Tuesday, August 26, 2008

தமிழ்நாடு குடிகார நாடு ? - ராமதாஸ்

மது விற்பனையை அரசு தொடர்ந்து அதிகரித்தால் தமிழ் நாட்டிற்கு குடிகார நாடு என்று பெயர் ஏற்படும் அவலநிலை உருவாகும் என்றும் அவர் கூறியிருக்கிறார். மதுவிலக்குப் பிரச்சனையில் கொள்கையற்ற அரசாக திமுக அரசு விளங்கி வருகிறது என்று பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னையில் இன்று பாமக சார்பில் "தமிழ்நாடு அரசுக்கான மாற்று மது ஒழிப்பு கொள்கை' குறித்த வழிமுறைகளை அக்கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டார். தமிழ்நாட்டில் படிப்படியாக முழு மது விலக்கை கொண்டு வருதற்கான வழிமுறைகள் இந்த கொள்கை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதனை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களிடம் ராமதாஸ் கூறியதாவது:

தமிழக அரசுக்கு மாற்று தொழில் கொள்கை, வேளாண்மைக் கொள்கை, இளைஞர் நலன் குறித்த கொள்கை, சென்னை போக்குவரத்து பிரச்ச னைக்கான மாற்றுத்திட்டம் என பல்வேறு ஆக்கப்பூர்வமான யோசனைகளை தெரிவித்துள்ளோம்.

அந்த வகையில் மது ஒழிப்புக்கான மாற்று கொள்கை திட்டத்தை உருவாக்கி அதனை இன்று பத்திரிகையாளர்கள் மூலமாக மக்களுக்கும் அரசுக்கும் தெரிவிக்க விரும்புகிறோம்.
மதுவை ஒழிக்க வேண்டியது ஒரு மாநில அரசின் கொள்கையாக இருக்க வேண்டும்.

அரசியல் சட்டத்திலும் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றமும் மது ஒழிப்பு பிரச்சாரத்தில் அரசுத்தீவிரம் காட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
எனவே முதலமைச்சர் கருணாநிதி இதனை கருத்தில் கொண்டு படிப்படியாக மது விற்பனையை குறைத்து முழுமையான மதுவிலக்கை தமிழகத் தில் கொண்டுவர வேண்டும்.

மதுக்கடைகளை மூடினால் கள்ளச் சாராயம் பெருகும், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்றெல்லாம் காரணங்களை சொல்லக்கூடாது. ஆண்டுதோறும் மதுவிலக்கு ஆயத்தீர்வை கொள்கை விளக்க குறிப்பு ஒன்றை அரசு வெளியிடும். அதிமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட இந்த குறிப்புகளில் மது விலக்கு தொடர்பான சில அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.

ஆனால் திமுக ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் இது குறித்த கொள்கை விளக்க குறிப்புகள் எதுவும் இடம் பெறவில்லை. எனவே இந்த அரசு மதுவிலக்கை பொறுத்தவரை கொள்கையற்ற ஒரு அரசாக திகழ்ந்து வருவது தெளி வாகிறது. மதுவை ஒழித்தால் கள்ளச்சாராயம் பெருகும் என்பது ஏற்புடையதாகாது.

கள்ளச்சாராயத்தை ஒழிக்க சில நடைமுறை வழிமுறைகளை நாங்கள் தெரிவித்துள்ளோம். அவற்றை அரசாங்கம் அமல்படுத்தலாம். அதேபோல வருவாய் இழப்பை ஈடுகட்டவும் மாற்று வழிகளை கூறியுள்ளோம்.

மணல் கொள்ளை மூலம் ஆண்டுக்கு சராசரியாக அரசாங்கத் திற்கு வர வேண்டிய 2 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் தனியாருக்கு போகிறது. இதனை கட்டுப் படுத்தலாம். மேலும் விற்பனை வரியை முறையாக வசூலித்தால் அதன் மூலமாகவும் ஆண்டுக்கு சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.

அத்துடன் கிரானைட் குவாரி மூலமாகவும் அரசாங்கத்திற்கு நல்ல வருமானம் வரும். இத்தகைய வழிகள் மூலமாக அரசாங்கம் தன்னுடைய வருவாயை பெருக்கிக்கொள்ள நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அதை விடுத்து தொடர்ந்து மது விற்பனையை அரசு அதிகப்படுத்தி வந்தால் தமிழ்நாடு என்ற பெயருக்குப் பதிலாக இதற்கு குடிகார நாடு என்று பெயர் ஏற்படும் அவலநிலை உருவாகும் என்றார் டாக்டர் ராமதாஸ்.


அரசியல் தொடர்பான கேள்விகளை செய்தியாளர்கள் கேட்டபோது, அவற்றுக்கு பதிலளிக்க டாக்டர் ராமதாஸ் மறுத்து விட்டார். ஏற்கனவே கூறியதைப்போல தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்த பாமகவின் நிலை பற்றி அறிவிக்கப்படும் என்றும், இன்னும் ஓரிரு நாளில் அரசியல் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

பேட்டியின் போது, பாமக தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. மற்றும் சைதை சிவா, ராமமுத்துக்குமார், பசுமைத் தாயகம் அருள், மு.ஜெயராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

செய்தி: நன்றி: மாலைச்சுடர்

1 comment:

Robin said...

மது ஒழிப்பு விஷயத்தில் டாக்டர் ராமதாசை பாராட்டுகிறேன். அனைத்து மதுக் கடைகளும் மது தயாரிப்பு நிறுவனங்களும் மூடப்படவேண்டும்.