Tuesday, June 5, 2007

குடிக்கும் பழக்கம் கிடையாது - ஜெயலலிதா

முதல்வரின் சிலேடையான விமர்சனங்களால் காட்டமடைந்த அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா திடீரென ஆவேசமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். ""எனக்கு 59 வயதாகிறது. இன்றுவரை என் வாழ்நாளில் நான் மதுவைத் தொட்டது கிடையாது. ஆனால், எனக்கு குடிப்பழக்கம் இருப்பதுபோல் கருணாநிதி தரக்குறைவாக விமர்சிக்கிறார்,'' என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த 3ம் தேதி அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அ.தி.மு.க., அலுவலகத்தை இடிக்க சி.எம்.டி.ஏ., சார்பில் நோட்டீஸ் அனுப்பிய தகவலை தெரிவித்தார். அன்று வெளியிட்ட அறிக்கையில் முதல்வர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்ததுடன், தி.மு.க.,வை அழிக்கப் போவதாக சபதம் வெளியிட்டார். இதனால் கோபமடைந்த முதல்வர் கருணாநிதி நேற்று முன்தினம் கேள்விபதில் அறிக்கை வெளியிட்டார். கட்சிப் பத்திரிகையில், "இந்திரசித்து' என்ற பெயரில் கவிதையும் வெளிவந்துள்ளது.

இதனால் ஆவேசமடைந்த அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அ.தி.மு.க., தலைமை கட்டடத்தை இடிக்கச் சொல்லி சி.எம்.டி.ஏ.,வில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதை சட்டரீதியாக நாங்கள் நீதிமன்றத்தில் சந்திப்போம். ஆனால், இதைப்பற்றி கருணாநிதி பேசுகையில், ஒரு முதல்வர் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை நாகரிகம் கூட தெரியாமல் கீழ்த்தரமாக பேசியும் எழுதியும் வருகிறார்.

சைதாப்பேட்டை பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பேசும்போது, பெண் என்று கூட பாராமல், என்னை மிகவும் கொச்சைப்படுத்தி பேசியுள்ளார். அதில், "தொட்டால் தொடக் கூடாது என்கிறார். உங்கள் வீடுதான் இல்லையே தொட வேண்டாம் என்கிறீர்களே' என்றும், "நான் வீட்டைத் தொடுவதைத் தான் சொல்கிறேன்' என்றும் சிலேடையாக பேசியுள்ளார். அவரது கேள்வியும் நானே, பதிலும் நானே பேட்டியில், தி.மு.க.,வை அழிப்பேன் என்று ஜெயலலிதா சவால் விட்டிருப்பது பற்றிய கேள்விக்கு "நேற்று கொஞ்சம் அதிகமாகி விட்டது போலும், அதாவது கோபம்' என்று மிகவும் கீழ்த்தரமான முறையில் பதில் சொல்லியிருக்கிறார். இதுவும் சிலேடைப் பேச்சுதான். இதில் இரட்டை அர்த்தம் இருக்கிறது. "நேற்று அதிகம் போலும்' என்று சொல்வதன் மூலம் எனக்கு குடிப்பழக்கம் உள்ளது போன்ற அர்த்தத்தில் சொல்லியிருக்கிறார் என்றே பொதுவாக எவரும் எண்ணக்கூடிய வகையில் சொல்லி, பிறகு "அதாவது கோபம்' என்று சொல்லி இருக்கிறார்.

இதற்கான விளக்கங்களை நீதிமன்றத்தில் சொல்ல வாய்ப்பு இல்லாததால் இவற்றை இந்த அறிக்கை வாயிலாக சொல்கிறேன். எனக்கு 59 வயதாகிறது. இன்றுவரை என் வாழ்நாளில் நான் மதுவைத் தொட்டது கிடையாது. எனக்கு குடிப்பழக்கம் இல்லை. மது அருந்தும் பழக்கம் இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன். மது அருந்தும் பழக்கத்தை நான் கடுமையாக எதிர்க்கிறேன். அறவே வெறுக்கிறேன். என்னை சுற்றியுள்ளவர்களுக்கும் எனக்கு நெருக்கமானவர்களுக்கும் என்னுடன் பணியாற்றுபவர்களுக்கும் இது நன்றாக தெரியும். குடிப்பழக்கம் உள்ளவர்கள் என் இல்லப் பணியிலோ, அலுவலகப் பணியிலோ இருக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

மேலும், சொல்ல இயலாத நா கூசுகிற வார்த்தைகளில் கவிதை எழுதி இருக்கிறார். இவர் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் தொடர்ந்து பேசி, எழுதிக்கொண்டு இருந்தால் பெண் சமுதாயமும் அ.தி.மு.க.,வினரும் சும்மா பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். இப்படியெல்லாம் கீழ்த்தரமாக பேசி, எழுதி முதல்வர் பதவிக்கே களங்கம் ஏற்படுத்தி வருவதை இனியாவது நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறேன். அடுக்குமாடி வணிக வளாக கட்டடங்களுக்குத்தான் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த வரைமுறைக்குள் அ.தி.மு.க., கட்டடம் வராது. அ.தி.மு.க., கட்டடத்தை இந்த பட்டியலில் சேர்த்திருப்பதன் நோக்கம், அ.தி.மு.க.,வை கோர்ட்டுக்கு சென்று தடை உத்தரவு பெற்றால் அதை வைத்துக்கொண்டு மற்ற வணிக வளாகங்களை காப்பாற்றி விடலாம் என்ற எண்ணத்தில் தான். கொடநாடு எஸ்டேட் கட்டடம் 50 கோடி ரூபாய் செலவில் கட்டப்படவுமில்லை; அதில் 90 அறைகளும் இல்லை. அங்கு கட்டப்படுகிற கட்டடத்துக்கு முறையாக அனுமதி பெறப்பட்டு உள்ளது. இந்த உண்மை விவரங்கள் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு நியாயம் பெறப்படும்.

முதல்வர் பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று கருணாநிதி நினைத்துக் கொண்டிருக்கிறார் போலும். முதல்வர் என்பவர் ஜாக்கிரதையாக பேச வேண்டும் என்பதை கருணாநிதி புரிந்து கொள்ள வேண்டும். "யாகாவாராயினும் நா காக்க, காவாக்கால், சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு' என்ற திருக்குறளை கருணாநிதிக்கு நினைவுபடுத்துகிறேன். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

Nandri: Dinamalar
----------------------------------------------------------------------------

From Dinakaran:

ஜெயலலிதா அறிக்கை: குடிக்கும் பழக்கம் எனக்கு கிடையாது

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கை:

அதிமுக தலைமைக் கழக கட்டிடத்தை இடிக்கச் சொல்லி, சி.எம்.டி.ஏ.வில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதைச் சட்ட ரீதியாக நீதிமன்றத்தில் நாங்கள் சந்திப்போம்.

ஆனால், அதைப் பற்றி கருணாநிதி கூறுகையில், ‘‘நேற்று கொஞ்சம் ‘அதிகமாகிவிட்டது’ போலும். அதாவது கோபம்’’ என்று சொல்லி இருக்கிறார். இதில் இரட்டை அர்த்தம் இருக்கிறது. ‘‘நேற்று அதிகம் போலும் என்று சொல்வதன் மூலம் எனக்கு குடிப்பழக்கம் உள்ளது என்பது போன்ற அர்த்தத்தில் சொல்லி இருக்கிறார். எனக்கு 59 வயதாகிறது. இன்று வரை என் வாழ்நாளில் நான் மதுவை தொட்டது கிடையாது. எனக்கு குடிப்பழக்கம் இல்லை. குடிப்பழக்கம் உள்ளவர்கள் என் இல்லப் பணியிலோ அலுவலக பணியிலோ இருக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இப்படி எல்லாம் எழுதி வருவதை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறேன்.

தலைமைக் கழகத்தைப் பற்றி நான் பேசினால், தொடர்பே இல்லாத கோடநாடு எஸ்டேட் பற்றி கருணாநிதி பேசுகிறார். அந்தக் கட்டிடம் 50 கோடி ரூபாயில் கட்டப்படவில்லை. அதில் 90 அறைகளும் இல்லை. அங்கு கட்டப்படும் கட்டிடத்துக்கு அனுமதி பெறப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

Nandri: Dinakaran (6-June-2007)

4 comments:

கோவி.கண்ணன் said...

ஹார்லிக்ஸ் விளம்பரம் நினைவு வந்து தொலையுது.

"குடிக்கவேண்டாம் அப்படியே......"
:)

லக்கிலுக் said...

கலைஞர் எங்கேயும் ஜெயலலிதாவை குடிகாரி என்று சொல்லவில்லையே?

"குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்"

Unknown said...

//குடிக்கவேண்டாம் அப்படியே......'//
ஆஹா ஜிகே.! அதற்கு அப்படியும் அர்த்தம் வருமோ!!

சதுர் said...

தனியா குடிக்கும் பழக்கம் கிடையாது.