Sunday, June 3, 2007

நிதி குறைவு; செம்மறி ஆடு வரவு

அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க., தொண்டர்களை நேற்று சந்தித்து கருணாநிதி வாழ்த்து பெற்றார். "திருப்பதி' கோவில் போன்று தடுப்புகள் அமைக்கப்பட்டு, தொண்டர்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு தி.மு.க., தலைவரைச் சந்திக்க அனுப்பப்பட்டனர். முதல்வரைக் காண வந்த தொண்டர்களுக்கு ஆவின் பால்கோவா வழங்கப்பட்டது. மேடையில் அமர்ந்திருந்த கருணாநிதி, தொண்டர்களிடம் இருந்து சால்வை உள்ளிட்ட பரிசுப் பொருள்களை பெற்றார்.

* முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளின் போது, உண்டியல் வைக்கப்பட்டு நிதி வசூலிக்கப்படுவது வழக்கம். நேற்றைய பிறந்தநாள் நிகழ்ச்சியில், முதல்வர் பொது நிவாரண நிதிக்காக மேடையில் உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், பெரும்பாலான தொண்டர்கள் சால்வையை கொடுத்து விட்டு நிதியளிக்காமல் சென்றவண்ணம் இருந்தனர். உண்டியலுக்கு அருகே நின்றிருந்த ஸ்டாலின் பார்வையில் பட வேண்டுமென்பதற்காக, முக்கிய நிர்வாகிகள் உண்டியலில் நிதி செலுத்திவிட்டுச் சென்றனர்.

* சேலத்தை அடுத்த குளத்துõரைச் சேர்ந்த தி.மு.க., நிர்வாகி ஒருவர் செம்மறி ஆடு ஒன்றை மேடைக்கு அழைத்து வந்து பரிசளித்தார். "நாய், மான் குட்டி, மயில், பசு மாடு, குதிரை என பல விலங்குகளை ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் முதல்வருக்கு பரிசாகக் கொடுத்து வந்துள்ளேன். கடந்த பிறந்தநாளன்று நான்கு குட்டிகளோடு சேர்ந்த ஆட்டை பரிசளித்தேன்' என்று அந்த நிர்வாகி பெருமையாகக் கூறினார். ஆயிரக்கணக்கில் செலவு செய்து பேர் வாங்குபவர்களை விட, ஆட்டைக் கொடுத்து இவர் பெயரைத் தட்டிச் சென்று விட்டாரே என தி.மு.க.,வின் முன்னணி நிர்வாகிகள் "கமென்ட்' அடித்தனர்.

* திருவண்ணாமலை நகராட்சித் தலைவர் ஸ்ரீதர் தலைமையிலான தி.மு.க.,வினர், 84 கிலோ எடையுள்ள வெள்ளியிலான யானை சிலைகள் இரண்டினை முதல்வருக்கு பரிசாக வழங்கினர். அதேபோல், 84 தட்டுகளில் பிறந்தநாளுக்கான சீர்வரிசையும் வழங்கினர்.

* எம்.ஜி.ஆர்., காலத்தில் புகழ் பெற்றிருந்த "மாஜி' எம்.எல்.ஏ., நெகமம் கந்தசாமி, முதல்வரை சந்திக்க பின்வாசல் வழியாக வர முயற்சித்தார். போலீசார் அவரை உள்ளே விடாமல் வரிசையில் வருமாறு திருப்பி அனுப்பினர். இதனால் நொந்து போன அவர், புலம்பியபடி அங்கிருந்து சென்றார்.

* தொண்டர்களை ஒழுங்குபடுத்த, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும் முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

-------------
முதல்வர் கருணாநிதி தனது 84வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். அவருக்கு ஜனாதிபதி அப்துல் கலாம், பிரதமர் மன்மோகன் சிங், சோனியா உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

முதல்வர் கருணாநிதியின் 84வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. சென்னை சி.ஐ.டி., காலனியில் உள்ள முதல்வரின் வீட்டில் மரக்கன்று நடப்பட்டது. ஈ.வே.ரா., அண்ணாதுரை நினைவிடங்களில் மலர் அஞ்சலி செலுத்திய முதல்வர், அங்கு தன் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் 84 புறாக்களை பறக்க விட்டார். கோபாலபுரம் வீட்டில் கேக் வெட்டி முதல்வர் பிறந்தநாள் கொண்டாடினார். தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகன், கருணாநிதிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி, கம்யூ., செயலர்கள் வரதராஜன், பாண்டியன், நல்லகண்ணு, ராஜா, விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் திருமாவளவன், பா.ஜ., தலைவர் இல.கணேசன் உள்ளிட்டோர் முதல்வரை வீட்டில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். ஜனாதிபதி அப்துல் கலாம், பிரதமர் மன்மோகன் சிங், கவர்னர் பர்னாலா, சோனியா, மலேசிய அமைச்சர் டத்தோ சாமிவேலு, மத்திய அமைச்சர்கள் சிதம்பரம் உள்ளிட்டோர் முதல்வருக்கு டெலிபோனில் வாழ்த்து தெரிவித்தனர். கவர்னர் பர்னாலா சார்பில் அவரது மகன், முதல்வருக்கு பூங்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்தார். பூந்தமல்லி பகுதி தி.மு.க., நிர்வாகி புண்ணியகோடிஅலமேலு ஆகியோர் தம்பதியாக முதல்வர் வீட்டுக்கு வந்து, அவர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். அரசு பணியாளர் சங்கத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் புத்தகம் ஒன்றையும், தமிழ் வளர்ச்சித்துறை பணியாளர் சங்க நிர்வாகி குமார் நுõறு நெல்லிக்கனிகளையும் முதல்வருக்கு பரிசாக வழங்கினர்.

காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, புதுவை காங்., தலைவர் நாராயணசாமி, மத்திய அமைச்சர்கள் ஆஸ்கர் பெர்னாண்டஸ், அன்புமணி, எம்.எல்.ஏ.,க்கள் சுதர்சனம், பீட்டர் அல்போன்ஸ், யசோதா, ஞானசேகரன், வசந்தகுமார், எம்.ஜி.ஆர்., கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், கவிஞர் வைரமுத்து, இயக்குனர் பாரதிராஜா, பாக்கியராஜ் உள்ளிட்டோர் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். முன்னாள் துணைவேந்தர்கள் க.ப. அறவாணன், அவ்வை நடராஜன் உள்ளிட்டோர் முதல்வர் கருணாநிதியை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.


Nandri: Dinamalar

No comments: