Tuesday, August 26, 2008

நெடுமாறன் - தசரதன் - கருணாநிதி - கவிதை

புதிய தசரதனின் பதவித் துறப்பு - பழ. நெடுமாறன்.


கம்பன் எழுதிய காவியத்தின் தனிச் சிறப்பாகக் கருதப்படுவது ஒவ்வொரு பாத்திரத்தின் பண்பு நலன்களைச் சில சொற்களால் சுட்டிக் காட்டுவதே ஆகும்.

தசரத மன்னன் தனது மூத்த மைந்தன் இராமனுக்கு முடிசூட்ட முடிவு செய்த சூழ்நிலையை மிக அற்புதமாக பின்வரும் பாடலின் மூலம் விளக்குகிறார்.

மன்னனே யவனியை மகனுக்கீத்து நீ
பன்னருந் தவம்புரி பருவ மீதெனக்
கன்ன மூலத்தினிற் கழற வந்தென
மின்னெனக் கருமை போய் வெளுத்ததோர் மயிர்

""மூத்த மகனாகிய இராமனிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு சிறப்புமிக்க தவ வாழ்வை மேற்கொள்வதற்கு ஏற்ற முதிர்ந்த பருவம் அடைந்துவிட்டாய் என்பதை அவனது காதோரத்தில் ரகசியமாகக் கூற வந்ததைப் போல மயிர் ஒன்று மின்னலைப் போல வெளுத்து நரைத்துத் தோன்றலாயிற்று'' என பாடுகிறான் கம்பன்.

கண்ணாடியின் முன் நின்ற தசரதன் காதோரத்தில் ஒரேயொரு முடி நரைத்துக் காட்சியளித்ததைப் பார்த்தவுடனேயே முதிய பருவத்தை அடைந்து விட்டதை உணர்கிறான். உடனடியாக அரியணையில் இருந்து இறங்கித் துறவுகோலம் பூணுவது குறித்து சிந்திக்கிறான். குலகுருவான வசிட்ட மாமுனிவரையும், அமைச்சர்களையும் அழைக்கிறான். அவர்களும் விரைந்து வந்து கூடுகிறார்கள். அப்படி கூடியவர்கள் நடுவே தனது மனக் கருத்துகளை தசரதன் வெளியிடுகிறான். இந்த இடத்தில் தசரதனின் மிக உயர்ந்த பண்பு நலன்களைச் சுட்டிக்காட்டும் வண்ணம் கம்பனின் மற்றொரு பாடல் அமைந்துள்ளது.

இறந்திலன் செருக்கலத் திராமன் தாதைதான்
அறந்தலை நிரம்பமூப் படைந்த பின்னரும்
துறந்தில னென்பதோர் சொல்லுண் டாயபின்
பிறந்தில னென்பதிற் பிறிதுண் டாகுமோ

""இராமனின் தந்தையான தசரதன் போர்க்களத்தில் இறந்தானில்லை. முதிர்ந்த வயதை அடைந்த பிறகும் பற்றுகளைத் துறந்தானில்லை என்பதாகிய ஒரு பழிச்சொல் உண்டான பிறகும் வாழ்வது சரியோ'' என்கிறான்.

ஒரேயொரு நரை மயிர் தோன்றியதைக் கண்டவுடனேயே முதுமை அடைந்து விட்டோம் என்ற எண்ணம் மேலோங்க மைந்தனுக்கு முடி சூட்ட நினைக்கிறான் தசரதன். இன்னும் பற்றுகளைத் துறக்காத பாவியாக அரியணையில் தொடர்ந்து அமர்ந்திருக்க அவன் விரும்பவில்லை. தசரதனின் உயர்ந்த பண்பு நலன்களை இவ்வாறு சுட்டிக்காட்டி வியக்கிறான் கம்பன்.

கம்பன் கண்ட தசரதன் அவன். ஆனால் இன்று புதிய தசரதனாக முதல்வர் கருணாநிதி காட்சி தருகிறார்.

""5 முறை முதலமைச்சராக இருந்து விட்டேன். இனி அடுத்த முறை முதலமைச்சராக இருக்க விரும்பவில்லை''யெனத் திடீரென அறிவித்திருக்கிறார். இதுபோன்ற வேளைகளில் அவர் வழக்கமாக பேசும் பேச்சா? அல்லது உண்மையிலேயே அப்படி கூறுகிறாரா? என்பது விவாதத்திற்கு உரியதாகும். 1993-ஆம் ஆண்டில் கழகத்திலிருந்து வைகோவும் அவரது தோழர்களும் விலக்கப்பட்ட வேளையில் அரசியலிலிருந்தே நான் விலகிக் கொள்கிறேன் என்று அறிவித்தவர் கருணாநிதியே ஆவார். ஒரு வாரம் கழித்து வழக்கம் போல தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று அறிவிப்பைத் திரும்பப் பெற்றார்.

2001-ஆம் ஆண்டில் இதுதான் நான் கடைசியாக நிற்கும் தேர்தல் எனக் கூறினார். ஆனால் 2006-ஆம் ஆண்டு தேர்தலிலும் போட்டியிட்டார். 2008-ஆம் ஆண்டில் தனக்கு பிறந்தநாள் விழா வேண்டாம் என்றார். உடனே சொல்லி வைத்தாற்போல கழகத் தொண்டர்கள் அலறியடித்துக் கொண்டு அய்யோ அப்படிக் கூறாதீர்கள் நாடு தாங்காது. நாங்களும் தாங்க மாட்டோம் எனக் கெஞ்சினார்கள். பிறகு அவரது பிடிவாதம் தளர்ந்தது. உங்களுக்காக எனக் கூறி பிறந்தநாள் விழாவுக்கு ஒப்புக்கொண்டார். இது அவருக்கே ஆகி வந்த கலையாகும்.


ஆனால் மீண்டும் முதல்வர் பதவி ஏற்கத் தனக்கு விருப்பம் இல்லை என்று அவர் கூறிய பிறகு நாட்டிலும், கழகத்திலும் எத்தகைய பிரளயமும் ஏற்பட்டுவிடவில்லை. இது ஏன்?

""நியாயம் தானே! முதிய வயதில் இனி அவர் ஓய்வெடுத்துக் கொள்வது நாட்டுக்கும் நல்லது - அவருக்கும் நல்லது'' என நினைத்து அனைவரும் அமைதி காத்து விட்டார்களா?

முதுமையின் காரணமாக இவ்வாறு கூறியுள்ளாரே தவிர பதவிப் பற்றினை வெறுத்தோ, இளைய தலைமுறைக்கு வழிவிட்டு கழகத்தில் தான் முன்மாதிரியாகத் திகழ்ந்தால் மற்றவர்களும் அதன்படி அமைச்சர் பதவிகளிலிருந்தும், கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் விலக முன்வருவார்கள் என நினைத்தோ இவ்வாறு கூறியதாகத் தெரியவில்லை.

விலைவாசி உயர்வு, காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு போன்ற நதிநீர்ப் பிரச்னைகள், ஈழத் தமிழர் பிரச்னை, மீனவர் பிரச்னை, கச்சத்தீவுப் பிரச்னை, சேதுக் கால்வாய் பிரச்னை போன்ற உண்மையான மக்கள் பிரச்னைகளைத் தீர்க்க முடியாத நிலைமையில் இவ்வாறு கூறினாரா? அல்லது தீராத இப்பிரச்னைகளிலிருந்து மக்கள் கவனத்தைத் திசை திருப்ப இவ்வாறு கூறினாரா? என்பதும் புரியாத புதிர்தான்.

சக அமைச்சர்கள் மீதும், உயர் அதிகாரிகள் மீதும் அடுக்கடுக்காக எழுப்பப்படும் ஊழல் புகார்களைக் கண்டு மனம் நொந்த நிலையில் பதவி விலக முடிவெடுத்திருக்க முடியாது. ஏனெனில் இவரது குடும்ப அதிகார மையங்களின் ஊழலும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதும் அமைச்சர்களையும் விஞ்சிவிட்டது.

தவறுகளை இடைவிடாது சுட்டிக்காட்டிய பாமகவை கூட்டணியிலிருந்து வெளியேற்றியாகிவிட்டது. கம்யூனிஸ்டுகளும் வெளியேறத் தயாராகி வருகிறார்கள். எஞ்சியிருக்கும் காங்கிரஸ் கட்சியிலோ பல்வேறு குழுக்களின் ஓய்வு ஒழிச்சல் இல்லாத மோதல்! மனிதர் பாவம் வயதான நிலையில் என்னதான் செய்வார்? அதனால் இந்த முடிவெடுத்தாரா என்பது அவருக்கு மட்டுமே புரியக் கூடியது.

அடுத்த தேர்தலில் திமுகவுக்கு பெரும்பான்மை கிடைத்து கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடி புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க முற்படும்போது தான் மீண்டும் முதல்வராக வர விரும்பவில்லை என பேச வேண்டிய பேச்சை இப்போது பேச வேண்டியது எதற்காக? என்ன நோக்கத்திற்காக?

அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூட இவருடன் கூட்டு சேருமா வேறு கட்சிகளைத் துணைக்கு அழைக்குமா என்ற நிலையில் திமுகவின் வெற்றி பெரிய கேள்விக்குறியாகிவிட்ட நிலையில் மீண்டும் முதல்வராக வர விருப்பம் இல்லை என்று கூறுவது நகைப்புக்கிடமானது.

ஒருவேளை முதல்வர் பதவியைத் துறக்க நேரிட்டாலும், கழகத் தலைவர் பதவியை ஒருபோதும் உதறித் தள்ளத் துணியமாட்டார். அப்போதுதான் ஆட்சியும், கழகமும் அவரது கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்ற சூட்சுமத்தை அறியாதவரா அவர்?

இராமாயண கால தசரதனுக்கு இந்த சூட்சுமங்கள் புரிந்திருக்கவில்லை. எனவேதான் காதருகே ஒரேயொரு மயிர் நரைத்ததைப் பார்த்தவுடன் ஆட்சியைத் துறக்கத் துணிந்தான். தன் மகன் இராமனுக்கு முடிசூட்ட முடிவு செய்தான். இவ்வளவுக்கும் பரம்பரை பரம்பரையாகக் கடைப்பிடிக்கப்பட்ட மரபுப்படி அவனுக்குக் கிடைத்த அரியணை அது. அவன் தலை சாயும் வரை அமர்ந்திருக்கலாம். யாரும் அவனைக் கீழிறங்கச் செய்ய முடியாது. ஆனால் தசரதன் தானே முன் வந்து அரியணையைத் துறக்க முற்படுகிறான்.

ஆனால் ஜனநாயக நாட்டில் புதிய தசரதனுக்குப் பதவியைத் தக்க வைத்துக் கொள்ளவும் மற்றவர்களுக்குப் போக்குக்காட்டி ஏமாற்றவும் தெரியும். எனவே அவர் பதவி நாற்காலியில் தொடர்கிறார்.

கட்டுரை: நன்றி: தினமணி

இதற்கு மறுமொழியாக கருணாநிதி எழுதிய ஆழ்வார் கவிதை

விடுதலைப் போர் நாயகராம்
விருதுநகர் மாவீரர் காமராஜரின்
விசுவாசமிக்க சீடர் என்று
விரிவுரைகள் பல நிகழ்த்தி; பின்னர்

வேறு கொடி பிடிப்பேன் என்று - அவர்
விலாவில் குத்திய விபீஷ்ண ஆழ்வார்!!
அண்ணாவின் அணி வகுப்பில் நானும் ஒருவன் என நவின்று

கண்ணான அண்ணாவின் கழுத்தறுக்க முனைந்திட்ட சுக்ரீவன்!
மூப்பனாரின் காலடியே மோட்சமென்றும் சொர்க்கமென்றும்
முகஸ்துதி பல செய்து மோசடியால் புதுக்கொடி ஏற்றிவிட்ட எட்டப்பன்!
குன்றனைய குமரி அனந்தரின் புகழ் மறைக்க

குறுக்குச் சுவர் கட்டி, தடை மீறிய தமிழ் ஈழப் பயணமென;
தவிக்க விட்டு கடல் நடுவே அவரை;
தான் மட்டும் தப்பி வந்த ஆஞ்சநேயன்!
வலியின்றி புலிக் கூட்ட முதுகினிலே
குத்திக் கொண்டே பணம் பறிக்கும் இனத் துரோகி!
தரணிதனில் பல புராணங்கள் இருக்க
தசரதன் புராணத்தில் இவர் இறங்கி
அவன் காதோரம் நரைத்த மயிரின் கதையை- தன் கட்டுரைக்கு
விதையாக்கி விஷத்தைக் கக்கியிருப்பதுதான் பெரும் விந்தை!
சீராக்கவே முடியாத சீழ் பிடித்த சிந்தை!

கூராக்கவே இயலாத மூளையில் விஷம் ஒரு மொந்தை!

No comments: