முதல்-அமைச்சர் கருணாநிதி கோட்டையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
புதிய சட்டப்பேரவை அமையும் இடம் குறித்து இன்று நானும், தலைமை செயலாளரும், துறை செயலாளர்கள், பொதுப்பணித்துறை அமைச் சர், உள்ளாட்சி துறை அமைச்சர் ஆகியோர் விவாதித்தோம். விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு ஓமாந்தூரார் அரசினர் வளாகத்தில் புதிய சட்டப் பேரவை கட்டும் பணி தொடங்கும்.
கேள்வி:- அங்கு அடிக்கல் நாட்டு விழா எப்போது நடக்கும்?
பதில்:- ஒப்பந்தப்புள்ளி ஏற்றுக் கொள்ளபபட்ட பிறகு அடிக்கல் நாட்டு விழா நடக்கும்.
கே:- இது உலக அளவிலான `குளோபல்' டெண்டராக இருக்குமா?
ப:- ஆமாம்.
கே:- தற்போது அந்த வளாகத்திலே உள்ள கட்டிடங்கள் எல்லாம் அப்படியே இருக்குமா?
ப:- சில கட்டிடங்கள் அகற் றப்பட வேண்டியிருக்கும். ஏற்கனவே நான் சொன்னவாறு மற்றும் புதிதாக கட்டப்பட்ட ராஜாஜி மண்டபம், எம்.எல்.ஏ.க்களுக்கான புதிய குடி யிருப்பு கட்டிடம் ஆகியவை அகற்றப்பட மாட்டாது. பழைய எம்.எல்.ஏ.க்கள் விடுதி அகற்றப்படும். கட்டிடத்துக்கான வரை படம் வந்த பிறகு அது பற்றிய செலவு விவரங்கள் தெரிய வரும்.
கே:- அது என்ன வடிவில் அமைய வேண்டும் என்ற எண்ணம் ஏதாவது உங்கள் மனதில் உள்ளதா?
ப:- அது எப்படி அமைய வேண்டும், எதை மாற்ற வேண்டும் என்று யோசனை சொல்லும் உரிமை உண்டு.
கே:- சென்னையில் விதிமுறை மீறி 75 ஆயிரம் கட்டிடங்களை இடிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறி இருக்கிறாரே?
ப:- நாங்கள் எப்படி யோசனை செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறோம் என்றால், அதனால் ஏற்படும் தொல்லை, சிரமம் ஆகியவற்றையும், பெரிய சீமான் அல்லது பூமான் ஆகியோருக்கு மட்டுமல்ல நடுத்தர மக்களின் வீடுகளும் வாணிப நிலையங்களுக்கும் ஏற்படும்இடைïறுகளை தவிர்ப்பதற்காக சுப்ரீம் கோர்ட்டின் கவனத்துக்கு கொண்டு வந்து மறுஆய்வு செய்யக் கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் சுப்ரீம் கோர்ட் டின் முன்னாள் நீதிபதி மோகன் தலைமையில் ஒரு குழுவை அமைத்து இருக்கிறோம்.
இது குறித்து கோரிக்கைகள் அனைத்தையும் பற்றி ஆய்வு செய்து பாதிக்கப்படுகின்ற வீடுகளின் சார்பாக சுப்ரீம் கோர்ட்டு நியமித்துள்ளகுழுவோடுநீதிபதி மோகன் தலைமையிலான குழுவினர் கலந்து பேசி இயன்றதை செய்யக்கூடும் என்பதற்காகவே அரசு நல் லெண்ணத்துடன் இந்த ஏற்பாட்டை செய்துள்ளது.
கே:- ஹெல்மெட் அணிவது பற்றி அரசாணைகள் செய்தி வெளியீடுகள் மாறி மாறி வருவதால் குழப்பம் ஏற்படுகிறரே?
ப:- ஹெல்மெட் அணிவதில் நீதிமன்றத்தின் கருத்தை ஏற்று செயல்படுத்துகிறோம். அப்படி செயல்படுத்தும் போது டெல்லி போன்ற மாநகரங்களில் இப்போது சென்னையில் தளர்த்தி இருப்பதை போல் வாகனங்களின் பின்னால் அமர்ந்து செல்கிற பெண் களுக்கும், குழந்தைகளுக் கும் விதி விலக்கு அளிக்கப் படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. அந்த விதி விலக்கு இங்கேயும் தேவை என்று வேண்டுகோள்கள் நிறைய வந்த காரணத்தால் அது ஏற்றுக் கொள்ளப்பட்டு இங்கேயும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கே:- பின்னால் அமர்ந்து செல்லும் ஆண்களுக்கு இந்த விதி விலக்கு கிடையாதா?
ப:- டெல்லியில் பெண்களுக்குத்தான் விதி விலக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. நாம் நீதி மன்றத்தின் உத்தரவுபடி நடக்க வேண்டியதாக உள்ளது. அதை மீறிப்போக முடியாது.
கே:- ஹெல்மெட் பற்றி பல செய்தி வெளியீடுகள் வந்ததால் இதுவரை அணிந்தவர்கள் கூட இப்போது அணிந்து கொள்ளாத ஒரு நிலை ஏற்பட்டு விட்டதே?
ப:- இது போன்ற பிரச்சினைகளில் அரசின் சார்பில் விளக்கங்களைத்தான் தர முடியுமே தவிர அதிகாரம் செய்யக்கூடாது. இந்த அரசாங்கத்தைப் பொறுத்தவரை அதிகாரத்தைப் பயன்படுத்துவதை நான் தனிப்பட்ட முறை யில் விரும்பவில்லை. நீதிமன்றங் களின் கருத்தை நாம் மதிக்க வேண்டும்.
கே:- அரசின் சார்பில் நீங்கள் வெளியிட்ட ஆணையை எதிர்த்தே செயல் படும் நிலைமை உருவாகி இருக்கிறதே?
ப:- எந்த முடிவு எடுத்தாலும் மூர்ச்சுத்தனமாக அதன் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது. மக்களின் கருத்து வேறாக இருந்தால் அதற்கு தகுந்தபடி மாற்றிக் கொள்வதில் தவறு இல்லை.
கே:- ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கூறுவது அவர்களுக்கு நல்லது செய்வதுதானே?
ப:- அவரவர்களின் பாதுகாப்பில் அவரவர்களுக் குத் தான் பொறுப்பு. அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்ன செய்வது?
கே:- ஜுன் முதல் வாரத்தில் டெல்லிக்கு செல்வேன் என்று கூறியிருந்தீர்களே?
ப:- 13, 14, 15 ஆகிய நாட்களில் டெல்லியில் என்னை இருக் கும்படியும், என்னுடைய பயணத்தை அமைத்துக் கொள்ள வேண்டுமென்றும் டெல்லியிலிருந்து எனக்கு தகவல் வந்திருக்கிறது. அதன்படி அந்தத் தேதிகளில் டெல்லியில் இருப்பேன்.
கே:- கோடநாடு எஸ்டேட்டில் விதிமுறைகள் நிறைய மீறப்பட்டிருக்கிறதே, அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?
ப:- மீறப்பட்டுள்ள விதிமுறைகளைப் பற்றி சில பத்திரிகைகளைத் தவிர, வேறு நீங்கள் யாரும் வெளியிடவில்லையே! கோடநாடு மலைப் பிரதேசம். மலைப் பகுதிகளில் வீடுகள் கட்டுவ தென்றால் கூட சிறப்பு அனுமதிகளைப் பெற வேண் டும். அங்கே கட்டப்பட்டிருப்பது வீடு அல்ல. ஒரு மாளிகையே கட்டப்பட்டிருக்கிறது. (முதல் -அமைச்சர் செய்தியா ளர் களிடம் கோடநாடு மாளிகை யின் பல புகைப்படங்களைக்காட்டினார். அதைப் பார்த்து விட்டு அவர்களே அது வீடல்ல என்றும், மாளிகை என்றும் கூறுகிறார்கள்) அந்தப்பகுதியின் மொத்தப் பரப்பளவு 43,585 சதுர அடியாகும். அதிலே கட்டப்பட்டுள்ள கட்டிடம் 38 ஆயிரம் சதுர அடி. இதிலே மாளிகை கட்ட எந்த அனுமதியும், கட்டிடம் கட்டுவதற்கான திட்ட அனுமதியும் பெறவில்லை.
இது யாருக்குச் சொந்தம் என்று விசாரிப்பதற்குக் கூட அங்கே செல்கிற அதிகாரிகள் அனுமதிக்கப்படுவதில்லை. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அம்மையார் அவர்கள் அது தனக்குச் சொந்தம் இல்லை என்றும், தங்குவதற்காகத்தான் அங்கே சென்றதாகவும் அது பெரிதுபடுத்தப்படுவதாகவும் கண்டித்து அறிக்கை வெளி யிட்டிருக்கிறார். அவருக்கும் சசிகலாவிற்கும் அந்த மாளிகையில் உள்ள தொடர்பை இன்றைக்குக் கூட நான் வெளியிட்டிருக்கிறேன்.
அந்த நிறுவனத்தின் முதலீட்டுக் கணக்கை எடுத்துப் பார்த்தால் கேபிடல் அக்கவுண்டில் சசிகலாவிற்கு 1.4.2005 அன்று ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் ஆரம்ப முதலீட்டுத் தொகையாக இருந்துள்ளது. அதுவே 31.3.2006 தேதியில் இவருடைய இறுதி முதலீட்டுத் தொகை யாக உள்ளது. அதைப் போலவே ஜெயலலிதாவின் பெயரில் அந்த நிறுவனத்தின் முதலீட்டுத் தொகை, 1.4.2005 அன்று ஆரம்ப முதலீட்டுத் தொகை ஒரு கோடியே 80 லட்சம் ரூபாயாகவும், 31.3.2006 அன்று இறுதி முதலீட்டுத் தொகை ஒரு கோடியே 80 லட்சம் ரூபாயாகவும் இருந்துள்ளது. இது நேற்று நான் வெளியிட்டிருந்த ஆதார பூர்வமான தகவல்.
இன்றைக்கு எனக்கு ஒரு பிரபல பத்திரிகையாளர் மூலம் கிடைத்த தகவல். அது எவ்வளவு உண்மை என்று எனக்குத் தெரியாது. இந்தச் சொத்துக் கணக்கை 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது வேட்பு மனுதாக்கல் செய்த நேரத்தில் ஜெயலலிதா குறிப்பிட வில்லை என்றும் மறைக்கப்பட்டிருப்ப தாகவும் தகவல். அது உண்மையானால் நிரூபிக்கப் பட்டால் எதிர்காலத்தில் ஜெயலலிதா தேர்தலில் நிற்கவும் முடியாது. ஏற்கனவே வென்றிருப்பதும் செல்லாது.
கே:- இதுசம்பந்தமாக உங்கள் கட்சியின் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுப்பீர்களா?
ப:- இப்போதுதான் நீங்கள் இந்தக் கேள்வி மூலமாக இந்த யோசனையைச் சொல்லியிருக்கிறீர்கள். யோசிக்கலாம்.
கே:- விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?
ப:- சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் அதற்கிடையே நாங்கள் ஏதோ சோதனை செய்யப்போவதாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். அது பொய்.
கே:- ஜெயலலிதா வீட்டின் முன்னால் அ.தி.மு.க. தொண்டர்கள் கூடிக்கொண்டிருக்கிறார்களே?
ப:-சோதனை நடக்கப்போவதாக அவர்களே பிரச் சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது.
கே:- ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் நீங்கள் இரட்டை அர்த்தம் தொனிக்கும்படியாக எழுதியிருப்பதாக கூறியிருக்கிறாரே.
ப:- இரட்டை அர்த்தம், இரட்டை இலை எல்லாம் அங்கேதான், இங்கே கிடையாது. இரட்டை அர்த்தத்துடன் நான் எழுதவில்லை. அவர் மது அருந்துவதாக நான் எழுதியிருப்பதாக அவர் கூறுகிறார். நான் அப்படிச் சொல்லவே இல்லை. அவர் தான் ஏற்கனவே ஒரு முறை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மது அருந்தி விட்டு சட்டசபைக்கு வருவ தாகச் சொன்னார். அப்படி யெல்லாம் எனக்குச் சொல்லத் தெரியாது.
கே:- நீங்கள் கோபம் அதிகம் என்று எழுதியிருப்பதை அவர்கள் தானாகவே மது அருந்தியது அதிகம் என்று சொன்னதாக சம்மந் தம் இல்லாமல் சொல்லி யிருக்கிறார், அதுபற்றி?
ப:- அதற்கு நான் என்ன செய்வது? சம்மந்தம் இல்லாமல் சொல்லியிருக்கிறார் என்று நீங்களே சொல்கிறீர்கள்.
கே:- கல்விக் கட்டணங்கள் அதிகமாக உள்ளதாக பா.ம.க. தெரிவித்திருப்பதை பற்றி?
ப:- அரசாங்க கல்லூரிகளில் அல்ல, ஏற்கனவே அ.தி. மு.க. ஆட்சிக்காலத்தில் உயர்த் தப்பட்ட கல்விக் கட்டணங்கள் எல்லாம் தி.மு.க. ஆட்சியில் பல மடங்கு குறைக்கப்பட்டு விட்டது. சுய நிதி கல்லூரிகளில் ஒரு சிலர் கட்டணத்தை உயர்த்தியிருப்பதை பா.ம.க. சார்பில் எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறார்கள். அது பற்றி அரசு கவனிக்கும்.
கே:- மதுரை இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்கிறீர்களா?
ப:- தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்கிறேன், தேதி இன்னும் குறிப்பிடப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Nandri: Maalai Malar
Wednesday, June 6, 2007
ஜெயலலிதா தேர்தலில் நிற்க முடியாது - கருணாநிதி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment