பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரு 'ஸ்பின் பெளலர்' மாதிரி.. அவர் வீசும் பந்து எங்கேயோ போய் 'பிட்ச்' ஆனாலும் சுற்றி, சுழன்று வந்து விக்கெட்டை எடுக்காமல் விடாது என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
உரிமை, சண்டை, மிரட்டல், கெடு என்று ஆரம்பித்து மகா பல்டி, மெகா பல்டி அடித்து திடீரென ராஜ்யசபா தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தருவதாக அறிவித்தார் ராமதாஸ்.
திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பது என்ற ராமதாசின் இந்த முடிவை முதல்வர் கருணாநிதி வரவேற்றுள்ளார். இது தொடர்பாக முரசொலியில் அவர் எழுதியுள்ள கேள்வி-பதில் அறிக்கை:
கேள்வி: மாநிலங்களவைத் தேர்தலில் கூட்டணி கட்சிகளிடையே இறுதியாக ஒரு சுமூகமான முடிவு ஏற்படும் வகையில் முடிவெடுத்த பா.ம.க.வின் நிறுவன தலைவர் பற்றி?
பதில்: கிரிக்கெட் போட்டியில் சுழல் பந்து வீச்சாளர் பந்தை வீசும்போது, பந்து எங்கேயோ விழுவதைப்போலதான் தெரியும். ஆனால் அதன் பிறகு அந்த பந்து `ஸ்டம்ப்' மீது தாக்கி பந்து வீச்சாளருக்கு வெற்றியைத் தேடி தரும்.
கேள்வி: மாநிலங்களவை தேர்தலில் அதிமுக அணியிலே ஒரு இடம் மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டதாக முதலில் செய்தி வந்தது. அதன் பின்னர் அந்த இடத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், ஆனால் அதற்காக அம்மையாருக்கு நன்றி என்றும் மதிமுக கூறியிருக்கிறதே?
பதில்: அம்மையாரின் அங்கீகாரமாவது கிடைத்ததே. அதற்காக நன்றி சொல்வது தவறா என்ன?
கேள்வி: நாடாளுமன்றத்தில் அவையையே நடத்த முடியாத அளவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடந்து கொள்வதைப் பற்றி மக்களவைத் தலைவர் மனம் நொந்து போய், மக்களவை விதிகள் புத்தகத்தையே காந்தி சிலை முன்பு போட்டு கொளுத்துங்கள் என்று சொல்லி இருப்பது பற்றி?
பதில்: மகாத்மா காந்தியே மக்களவை தலைவராக இருந்தாலும் இப்படித்தான் சொல்லியிருப்பார்.
கேள்வி: ஜெயலலிதா பிறந்த நாள் பரிசு வழக்கில் சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக ஏடுகளில் செய்தி வந்திருக்கிறதே?
பதில்: ஜெயலலிதாவிற்கு இப்போது வயது 60, அவர் முதல்வராக பொறுப்பில் இருந்த போது தனது 44 வயதை கொண்டாடிய போது, அதாவது 16 ஆண்டுகளுக்கு முன் 1992ம் ஆண்டு அவருடைய பிறந்த நாளுக்காக 57 நபர்களிடம் இருந்து 89 வரைவு காசோலைகள் மூலம் ரூ.2 கோடி பரிசுப் பணம் வந்ததாகவும், முதல்வர் பொறுப்பில் இருந்த ஜெயலலிதா அந்த பணத்தை தனது சொந்த கணக்கிலே முதலீடு செய்ததாகவும், கூறி சிபிஐதான் இந்த வழக்கை தொடர்ந்தது.
16 ஆண்டு காலமாக இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி கால நீடிப்பு பெற்று வருகிறார்கள். அந்த வழக்கில்தான் தற்போது மேலும் இந்த வழக்கை நீடிக்கச் செய்யும் வகையில் அந்த கட்சியை சேர்ந்த செங்கோட்டையன் தன்னை அந்த வழக்கில் இருந்து விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்த மனுவிலேதான் தற்போது சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
முதல்வராக இருந்தபோது ஜெயலலிதாவிற்கு அமெரிக்காவில் இருந்து வந்த ரூ.1 லட்சம் டாலரை தன் கணக்கிலே வரவு வைத்து கொண்டார். அதைப் பற்றி கேள்வி எழுந்தபோது அந்த பணம் யாரிடம் இருந்து தனக்கு வந்தது என்பதே தெரியாது என்றார்.
அப்படிப்பட்டவர் பிறந்த நாளையொட்டி ரூ.2 கோடி பரிசுப் பணம் வந்தது என்று சொல்வதிலே என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?
தாமதப்படும் நீதி, மறுக்கப்படும் நீதி என்ற ஒரு பழமொழிதான் இந்த நேரத்தில் என் நினைவுக்கு வருகிறது.
கேள்வி: ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் பாலின் கொள்முதல் விலையை மட்டுமே, தான் உயர்த்தியதாகவும், விற்பனை விலையை உயர்த்தவில்லை என்றும் அறிக்கை கொடுத்திருக்கிறாரே?
பதில்: இது முழு பூசணிக்காயை இலைச் சோற்றிலே மறைக்கும் மோசடி என்று அந்தத் துறையின் அமைச்சர் மதிவாணன் விளக்கமாகச் சொல்லியிருந்தபோதிலும் அது பல ஏடுகளிலே வெளிவரவில்லை. பால் விலையைப் பொறுத்தவரை ஜெயலலிதா தனது ஆட்சிக்காலத்தில் இரண்டு மோசடிகளைச் செய்த பெருமைக்குரியவர்.
தற்போது தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தமிழகம் முழுவதிலும் லட்சக்கணக்கான பால் உற்பத்தியாளர்களின கோரிக்கையை பரிசீலனை செய்து பேச்சுவார்த்தை பல மணி நேரம் நடத்தி இறுதியாகத்தான் கொள்முதல் விலையையும், நுகர்வோருக்கு கட்டுப்படியாகக் கூடிய அளவிற்கு விற்பனை விலையையும் லிட்டர் ஒன்றுக்கு இரண்டு ரூபாய் வீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஆனால் அறிக்கை விடுத்துள்ள ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் கொள்முதல் விலையை உயர்த்தாமலேயே விற்பனை விலையை மட்டும் உயர்த்திய நிகழ்ச்சி நடைபெற்றதுண்டு.
நாள் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமேயானால் 1.7.1993ல் கொள்முதல் விலையை ஒருபைசா கூட உயர்த்தாமலேயே, விற்பனை விலையை மட்டும் லிட்டர் ஒன்றுக்கு ஒரு ரூபாய் வீதம் உயர்த்தியவர்தான் ஜெயலலிதா.
1991-96ம் ஆண்டுகளில் ஜெயலலிதா ஆட்சியிலே இருந்தபோது பசும்பால் கொள்முதல் விலை 2 ரூபாய் 26 காசு அளவிற்கு உயர்த்தப்பட்டது.
ஆனால் நுகர்வோரிடம் லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் என்று உயர்த்தி விற்பனை செய்ய ஆணை பிறப்பித்தவர்தான் ஜெயலலிதா.
இதையெல்லாம் மக்கள் மறந்து விட்டார்கள் என்று கருதிக் கொண்டு அறிக்கையிலேயே எப்போதும் போல் பொய் புராணம் தீட்டியிருக்கிறார் ஜெயலலிதா என்று கூறியுள்ளார் கருணாநிதி
Nandri: Thatstamil
Friday, March 14, 2008
ராமதாஸ் ஒரு 'ஸ்பின் பெளலர்' : கருணாநிதி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment