Sunday, September 7, 2008

திமுகவை அழிக்க வீராசாமியே போதும் - விஜயகாந்த்

மின் வெட்டு பிரச்னையால் திமுகவை அழிக்க வீராசாமி ஓருவரே போதும்’’ என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார். தமிழகத்தில் நிலவி வரும் கடும் மின்வெட்டைக் கண்டித்து கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு நேற்று தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் விஜயகாந்த் பேசியதாவது:

தமிழகத்தில் மின் வெட்டு அதிகரித்து வருகிறது. தமிழகத்துக்கு 10,000 மெகாவாட் மின்சாரம் தேவை. இதில் 3,500 மெகாவாட் மின் சாரம் பற்றாக்குறை. 2012ல் தான் மின்வெட்டு சரியாகும் என அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி கூறியுள்ளார்.



இந்த பிரச்னையில் 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதி மின் உற்பத்திக்காக முன்கூட்டி யே திட்டங்களை போட வில்லை. மின்வெட்டால் விசைத்தறிகள், பவுண்டரிகள் உள்ளிட்ட தொழிற்கூடங்கள் முடங்கி கிடக்கின்றன. மின்வெட்டால், முதலாளிகள் கடனில் தவிக்கிறார்கள். தொழிலாளிகளுக்கு வேலை இல்லை, அரை வயிற்று கஞ்சிக்கு வழி இல்லை. விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மின்வெட்டு அமைச்சர் வீராசாமி, ரோபோ போல் போகிறார், வருகிறார். டெல்லி சென்று திரும்பினார். 600 மெகாவாட் மின் சாரம் பெற்று வந்ததாக தெரிவித்தார். இதனால் தேவையை பூர்த்தி செய்ய முடியுமா? திருவிளையாடல் நாகேஷ் பாணியில் சொன்னால் தி.மு.க.வை அழிக்க வீராசாமி ஒருவரே போதும்.

2 ரூபாய்க்கு அரிசி போட்டார்கள். அதை யாரும் வாங்கவில்லை. கோழித்தீவனமாகத்தான் பயன்படுத்த முடியும். இப்போது ஒரு ரூபாய்க்கு போடுவதாக சொல்கிறார்கள். அரிசி ஒரு ரூபாய்; குழம்பு வைக்க 30 ரூபாய் ஆகிறது.

மக்களுக்கு நல்லது செய்ய நல்ல மனம் வேண்டும். 5 முறை ஆட்சிக்கு வந்தும் வறுமையை ஒழிக்க கருணாநிதியால் முடியவில்லை. அதனால் தான் 1 ரூபாய்க்கு அரிசி போடுகிறார். எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டோம். மக்கள், நல்ல மாற்றத்தை உருவாக்க தே.மு.தி.க. வினரை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும். கேப்டன் டி.வி ஆரம்பிக்க விண்ணப்பம் போட்டோம். பணம் கட்டினோம்; அனுமதி தர மறுக்கிறார்கள். முரசு சின்னத்துக்கும் சட்டரீதி யாக முட்டுக்கட்டை போடுகிறார்கள். நமக்கு சின்னம் முக்கியமில்லை. 4 நாட்களுக்கு முன்பு, எந்தச் சின்னத்தை அறிவித்தாலும் ஜெயிப்போம்.
இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

செய்தி: படம்: நன்றி: தினகரன் 8 செப் 2008 (சென்னை பதிப்பு)

No comments: