Tuesday, May 29, 2007

அழகிரியிடம் ஆசி பெற்ற கனிமொழி!!

முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியை ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிடும் முதல்வரின் மகள் கவிஞர் கனிமொழி மதுரைக்குச் சென்று சந்தித்து அவரிடம் ஆசி பெற்றார்.
ராஜ்யசபா தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் இரு வேட்பாளர்களில் ஒருவராக கனிமொழி அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மத்திய அமைச்சர் பதவியும் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.


Photo Nandri: Thatstamil

கனிமொழியை எம்பியாக்கி அமைச்சர் பதவி தர வேண்டும் கருணாநிதியை நெருக்கியது அழகிரி தான் என்று கூறப்படுகிறது. டெல்லியை விட்டு மாறனை விரட்டிவிட்டு அந்த இடத்தில் கனிமொழியை கொண்டு வருவதில் மிகுந்த தீவிரம் காட்டியது அழகிரி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று மதுரைக்கு விரைந்த கனிமொழி, அழகிரியை சந்தித்தார். அவரிடமும், அண்ணி காந்தி அழகிரியிடமும் ஆசி பெற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கனிமொழி பேசுகையில்,
பெண்களின் முன்னேற்றத்துக்காக தொடர்ந்து பாடுபடுவேன், உழைப்பேன்.
அரசியலில் நான் தீவிரமாக நுழைய இந்த எம்.பி. பதவி உதவும். இதற்காக வாய்ப்பு கொடுத்த திமுக தலைமைக்கு எனது நன்றிகள். அரசியல் மூலமாக சமூகத்திற்கு நிறைய செய்ய முடியும் என்றார் கனிமொழி.

அப்போது செய்தியாளர்கள், அழகிரியால்தான் இந்தப் பதவி கிடைத்ததா என்று கேட்டபோது குறுக்கிட்ட அழகிரி, திமுக உயர் மட்ட செயல் திட்டக் குழுக் கூட்டத்தில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. எனக்கு இதில் எந்தத் தொடர்பும் இல்லை என்றார்.

உங்களுக்குக் கட்சிப் பதவி கிடைக்குமா என்று அழகிரியிடம் கேட்டபோது,
அஞ்சா நெஞ்சன் பதவிக்கு கெஞ்சா நெஞ்சன் என்று கலைஞர் ஏற்கனவே கூறியிருக்கிறார். எனக்குப் பதவி மீது ஆசை கிடையாது. பதவியில் இல்லாமலும் மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்றார் அழகிரி.

அண்ணன், தங்கையின் சந்திப்பின்போது அமைச்சர் தங்கம் தென்னரசுவும் உடன் இருந்தார். பின்னர் கனிமொழி சென்னைக்குக் கிளம்பிச் சென்றார்.

Nandri: Thatstamil

No comments: