Wednesday, May 16, 2007

அழகிரிக்கு மந்திரி பதவி ?

மாநிலங்களவை தேர்தலில் திமுக அதிரடி திட்டம்
அழகிரிக்கு மந்திரி பதவி


சென்னை, மே 16:
முதலமைச்சர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரியை மத்திய அமைச்சராக நியமிக்க திமுக மேலிடம் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. நடைபெறவிருக்கும் மாநிலங் களவை தேர்தலில் அவர் திமுக சார்பில் போட்டியிடுவார் என்றும், தயாநிதி மாறன் வகித்த துறையின் அமைச்சராக அவர் விரைவில் நியமிக் கப்படுவார் என்றும் கூறப்படுகிறது. அதிமுக சார்பில் 2 பேரும், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் தலா ஒருவரும் போட்டியிடும் இந்த தேர்தலின் வேட்பாளர்கள் யார் என்ற விவரமும் தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்க ளவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக் கப்பட்டுள்ள 18 பேரில் அதிமுகவைச் சேர்ந்த பி.ஜி. நாராயணன், கோகுல இந்திரா, ஆர்.காமராஜ், எஸ்.எஸ். சந்திரன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி.எஸ்.ஞான தேசிகன், திமுகவைச் சேர்ந்த கே.பி.கே. குமரன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வருகிற ஜூலை மாதம் 24ந் தேதியோடு முடிவடைகிறது. காலியாகும் இந்த பதவிகளுக்கு அடுத்த மாதம் 15ந் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து புதிய உறுப்பினர்களைதேர்ந்தெடுப்பார்கள்.

திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பாக 165 எம்எல்ஏக்கள் இருப்பதால், இக்கூட்டணி சார்பாக நான்கு எம்பிக்களை தேர்ந்தெடுக்க முடியும். அதிமுக மற்றும் மதிமுக சார்பாக 67 எம்எல்ஏக்கள் இருப்பதால் அந்த கூட்டணி இரண்டு இடங்களை பிடிக்க முடியும். திமுக கூட்டணியில் அக்கட்சி இரண்டு எம்பி பதவிகளில் போட்டி யிடுவது என்றும், ஒரு இடத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்குவது என்றும், முடிவெடுக்கப் பட்டுள்ளது.மற்றொரு இடத்தில் காங்கிரஸ் போட்டியிடும்.

திமுக சார்பாக முதலமைச்சரின் மகன் மு.க.அழகிரி அல்லது மகள் கனிமொழிக்கு வாய்ப்பு அளிக்கப் படும் என்று கூறப்பட்டது. ஆனால் அண்மையில் மதுரை தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டதை அடுத்து நிகழ்ந்துள்ள சம்பவங்களை அடுத்து, மு.க. அழகிரிக்கு ஒரு அதிகாரம் வாய்ந்த பதவியை வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதியின் குடும்பத்தினர் வற்புறுத்துவதாக கூறப்படுகிறது. மேலும் அந்த பதவியை அழகிரிக்கு வழங்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்களும் ஒருமித்த குரலில் வலியுறுத்தி வருகிறார்கள்.

இதன் காரணமாக இப்போதைய சூழ்நிலையில் கனிமொழியை விட அழகிரி மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் அவருக்கு மத்தியில் கேபினெட் அந்தஸ்தில் அமைச்சர் பொறுப்பு வழங்கவும் மேலிடம் முடிவு செய்திருப்ப தாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுவும் தயாநிதி மாறன் வகித்த தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையையே அவருக்கு பெற்றுத்தர கட்சி முடிவு செய்திருப்பதாக அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

ராசாவுக்கு அந்த பதவியை அளித்திருப்பது தற்காலிகமான முடிவுதான் என்றும், கேபினெட் அந்தஸ்தில் மந்திரி பதவி தற்போது யாருக்கும் அளிக்கப்படாதது இதை உறுதி செய்வதாக உள்ளது என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் கூறுகின்றன.

எஞ்சிய ஒரு சீட்டுக்கு மீண்டும் கே.பி. குமரன் நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. ஆனால் திமுகவின் அமைப்பு செயலாளரான டி.கே.எஸ். இளங்கோவன், திருச்சி சிவா, கே.பி. ராமலிங்கம், கம்பம் செல்வேந்திரன், இந்திர குமாரி ஆகியோர் இதற்கு போட்டி போடுவதாகவும் கூறப்படுகிறது.

For more click link below

நன்றி: மாலை சுடர்
http://www.maalaisudar.com/1605/hed_news_1.shtml

No comments: