Monday, July 7, 2008

மக்கள் கஷ்டப்படும்போது பொழுதுபோக்கு முக்கியமா ? : ஜெயலலிதா

‘‘மக்கள் நலனில் அக்கறை செலுத்தாமல் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளிலேயே கருணாநிதிக்கு சிந்தனை இருப்பதால், அவர் திரைத்துறைக்கே சென்றுவிடலாம்’’ என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

திமுக ஆட்சியின் நிர்வாக திறமையின்மையால் கடந்த 2 ஆண்டுகளாக தமிழக மக்கள் தங்கள் வாழ்க்கையில்சந்தித்துக்கொண்டிருக்கின்ற ‘நிதிச்சுமைகள்’, ‘வெட்டுகள்’, ‘தட்டுப்பாடுகள்’, ‘பற்றாக்குறைகள்’, ‘துன்பங்கள்’ ஏராளம்! ஏராளம்! இதுபோன்ற கரடுமுரடான பாதைகள் தமிழக மக்கள் சந்தித்ததேயில்லை.

மின்சாரத்துறை அமைச்சரா? அல்லது மின்வெட்டுத்துறை அமைச்சரா? என்று மக்கள் சந்தேகிக்கும் அளவுக்கு தன் துறையை நிர்வகித்து வருகிறார் ஆற்காடு வீராசாமி. ‘‘பிறந்த நாள் போன்றவற்றை சாக்கிட்டு கருணாநிதியை தொந்தரவு செய்வதை தவிர்த்தால், மக்கள்நல திட்டங்களில் அதிக கவனம் செலுத்த முடியும்‘‘ என்று திமுக தொண்டர்களை அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

ஆனால், என்ன நடந்தது? நுங்கம்பாக்கத்தில் உள்ள திரையரங்கில் கடந்த 1ம் தேதியன்று ஒரு திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு யார் யாரை அழைப்பது என்ற சிந்தனையில் மூன்று நாட்கள் முதல்வர் ஈடுபட்டிருந்தது தற்போது அம்பலமாகிவிட்டது. கடைசியாக, 150 பேரை அந்த சிறப்புக் காட்சிக்கு அழைத்திருக்கிறார். பத்திரிகைகளும் இந்த விழா குறித்து விரிவான செய்திகளை வெளியிட்டுள்ளன.

ஆனால், அன்றைய தினம் தமிழகத்தின் நிலைமை என்ன? இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு, தமிழகமே பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டால் திண்டாடிக் கொண்டிருந்தது. அலுவலகத்துக்கு செல்பவர்கள் சரியான நேரத்திற்கு அலுவலகத்துக்கு செல்ல முடியவில்லை. பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகள் அழைத்துச் செல்லும் வாகனங்களும் வரவில்லை. எரிபொருள் நிரப்புவதற்காக பெரும்பாலானோர் அங்கும் இங்கும் அலைந்து சென்னையை வலம் வந்து கொண்டிருந்தனர்.

தமிழ்நாட்டின் பிற நகரங்களிலும் இதே அவல நிலைதான் காணப்பட்டது. கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
ஆனால் இதைப் பற்றி கவலைப்படாமல் தமது திரைப்படத்தை கண்டுகளித்திருக்கிறார் கருணாநிதி. மக்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், முதல்வர் கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற செயலை கண்டிக்கிறேன்.

நான் முதலமைச்சராக இருந்தபோது மியூசிக் அகாடமியின் 79வது வருடாந்திர மாநாடு மற்றும் சங்கீத நிகழ்ச்சியை துவக்கி வைக்குமாறு என்னை கேட்டார்கள். நானும் துவக்கி வைப்பதாக வாக்குறுதி கொடுத்தேன். ஆனால், வங்காள விரிகுடாவிற்கு தென்கிழக்கே ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதாகவும், இதன் காரணமாக தமிழ்நாட்டில் பலத்த மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. பெருமழையினால் மக்கள் வேதனையில் இருக்கும்போது நாம் இதுபோன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது நன்றாக இருக்காது என்று நினைத்தேன். சூழ்நிலையை விளக்கி, மேற்படி நிகழ்ச்சியில் என்னால் கலந்துகொள்ள இயலாததற்கு வருத்தம் தெரிவித்து, மியூசிக் அகாடமிக்கு கடிதம் அனுப்பினேன். இதுதான் கருணாநிதிக்கும், எனக்கும் உள்ள வித்தியாசம்.

ஆக மொத்தம் தமிழக மக்களுக்கு பாதுகாப்பில்லை. வாழ வழியில்லை. விண்ணை முட்டும் விலைவாசி மக்களை துரத்துகிறது. வறுமை வாட்டுகிறது. ‘‘ஓடினாள், ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்’’ என்ற வசனத்திற்கு ஏற்ப, மக்களை வாழ்க்கையின் ஓரத்திற்கு துரத்திக்கொண்டிருக்கிறார். திரைப்படம், நாடகம், ஆட்டம், பாட்டம் போன்ற பொழுதுபோக்கு கேளிக்கை நிகழ்ச்சிகளிலேயே அவரது சிந்தனை இருப்பதால், அவர் திரைத்துறைக்கே சென்றுவிடலாம் என்று மக்கள் நினைக்கிறார்கள். அவர்களின் எண்ணம் நிறைவேறும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

செய்தி: நன்றி: தினகரன் 8 ஜூலை 2008 (சென்னை பதிப்பு)

No comments: