Monday, July 21, 2008

தயாநிதி மாறனுக்கு கி.வீரமணி பாராட்டு

மத்திய அரசுக்கு ஆதரவாகத்தான் வாக்களிப்பேன் என்று அறிவித்ததற்காக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு தி.க. தலைவர் கி.வீரமணி பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 22ம் தேதி நாடாளுமன்றத்தில் சந்திக்கவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில், “ஆட்சிக்கு ஆதரவாகத்தான் வாக்களிப்பேன், திமுக கட்சிக்கும், தலைமைக்கும் விரோதமாக நான் ஒருபோதும் நடந்து கொள்ள மாட்டேன்’’ என்று திமுகவின் மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அறிவித்ததை, திராவிடர் கழகம் வரவேற்று மகிழ்கிறது, பாராட்டுகிறது.

‘அண்ணா சொன்ன, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றில் இருந்து நழுவ மாட்டேன்’ என்று அவர் கூறியிருப்பது மிகச் சரியானது. ‘நீர் அடித்து நீர் விலகாது’ என்பது பழமொழி. விலகக் கூடாது என்பது நியாயமும்கூட. ‘திமுகவை அழிக்க, வேறு எவராலும் முடியாது. ஆனால், அவர்களுக்குள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்’ என்று 1969ல் பெரியார் கூறிய அறிவுரை, காலத்தினால் செதுக்கப்பட்ட கல்வெட்டு ஆகும். அது என்றும் பொருந்தும்.

தயாநிதி மாறனின் இந்த தெளிந்த நிலைப்பாட்டினை, அவர் தொடர்புள்ள ஊடகங்களும் பின்பற்ற வேண்டும். அதன் மூலம், முதல்வரின் நல்லாட்சியின் பயன்கள் மேலும் தொடர வழி வகுக்கும் என்ற வேண்டுகோளையும் திராவிடர் கழகம் விடுக்கிறது. அண்ணா சொன்னது போல், நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.


செய்தி: நன்றி: தினகரன் 22 ஜூலை 2008 (சென்னை பதிப்பு)

No comments: