தேர்தலுக்கு தயாராகுங்கள்.. தொண்டர்கள விரும்பும் கூட்டணி அமையும்: ஜெயலலிதா
தமிழகத்தில் அதிமுக தொண்டர்கள விரும்பும் வகையில் கூட்டணி அமையும் என்றும், கட்சியினர் சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகுமாறும் அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டு, மணல் கொள்ளை, ரேஷன் பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட காரணங்களை முன் வைத்து திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் இன்று கோவையில் ஜெயலலிதா தலைமையில் ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டனக் கூட்டம் நடைபெற்றது.
வ.உ.சி. மைதானத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழகம் முழுவதும் இருந்தும் தொண்டர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.
காலருகே விழுந்த காய்:
கண்டனக் கூட்டம் ஆரம்பித்து அதிமுக நிர்வாகிகள் பேசிக்கொண்டிருந்தபோது, மேடையில் அமர்ந்திருந்த ஜெயலலிதாவை நோக்கி, நெல்லிக்காய் அளவுக்கு ஒரு காய் பறந்து வந்து ஜெயலலிதாவின் காலருகே விழுந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் பேசிய ஜெயலலிதா,
முதல்வர் கருணாநிதியை எதிர்த்து யார் பேசினாலும் தாக்கப்படுகிறார்கள். செம்மொழி என்ற பெயரில் நடந்த தன்னல மாநாட்டை விமர்சித்தால் தாக்கப்படுகிறார்கள். இங்கு யாருக்கும் பாதுகாப்பு இல்லை. போலீஸாருக்கேப் பாதுகாப்பு இல்லை. ரவுடிகளால் போலீஸார் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் அதிகரித்துள்ளது.
மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயுள்ளது. ஆரோக்கியமான குடிநீர் கிடைப்பதில்லை. போதிய பாதுகாப்பு மக்களுக்கு்க கிடைப்பதில்லை.
போலி வாக்குகள் பதிவு செய்யப்பட்டன:
இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் கெட்டுவிட்டது. கொலை மற்றும் கொள்ளைகள் தினந்தோறும் நடக்கின்றன. வாக்குச்சாவடிகளை ரவுடிகள் ஆக்கிரமித்து, தங்கள் கட்டுப்பாடுகளில் எடுத்துக்கொண்டார்கள். போலி வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது ஒரு ஆபத்தான நிலைமை.
விலைவாசி உயர்வால் ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மின்வெட்டால் விவசாயிகளும் பொது மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விலைவாசியை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் அக்கறை காட்டவில்லை.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே போகிறது. இந்த விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும்.
இந்தியாவே தலைகுனியும் சூழ்நிலை!:
ஒரு காலத்தில் இந்தியாவின் பெருமைமிகு மாநிலமாக விளங்கிய தமிழ்நாடு இன்று தரம் தாழ்ந்து விட்டது. தமிழ்நாட்டைப் பார்த்து இந்தியாவே தலைகுனியும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த நிலை நீடித்தால் நாம் அனைவரும் அழிந்துவிடுவோம்.
விவசாயப் பொருட்களின் உற்பத்தி கடுமையாக குறைந்துவிட்டது. அத்தியாவசியப் பொருட்களின் விற்பனை ஆன்-லைன் வர்த்தகம் மூலம் முடக்கப்பட்டுள்ளது. பதுக்கல் போன்ற சமூக விரோதச் செயல்களில் ஆளுங்கட்சியினர் ஈடுபடுகின்றனர். ரவுடிகள், சமூக விரோதிகள், பதுக்கல்காரர்களை பாதுகாக்கும் அரசாக திமுக அரசு உள்ளது.
1 ரூபாய் அரிசித் திட்டத்தில் பெரும் ஊழல்:
தமிழக அரசின் 1 ரூபாய் அரிசித் திட்டத்தில் பெரும் ஊழல் நடக்கிறது. அந்த திட்டத்தில் வரும் நல்ல அரிசிகளை திமுகவினர் வெளி மாநிலத்துக்கு கடத்துகிறார்கள். அதற்கு அரசு அதிகாரிகளும் துணை போகின்றனர். பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டதில் திமுகவுக்கும் பங்கு உண்டு.
கோவையில் மாநாடு-திமுகவினர் ரூ. 2,000 கோடி வசூல்:
கோவையில் நடந்த மாநாட்டுக்கு தமிழகம் முழுவதும் திமுகவினர் ரூ. 2,000 கோடி வசூல் செய்துள்ளனர். மாநாட்டில் உணவு வழங்குவதில் ரூ. 2 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது.
எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்:
இது தேர்தல் ஆண்டு. எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம். தமிழக மக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றவுள்ளனர். அதுதான் உங்களது வாக்குரிமை.
யாரும் இம்முறை வாக்குரிமையை இழக்கத் தயாராக இல்லை. 18 வயது நிரம்பிய ஒவ்வொருவரும் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பிறகு வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
சரியான வாக்காளர்களுக்கு சரியான கட்சிகளுக்கு வாக்களிக்கிறோமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் முன் அணிவகுத்து நிற்கும் கட்சிகள், அரசியல் தலைவர்கள் குறித்து தெளிவாக புரிந்து வைத்திருக்க வேண்டும்.
கணக்கு போட்டு பார்க்க இதுதான் சரியான தருணம்:
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் இதுகுறித்து தெரிந்து கொள்ள இதுதான் தக்க தருணம். அரசின் தோல்விகளையும், சாதனைகளையும் கணக்குப் போட்டுப் பார்க்க இதுதான் சரியான தருணம்.
தமிழ்நாட்டின் நலனுக்காக, தமிழ்நாட்டை காப்பதற்காக, தமிழக மக்களின் நலனுக்காக, இந்த திமுக அரசு தூக்கி எறியப்பட வேண்டும். இந்த சக்தி மக்கள் மற்றும் தொண்டர்களாகிய உங்கள் கையில்தான் உள்ளது.
அதிமுக- தேமுதிக கூட்டணி தயார்?:
யாருடைய அச்சுறுத்தலுக்கும் அஞ்சாமல், கழக தொண்டர்கள் தேர்தலுக்கு தயாராக வேண்டும். எம்.ஜி.ஆர். ஆட்சி அமையும் காலம் நெருங்கி விட்டது. தொண்டர்களாக நீங்கள் எதிர்பார்த்த கூட்டணி அமையும். கூட்டணி விஷயத்தை நான் பார்த்துக் கொள்கிறேன். தேர்தல் பணியை ஆரம்பியுங்கள். ஜனநாயக முறையில் திமுகவுக்கு வேட்டு வைக்கும் பணியை நீங்கள் ஆற்ற வேண்டும்.
மீ்ண்டும் புரட்சித் தலைவர் ஆட்சி அமைவது உங்களது கையில்தான் உள்ளது. அதை நீங்கள் செய்ய வேண்டும் என்றார்.
முன்னதாக கூட்டத்தில் ஜெயலலிதா பல்வேறு முழக்கங்களை முழங்க அதை கூடியிருந்த ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் திருப்பிக் கூறினர்.
நீங்கள் எதிர்பார்க்கும் கூட்டணி அமையும் என்று ஜெயலலிதா கூறியிருப்பதன் மூலம் அதிமுக- தேமுதிக கூட்டணி முடிவாகி விட்டதையே சூசகமாக அவர் கூறியிருப்பதாக தெரிகிறது.
எம்.ஜி.ஆருக்கு செங்கோல் வழங்கிய தினம்:
நிகழ்ச்சியின் இறுதியில் கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் ஜெயலலிதாவுக்கு வெள்ளியால் ஆன செங்கோலை வழங்கினார்.
மதுரையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டின்போது எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா செங்கோல் வழங்கிய தினம் இன்று என்பதால் இந்த செங்கோலை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது.
செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்
Tuesday, July 13, 2010
தேர்தலுக்கு தயாராகுங்கள்.. : ஜெயலலிதா
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
This blog is very interesting ... Tamil Newspaper update
Post a Comment