Thursday, July 10, 2008

ஆற்காடு வீராஸ்வாமி அவர்களே ? நீங்க நல்லவரா ? கெட்டவரா ?

பல மூத்த - சூடான இடுகை பதிவர்கள் போன்ற பிரபலங்கள், ஏன் ஜெயலலிதா, ராமதாஸ், சன்டிவி + தினகரன் குழுமம் கூட உங்களை கட்டம் கட்டி காய்ச்சுகிறார்களே ?

இன்றைக்கு தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் நாளில் ஒரு முறையாவது உங்கள் பேரை உச்சரிக்கும் அளவிற்கு விவசாயம், தொழில், பள்ளி, கல்லூரி, வீடு ஏன் பெப்சி, கோக் என விற்கும் பெட்டிக்கடைக்காரர் முதல் பெரிய தொழிலதிபர்கள் வரை அனைவரும் மின்வெட்டை சந்திக்கின்றனர். உடனே உங்கள் பெயரில் ஒரு அர்ச்சனை. தேவையா இது.. ? ஏதாவது செய்து மின்சாரத்திற்கு வழி பண்ணுங்க இல்லாட்டி ஆறு கோடி தமிழர்களும் தினமும் கரிச்சு கொட்டினாங்கன்னா என்னத்துக்கு ஆவறது ?

ஆற்காடு வீராஸ்வாமி அவர்களே - ஏதாவது முயற்சி எடுங்கள். அது செயலாகும் வரை பிற மாநிலங்கள், நடுவண் கிரிட் என கடன் வாங்கியாவது மின்சாரத்தை கொடுக்க முயலுங்கள். சும்மா 'அடுத்த மாசம் காத்தடிக்கும் அப்ப மின்சாரம் வரும் - அக்டோபரில் மழை வரும் அப்ப மின்சாரம் வரும்' என அறிக்கை விடவேண்டாம்.

இதுல ராமதாஸ் வேற 'தீவிரவாதிகளுக்கும் உங்களுக்கும் தொடர்பு இருக்கு'ன்னெல்லாம் பேட்டி கொடுக்குறாரு.

தமிழக மின்சாரத் துறை ஆற்காடு வீராசமிக்கு தீவிரவாதிகளுடன் நெருக்கமான தொடர்புள்ளதாகவும், தொடர்ந்து அவர் தீவிரவாத இயக்கங்களுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்து வருவதாகவும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

ஏ.கே மூர்த்தி எம்பி நேற்று முன்தினம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது தமிழக அமைச்சர் ஒருவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகவும் அவர்களுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்து வருவதாகவும் கூறியுள்ளார். அவர் வேறு யாரும் இல்லை. ஆற்காடு வீரசாமிதான்.

இதற்கான ஆதாரங்களை உள்துறை அமைச்சகத்திடம் சமர்பிப்போம். திமுக கூட்டணியில் இருந்து எங்களை வெளியேற்ற ஆற்காடு வீரசாமியும் உளவுத்துறை அதிகாரி ஜாபர்சேட்டும்தான் காரணம் என்றார் ராம்தாஸ்.


**** **** **** ****

அப்டியே சொல்லிபோடுங்க - நீங்க நல்லவரா ? கெட்டவரா ? முதல் பாராவுல சொன்ன பலரும் ஏன் உங்களையே கட்டம் கட்டறாங்க ?

* * * * * * * * * * * * * * * * * * * * * * *


அமைச்சர் ஆற்காடு வீராசாமி மின்சார உற்பத்தியை அதிகரிக்க பாடுபட வேண்டும்


ஜெயலலிதா அறிக்கை



சென்னை, ஜூலை 11: முதல்வரும் மின்சார அமைச்சரும் தங்களுக்கு தொடர்பில்லாத பணிகளில் நாட்டம் செலுத்துவதை விடுத்து மின் உற்பத்தியை பெருக்க பாடுபட வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் 60 விழுக்காடு மக்கள் விவசாயம் சார்ந்த தொழில்களை நம்பி வாழ்கின்றனர். மீதமுள்ள 40 விழுக்காடு மக்கள் தொழில் வளர்ச்சியை சார்ந்துள்ளனர். இந்த இரண்டுக்கும் இன்றியமையாதது மின்சாரம். ஆனால் இன்று மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டு, எந்தத் துறையும் வளர்ச்சி அடையவில்லை.

அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் 8 மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேட்டூர் அணை திறந்து ஒரு மாதம் ஆகியும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. பம்ப் செட்டுகள் மூலம் நிலத்தடி நீரை பயன்படுத்தி விவசாயம் செய்யலாம் என்றால், மின் தடையால் அதற்கும் வழியில்லை. மேல்நிலை தொட்டிகளில் நீர் ஏற்ற முடியாமல் குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

மின் வெட்டு காரணமாக கோவை, ஈரோடு மாவட்டங்களில் ஐந்து லட்சம் விசைத் தறிகளை இயக்க முடிவில்லை. 40 விழுக்காடு உற்பத்தி பாதிக்கப்பட்டு, 15 லட்சம் தொழிலாளர்களுக்கு ஊதிய இழப்பு ஏற்பட்டுள்ளது. பனியன் கம்பெனிகளில் உள்ள நவீன இயந்திரங்கள் மின்தடையால் பழுதடைந்து விடுகின்றன. அதை நீக்க வெளிநாட்டு நிறுவனங்களை நாட வேண்டிய நிலை. இதனால் உற்பத்தி மேலும் பாதிக்கப்படுகிறது.

அரசின் அலட்சியத்தால் அனைத்து சிறு தொழில் செய்வோருக்கும் மூன்று மாதத்தில் 50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. சிறு மற்றும் குறுந்தொழில் செய்வோர், தொழில் மையம் வைத்திருப்போர், கணினி மையம் வைத்திருப்போர், மாணவ - மாணவியர் என அனைவரும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், மின்சார அமைச்சர் ஆற்காடு வீராசாமியோ தன் துறைக்கு சம்பந்தமில்லாத பணிகளை கவனிப்பதிலேயே கவனம் செலுத்துகிறார். ‘பூனைக்கு மணி கட்டுவது’, கருணாநிதி குடும்ப உறுப்பினர்களின் கட்டளைகளை நிறைவேற்றுவது, தேவையில்லாமல் அடுத்தவர்களின் துறைகளில் தலையிடுவது ஆகியவற்றில்தான் அவரது நாட்டம் செல்கிறதே தவிர, மின்சார உற்பத்தியை பெருக்குவதில் நாட்டம் செல்லவில்லை.

இவர் மின்சாரத்துறை அமைச்சரா? அல்லது முதலமைச்சரின் குடும்ப விவகாரங்களுக்கு அமைச்சரா? என்ற சந்தேகம் மக்களிடையே நிலவுகிறது. முதலமைச்சரோ திரைப்படத்துறை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளிலேயே கவனம் செலுத்தி வருகிறார்.

மின்சார அமைச்சர் மற்றும் முதலமைச்சரின் இதுபோன்ற நடவடிக்கைகளால் வேளாண் மற்றும் தொழில் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இருவரும் தங்களுக்கு தொடர்பில்லாத பணிகளில் நாட்டம் செலுத்துவதை விட்டுவிட்டு வேளாண் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு தேவையான மின்சார உற்பத்தியை பெருக்கவும், காவிரி நீரை கர்நாடகத்திடமிருந்து உரிய காலத்தில் பெற்றிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

செய்தி: நன்றி: தினகரன் 11 ஜூலை 2008 (சென்னை பதிப்பு)

No comments: