Monday, June 2, 2008

கலைஞர் கருணாநிதி - 85


இன்று 85ஆம் பிறந்தநாள் கொண்டாடும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவரின் எண்ணமும், எழுத்தும், தமிழ்பால் கொண்டுள்ள பற்றும் இன்னும் பலநாள் தேவை.

வாஜ்பாய், மன்மோகன் சிங், அத்வானி, அச்சுதானந்தன், ஜோதிபாசு, அப்துல் கலாம், அன்பழகன் என 75+ பெரியவர்கள் பலரும் இன்று நாட்டின் போக்கை நிர்ணயிப்பதில் இருக்கிறார்கள் / இருந்திருக்கிறார்கள். அவரவர்களும் அவர்கள் துறையில் கில்லாடிகள் தான். அவர்கள் கட்சிக்காகவும் அவர்கள் மாநிலத்துக்காகவும் பல வருடங்களாக பொதுவாழ்க்கையில் தங்களை அர்பணித்தவர்கள். இவர்கள் எல்லோரையும் விட தமிழக முதல்வருக்கு பல்துறையிலும் வித்தகம் உண்டு.

ஒரு அரசியல் தலைவர் 85 வயதில் இவ்வளவு பிரச்னைகளை (குடும்ப, தோழமைக் கட்சிகள், மக்கள் பிரச்னைகள்) சமாளித்து எல்லோரையும் அரவணைத்து ஓடத்தை செலுத்துகிறார் என்றால் அவரது உழைப்பையும் மதியூகத்தையும் வியக்க வேண்டும். உண்மையில் அவருக்கு இன்று பிரச்னையே கொடுக்காத ஒருவர் என்றால் அது ஜெயலலிதாதான். அவர் பாட்டுக்கு ஓய்வு என ஏதோ ஒரு எஸ்டேட்டிலோ பங்களாவிலோ இருந்துகொண்டு அவ்வப்போது அறிக்கைகளும், தெரு லெவெல் போராட்டங்களும் அறிவித்துக்கொண்டு கருணாநிதிக்கு குறைந்த தலைவலியாக இருக்கிறார்.

முதல்வர் கருணாநிதி என்ன செய்ய வேண்டும் (எனது பார்வையில்) :

1. வெகு விரைவில் ஸ்டாலினுக்கு அரசு பொறுப்பில் முக்கிய பதவியை (அது முதல்வர் பதவியோ இல்லை துணை முதல்வர் பதவியோ) கொடுத்து தான் ஆக்டிவாக இருக்கும் போதே அவருக்கு ஒரு coach ஆகவும் mentor ஆகவும் இருந்து வழிநடத்த வேண்டும். கருணாநிதியின் காலத்திற்குப் பிறகு ஸ்டாலினுக்கு mentor ஆக இருக்க நிச்சயம் யாரும் வரமாட்டார்கள் (அட்லீஸ்ட் பெரிய தலைகள்). அழகிரியைப் பிடிக்காத தற்போதைய அமைச்சர்கள் வேண்டுமானால் ஸ்டாலினுடன் சேர்ந்து அவருக்கு தவறான ஆலோசனைகளைத் தறமுயலலாம்.

2. அழகிரிக்குக் கட்சியில் முக்கிய பதவி கொடுத்தால் ஸ்டாலினால் சுதந்திரமாக செயல்படமுடியாது என்று எண்ணினால் அதை இருவரையும் கூப்பிட்டு பேசி முடிவெடுக்க வேண்டும். எந்த விதத்தில் கட்சிப் பொறுப்போ ஆட்சிப்பொறுப்போ பகிர்ந்தால் கட்சிக்கும் ஆட்சிக்கும் பங்கம் வராது என இருவரும் ஒத்துப்போகிறார்களோ அந்த விதத்தில் முடிவெடுக்கவேண்டும். இதனை இன்னும் தள்ளிப்போடுதல் நல்லதல்ல. it is too late already..!

3. கனிமொழிக்கு அமைச்சர் பதவிதான் வேண்டும் என்பது ஆலிவர் ரோடு இல்லாளின் நிபந்தனை என்றால் அதை சீக்கிரம் செயல்படுத்துவது புத்திசாலித்தனம். அமைச்சராக அவரின் பணியை ஆய்வு செய்து அவருக்கு வழிகாட்டியாக இருக்க இது தான் சரியான தருணம்.

4. சினிமாக் காரர்களின் குத்தாட்ட நிகழ்ச்சிகளை நிறுத்த வேண்டும் அல்லது அதற்கு ஊக்கம் கொடுக்கும் அளவில் எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கும் போக்கை நிறுத்தவேண்டும்

5. நெஞ்சுக்கு நீதி 5ஆம் பாகத்தை விரைவில் எழுதி முடித்து வெளியிடவேண்டும்

6. தனது குடும்ப சொத்துக்கள் மற்றும் கட்சி சம்பந்தப்பட்ட சொத்து அல்லது விஷயங்களை எந்த மாதிரி அவர் விருப்பமோ அவ்வாறு பங்கிட்டு அதனை உயிலாகவோ தனது நம்பிக்கைக்குரியவரிடமோ சேர்த்தோ அல்லது அறிவித்து விடவோ வேண்டும். இப்படி ஒரு தலைவருக்குப் பின் இப்படியெல்லாம் சண்டையா என்கிற விதத்தில் அவருக்குப் பின் அடிதடிகள் நடைபெறாமலிருக்க இது உதவும்

7. தமிழ்நாட்டில் படிக்கும் எல்லா மாணவ / மாணவிகளும் தமிழை ஒரு பாடமாக எடுத்துப் படிக்க கட்டாயமாக்கவேண்டும் (12ஆவது வரை). மற்றத் திட்டங்களான சிபிஎஸ் இ, மெட்ரிகுலேஷன், ஐசிஎஸ் இ போன்றவர்கள் பிரெஞ்சு, இந்தி, சமஸ்கிருதம், தெலுங்கு என பாடதிட்டதிற்காக படித்தாலும், தமிழை ஒரு அடிஷனல் பாடமாக பயின்று பாஸ் செய்யவேண்டும் என சட்டம் இருக்கவேண்டும்

8. தொழில்துறையில் பின் தங்கிய மாவட்டங்களில் ஒரு தொழிற்சாலையாவது இன்னும் ஒரு வருடத்தில் துவங்கிடவேண்டும் (சமீபத்தில் பெரம்பலூர் / அரியலூரில் எம்.ஆர்.எஃப் தொழிற்சாலைக்கான ஒப்பந்தம் போல)

9. தமிழகத்தின் எல்லா ஆறு, ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி, தூர்வாரி மழை நீரை சேமித்துவைத்து வளம் பெருக வழிகாணவேண்டும்

10. அட்லீஸ்ட் இன்னும் 10 ஆண்டுகளாவது அவர் உடல்நலம் முழு ஃபிட்னஸ் லெவலில் இருக்குமாதிரி தினமும் யோகாவும், உடற்பயிற்சியும், ஓய்வும் எடுத்து தமிழக அரசியலுக்கு வழிகட்டியாக இருக்க வேண்டும்.

இதில் எத்தனை நிறைவேறும் என்பது இன்னும் ஒரு வருடத்திற்குப் பிறகு பார்ப்போம்.

படம்: நன்றி: தினகரன்

No comments: