்டுகளாக என்னால் தான் தாமதப்படுத்தப்பட்டு இன்னும் நடந்து கொண்டிருக்கிறதாம். 1997-ம் ஆண்டில் கருணாநிதி முதல்-அமைச்சராக வந்த போது இந்த வழக்கை என் மீது போட்டார். அதன் பிறகு 1997-ல் இருந்து 2001-ம் ஆண்டு வரை அவர் தானே முதல்-அமைச்சராக இருந்தார். அப்போது ஏன் இந்த வழக்கை முடிக்கவில்லை?
2001-ம் ஆண்டு நான் மீண்டும் ஆட்சியைப் பிடித்து முதலமைச்சராக வந்தேன். நான் நினைத்திருந்தால் என் மீது புனைந்த வழக்குகளை எல்லாம் வாபஸ் பெற்றிருக்க முடியாதா?. ரத்து செய்திருக்க முடியாதா?. ஒரு நொடிப் பொழுதில் செய்திருக்க முடியும்.
1997 முதல் 2001 வரை 4 ஆண்டு காலம் கருணாநிதி ஆட்சியில் இருந்த போது அவர் தான் அந்த வழக்கை முடிக்காமல் தாமதப்படுத்தினார். பின் 2001-ல் நான் முதல்-அமைச்சர் ஆனேன். 2003-ம் ஆண்டு அந்த வழக்கு முடியும் தருவாய்க்கு வந்துவிட்டது.
அப்போது திடீரென்று தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் பெயரில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு போட்டு, இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று மனு செய்தார்கள். அதனால் அந்த வழக்கு சென்னை நீதிமன்றத்தில் இருந்து கர்நாடகா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதனால் ஒரு வருடம் தாமதப்படுத்தப்பட்டது. இது என்னால் நடந்த ஒரு தாமதமா?.
அதன் பின்னர் பெங்களூருக்கு மாற்றப்பட்டது. அங்கே வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது, இரண்டு வழக்குகளை ஒன்றாக இணைத்தார்கள் அந்தத் தனி நீதிமன்றத்தில். அதை எதிர்த்து மீண்டும் 2005-ம் ஆண்டு அதே அன்பழகன் பெயரில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு போடப்பட்டது.
2005-ம் ஆண்டு மீண்டும் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றதால் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தடையாணை வழங்கியது. அந்தத் தடையாணை எத்தனை ஆண்டு காலம் இருந்தது?. இந்த ஆண்டு வரை ஐந்து ஆண்டு காலம் அந்தத் தடையாணை நீடித்தது. ஆக, அந்த வழக்கை முடிக்க விடாமல் நீட்டிக்க வைத்தது கருணாநிதி தானே தவிர நானல்ல.
அதைப் போலத் தான் சிறுதாவூர் பிரச்சினை. ஆரம்பத்திலேயே நான் இதைப் பற்றிப் பேசிய போது நான் இதை தெளிவுபடுத்தினேன். நான் எந்த நிலத்தையும் ஆக்கிரமித்துக் கொள்ளவில்லை. சிறுதாவூரில் எனக்குச் சொந்தமாக ஒரு சென்ட் நிலம் கூட இல்லை. வாடகைக்கு எடுத்த வீட்டில் நான் அங்கே தங்கியிருக்கிறேன் என்று சொன்னேன். ஆனால் அதை ஏற்காமல் என்னைப் பற்றி அவதூறு பரப்பவேண்டும் என்பதற்காகவே ஒரு விசாரணைக் கமிஷன் போட்டார்கள். சரி, அந்த விசாரணைக் கமிஷன் போட்ட பிறகு அந்த விசாரணைக் கமிஷன் தன்னுடைய அறிக்கையை இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே சமர்ப்பித்துவிட்டது. அதை சட்டமன்றத்தில் வைக்கவில்லை.
சிறுதாவூர் கமிஷன் அறிக்கை வெளி வந்தால் உண்மை தெரிந்துவிடும் என்று நான் ஒரு அறிக்கை விட்டேன். என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. ஆங்கிலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை தமிழில் கூட மொழி பெயர்க்கவில்லை. ஆங்கில அறிக்கையை திடீரென்று சட்டமன்றத்தில் வைத்துவிட்டார்கள். அதில் நான் நிரபராதி என்று கூறப்பட்டிருக்கிறது.
நான் நிரபராதி என்று தெரிந்து கொண்டே, தெரிந்து வைத்துக் கொண்டே என் மீது களங்கம் சுமத்தி இருக்கிறார்.
பணபலம், படைபலம், அதிகார பலம் ஆகியவற்றை, துணிவுடன் எதிர்கொள்ளும் திறமை, கழகக் கண்மணிகளாகிய உங்களுக்கு, நிச்சயம் உண்டு. அதனால் தான், "வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்'', என்று பாடிய எம்.ஜி.ஆர்., அதற்கு அடுத்த வரியில், "அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம், உன்னைச் சேரும்'' என்று பாடினார்.
நீங்கள் எல்லாம், திறமைசாலிகள் மட்டும் அல்ல, மக்கள் மீது பாசமும், நேசமும், அன்பும், மனித நேயமும், சேவை மனப்பான்மையும் உடையவர்கள், என்பதை நான் அறிவேன்.
திறமையும், உங்களது சேவை மனப்பான்மையும், நிச்சயம் வெற்றிக்கு வழி வகுக்கும். உங்களது திறமையை, நிரூபிப்பதற்கான நேரம், வந்துவிட்டது.
வரவிருக்கும் சட்டமன்ற பொதுத் தேர்தலில், எம்.ஜி.ஆர். தோற்றுவித்த, அ.தி.மு.க. ஆட்சி, தமிழகத்தில் அமைய, இப்பொழுதே தயாராகுங்கள். நாளைய தமிழகம், நம் கையில் என்றார் ஜெயலலிதா.
அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் என பெரும் திரளானவர்கள் கலந்து கொண்ட இந்த திருமண விழாவால் அப்பகுதியில் அதிமுக தொண்டர்கள் மயமாக காணப்பட்டது.
செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்
Monday, May 17, 2010
ஜோதிடர் பேச்சைக் கேட்டுத்தான் கோபாலபுரம் வீட்டை தானம் தருகிறார் கருணாநிதி - ஜெ.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment