Wednesday, July 23, 2008

இன்று ! மன்மோகன் சிங் - அத்வானி



இதுவல்லவோ டெல்லி அரசியல் தலைவர்களின் கலாச்சாரம் ?

நேற்று பாராளுமன்றத்தில் ஒருவரை ஒருவர் ஏசிவிட்டு இன்று பாலகங்காதர திலகர் விழாவில் பிரதமரும் அத்வானியும்.

படம்: நன்றி: என்.டி.டி.வி

Monday, July 21, 2008

தயாநிதி மாறனுக்கு கி.வீரமணி பாராட்டு

மத்திய அரசுக்கு ஆதரவாகத்தான் வாக்களிப்பேன் என்று அறிவித்ததற்காக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு தி.க. தலைவர் கி.வீரமணி பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 22ம் தேதி நாடாளுமன்றத்தில் சந்திக்கவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில், “ஆட்சிக்கு ஆதரவாகத்தான் வாக்களிப்பேன், திமுக கட்சிக்கும், தலைமைக்கும் விரோதமாக நான் ஒருபோதும் நடந்து கொள்ள மாட்டேன்’’ என்று திமுகவின் மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அறிவித்ததை, திராவிடர் கழகம் வரவேற்று மகிழ்கிறது, பாராட்டுகிறது.

‘அண்ணா சொன்ன, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றில் இருந்து நழுவ மாட்டேன்’ என்று அவர் கூறியிருப்பது மிகச் சரியானது. ‘நீர் அடித்து நீர் விலகாது’ என்பது பழமொழி. விலகக் கூடாது என்பது நியாயமும்கூட. ‘திமுகவை அழிக்க, வேறு எவராலும் முடியாது. ஆனால், அவர்களுக்குள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்’ என்று 1969ல் பெரியார் கூறிய அறிவுரை, காலத்தினால் செதுக்கப்பட்ட கல்வெட்டு ஆகும். அது என்றும் பொருந்தும்.

தயாநிதி மாறனின் இந்த தெளிந்த நிலைப்பாட்டினை, அவர் தொடர்புள்ள ஊடகங்களும் பின்பற்ற வேண்டும். அதன் மூலம், முதல்வரின் நல்லாட்சியின் பயன்கள் மேலும் தொடர வழி வகுக்கும் என்ற வேண்டுகோளையும் திராவிடர் கழகம் விடுக்கிறது. அண்ணா சொன்னது போல், நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.


செய்தி: நன்றி: தினகரன் 22 ஜூலை 2008 (சென்னை பதிப்பு)

பேரன்களை வாழ்த்துவது ஆபத்து: கருணாநிதி

இப்போதெல்லாம் பேரன்களை வாழ்த்துவது ஆபத்தில் முடிகிறது. ஆனாலும் இந்தப் பேரன் எனக்கு எதிராகப் போய்விட மாட்டான் என்ற நம்பிக்கையில் வாழ்த்துகிறேன் என்று மு.க.முத்துவின் மகன் முத்து அறிவுநிதியை வாழ்த்தினார் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதி.

சென்னையில் நேற்று நடந்த ஒரு திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் அவர் பேசியதாவது:

இன்று திரைப்படத் தணிக்கை என்பது அத்தனை சிரமமான விஷயமில்லை. ஆனால் நான் கதை-வசனம் எழுத ஆரம்பித்த ஆரம்ப நாட்களில் தணிக்கைத் துறைதான் திரைப்படத் துறைக்கு பெரும் சவாலாகத் திகழ்ந்தது.

அந்தக் கால கட்டத்தில் நான் அதிகம் சங்கடப்பட்டது சென்சாரிடம்தான். திரும்பிப்பார் என்றொரு படம். சிவாஜி நடித்தது. நான்தான் வசனம் எழுதினேன். அந்தப் படத்தின் தணிக்கையின்போது 4 ஆயிரம் அடிகளை வெட்டச் சொல்லி விட்டார்கள். எந்தக் காட்சியை வெட்ட வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள நானும் படத்தின் இயக்குநர் காசிலிங்கமும் தினமும் 5 மாடிகளைக் கடந்து செல்ல வேண்டும்.

ஒரு நாள் அந்த சென்சார் அதிகாரியிடம், தினமும் இத்தனை மாடிகளை ஏறி வருகிறோமே, இதைப் பார்த்தும்கூட உங்களுக்குக் கருணை வரவில்லையா, என்று கேட்டேன். திருப்பதி மலைக்கு வந்து போவதைப் போல நினைத்துக் கொள்ளுங்கள். அந்த அளவு புண்ணிய இடம்தான் இதுவும் என்றார் என் கொள்கைகளைத் தெரிந்து கொண்டே.

பதிலுக்கு நான், அங்கும் இங்கும் ஒரே ரிசல்ட்தான் என்றேன். கடைசியில் பலரும் சொன்னதற்குப் பிறகு 2 ஆயிரம் அடி வெட்டினார்கள்.

நான் வசனம் எழுதிய எந்தப் படமும் சென்சாருக்குத் தப்பியதே இல்லை.

இன்று அந்த அளவு நெருக்கடி இல்லை. நினைப்பதை, நாட்டில் நடக்கும் விஷயங்களைத் திரையில் காட்டுமளவுக்கு சுதந்திரம் இருக்கிறது. அதை அருமையாகப் பயன்படுத்தி வருகிறார்கள் திரையுலகினர்.

நாளை உண்ணாவிரதம் என்று அறிவித்துவிட்டு, இங்கே திரைப்பட விழாவில் இவர் உற்சாகமாகக் கலந்து கொள்கிறாரே என்று கூட கண்டனங்கள் எழலாம். ஆனால் அதையும்கூட உங்களுக்காகச் செய்கிற ஒரு தியாகமாகக் கருதி தாங்கிக் கொள்கிறேன்.

தமிழ்ப் பெயர்

இன்றைக்கு இந்தியாவிலேயே முழு வரிவிலக்கு பெற்ற திரைப்படங்களைக் காணுகிறீர்கள். ராஜாஜி மண்டபத்தில் படப்பிடிப்பு நடத்த முன்பு ஒரு லட்ச ரூபாய் கட்டணம். இப்போது அது வெறும் ஆயிரம் ரூபாயாகக் குறைக்கப்பட்டுவிட்டது.

இவ்வளவுக்கும் பிறகு நான் உங்களைக் கேட்பதென்ன....? நல்ல தமிழில் தலைப்புகளைச் சூட்டுங்கள் என்றுதானே. இதைக் கூடக் கேட்கக் கூடாதா... இவ்வளவு சலுகைகள் அளித்தும் கூட தமிழில் பெயர் வைக்காமல் ஏபிசிடி என்றெல்லாம் பெயர் சூட்டுகிறார்கள்.

சமீபத்தில் 70 படங்களுக்கு மானியம் அளிக்கப்பட்டது. இதில் 10க்கும் மேற்பட்டவை ஆங்கிலம் அல்லது பிற மொழித் தலைப்புகள் கொண்டவை.

இனிமேலாவது நல்ல தூய தமிழில் இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் தமிழ் என்று ஒப்புக் கொள்ளும் அளவுக்கு தலைப்புகளை வைப்போம். எதிர்காலத்தில் முழுக்க முழுக்க தமிழிலேயே படங்களை எடுப்போம். தமிழ்ப் பண்பாட்டைக் காப்போம் என்ற உறுதியைத் திரைத் துறையினர் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பேரனை வாழ்த்துவது ஆபத்து!

இந்தப் படத்தில் என் பேரன் அறிவுநிதி ஒரு பாடல் பாடி இருக்கிறான். அவன் மேலும் மேலும் இந்தத் துறையில் புகழ் பெற வாழ்த்துகிறேன். இப்போதெல்லாம் பேரன்களை வாழ்த்துவதே ஆபத்தாக முடிகிறது.

இருந்தாலும்கூட, இந்தப் பேரன் அப்படியெல்லாம் நடந்து கொள்ளமாட்டான் என்ற நம்பிக்கையோடு, நல்ல முறையில் வாழ்வான், என்னுடைய நிலையில் இவன் ஒருவனாவது நின்று என் பெயரைச் சொல்வான் என்ற நம்பிக்கையோடு வாழ்த்துகிறேன் என்றார்.


செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்

Thursday, July 10, 2008

ஆற்காடு வீராஸ்வாமி அவர்களே ? நீங்க நல்லவரா ? கெட்டவரா ?

பல மூத்த - சூடான இடுகை பதிவர்கள் போன்ற பிரபலங்கள், ஏன் ஜெயலலிதா, ராமதாஸ், சன்டிவி + தினகரன் குழுமம் கூட உங்களை கட்டம் கட்டி காய்ச்சுகிறார்களே ?

இன்றைக்கு தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் நாளில் ஒரு முறையாவது உங்கள் பேரை உச்சரிக்கும் அளவிற்கு விவசாயம், தொழில், பள்ளி, கல்லூரி, வீடு ஏன் பெப்சி, கோக் என விற்கும் பெட்டிக்கடைக்காரர் முதல் பெரிய தொழிலதிபர்கள் வரை அனைவரும் மின்வெட்டை சந்திக்கின்றனர். உடனே உங்கள் பெயரில் ஒரு அர்ச்சனை. தேவையா இது.. ? ஏதாவது செய்து மின்சாரத்திற்கு வழி பண்ணுங்க இல்லாட்டி ஆறு கோடி தமிழர்களும் தினமும் கரிச்சு கொட்டினாங்கன்னா என்னத்துக்கு ஆவறது ?

ஆற்காடு வீராஸ்வாமி அவர்களே - ஏதாவது முயற்சி எடுங்கள். அது செயலாகும் வரை பிற மாநிலங்கள், நடுவண் கிரிட் என கடன் வாங்கியாவது மின்சாரத்தை கொடுக்க முயலுங்கள். சும்மா 'அடுத்த மாசம் காத்தடிக்கும் அப்ப மின்சாரம் வரும் - அக்டோபரில் மழை வரும் அப்ப மின்சாரம் வரும்' என அறிக்கை விடவேண்டாம்.

இதுல ராமதாஸ் வேற 'தீவிரவாதிகளுக்கும் உங்களுக்கும் தொடர்பு இருக்கு'ன்னெல்லாம் பேட்டி கொடுக்குறாரு.

தமிழக மின்சாரத் துறை ஆற்காடு வீராசமிக்கு தீவிரவாதிகளுடன் நெருக்கமான தொடர்புள்ளதாகவும், தொடர்ந்து அவர் தீவிரவாத இயக்கங்களுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்து வருவதாகவும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

ஏ.கே மூர்த்தி எம்பி நேற்று முன்தினம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது தமிழக அமைச்சர் ஒருவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகவும் அவர்களுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்து வருவதாகவும் கூறியுள்ளார். அவர் வேறு யாரும் இல்லை. ஆற்காடு வீரசாமிதான்.

இதற்கான ஆதாரங்களை உள்துறை அமைச்சகத்திடம் சமர்பிப்போம். திமுக கூட்டணியில் இருந்து எங்களை வெளியேற்ற ஆற்காடு வீரசாமியும் உளவுத்துறை அதிகாரி ஜாபர்சேட்டும்தான் காரணம் என்றார் ராம்தாஸ்.


**** **** **** ****

அப்டியே சொல்லிபோடுங்க - நீங்க நல்லவரா ? கெட்டவரா ? முதல் பாராவுல சொன்ன பலரும் ஏன் உங்களையே கட்டம் கட்டறாங்க ?

* * * * * * * * * * * * * * * * * * * * * * *


அமைச்சர் ஆற்காடு வீராசாமி மின்சார உற்பத்தியை அதிகரிக்க பாடுபட வேண்டும்


ஜெயலலிதா அறிக்கை



சென்னை, ஜூலை 11: முதல்வரும் மின்சார அமைச்சரும் தங்களுக்கு தொடர்பில்லாத பணிகளில் நாட்டம் செலுத்துவதை விடுத்து மின் உற்பத்தியை பெருக்க பாடுபட வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் 60 விழுக்காடு மக்கள் விவசாயம் சார்ந்த தொழில்களை நம்பி வாழ்கின்றனர். மீதமுள்ள 40 விழுக்காடு மக்கள் தொழில் வளர்ச்சியை சார்ந்துள்ளனர். இந்த இரண்டுக்கும் இன்றியமையாதது மின்சாரம். ஆனால் இன்று மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டு, எந்தத் துறையும் வளர்ச்சி அடையவில்லை.

அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் 8 மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேட்டூர் அணை திறந்து ஒரு மாதம் ஆகியும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. பம்ப் செட்டுகள் மூலம் நிலத்தடி நீரை பயன்படுத்தி விவசாயம் செய்யலாம் என்றால், மின் தடையால் அதற்கும் வழியில்லை. மேல்நிலை தொட்டிகளில் நீர் ஏற்ற முடியாமல் குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

மின் வெட்டு காரணமாக கோவை, ஈரோடு மாவட்டங்களில் ஐந்து லட்சம் விசைத் தறிகளை இயக்க முடிவில்லை. 40 விழுக்காடு உற்பத்தி பாதிக்கப்பட்டு, 15 லட்சம் தொழிலாளர்களுக்கு ஊதிய இழப்பு ஏற்பட்டுள்ளது. பனியன் கம்பெனிகளில் உள்ள நவீன இயந்திரங்கள் மின்தடையால் பழுதடைந்து விடுகின்றன. அதை நீக்க வெளிநாட்டு நிறுவனங்களை நாட வேண்டிய நிலை. இதனால் உற்பத்தி மேலும் பாதிக்கப்படுகிறது.

அரசின் அலட்சியத்தால் அனைத்து சிறு தொழில் செய்வோருக்கும் மூன்று மாதத்தில் 50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. சிறு மற்றும் குறுந்தொழில் செய்வோர், தொழில் மையம் வைத்திருப்போர், கணினி மையம் வைத்திருப்போர், மாணவ - மாணவியர் என அனைவரும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், மின்சார அமைச்சர் ஆற்காடு வீராசாமியோ தன் துறைக்கு சம்பந்தமில்லாத பணிகளை கவனிப்பதிலேயே கவனம் செலுத்துகிறார். ‘பூனைக்கு மணி கட்டுவது’, கருணாநிதி குடும்ப உறுப்பினர்களின் கட்டளைகளை நிறைவேற்றுவது, தேவையில்லாமல் அடுத்தவர்களின் துறைகளில் தலையிடுவது ஆகியவற்றில்தான் அவரது நாட்டம் செல்கிறதே தவிர, மின்சார உற்பத்தியை பெருக்குவதில் நாட்டம் செல்லவில்லை.

இவர் மின்சாரத்துறை அமைச்சரா? அல்லது முதலமைச்சரின் குடும்ப விவகாரங்களுக்கு அமைச்சரா? என்ற சந்தேகம் மக்களிடையே நிலவுகிறது. முதலமைச்சரோ திரைப்படத்துறை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளிலேயே கவனம் செலுத்தி வருகிறார்.

மின்சார அமைச்சர் மற்றும் முதலமைச்சரின் இதுபோன்ற நடவடிக்கைகளால் வேளாண் மற்றும் தொழில் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இருவரும் தங்களுக்கு தொடர்பில்லாத பணிகளில் நாட்டம் செலுத்துவதை விட்டுவிட்டு வேளாண் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு தேவையான மின்சார உற்பத்தியை பெருக்கவும், காவிரி நீரை கர்நாடகத்திடமிருந்து உரிய காலத்தில் பெற்றிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

செய்தி: நன்றி: தினகரன் 11 ஜூலை 2008 (சென்னை பதிப்பு)

Wednesday, July 9, 2008

காமராஜர் ஆட்சி அமைப்போம்: தங்கபாலு

"நான் எந்த கோஷ்டியையும் சாரதவன், காங்கிரஸ் தலைவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவேன். தமிழகத்தில் காமராஜர் ஆட்சி கொண்டுவர பாடுபடுவேன்" என்று தமிழக காங்கிரசின் புதிய தலைவர் கே.வி.தங்கபாலு கூறினார்.

தமிழக காங்கிரஸ் தலைவராக கே.வி.தங்கபாலு, நேற்று காலை 9.28 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் பொறுப்பேற்றார். அவரிடம் பொறுப் பை ஒப்படைத்து முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி வாழ்த்து தெரிவித்தார்.



புதிய தலைவராக பொறுப்பேற்ற தங்கபாலுவுக்கு மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் கே.பி.கிருஷ்ணமூர்த்தி, அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவர் டி.சுதர்சனம், முன்னாள் தலைவர் குமரி அனந்தன், எம்.எல்.ஏ.க்கள் யசோதா, பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் மத்திய அமைச்சர் பிரபு, ஜி.ஏ.வடிவேலு, ஞானதேசிகன் எம்.பி உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர், காங்கிரஸ் தொண்டர்களிடையே தங்கபாலு பேசியதாவது:

எந்த குழப்பமும் இல்லாமல், கோஷ்டிகள் இல்லாமல் தமிழக காங்கிரஸ் தலைவராக செயல்படுவேன். சோனியாகாந்தியின் கரத்தை வலுப்படுத்துவதுதான் எனது லட்சியம். நான் எந்த கோஷ்டியையும் சாராதவன். எல்லா தலைவர்களுடனும் பணியாற்றியுள்ளேன். தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைய வேண்டும். அதற்காக, மக்களிடம் காங்கிரஸ் கட்சி நம்பிக்கை பெறும் வகையில் தமிழகம் முழுவதும் கிராமங்கள் உள்பட அனைத்து பகுதிகளுக்கும் சுற்றுப் பயணம் செய்வேன். எல்லா தலைவர்களிடமும் ஒற்றுமையை உருவாக்குவேன். எல்லோரும் என்னை வாழ்த்த வந்துள்ளனர்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் சோனியாகாந்தியின் தலைமையிலான ஆட்சியை கொண்டுவர அனைவரும் பாடு படவேண்டும்.

இவ்வாறு தங்கபாலு பேசினார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

சோனியாகாந்தியின் கட்டளையை ஏற்று 3வது முறையாக தலைவர் பொறுப்பை ஏற்றுள்ளேன். புதிய சூழலில் தமிழக காங்கிரசை பலப்படுத்தும் பணியை தொடருகி றேன். எல்லா தலைவர்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபடுவேன்.

மத்தியிலும் மாநிலத்திலும் காமராஜரின் கொள்கைகளை, லட்சியங்களை நிறைவேற்றும் ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி கொண்டுவர பாடுபடுவோம். தமிழக காங்கிரசில் எந்த குழு அரசியலும் கிடையாது. தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் கட்சியாக காங்கிரஸ் இருக்கும். மாநில நிர்வாகிகள் நியமனம் குறித்து அனைத்து தலைவர்களிடம் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு தங்கபாலு கூறினார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, முதல்வர் கருணாநிதியை நேற்று மாலை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப்பெற்றார். இருவரும் 25 நிமிடம் பேசினர்.

செய்தி: படம்: நன்றி: தினகரன் 10 ஜூலை 2008 (சென்னை பதிப்பு)

Tuesday, July 8, 2008

ஊட்டியில் உட்கார்ந்து கொண்டு பேசலாமா ? : கருணாநிதி

பெட்ரோல் இல்லை - இவர்கள் விளையாடுகிறார்கள் என்று சிலர் சொல்கிறார்கள். ஊட்டியில் உட்கார்ந்துள்ளவர்கள் இப்படி சொல்கிறார்கள் என்று முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை ஒரு பிடி பிடித்துள்ளார்.

முதல்வர் கருணாநிதியின் 85வது பிறந்தநாளையொட்டி, கடந்த ஜூன் 6-ந் தேதியில் இருந்து தென்சென்னை மாவட்ட திமுக சார்பில் கிரிக்கெட் போட்டி, கால்பந்து, கைப்பந்து, கபடி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

இதைத் தொடர்ந்து தலைவர் கலைஞர் தங்கக்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம், சென்னை கோபாலபுரத்தில் உள்ள அரங்கில் மின்னொளியில் நேற்று இரவு நடந்தது. 10 ஓவர்கள் கொண்ட இப்போட்டியில் திருவல்லிக்கேணியை சேர்ந்த `சீ பிரீஸ்' அணியும், திருவான்மியூரை சேர்ந்த `ஸ்கிரீன் வேர்ல்ட்' அணியும் மோதின. இதில், 108 ரன்களை முதலில் ஆடி குவித்த `சீபிரீஸ்' அணி, அடுத்து ஆடிய `சீவேர்ல்ட்' அணியை 54 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில், தென்சென்னையில் இருந்து 1,285 அணிகள் கலந்து கொண்டன. 15,420 கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டார்கள். 5 மைதானங்களில் மின்னொளியில் போட்டி நடந்தன.

கிரிக்கெட் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு தங்கக் கோப்பையை முதல்வர் வழங்கினார். அந்த அணிக்கு ரூ.1 லட்சமும், இரண்டாவது இடம் பிடித்த அணிக்கு ரூ.50 ஆயிரமும் ரொக்கப்பரிசாக வழங்கப்பட்டது. இதுதவிர, கால்பந்து, கைப்பந்து, கபடி போட்டிகளில் வென்ற அணியினருக்கும் கருணாநிதி பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

இறுதிப் போட்டியை கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் தொடங்கி வைத்தார். முதல் பந்தை அவர் அடிக்க, அவருக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பந்து வீசி போட்டியை ஆரம்பித்து வைத்தார்.

சுமார் 2 மணி நேரம் நடந்த போட்டியை முதல்வர் கருணாநிதி முழுமையாக அமர்ந்து பார்த்து ரசித்தார்.

முன்னதாக ஸ்ரீகாந்த் பேசுகையில், முதல்வர் கருணாநிதி ஒரு கிரிக்கெட் பைத்தியம். நான் ஆடிய போட்டிகளை நேரடியாக வந்து பார்த்திருக்கிறார். உலகக் கோப்பையை வென்று திரும்பியபோது எனக்கு அந்த காலத்திலேயே நிலம் கொடுத்தார்.

20 ஓவர் உலகக் கோப்பையில் வெற்றி பெற்று திரும்பிய தினேஷ் கார்த்திக்குக்கும் அவர் பெரிய பரிசு கொடுத்துள்ளார். அவருக்கு விளையாட்டை மதிக்கும் தன்மையும், அதன் மீதான ஆர்வமும் அதிகம். நான் இதனை மனதார சொல்கிறேன்.

இந்த போட்டிகளை நடத்துவதற்கான அமைச்சர் ஸ்டாலினின் ஐடியா சிறப்பான ஒன்று. நானும் இதுபோல் ரோட்டில் விளையாடி வந்தவன்தான். இந்த போட்டியில் ஆடியவர் இந்தியாவுக்கு ஆடி புகழ்பெற வேண்டும் என்றார்.

நிறைவாக முதல்வர் கருணாநிதி பரிசுகளை வழங்கிப் பேசினார். அவர் கூறுகையில், தென்சென்னை திமுக மாவட்டம் சார்பில் இளைஞர்களுக்கு வழிகாட்டும் வகையில் இந்த போட்டியினை மு.க.ஸ்டாலின் வளர்த்த இளைஞரணி தம்பிமார்கள் நடத்தி என்னை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளார்கள்.

இங்கு பேசிய கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் என்னை புகழ்ந்து கூறும்போது, `கிரிக்கெட் பைத்தியம்' என்றார். அது வருந்தத்தக்க வார்த்தை அல்ல. பித்தன் அல்லது பைத்தியம் ஆகியவை ஒன்றினையே குறிக்கின்றன. மிக அதிக பற்று கொண்டதை குறிப்பிடும் வார்த்தைதான் அது.

(அப்போது கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கருணாநிதியிடம் ஏதோ கூறினார்). ஸ்ரீகாந்த் என்னிடம் இப்போது, `நான் நல்ல எண்ணத்தில்தான் அப்படி கூறினேன்'' என்றார். பரமசிவனை உண்மையான பக்தர்கள் நல்ல எண்ணத்தில்தான் `பித்தா, பிறைசூடி' என்று வாழ்த்துவது அவருக்கு நன்றாகவே தெரிந்து இருக்கிறது.

கிரிக்கெட் போல் மற்ற சில விளையாட்டுகளும் இந்தியாவில் சிறந்து விளங்க வேண்டும் என்ற ஆசை உள்ளவர்களில் நானும் ஒருவன். நம் விளையாட்டுக் குழு வெளிநாட்டில் போய் வெற்றி பெற்று திரும்பினால் மட்டற்ற மகிழ்ச்சி அடைவேன். அவர்கள் தோல்வி அடையும்போது, அவர்கள் மேலும் பயிற்சி செய்ய வேண்டும், மேலும் முயற்சி செய்ய வேண்டும் என்று நான் மட்டும் அல்ல, விளையாட்டு வீரர்களும், விளையாட்டு நிபுணர்கள் எல்லாம் அறிவுரைகளை வாரி வழங்கி உள்ளனர்.

இளைஞர்கள் இந்த வயதில் இத்தகைய பயிற்சியில் ஈடுபடுவது, சில ஊருக்கு போய் பரிசு பெற்றோம் என்பதற்காக அல்ல. உடல் வலிவுடையதாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், எதிர்காலத்தில் நாட்டை வாழ வைக்க வேண்டிய சமுதாயம் என்கிற முறையிலே ஆரோக்கிய வாழ்வை மேற்கொள்ள விளையாட்டு மிக முக்கியமானதாகும். வைக்க வேண்டியது உங்கள் கடமை.

வெற்றி பெற்றவராயினும் சரி, தோல்வியடைந்தவராயினும் சரி, ஒன்றுபட்டு ஒற்றுமை உணர்வோடு, உடல் வலிமை பெருக்கி விளையாட்டில் வெற்றிகரமாக முன்னேற வேண்டும். உலகில் தலை சிறந்த விளையாட்டாக கிரிக்கெட் கருதப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட விளையாட்டில் நாம் இன்னும் திறமையை காட்ட வேண்டும். நாட்டுக்கு புகழை கொடுக்க வேண்டும். இதுபோன்ற திறமை வேறு எங்கும் இல்லை என்ற நிலைமையை உருவாக்க வேண்டும்.

போட்டி நடைபெற்று கொண்டிருந்தபோது, பக்கத்தில் உட்கார்ந்திருந்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், என்னை நிருபர் போல் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார். அவர், உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார்? என்று என்னை கேட்டார். நான் எப்போதும் ஜாக்கிரதையாக பதில் சொல்பவன். நான் தமிழ்நாட்டு வீரர் யாரையாவது பிடிக்கும் என்று சொன்னால், நான் குறிப்பிடாத தமிழ்நாட்டு, இந்திய வீரர்களுக்கு வருத்தம் ஏற்படும். அதனால் நான் எனக்கு பிடித்த வீரர் மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வீரர் கிளைவ் லாயிட் என்று உள்நாட்டினரிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக சொன்னேன்.

அவரும், எனக்கும் லாயிட்டைத்தான் பிடிக்கும் என்று சொல்லி நான் கையாண்ட முறையையே கையாண்டார்.

கடந்த 1983ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றபிறகு, கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் நாடு திரும்பியபோது, அரசு சார்பில் அவரை கவுரவித்த பெருமை எனக்கு உண்டு. அவர் ஆடிய விதத்தில் தொடர்ந்து ஆடி இருந்தால் உலகின் முதல் நிலை வீரராக ஆகியிருப்பார். நான் உலக அளவில் ஏன் தொடர்ந்து போகவில்லை என்று கேட்டால்-கடைசியில் அவர் நம் வட்டத்துக்கே வந்துவிட்டார்.

உலகப்புகழ் பெற்ற அவர், வட்ட அளவில் ஆடப்படும் இதுபோன்ற கிரிக்கெட் ஆட்டங்களில் ஆர்வத்தை காட்டும்போது, எந்த அளவுக்கு இளைஞர்களை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு உள்ளது என்பது புரிகிறது. இந்த விளையாட்டின் மீது அவர் காட்டும் உற்சாகத்தை வரவேற்கிறேன்.

பெட்ரோல் இல்லை- இவர்கள் விளையாடுகிறார்கள் என்று சிலர் சொல்கிறார்கள். ஊட்டியில் உட்கார்ந்து கொண்டுள்ளவர்கள் இப்படி சொல்கிறார்கள். அதை கொட்டை எழுத்தில் போடும் பத்திரிகைக்காரர்களும் உள்ளார்கள் என்றார் கருணாநிதி.

செய்தி: நன்றி: Thatstamil

Monday, July 7, 2008

மக்கள் கஷ்டப்படும்போது பொழுதுபோக்கு முக்கியமா ? : ஜெயலலிதா

‘‘மக்கள் நலனில் அக்கறை செலுத்தாமல் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளிலேயே கருணாநிதிக்கு சிந்தனை இருப்பதால், அவர் திரைத்துறைக்கே சென்றுவிடலாம்’’ என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

திமுக ஆட்சியின் நிர்வாக திறமையின்மையால் கடந்த 2 ஆண்டுகளாக தமிழக மக்கள் தங்கள் வாழ்க்கையில்சந்தித்துக்கொண்டிருக்கின்ற ‘நிதிச்சுமைகள்’, ‘வெட்டுகள்’, ‘தட்டுப்பாடுகள்’, ‘பற்றாக்குறைகள்’, ‘துன்பங்கள்’ ஏராளம்! ஏராளம்! இதுபோன்ற கரடுமுரடான பாதைகள் தமிழக மக்கள் சந்தித்ததேயில்லை.

மின்சாரத்துறை அமைச்சரா? அல்லது மின்வெட்டுத்துறை அமைச்சரா? என்று மக்கள் சந்தேகிக்கும் அளவுக்கு தன் துறையை நிர்வகித்து வருகிறார் ஆற்காடு வீராசாமி. ‘‘பிறந்த நாள் போன்றவற்றை சாக்கிட்டு கருணாநிதியை தொந்தரவு செய்வதை தவிர்த்தால், மக்கள்நல திட்டங்களில் அதிக கவனம் செலுத்த முடியும்‘‘ என்று திமுக தொண்டர்களை அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

ஆனால், என்ன நடந்தது? நுங்கம்பாக்கத்தில் உள்ள திரையரங்கில் கடந்த 1ம் தேதியன்று ஒரு திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு யார் யாரை அழைப்பது என்ற சிந்தனையில் மூன்று நாட்கள் முதல்வர் ஈடுபட்டிருந்தது தற்போது அம்பலமாகிவிட்டது. கடைசியாக, 150 பேரை அந்த சிறப்புக் காட்சிக்கு அழைத்திருக்கிறார். பத்திரிகைகளும் இந்த விழா குறித்து விரிவான செய்திகளை வெளியிட்டுள்ளன.

ஆனால், அன்றைய தினம் தமிழகத்தின் நிலைமை என்ன? இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு, தமிழகமே பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டால் திண்டாடிக் கொண்டிருந்தது. அலுவலகத்துக்கு செல்பவர்கள் சரியான நேரத்திற்கு அலுவலகத்துக்கு செல்ல முடியவில்லை. பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகள் அழைத்துச் செல்லும் வாகனங்களும் வரவில்லை. எரிபொருள் நிரப்புவதற்காக பெரும்பாலானோர் அங்கும் இங்கும் அலைந்து சென்னையை வலம் வந்து கொண்டிருந்தனர்.

தமிழ்நாட்டின் பிற நகரங்களிலும் இதே அவல நிலைதான் காணப்பட்டது. கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
ஆனால் இதைப் பற்றி கவலைப்படாமல் தமது திரைப்படத்தை கண்டுகளித்திருக்கிறார் கருணாநிதி. மக்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், முதல்வர் கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற செயலை கண்டிக்கிறேன்.

நான் முதலமைச்சராக இருந்தபோது மியூசிக் அகாடமியின் 79வது வருடாந்திர மாநாடு மற்றும் சங்கீத நிகழ்ச்சியை துவக்கி வைக்குமாறு என்னை கேட்டார்கள். நானும் துவக்கி வைப்பதாக வாக்குறுதி கொடுத்தேன். ஆனால், வங்காள விரிகுடாவிற்கு தென்கிழக்கே ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதாகவும், இதன் காரணமாக தமிழ்நாட்டில் பலத்த மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. பெருமழையினால் மக்கள் வேதனையில் இருக்கும்போது நாம் இதுபோன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது நன்றாக இருக்காது என்று நினைத்தேன். சூழ்நிலையை விளக்கி, மேற்படி நிகழ்ச்சியில் என்னால் கலந்துகொள்ள இயலாததற்கு வருத்தம் தெரிவித்து, மியூசிக் அகாடமிக்கு கடிதம் அனுப்பினேன். இதுதான் கருணாநிதிக்கும், எனக்கும் உள்ள வித்தியாசம்.

ஆக மொத்தம் தமிழக மக்களுக்கு பாதுகாப்பில்லை. வாழ வழியில்லை. விண்ணை முட்டும் விலைவாசி மக்களை துரத்துகிறது. வறுமை வாட்டுகிறது. ‘‘ஓடினாள், ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்’’ என்ற வசனத்திற்கு ஏற்ப, மக்களை வாழ்க்கையின் ஓரத்திற்கு துரத்திக்கொண்டிருக்கிறார். திரைப்படம், நாடகம், ஆட்டம், பாட்டம் போன்ற பொழுதுபோக்கு கேளிக்கை நிகழ்ச்சிகளிலேயே அவரது சிந்தனை இருப்பதால், அவர் திரைத்துறைக்கே சென்றுவிடலாம் என்று மக்கள் நினைக்கிறார்கள். அவர்களின் எண்ணம் நிறைவேறும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

செய்தி: நன்றி: தினகரன் 8 ஜூலை 2008 (சென்னை பதிப்பு)

Sunday, July 6, 2008

சிரஞ்சீவி தாத்தாவானார்

ரஜினி தாத்தாவிற்குப் பிறகு இன்னொரு தென்னிந்திய சூப்பர் (மெகா) ஸ்டாரும் தாத்தாவாகிவிட்டார்.

* * * * *

புதுக்கட்சி துவங்கும் முன், நடிகர் சிரஞ்சீவி தாத்தாவானார்.கடந்த ஆண்டு ஐதராபாத் நகரைச் சேர்ந்த கிரிஷ் பரத்வாஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து, தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா, பெண் குழந்தைக்கு தாயானார். பிரசவத்திற்காக நேற்று முன்தினம் செகந்திராபாத் தாராபூர்வாலா நர்சிங் ஹோ மில் ஸ்ரீஜா அனுமதிக்கப்பட்டார்.


தகவல் அறிந்ததும் சிரஞ்சீவியின் மனைவி சுரேகா, மகன் ராம்சரண் தேஜா, தாய் மாமன் அல்லு அரவிந்த், பரத்வாஜின் பெற் றோர், மருத்துவமனைக்கு சென்று பார்த்தனர். சிசேரி யன் ஆபரேஷனுக்கு பின் பிறந்த குழந்தையும், தாயும் நலமுடன் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.இந்த செய்தி பரவியதும் மருத்துவமனை முன், சிரஞ்சீவியின் ரசிகர்கள் அதிக எண்ணிக்கையில் வந்திருந்து சிரஞ்சீவி குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவித்து சென்றனர்.

செய்தி: நன்றி: தினமலர்

Thursday, July 3, 2008

கடவுள் ஏற்கும் வகையில் சேவை: கருணாநிதி

"ஏழைகளுக்கு உதவி செய்து, கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் வகையில் நாம் நடந்து கொள்ள வேண்டும்,'' என்று முதல்வர் கருணாநிதி பேசினார்.

"இந்தியாவின் திருத்தூதர் புனித தோமையார்' என்ற திரைப்பட துவக்க விழா, சென்னை சாந்தோம் புனித தோமையார் சர்ச்சில் நேற்று நடந்தது. தமிழக சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் வின்சென்ட் சின்னதுரை வரவேற்றார். சென்னை, மயிலை உயர் மறை மாவட்டத்தின் பிஷப் சின்னப்பா தலைமை வகித்தார். துணை பிஷப் லாரன்ஸ் பயஸ் முன்னிலை வகித்தார்.



படத்தைத் துவக்கி வைத்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது: எங்கள் ஆட்சிக்கு சிறுபான்மை ஆட்சி என்ற பெயரும் உண்டு. சிறுபான்மை சமுதாயத்தை சீர்தூக்கி விட வேண்டும்; பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த ஆட்சி நடக்கிறது. உலகத்தில் மூன்று கல்லறைகளில் பெருந்தகையாளர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். ரோமில் ராயப்பர், ஸ்பெயினில் யாகப்பர், தமிழகத்தில் தோமையார். இவர்களில் தோமைய்யரை அய்யர் என அன்போடு அழைக்கின்றனர். அய்யர் என்று அழைக்கும் போது ஏதோ ஒரு பிரிவினரை அழைப்பதாக கருதக் கூடாது. உயர்ந்தோர், சிறந்தோர் என்ற பொருளில் தான் அழைக்கப்படுகிறது. சிறந்த ஒருவரை பாராட்டும் சொல்.

லாரன்ஸ் பயஸ் பேசும் போது, "கடவுள் நம்பிக்கை இல்லாத கருணாநிதியை ஏன் அழைக்க வேண்டும்?' என்று சிலர் கேட்டதாக கூறினார். கருணாநிதி சாதாரணமானவர். கடவுள் ஆயிரம், லட்சம், கோடி மடங்கு பெரியவர். கடவுளை நான் ஏற்றுக்கொள்கிறேனா, இல்லையா? என்பது பிரச்னை அல்ல. கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் வகையில் நாம் நடந்து கொள்ள வேண்டும்..



ஏழைகளுக்கு இரக்கம் காட்ட வேண்டும். நோயுற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். நலிந்தோருக்கு நன்மை செய்ய வேண்டும். உதவி கேட்ட ஏழையை விரட்டினால், கடவுளை கும்பிடும் கைகளை கடவுளே மன்னிக்க மாட்டார். கடவுளுடன் அன்புவழி பயிற்சி; கருணை வழி பயிற்சி இருக்க வேண்டும். தோமையார், தான் கொண்ட கொள்கைக்காக உயிரை தியாகம் செய்தார். அவரது தியாகம், அவர் ஆற்றிய தொண்டு என்னை கவர்ந்தது. இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

விழாவில், புனித தோமையார் திரைப்பட ஒருங்கிணைப்பாளர் பாதிரியார் பால்ராஜ் லூர்துசாமி, பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ., இனிகோ இருதயராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். எர்னஸ்ட் பால் நன்றி கூறினார்.

செய்தி: படம்: நன்றி: தினமலர்

Tuesday, July 1, 2008

‘குசேலன்’ கேசட் வெளியீட்டு விழா பசுபதி, நயன்தாரா, மீனா புறக்கணிப்பு



சென்னையில் நடந்த 'குசேலன்' பாடல் வெளியீட்டு விழாவை நயன்தாரா, பசுபதி, மீனா புறக்கணித்ததாக பரபரப்பு ஏற்பட்டது.

ரஜினி நடிப்பில் கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் 'குசேலன்’. இதில் தனக்கு கவுரவ வேடம்தான் என ஏற்கெனவே ரஜினி கூறியிருந்தார். படத்தின் ஹீரோ பசுபதிதான். அவருக்கு ஜோடியான மீனாதான் பட ஹீரோயின். நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழா சென்னையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. விழாவுக்கு பட ஹீரோவான பசுபதி, ஹீரோயின் மீனா மற்றும் நயன்தாரா ஆகிய மூவரும் வரவில்லை. விழா நடக்கும் இடத்தில் இருந்த விளம்பரங்களிலும் படத்தின் மற்ற விளம்பரங்களிலும் இந்த மூவரின் படங்கள் இடம்பெறவில்லை. விழாவில் பேசிய இயக்குனர் பி. வாசு, தயாரிப்பாளர்கள் பாலசந்தர், செவன் ஆர்ட்ஸ் விஜயகுமார் உட்பட யாருமே பசுபதி பற்றியோ மீனா, நயன்தாரா பற்றியோ பேசவே இல்லை. Ôவிளம்பரங்களில் தங்களை புறக்கணித்ததால் அவர்கள் விழாவை புறக்கணித்திருப்பதாகÕ கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவித்தன.

'குசேலன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பசுபதி வேடத்தில் நடித்திருப்பவர் ஜெகபதி பாபு. அவரை விழா மேடையில் அமர வைத்து, கவுரவித்தனர். அவரது வேடத்தை தமிழில் ஏற்ற பசுபதியை கண்டுகொள்ளாதது ஏன் என புரியவில்லை என விழாவுக்கு வந்திருந்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

விழாவுக்கு வராதது குறித்து பசுபதியிடம் கேட்டபோது, 'வெடிகுண்டு முருகேசன்' படத்தின் ஷூட்டிங் திண்டுக்கல்லில் நடக்கிறது. அதனால் விழாவுக்கு வரமுடியவில்லை என்றார். இதே போன்று 'ஏகன்' பட ஷூட்டிங் காரணமாக நயன்தாரா வரவில்லை என அவரது தரப்பினர் கூறினர். மீனா ஐதராபாத்தில் ஷூட்டிங்கில் இருந்ததால் வரவில்லை என்று கூறப்பட்டது.

விழாவுக்கு வந்த இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், நடிகர் வடிவேலு உட்பட பலர் பிசியானவர்கள்தான். அவர்களும் பணிகளுக்கு இடையே நேரம் ஒதுக்கி விழாவுக்கு வந்திருந்தனர். ஆனால் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான பசுபதி, நயன்தாரா, மீனா வராதது சினிமா வட்டாரத¢தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

செய்தி: படம்: நன்றி: தினகரன் 2 ஜூலை 2008 (சென்னை பதிப்பு)