Thursday, August 7, 2008

அழகிரி 'அஞ்சாநெஞ்சன்' - கருணாநிதி மகிழ்ச்சி

மதுரை மக்கள் மு.க.அழகிரியை அஞ்சாநெஞ்சன் என்று பாராட்டுவதைக் கேட்க மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது என்று தமிழக முதல்வர் மு.கருணாநிதி கூறினார்.

பழம்பெரும் பின்னணிப் பாடகர் டி.எம். சவுந்திரராஜன், பாடகி பி.சுசீலா ஆகியோருக்கு மதுரை தமுக்கம் மைதானத்தில் பிரமாண்ட பாராட்டு விழா நடந்தது. முதல்வரின் மூத்த மகன் மு.க. அழகிரி இந்த விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.

மு.க.அழகிரி கல்வி அறக்கட்டளை சார்பில் டி.எம். சவுந்திரராஜனுக்கு ரூ.5 லட்சமும், சுசீலாவுக்கு ரூ.3 லட்சமும் பொற்கிழியாக இந்த விழாவில் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

மு.க.அழகிரிக்கு இன்னொரு பெயர் உண்டு. அது அஞ்சா நெஞ்சன். அப்படி அழைத்தே பழக்கப்பட்டவர்கள் மதுரை மக்கள். அழகிரிக்கு அஞ்சா நெஞ்சன் என்ற பட்டப் பெயர் வந்ததற்கு ஒரு காரணம் உண்டு.

திருவாரூரில் அழகிரி பிறந்து, குழந்தையாக அறைக்குள்ளே கிடத்தப்பட்டிருந்தபோது, என் வீட்டுக்கு வந்தார் பெரியார்.

குழந்தைக்கு என்ன பெயர் வைத்திருக்கிறாய், என்றார். நான் உடனே அழகிரி என்றேன். சரியான முரட்டுப் பெயரைத்தான் வைத்திருக்கிறாய் என்று அன்றைக்கே பெரியார் சொல்லிவிட்டார். மதுரை மாவட்டத்தில் உள்ள காளையர்களும் தோழர்களும் அதை உறுதி செய்திருக்கிறீர்கள்.

இதைக் கண்டு உள்ளம் பூரிக்கிறேன். பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.
எதற்கு அஞ்சாவிட்டாலும் கூட, ஏழைகளின் கண்ணீருக்கு அஞ்சவேண்டும் என்றான் ஒரு கவிஞன். அந்தப் பெருமையும் அழகிரிக்கு உண்டு. அந்த உள்ளம் வளர வாழ்த்துகிறேன்.

தமிழ்த்தாயின் நன்றி!

நண்பர் சவுந்திர்ராஜனுக்கு மிகச் சிறப்பான முறையில் பாராட்டுவிழா எடுத்திருக்கிறார் அழகிரி. அதை நினைக்கும் போதே எனக்குப் பெருமையாக இருக்கிறது. இந்த அளவு கூட்டத்தைப் பார்க்கும்போதே பிரமிப்பாக இருக்கிறது. அதுதான் அஞ்சாநெஞ்சனின் ஆற்றல்.

டிஎம்எஸ் என்னோடு நெருங்கிப் பழகியவர். 1969-லே நான் முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொண்டபிறகு, தமிழ்த்தாய் வாழ்த்தாக தமிழர் நிகழ்வுகளிலெல்லாம் ஒலிக்கக்கூடிய ஒரு பாடலை உருவாக்க வேண்டும் என அனைவரும் விரும்பினர்.

உடனே நான் மனோன்மணீயம் சுந்தரனாரின் நீராரும் கடலுடுத்த... பாடலின் சில பொதுவாக பகுதிகளை எடுத்து, யாருக்கும் பாதிப்பில்லாத வகையிலே தமிழ்த்தாய் வாழ்த்தாக்க முடிவு செய்து, சில பாடகர்களைப் பாடித்தருமாறு அழைத்தோம்.

ஆனால் அந்தப் பாடலைப் பாட பலர் பயந்து கொண்டு வரமறுத்தார்கள். ஆனால் நண்பர் சவுந்திர்ராஜனும், பி.சுசீலாவும் சொன்ன வாக்கை மதித்துப் பாடிக் கொடுத்தார்கள். விஸ்வநாதன் –ராமமூர்த்தி இருவரும் அற்புதமாக மெட்டமைத்துக் கொடுத்தார்கள்.

தமிழ் உள்ளளவும் உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல் இது. இதற்காக அந்த மாபெரும் இசைக் கலைஞர்களுக்கு தமிழ்த்தாய் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

டிஎம்எஸ் ஒரு தமிழன்...

இது டி. எம். சவுந்திர்ராஜனின் சொந்த ஊர். அவர் பிறந்த வகுப்பு மற்றும் அந்த வகுப்பினர் அவர்பால் வைத்துள்ள பாசம் பற்றியெல்லாம் சொன்னார்கள். அவர் எந்த சமுதாயத்தில் பிறந்திருந்தாலும், அவர் ஒரு தமிழர் என்றுதான் என்னால் பார்க்க முடிகிறது. ஒரு தமிழன் இந்த அளவு திரைத் துறையில் கீர்த்தி பெற்றிருப்பது என்னை நெஞ்சு நிமிர வைக்கிறது.

இவ்வளவு பெரிய விழா எடுத்த அழகிரியை மீண்டும் மீண்டும் பாராட்டாமல் இருக்க முடியாது. அவரைப் போற்றுகிறேன்.

இந்த விழாவிலே அழகிரிதான் நன்றி கூறினார். ஆனால் அந்த நன்றியில் என் நன்றியும் கலந்திருக்கிறது, என்றார் கருண்நிதி.

இயக்குநர்கள் கே.பாலச்சந்தர், இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் விழாவில் பங்கேற்றுப் பேசினர்.

மு.க.அழகிரி அனைவரையும் வரவேற்றார்.


செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்

4 comments:

கோவி.கண்ணன் said...

:)

ஆமாம் ஆமாம் அண்ணன் அஞ்சா நெஞ்சன் உடனடியாக

1. சேது
2. ஒக்கனேக்கல்

இரண்டையும் முடித்துத் தரவேண்டும் !

bala said...

//ஆமாம் ஆமாம் அண்ணன் அஞ்சா நெஞ்சன் உடனடியாக

1. சேது
2. ஒக்கனேக்கல்

இரண்டையும் முடித்துத் தரவேண்டும் !//

கோவி.மு.கண்ணன் அய்யா,
இந்த ரெண்டு மட்டும் போதுமா?தமிழ் ஈழத்தையும் பெற்றுக் கொடுத்து இனமானம் காக்க வேண்டாமா?

பாலா

Sambar Vadai said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோவி.கண்ணன்.

உங்கள் பதிவையும் படித்தேன். அழகிரியால் எதை 'முடிக்க' முடியுமோ அதைத்தான் முடிக்கமுடியும். சில விஷயங்கள் ஸ்டாலினால் தான் செய்ய முடியும். சேது, ஓகனேக்கல் போன்றவை மதுரையிலிருந்து கொண்டு செய்ய இயலாது. எம்.எல்.ஏ, அமைச்சர், அல்லது முதல்வராக இல்லை எம்.பியாகவாவது இருக்கவேண்டும்.

Unknown said...

இன்றைய ஈழ சூழலில் அஞ்சா நெஞ்சன் அழகிரியை இலங்கைக்கு அனுப்பினால் ஒரே நாளில் இலங்கை இராணுவம் தூள் தூள் கூடவே அட்டாக் பாண்டியனும்