Wednesday, June 4, 2008

ஸ்டாலின் லண்டன் பயணம்

உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை திடீரென்று லண்டனுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். சிகிச்சைக்காக அவர் லண்டன் சென்றிருப்பதாக கூறப்படுகிறது.

கட்சியில் தனது மூத்த சகோதரர் மு.க. அழகிரிக்கு பொறுப்பு கொடுப்பது தொடர்பாக ஸ்டாலினுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் முதல்வருடன் கோபித்து கொண்டு அவர் சமீபத்தில் பெங்களூர் சென்றார்.

அங்குள்ள சகோதரி செல்வி வீட்டில் தங்கியிருந்தார். அங்கிருந்து அவர் வெளிநாடு செல்லவிருப்பதாக கூறப்பட்டது. முதல்வரின் பிறந்த நாளில் கலந்து கொண்டுவிட்டு பிறகு வெளிநாடு செல்லலாம் என்று தாயார் கூறிய யோசனையை தொடர்ந்து அவர் கடந்த 1-ந் தேதி சென்னை திரும்பினார்.

பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். நேற்று முதல்வர் பிறந்த நாள் விழாவிலும் கலந்து கொண்டார். இன்று காலை 8.10 மணிக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலம் அவர் லண்டனுக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் துணைவியார் துர்கா ஸ்டாலின் உடன் சென்றார்.

மேலும் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர்கள் என்று கூறப்படும் ராஜா சங்கர், ரெட்டி ஆகியோரும் அதே விமானத்தில் சென்றனர்.

லண்டனில் ஸ்டாலின் 10 நாட்கள் தங்கியிருப்பார் என்று கூறப்படுகிறது. நுரையீரலில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு ஸ்டாலின் சிகிச்சை செய்து கொள்ள லண்டன் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. தேவைப்பட்டால் அவர் லண்டனில் கூடுதல் நாட்கள் தங்கியிருப்பார் என்றும் கூறப்படுகிறது.

செய்தி: நன்றி: மாலைச்சுடர்

No comments: