Sunday, August 24, 2008

பாமக மீண்டும் திரும்பினால் கூட்டணி வலுவடையும்: கருணாநிதி

ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு மீண்டும் பாமக திரும்பினால் கூட்டணி வலுப்பெறும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இதையடுத்து மீண்டும் திமுக அணிக்கு பாமக திரும்பவுள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸுடன் பேசப் போவதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றிருந்தது பாமக. திமுகவுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காததால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. அப்போது அமைச்சரவையில் பங்கு கேட்க மாட்டோம் என பாமக அறிவித்தது. அதன்படி அமைச்சரவையில் பங்கு கேட்காமல் இருந்து வந்தது.

ஆனால் திமுக ஆட்சி பதவியேற்ற சில மாதங்களிலேயே பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பாமகவுக்கும், திமுகவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இரு தரப்பினரும் அறிக்கைப் போர், விமர்சனப் போர்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் பாமக பொருளாளரும், வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி குரு, முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோரை மிகக் கடுமையாக தாக்கிப் பேசியது திமுகவை கொதிப்படைய வைத்தது. இதையடுத்து ஜனநாயக முற்போக்குக் கூட்டணியிலிருந்து பாமகவை நீக்கியது திமுக.

இந்த நிலையில், திடீர் திருப்பமாக கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவுடன் முரண்பட்டு போக ஆரம்பித்துள்ளன. திமுக கூட்டணியை விட்டு விலகவும் அவை தீர்மானித்து விட்டன.

இதன் காரணமாக ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மட்டுமே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, தமிழகத்தில் புதிதாக 3வது அணியை உருவாக்கப் போவதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்துள்ளன. இந்த மூன்றாவது அணியில் பாமக, தேமுதிக உள்ளிட்ட வலுவான கட்சிகள் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது.

இதனால் திமுக தரப்பு கலக்கமடைந்தது. இந்தப் பின்னணியில், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு முதல்வர் கருணாநிதி முக்கியத்துவம் வாய்ந்த பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு பாமக திரும்பி வந்தால் கூட்டணி வலுவடையும் என்று அவர் கூறியுள்ளார்.

இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணியிலிருந்து விலகும் சூழ்நிலையில் திமுக கூட்டணியை பலப்படுத்த பாமகவுக்கு முதல்வர் விடுத்துள்ள அழைப்புதான் இது என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறுகையில், முதல்வரின் கருத்து விடுதலைச் சிறுத்தைகளுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எமது முயற்சிகளுக்கு ஊக்கம் ஊட்டுகிற வகையில் முதல்வரின் கருத்து வெளிப்பட்டிருக்கிறது.

பாமக இதுகுறித்து என்ன கருதுகிறது என்பதை பொறுத்து எங்களது முடிவை அறிவிக்கிறோம். டாக்டர் ராமதாஸையும் சந்திக்க திட்டமிட்டுள்ளேன் என்றார் அவர்.

இதன் மூலம் திமுக கூட்டணிக்கு மீண்டும் பாமக திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழக அரசியல் களம் மறுபடியும் சூடு பிடித்துள்ளது.

செய்தி: நன்றி: Thatstamil

திமுக அணிக்கு பாமக திரும்பி வரும்: ப.சிதம்பரம்


திமுக அணியிலிருந்து பாமக விலகியிருப்பது போல ஒரு காட்சி இருக்கிறது. நாளைக்கே பாமக திமுக அணிக்கு மீண்டும் திரும்பி வரக் கூடாது என யாரும் சொல்ல முடியாது. வரும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

முதல்வர் கருணாநிதியை, ப.சிதம்பரம் கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலும் பாமக பங்கேற்றுள்ளது.

தமிழகத்தில் இடையிலே சில வேறுபாடுகள் தோன்றியதன் காரணமாக விலகியிருப்பது போல ஒரு காட்சி இருக்கிறது. நாளைக்கே மீண்டும் பாமக தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. தெரிவிக்கலாம்.

காங்கிரஸ் ஆட்சியை மூழ்கும் கப்பல் என்று இடதுசாரிகள் விமர்சித்துள்ளனர். நாடு எப்போதெல்லாம் சங்கடத்தில் மூழ்குகிறதோ அப்போதெல்லாம் நாட்டைக் காப்பாற்றும் மாலுமியாகத்தான் காங்கிரஸ் இருந்து வந்திருக்கிறது. எனவே இந்த விமர்சனம் சிறுபிள்ளைத்தனமானது என்றார் சிதம்பரம்.


செய்தி: நன்றி: Thatstamil

No comments: