Monday, June 4, 2007

யார் அந்த சக்தி - ராமதாஸ் பேட்டி

முதலாளித்துவ சக்திகளுக்கு துணை போன தயாநிதிமாறனை இனம் கண்டு வெளியேற்றிய முதல்வர் கருணாநிதியின் முடிவு வரவேற்கத்தக்கது என்று அவரது பெயரை குறிப்பிடாமல் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இடித்து தள்ளுவதில் கருணை காட்டக் கூடாது என்றும் அவர் கூறினார்.

சென்னையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று அளித்த பேட்டியின் விவரம் வருமாறு: சென்னை மாநகரில் விதிமுறைகளுக்கு புறம்பாகவும், ஆக்கிரமிப்பு செய்தும் கட்டப்பட்ட சுமார் 75 ஆயிரம் கட்டிடங்களை இடித்து தள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விஷயத்தில் யாருக்கும் எந்தவித கருணையும் காட்டப்படக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித் துள்ளது

"யார் அந்த சக்தி'


முதலாளித்துவத்திற்கு ஆதரவாக செயல்பட்ட சக்தியை முதல்வர் வெளியேற்றியது வரவேற்கத்தக்கது என்று டாக்டர் ராமதாஸ் கூறிய போது, அந்த சக்தி யார் என்று பத்திரிகையாளர்கள் திரும்ப திரும்ப அவரிடம் கேள்வி எழுப்பினர்.


அதற்கு பதில் அளித்த டாக்டர் ராமதாஸ், "அந்த சக்தி யார் என்பது உங்களுக்குத் தெரியும். அண்மையில் அந்த சக்தி வெளி யேற்றப்பட்டதும் உங்களுக்குத் தெரியும். அது குறித்து விரைவில் தனியாக பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நான் நடத்தவிருக்கிறேன்' என்றார்.
இதனை எதிர்த்து அரசு சார்பாக மறு ஆய்வு மனு செய்யவிருப்பதாகவும், இந்த சட்டத்தை திருத்த நீதிபதி மோகன் தலைமையில் குழு அமைக் கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. இவை எதுவுமே கூடாது. இவ்வாறு சட்ட மீறல் செய்பவர்களை காப்பாற்ற சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

அதிமுகவுக்கு நோட்டீஸ் அனுப்பியது இதைத்தான் புலப்படுத்துகிறது. இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பதையே பாமக விரும்புகிறது.

கல்விக்கடன் நிறைய பேருக்கு கிடைக்கவில்லை. எனவே அரசாங்கமே உயர்கல்விக்கு அரசு பங்களிப்புடன் கூடிய திட்டம் ஒன்றை உருவாக்கி 3 சதவிகித வட்டியில் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க வேண்டும்.

நில உச்சவரம்பு சட்டத்தை கொண்டு வந்ததைதான் தன்னுடைய வாழ்நாள் சாதனையாக முதலமைச்சர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவருடனே இருந்து கொண்டு முதலாளித்துவ கொள்கைகளை நோக்கிச் சென்ற ஒரு சக்தி பற்றி நான் முதல்வரிடம் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளேன்.


அவரிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் முதலமைச்சரிடம் நான் கேட்டுக் கொண்டிருந்தேன். இப்போது அந்த சக்தியை இனம் கண்டு முதலமைச்சர் வெளியேற்றி இருக்கிறார். இந்த நடவடிக்கை காலம் கடந்தது என்றாலும், அது வரவேற்கத்தக்கதே.

பாலாற்றில் அணைக்கட்டும் பணியை ஆந்திர அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது. ஆனால் இதனை தடுக்க தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எனவே, உச்சநீதிமன்றத்தின் விடுமுறை காலம் முடியும் வரை காத்திருக்காமல் உடனடியாக ஒரு அவசர மனுவை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்து அதனை விசாரணைக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

கல்விக் கட்டணங்களை குறைக்க வலியுறுத்தி நாளை ஜி.கே.மணி தலைமையில் சென்னையிலும், தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட கல்வி மையங்களிலும் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார் ராமதாஸ்.

பின்னர் நிருபர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து ராமதாஸ் கூறியதாவது: ஹெல்மட் அணிவது, பொது இடங்களில் புகைபிடிப்பதற்கு தடை போன்ற சட்டங்களை மக்கள் வரவேற்று அவர்களே நடைமுறைப் படுத்தவேண்டும்.

நலிந்த, ஏழை மக்கள் எந்த பிரிவினராக இருந்தாலும் அவர்கள் உயர்கல்வி பெற அரசு உதவ வேண்டும். இந்தியாவும், இலங்கையும் இணைந்து கூட்டு ரோந்து செல்வதோ அல்லது ஒருங்கிணைந்த ரோந்து செல்வதோ கூடாது என்ற நெடுமாறனின் கருத்துதான் என்னுடைய கருத்து.

ஜனாதிபதி வேட்பாளரை பொறுத்த வரை தோழமைக் கட்சிகள்குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் முடிவுக்கு பாமக ஆதரவு அளிக்கும். இலங்கை போராளிக்குழுக்களால் இந்தியாவுக்கு வான்வழி மற்றும் கடல்வழி மூலம் ஆபத்து வரும் என்று சொல்வது கடைந்தெடுத்த பித்தலாட்ட பொய்ப்பிரச்சாரம் ஆகும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.

Nandri: MaalaiSudar

No comments: