Friday, June 13, 2008

திமுக கூட்டணி: பாமக நீக்கம் ?

திமுக கூட்டணியில் பாமக நீடிக்க வேண்டுமா என்பது குறித்து திமுகவின் செயல் திட்ட குழு இன்னும் நான்கைந்து நாட்களில் கூடி முடிவெடுக்கும் என்று முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி அறிவித்திருக்கிறார். அதுவரை அமைதிகாக்க வேண்டும் என்றும் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

பாமகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ காடுவெட்டி குருவின் வன்முறையை தூண்டும் பேச்சு குறித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் கூறியிருக்கிறார்.
.
தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கும், பாமகவுக்கும் இடையே சமீப காலமாக மோதல் ஏற்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் கூட்டணியில் பிளவு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப் பட்டநிலையில், பாமக கூட்டணியில் நீடிக்குமா என்பது விரைவில் முடிவு செய்யப்படும் என்று முதலமைச்சர் கூறியிருப்பது தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கலைவாணர் அரங்கில் முரசொலி பத்திரிகையின் செய்தி ஆசிரியர் சேதுவின் மகன் பாலமுருகனுக்கும், நர்மதாவுக்கும் இன்று காலை திருமணம் நடைபெற்றது. முதலமைச்சர் கருணாநிதி இந்த திருமணத்தை நடத்திவைத்தார்.

திருமண விழாவில் வாழ்த்துரை வழங்கிய மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, பாமகவின் போக்கு குறித்து அதிருப்தி தெரிவித்து, அக்கட்சியுடன் கூட்டணி வேண்டுமா? என்ற கேள்வியை எழுப்பினார்.

இறுதியாக மணமக்களை வாழ்த்தி பேசிய முதலமைச்சர் கருணாநிதி கூறியதாவது:
ஆற்காடு வீராசாமி ஒரு சிடியை கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். என்னுடைய தலையை வெட்டினால் என்ன, வீராசாமியின் தலையை வெட்டினால் என்ன? அல்லது ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கரின் தலையை வெட்டினால் என்ன? மத்திய அமைச்சர் ராஜாவின் தலையை வெட்டினால் என்ன? எல்லாத்தலைகளையும் வெட்டும் போது வழிகின்ற ரத்தம்தான் என் தலையை வெட்டினாலும் வழியும். இவ்வளவு பெரிய பாதகத்தை, படுகொலையை செய்வதற்கு தயாராக இருக்கின்றார். ஒரு கட்சியினுடைய பெரிய பிரமுகர். அவர் கூட ஏதோ சங்கத்தின் தலைவர் என்று சொன்னார்.காடுவெட்டி குரு என்று சொல்கிறார்கள்.

காடுவெட்டி குரு. அவர் காடுவெட்டினாலும் சரி, மரம் வெட்டினாலும் சரி, மனிதர்களையே வெட்டினாலும் சரி. ஆனால் பாட்டாளி மக்கள் கட்சியில் தளபதி என்று சொல்வார்கள். அந்த தளபதியே போருக்கு தயாராகிவிட்டார். வெட்டுவார்கள், குத்துவார்கள் என்ற இந்த அச்சுறுத்தல் இன்று, நேற்றல்ல என்னுடைய ஆரம்பகால அரசியலிலேயே நான் கேட்டு, கேட்டு புளித்துப்போன சொற்கள்.

திருவாரூரில் இருந்து கிளம்பும் போதே வாய்க்கரிசியை வாங்கிக் கொண்டு புறப்பட்டவன்தான் நான் என்று சொல்வது வழக்கம். இன்று கூட ராமதாஸ் தொலைபேசி ஒட்டு கேட்கப்படுவதாக புகார் கூறி யிருக்கிறார். அதற்கு என்ன சாட்சி?
பெண்கள் வேண்டுமானால் வீட்டில் ஒட்டுகேட்கலாம். ஒட்டுகேட்பதற்கு நிறைய நடைமுறைகள் உள்ளன.

மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும். எல்லோரும் ஓட்டு வேண்டுமானால் கேட்கலாம். ஒட்டுகேட்க முடியாது. இந்த பேச்சு ஆபத்தான பேச்சாகும். சதி திட்டம் தீட்டி இப்படி பேசியிருக்கலாம். யார், யார் சதியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை சிடியை போட்டு போலீஸ் உயரதிகாரிகள் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.

இப்படிப்பட்ட கட்சியோடு எவ்வளவுநாள் உறவு என்று வீராசாமி கேட்டார். கேட்டவர் கட்சியின் பொருளாளர். அதை கேட்டவர் கட்சியின் தலைவர். இன்னொருவர் தலைமை கழகத்தின் முதன்மை செயலாளர். இவர்களெல்லாம் நாங்கள் இங்கே இருக்கிறோம். நாங்கள் உங்களுக்கு அளிக்கின்ற உறுதிமொழி இன்னும் நான்கைந்து நாட்களில் கடலூர் மாநாடு முடிந்த பிறகு கட்சியின் உயர்நிலை செயல்திட்ட குழுவை கூட்டி இவர்களோடு (பாமக) உறவு நீடிக்க வேண்டுமா என்ற கேள்விக்கான பதிலை ஐந்து ஆறு நாட்களில் அளிப்பேன்.

ஏனென்றால் இவ்வளவு வன்முறைகளை, இவ்வளவு கடுமையான சொற்களை தாங்கி கொண்டுதான் ஒரு கூட்டணியில் இருக்க வேண்டும் என்றால், அதைவிட அவமானம் ஒன்றும் இருக்க முடியாது. அந்த அவமானத்தை எப்படி துடைப்பது. என்பதற்கு உயர்நிலை செயல் திட்ட குழுவிலே முடிவெடுப்போம்.

உங்களுடைய கொந்தளித்து கொண்டிருக்கும் உள்ளங்களுக்கு ஆறுதலாக இதனை தெரிவிக்கிறேன். அமைதியாக இதை அணுக வேண்டும். இதை பற்றி யாரும் அவரவர் வாய்க்கு வந்தவாறுயெல்லாம் பேசக்கூடாது. உண்மைநிலை தெரிகின்ற வரையில் இதை பற்றி விமர்சிக்கக்கூடாது.

நாம் அதற்குரிய நடவடிக்கை எடுக்கின்ற வரையில், எந்த நடவடிக்கையாக, எந்த முடிவாக இருந்தாலும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.

செய்தி: நன்றி: மாலைச்சுடர்

No comments: