Tuesday, March 18, 2008

பத்திரப் பதிவு: அந்நியன் விக்ரம் Vs சிவாஜி ரஜினி

‘சிவாஜி’ திரைப்படத்தில் கறுப்புப் பணத்தை ஒழிப்பதையே கருவாக வைத்து நடித்த ரஜினியா இப்படி நிலம் வாங்கியிருக்கிறார் ?

நிலப்பதிவுக்கு விக்ரமும் அவர் மனைவியும் அலுவலகத்திற்கு நேரில் வந்ததுடன் மூன்று மணி நேரம் அலுவலக வாசலில் காத்திருந்தனர்.
‘இப்படி நான் அரசை ஏமாற்ற விரும்பவில்லை. உண்மையைத்தான் குறிப்பிடுவேன்’ என்று கூறிவிட்டாராம்.

------------------------------------

ரஜினி....

இந்த மூன்றெழுத்து மந்திரச் சொல்லுக்கு மயங்காதவர்களே இல்லை என்று உறுதியாகச் சொல்லலாம். சினிமா துறையில் தனது கடின உழைப்பின் மூலம் முன்னேறி இன்று சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருப்பவர். திரையுலகில் போராடிக்கொண்டிருப்பவர்களுக்கெல்லாம் ரோல் மாடலாக விளங்குபவர். தனது சொந்த சம்பாத்தியத்தில் வரும் பணத்தில் இப்போது நில புலன்களை வாங்கத் தொடங்கியிருக்கிறார் ரஜினி. அவர் சொத்துகள் வாங்குவது சந்தோஷம்தான் என்றாலும் அதிலுள்ள வில்லங்கங்கள்தான் இப்போது சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கின்றன.

சென்னையை அடுத்துள்ள கும்மிடிப்பூண்டிக்கு அருகில் உள்ள ஆரணிப் பகுதியில் சுமார் ஒன்பது ஏக்கர் நிலம் வாங்கியிருக்கிறார் ரஜினி. இந்த நிலம் வாங்கிய விவகாரம் ரஜினிக்கு மட்டுமின்றி, அதைப் பதிவு செய்து தந்த பதிவுத்துறை அதிகாரிக்கும் சட்டச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் பற்றி நாம் கேள்விப்பட்டதும் முதலில் ரஜினி அங்கு நிலம் வாங்கியிருப்பது உண்மையா? என்பதை அறிந்துகொள்ள, அது தொடர்பான பத்திரப் பதிவு ஆவணங்களைத் தேடத் தொடங்கினோம். பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு அந்த ஆவணங்கள் நம் கைக்குக் கிடைத்தன.

அந்த ஆவணங்களில் ரஜினியின் புகைப்படம் ஒட்டி, ‘சிவாஜிராவ் கெய்க்வாட் என்கிற ரஜினிகாந்த், வயது 57’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் 8.93 ஏக்கர் நிலத்தை இருபத்தொரு லட்ச ரூபாய்க்கு அதாவது ஒரு சென்ட் நிலம் இரண்டாயிரத்து முந்நூற்று ஐம்பத்தொரு ரூபாய்க்கு வாங்கியதாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதற்காக ஒரு லட்ச ரூபாய்க்கு முத்திரைத் தாள்களும் ரஜினிகாந்த் பெயரிலேயே வாங்கப்பட்டிருந்தன. அதாவது, ஒரு ஏக்கர் நிலம் இரண்டு லட்சத்து முப்பத்தைந்தாயிரம் ரூபாய்க்கு வாங்கியதாகக் காட்டப்பட்டிருந்தது.

ரஜினி நிலம் வாங்கியிருக்கும் பகுதியில் இப்போது ஒரு ஏக்கர் ஐம்பது லட்ச ரூபாய்க்கு (மார்க்கெட் விலை) விற்கப்படுகிறது. ரஜினி வாங்கியபோது அதாவது ஒரு வருடத்திற்கு முன்பு, அங்கு ஒரு ஏக்கர் இருபத்தைந்து லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டிருக்கிறது. அப்படியிருக்க, ரஜினி மட்டும் எப்படி ஒன்பது ஏக்கர் நிலத்தை இருபத்தொரு லட்ச ரூபாய்க்கு வாங்கினார் என்பதைத் தெரிந்துகொள்ள நாம் அந்தப்பகுதியைச் சேர்ந்த முக்கியப் புள்ளிகள் சிலரிடம் விசாரித்தோம்.

அவர்கள் நம்மிடம், “ரஜினி இந்த இடத்தை ஒரு ஏக்கர் இருபத்தொரு லட்ச ரூபாய்க்குத்தான் வாங்கினார். அதாவது, அந்த ஒன்பது ஏக்கர் நிலத்தை ஏறக்குறைய இரண்டு கோடி ரூபாய் கொடுத்தே வாங்கினார். ஆனால், இரண்டு கோடி ரூபாய்க்கு வாங்கியதாக கணக்குக் காட்டினால் பத்திரப்பேப்பர்கள் மற்றும் பதிவுக்கட்டணம் மட்டுமே பதினெட்டு லட்ச ரூபாய் வரும். எனவேதான் இருபத்தொரு லட்ச ரூபாய்க்கு கணக்குக் காட்டிவிட்டு, மீதித் தொகையை கணக்கில் வராத பணமாகக் கொடுத்துவிட்டார். இது பலரும் செய்கிற ஒரு காரியம்தான் என்றாலும் ரஜினி செய்திருக்கக் கூடாதுதான்!’’ என்று கூலாகக் கூறிவிட்டுச் சென்றனர்.

‘சிவாஜி’ திரைப்படத்தில் கறுப்புப் பணத்தை ஒழிப்பதையே கருவாக வைத்து நடித்த ரஜினியா இப்படி நிலம் வாங்கியிருக்கிறார்? என்ற குழப்பத்தோடு நாம் தீவிர விசாரணையில் இறங்கினோம். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தாலுகாவிலுள்ள கன்னிகைப்பேர் கிராமத்தில் கௌரி பென், சந்திரிகா, சங்கீதா ஆகியோருக்குச் சொந்தமாக 8.93 ஏக்கர் நிலம் இருந்தது. இவர்கள் அனைவரும் சென்னை பெரம்பூரை அடுத்துள்ள கொளத்தூர் அஞ்சுகம் நகர் பகுதியில் வசித்து வருகின்றனர். கௌரி பென்னின் கணவரான ராவ்ஜி பட்டேல் தனது பெயரில் மேற்படி நிலத்திற்கு பவர் வாங்கி வைத்திருந்தார். அவரிடமிருந்து அந்த நிலத்தை 4.1.2007 _ அன்று (வியாழக்கிழமை) தனது பெயருக்கு வாங்கியிருக்கிறார் ரஜினி. ராகவேந்திரர் பக்தரான ரஜினி, அவருக்கு உகந்த நாளான வியாழனன்று தான் பத்திரப்பதிவையும் செய்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பட்டா எண்: 471 மற்றும் 132_ல் சர்வே எண்கள்: 884_ல் 1.11 ஏக்கரும், 886/1_ல் 1.22 ஏக்கரும், 905/3_ல் 0.56 ஏக்கரும், 883/1ஏ_ல் 0.13 1/2 ஏக்கரும், 885/1_ல் 5.90 1/2 ஏக்கரும் சேர்த்து நிலத்தின் மொத்த பரப்பளவு 8.93 ஏக்கராகும். இந்த நிலப்பதிவு ஆரணியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, அந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரியும் வசந்தகுமார் என்பவர்தான் இந்த நிலப்பதிவை ரஜினிக்கு செய்துகொடுத்திருக்கிறார். அதாவது, 4.1.2007_அன்று மதியம் ஒரு மணியிலிருந்து இரண்டு மணிவரையிலான நேரத்தில் ரஜினி ஆரணி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்று இந்தப் பத்திரப்பதிவைச் செய்ததாகக் குறிப்பிட்டு பதிவு செய்திருக்கிறார் பதிவுத்துறை அதிகாரியான வசந்தகுமார். ஆனால், மேற்குறிப்பிட்ட நாளிலோ அல்லது வேறு எந்த நாளிலோ ரஜினி இந்த நிலப்பதிவுக்காக ஆரணி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வரவே இல்லை என்பது தான் நமக்குக் கிடைத்த அதிர்ச்சியூட்டும் தகவல்.

நாம் நிலம் இருக்கும் பகுதிக்குச் சென்றோம். கன்னிகைப்பேர் கிராமத்தின் மார்க்கெட் பகுதியிலிருந்து தெற்காகச் செல்லும் வெங்கல் சாலையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் சாலையின் இடதுபக்கமாக அமைந்துள்ளது ரஜினியின் நிலம். ஒன்பது ஏக்கர் நிலத்தில் முன்பகுதியிலுள்ள ஐந்து ஏக்கரில் நெல் நாற்று நடப்பட்டு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. மீதி நான்கு ஏக்கர் நிலம் அப்படியே கரம்பாகப் போடப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் நிலம் வாங்கி, விற்றுக்கொடுக்கும் மணி மேஸ்திரி என்பவரிடம் நாம் நிலம் வாங்க வந்திருப்பதாகக் கூறி பேச்சுக் கொடுத்தோம். “இந்தப் பகுதியில் ஒரு சென்ட் நிலம் ஐம்பதாயிரத்திலிருந்து அறுபதாயிரம் ரூபாய் வரை போகிறது. அதாவது ஒரு ஏக்கர் அறுபது லட்சம் வரை விற்கப்படுகிறது. ரஜினி இந்த இடத்தை ஏக்கர் இருபத்தொரு லட்ச ரூபாய் கொடுத்துத்தான் வாங்கினார். ஆனால், இப்போது எல்லாமே இரண்டு மடங்கு விலை ஏறிவிட்டது. உங்களுக்கு நிலம் வேண்டுமென்றாலும் சொல்லுங்கள். நானே பேசி குறைந்த விலையில் வாங்கித் தருகிறேன்’’ என்று அவர் கூறியதை ரகசியமாக டேப் செய்துகொண்டு அங்கிருந்து நகர்ந்தோம்.

அந்த ஊரைச் சேர்ந்த முக்கியப் புள்ளி ஒருவரிடம் நாம் பேசியபோது, “ரஜினி அந்த இடத்தை இருபத்தொரு லட்ச ரூபாய்க்கு வாங்கியதாகக் கூறியிருக்கிறாரே? அவர் வாங்கி ஒரு வருடம்தான் ஆகிறது. அவர் அந்த நிலத்திற்குக் கொடுத்ததைப்போல் ஐந்து மடங்கு அதாவது ஒரு கோடி ரூபாய் கொடுக்கிறேன். நிலத்தை எனக்குத் தருகிறாரா, கேளுங்கள்? இவங்க பேசற தர்ம நியாயத் தத்துவமெல்லாம் சினிமாவோட சரி’’ என்று சலிப்போடு கூறினார்.

அடுத்து நாம் ஆரணி சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்றோம். காலை பத்துமணிக்கே நாம் அங்கு சென்று காத்துக்கொண்டிருந்தோம். நம்மைப்போலவே அந்த அலுவலக வாசலில் திருமணத்தைப் பதிவு செய்ய வந்தவர்கள், நில சம்பந்தமான பரிமாற்றம் செய்ய வந்தவர்கள் என சுமார் முந்நூறுக்கும் மேற்பட்டோர் காத்துக் கிடந்தனர். அலுவலகத்தில் சார்பதிவாளர் ராஜசேகரனோ, உதவியாளர் வசந்தகுமாரோ அங்கில்லை. அந்த அலுவலகத்திற்குக் கொஞ்சமும் தொடர்பே இல்லாத பத்மநாபன் என்பவர்தான் படுபிஸியாக பதிவு செய்ய வருபவர்களிடம் டாக்குமெண்டுகளை வாங்குவது, அவர்களிடம் கைரேகை வாங்கி பதிவுக்கு நம்பர் அலாட் செய்வது என்று பம்பரமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தார்.

நாம் அங்கிருந்தவர்களிடம் விசாரித்தபோது பத்மநாபன்தான் அங்கே ‘ஆல் இன் ஆல்’ என்று கூறியதுடன் எந்தெந்தப் பதிவுக்கு எவ்வளவு கட்டிங் என்பதையும் கறாராகச் சொல்லி வசூலித்து அதிகாரிகளிடம் ஒப்படைப்பாராம். அதுமட்டுமின்றி நிலப் பதிவுக்காக ரஜினியின் வீட்டிற்கு வசந்தகுமார் சென்ற போது அவருடன் உதவியாளராகச் சென்றவர் இந்த பத்மநாபன்தான். பதிவு முடிந்ததும் ரஜினியுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்ட பத்மநாபன், அதை அலுவலகத்திலுள்ள அனைவரிடமும் பெருமையாகக் காட்டிக்கொண்டிருந்தாராம்.

இப்படி அந்த அலுவலகம் அல்லோலகல்லோலப் பட்டுக்கொண்டிருக்க, அதிகாரிகள் யாரும் வரவேயில்லை. அலுவலக வாசலிலோ ‘மதியம் 3.30 மணிக்கு மேல் பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படாது’ என்று போர்டு வைக்கப்பட்டிருந்தது. ஆனால் சார்பதிவாளர் ராஜசேகரனோ, 3.40க்குத்தான் அலுவலகத்திற்கே வந்தார். நாம் அவரிடம் ‘3.30 மணிக்கு மேல் பதிவு செய்யக்கூடாது என்பது அரசாணை. ஆனால் நீங்களோ 3.40க்குத்தான் அலுவலகத்திற்கே வருகிறீர்கள். பொது மக்கள் காலையிலிருந்தே காத்துக்கிடக்கின்றனர். மக்களுக்குப் பணிசெய்யத்தான் நீங்கள் இருக்கிறீர்கள். ஆனால் நூற்றுக்கணக்கான பொது மக்கள் உங்களுக்காகக் காத்திருப்பது நியாயமில்லையே. மேலும் பொது மக்களிடமிருந்து பணம் வசூலித்து அரசு கஜானாவில் கட்ட வேண்டிய முக்கியமான வேலையை யாரோ ஒரு தனிநபரிடம் ஒப்படைத்திருக்கிறீர்களே?’ என்று கேட்டபோது, “நான் ஊருக்குப் போயிருந்தேன். வரும்போது பஸ் லேட்டாகிவிட்டது’’ என்றவரிடம் நாம் ‘உதவியாளர் வசந்தகுமார் கூட வரவில்லையே?’ என்றோம். ‘‘அவரும் ஊருக்குப் போனார். அவருக்கும் பஸ் லேட்டாகி விட்டது’’ என்று கூறினார். நாம், தொடர்ந்து, ரஜினிகாந்த் நிலப்பதிவைப் பற்றிக் கேட்டோம்.

”நான் அன்று மருத்துவ விடுப்பில் போயிருந்தேன். எனவே அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. மறுநாள் நான் வேலைக்கு வந்ததும் ரஜினியின் நிலம் பதிவு செய்யப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். இன்றுவரை நான் அந்தப் பத்திரங்களை கண்ணால் கூடப் பார்க்கவில்லை’’ என்றார்.

‘ரஜினி நிலம் பதிவு செய்ததாகச் சொன்னார்களே, ரஜினி வந்ததாகச் சொன்னார்களா?’ என்றதும், ‘‘அப்படி எதுவும் சொல்லவில்லை’’ என்று அவர் கூறிவிட, பக்கத்தில் இருந்த பத்மநாபனிடம் நாம் ‘நீங்கள்தானே வசந்தகுமாருடன் சென்று ரஜினிக்கு நிலத்தைப் பதிவு செய்துகொடுத்துவிட்டு வந்தீர்கள்?’ என்றோம். அதற்கு அவர் “ஆம்’’ என்பதாகத் தலையாட்டிவிட்டு, ‘‘அதை எல்லாம் பெருசு பண்ணாதீங்க சார்’’ என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து நாம் சார்பதிவாளர் அலுவலகத்தில் வெளி ஆள் ஒருவர் கோலோச்சிக் கொண்டிருப்பது தொடர்பாக விஜிலன்ஸ் அதிகாரி ஒருவரிடம் தொடர்புகொண்டு புகார் கூறிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டோம்.

அடுத்து நாம் பதிவுத்துறை உயர்அதிகாரி ஒருவரைச் சந்தித்து ரஜினியின் பத்திரப்பதிவு நகல்களைக் காட்டிப்பேசினோம். அவர் நம்மிடம், “ஒருவரின் வீட்டிற்குச் சென்று பதிவு செய்து தரவேண்டுமானால், பதிவு செய்யப்படவேண்டிய நபர் இருபத்து நான்கு மணி நேரத்திற்கு முன் சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு கடிதம் மூலம் அதைத் தெரிவிக்க வேண்டும். சார்பதிவாளர் அந்தக் கடிதத்தைப் பதிவு செய்துகொண்டு அதனடிப்படையில் அவருடைய வீட்டிற்குச் செல்ல வேண்டும். அவருடன் ஓர் உதவியாளரையும் அழைத்துச் செல்லலாம். அங்கு செல்லும் போது அலுவலகத்திலிருந்து வாக்குமூலப் பதிவேட்டையும் எடுத்துச்சென்று சம்பந்தப்பட்டவரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்து அவரிடம் கையெழுத்து வாங்குவதுடன், அவர் நல்ல மனநிலையில் இருக்கிறாரா? சுயநினைவுடன்தான் இதை எழுதிக்கொடுக்கிறாரா? என்பனவற்றையும் ஒரு மருத்துவர் முலம் உறுதி செய்துகொண்டு, அதையும் பதிவு செய்ய வேண்டும். அத்துடன் ஒரு துண்டுக் காகிதத்தில் சம்பந்தப்பட்டவரின் கைரேகையைப் பதிவுசெய்து கொண்டுபோய் அலுவலகத்தில் உள்ள கைரேகைப் பதிவேட்டில் ஒட்ட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் கைரேகைப் பதிவேட்டை வெளியில் எடுத்துச் செல்லக் கூடாது.

மேலும் இப்படி வீட்டிற்குச் சென்று செய்யப்பட்ட பதிவை அடுத்த 48 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிக்குத் தெரிவிக்க வேண்டும். இந்தப் பதிவுக்கு விடுமுறைப்பதிவு என்று பெயர். அதாவது, அலுவலகப் பணிகள் பாதிக்கப்படாமலும் காலையில் அலுவலக நேரத்திற்கு முன்போ அல்லது மாலையில் அலுவலகப் பணிகள் முடிந்த பிறகு அதுவும் மாலை ஆறுமணிக்கு முன்பாகவோ அல்லது விடுமுறை நாட்களிலோதான் இந்தப் பதிவைச் செய்யவேண்டும். இந்த விதிமுறைகள் பின்பற்றப்படாவிட்டால் அது சட்டப்படி தவறு!’’ என்றார் அவர்.

இந்த விடுமுறைப்பதிவு கூட உடல்நலம் குன்றி வெளியில் வர முடியாமல் இருப்பவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள், வயதானவர்கள், வீட்டை விட்டே வெளியில் வராத கோஷா பெண்கள். சமுதாயத்தில் மிகப்பெரிய அந்தஸ்தில் உள்ள வி.வி.ஐ.பி.களுக்கு மட்டுமே செய்து தரலாம். இதில் ரஜினியை வி.வி.ஐ.பி.யாக வைத்துக்கொண்டாலும் மேற்கூறிய எந்த விதிமுறைகளும் அவருக்கான பதிவில் பின்பற்றப்படவில்லை. மாறாக, ரஜினியே நேரில் வந்து பதிவு செய்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.

மிகப்பெரிய நடிகரான ரஜினி, அந்த அலுவலகத்திற்கு வந்திருந்தால் மக்கள் கூட்டம் அலைமோதியிருக்கும். அது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டிருக்கும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

அதே நேரத்தில் 9.5.2007 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் பகுதியில் முதலியார்குப்பம் கிராமத்தில் நடிகர் விக்ரம் 2.88 ஏக்கர் நிலத்தை மார்க்கெட் விலையான 26,32,000 ரூபாய்க்கே வாங்கினார். அதாவது ‘பத்திரத்தில் மார்க்கெட் விலையைக் குறிப்பிடத் தேவையில்லை. பலமடங்கு குறைவான ‘கைடு லைன்’ விலையைக் குறிப்பிட்டாலே போதும். அதனால் பதிவுச் செலவு மிச்சமாகும்’ என்று பலர் கூறியும் அவர் மறுத்துவிட்டாராம்.

‘இப்படி நான் அரசை ஏமாற்ற விரும்பவில்லை. உண்மையைத்தான் குறிப்பிடுவேன்’ என்று கூறிவிட்டாராம். அந்த நிலப்பதிவுக்கு விக்ரமும் அவர் மனைவியும் அலுவலகத்திற்கு நேரில் வந்ததுடன் மூன்று மணி நேரம் அலுவலக வாசலில் காத்திருந்தனர். அங்கு பெரிய கூட்டமே கூடிவிட்டதுடன் எல்லாரும் விக்ரமுடன் நின்று போட்டோ எடுத்துக்கொண்டனர். விக்ரம் வந்ததற்கே அவ்வளவு கூட்டம் என்றால், ரஜினி வந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?! அது மட்டுமின்றி விக்ரம் வாங்கிய நிலத்தில் ஐந்து பனைமரம், ஐந்து தென்னைமரம், ஒரு புளியமரம் ஆகியவை உள்ளன. அவற்றுக்கும் விலையைக் குறிப்பிட்டு பணம் கொடுத்த விக்ரம், தான் வாங்கிய நிலத்திற்கான மொத்தப் பணத்தையும் பத்திரத்தில் குறிப்பிட்டே வாங்கியிருக்கிறார். அதேநேரத்தில், ரஜினியின் நிலப்பதிவு விவகாரத்தில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன.

அலுவலகத்திற்கு வராமலேயே வந்ததாகப் பதிவு செய்யப்பட்டிருப்பது சட்டப்படி கிரிமினல் குற்றம். இந்தக் குற்றத்திற்காக இந்தப் பதிவைச் செய்துகொடுத்த பதிவுத்துறை அதிகாரி வசந்தகுமார் பணிநீக்கம் செய்யப்படுவதுடன் அவர் மீது கிரிமினல் வழக்கும் தொடரப்படும். காரணம், பதிவுத்துறையின் சாட்சியமே சட்டத்தின் முக்கிய சாட்சியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அதாவது, ஒருவர் பதிவுத்துறை அலுவலகத்தில் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் அவர் மீது மிகப் பெரிய கிரிமினல் குற்றம் செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும் அந்த வழக்கு நிற்காது. அதே போல் இந்தச் சொத்து இவருடையதுதான் என்று பதிவாளர் பதிவு செய்தபிறகே ஊர்ஜிதப்படுத்தப்படுகிறது. எனவேதான் பதிவாளர் பதவியை ‘பதிவாளர் நம்பிக்கை’ அதாவது ‘ரிஜிஸ்ட்ரார் ஆஃப் அஷ்யூரன்ஸ்’ என்று அழைக்கின்றனர். இந்தப் பதவியின் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதன் விளைவாக, வழக்கில் சிக்கி பதவி இழந்தவர்கள் பலருண்டு.

உதாரணத்திற்கு 1991/96_ல் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதா மயிலாப்பூரில் உள்ள அமிர்தாஞ்சன் பங்களாவை வாங்கினார். அவரது ஆட்சிக்குப் பிறகு அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. அதில் அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக ஒரு பிரிவும், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி பதிவு செய்திருக்கிறார் என்றும் வழக்குகள் போடப்பட்டன. அதேபோல் அந்த இடத்தைப் பதிவு செய்துகொடுத்த அப்போதைய வடசென்னை மாவட்டப் பதிவாளர் ராஜகோபாலனும் அப்போது பதிவுத்துறை ஆவணங்களை எல்லாம் சம்பந்தப்பட்ட ஒரு வங்கிக்குக் கொண்டு வந்து பதிவு செய்து கொடுத்தார். ஆனால், அந்தப் பதிவு பத்திரப்பதிவு அலுவலகத்தில் வைத்து நடத்தப்பட்டதாகப் பதிவுசெய்துவிட்டார். இதனால் அந்த அதிகாரி மீது வழக்குப் போடப்பட்டதுடன் அவர் பணிநீக்கமும் செய்யப்பட்டார். அந்த வழக்கு விசாரணையில் இருக்கும்போதே சம்பந்தப்பட்ட அதிகாரி ராஜ கோபாலன் இறந்தும் போய்விட்டார்.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், ஜெயலலிதாவுக்கு மேற்படி நிலத்தை ராஜகோபாலன் பதிவு செய்து கொடுத்தபோது அவருக்கு உதவியாளராகப் பணியாற்றியவர்தான் இந்த வசந்தகுமார். எனவேதான் அதே பாணியில் ரெக்கார்டுகளை எல்லாம் ரஜினியின் வீட்டிற்கு எடுத்துச்சென்று பதிவு செய்துகொடுத்துவிட்டு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டதாகக் குறித்து வைத்துள்ளார். இப்போது இது தொடர்பாக விஜிலன்ஸ் துறைக்கு புகார் போயிருக்கிறது. அதைத்தொடர்ந்து வசந்தகுமார் பதவி நீக்கம் செய்யப்படுவதுடன் அவர் மீது வழக்கும் போடப்படும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த வழக்கு தொடர்பாக ரஜினியிடமும் விசாரணை நடத்தப்படுமாம். அதில், தான் அந்த நேரத்தில் யாருக்கும் தெரியாமல் ஆரணியிலுள்ள பத்திரப் பதிவு அலுவலகத்திற்குச் சென்று வந்தது உண்மைதான் என்பதை ஆதாரங்களோடு ரஜினி நிரூபித்துவிட்டால் எந்த விதமான பிரச்னையுமில்லை என்கிறார்கள்.

சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் பலருக்கு முன்மாதிரியாக விளங்கும் ரஜினி, இதுபோன்ற விஷயங்களிலும் மிகச் சரியாக நடந்துகொள்ள வேண்டும் என்பதே கோடிக்கணக்கான அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்பு பொய்யாகாமல், தான் நடந்துகொண்டதாக ரஜினி கூறினால், அதையும் நாம் வெளியிடத்தயாராக இருக்கிறோம். இனி பதில் கூற வேண்டியது ரஜினிதான்!

நன்றி: குமுதம் ரிப்போர்டர் 20-03-2008

3 comments:

tommoy said...

http://vayal-veli.blogspot.com

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

உனக்குமெனக்குமில்லைக் கண்ணே! இது ஊருக்குத் தான் பெண்ணே!! கதை ஞாபகம் வந்து தொலைக்குது.
விக்கிரம் பற்றிய செய்தி உண்மையானால் தலைவணங்குகிறேன்.
"அவர் பொருட்டெல்லோர்க்கும் பெய்யும் மழை"...
மழை பெய்கிறது...அவர் பொருட்டு..

Sambar Vadai said...

http://thatstamil.oneindia.in/news/2008/03/19/tn-no-irregularities-in-land-purchased-by-actor.html