Sunday, July 29, 2007

பதவி விலக தயார் - கருணாநிதி

என்னால் மக்களுக்கு செய்ய முடிந்தது இவ்வளவுதான். இதைவிட மேலும் நல்லது செய்ய முடியும் என்று வேறுயாராவது கருதினால், நான் ஒதுங்கிக்கொண்டு அவர்களை வரவேற்று பாராட்டி, புகழ்மாலை சூட்ட தயாராக இருக்கிறேன் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார். நல்ல அரசு மக்களுக்கு நல்லதை செய்யும் போது அதற்கு மற்றவர்கள் துணை இருக்க வேண்டுமே தவிர, இதை தடுத்துவிட்டோம் என்று கித்தாப்பு காட்டக்கூடாது என்றும் அவர் காட்டமுடன் குறிப்பிட்டார். வா, வந்து பார், நான் நினைத்ததை முடித்தே தீருவேன் என்று பிடிவாதம் காட்டுகிற அரசாக என்னுடைய அரசு செயல்படாது என்றும் முதல்வர் தெரிவித்தார்.

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு 3வது கட்டமாக அரசு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் முதலமைச்சர் கருணாநிதி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

வேலைவாய்ப்பகத்தின் பதிவு பெற்ற அனைவருக்கும் உடனடியாக வேலை வழங்க முடியாவிட்டாலும் பொன் வைக்கிற இடத்தில் பூ வைப்பது போல இன்று வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறோம்.

3வது கட்டமாக 3 லட்சத்து 38 ஆயிரத்து 818 பேருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. மூன்று கட்டங்களில் மொத்தம் இதுவரை 55 கோடியே 52 லட்சம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் வேலை வாய்ப்புக்கு தடைச்சட்டம் இருந்தது. அதை உடைத்தெறிந்து இந்த ஆட்சி அமைந்த பிறகு ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி இருக்கிறோம். வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்ய முடியாமல் இருந்த 2 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு பதிவு செய்யும் வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளோம்.

தேர்தல் கால வாக்குறுதிகள் பலவற்றை இந்த அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. எங்களால் முடிந்ததை செய்து வருகிறோம். இவ்வளவுதான் எங்களால் முடிந்தது என்று கூறி விடைபெறவும் நாங்கள் தயார்.

என்ன செய்தாலும் எல்லோரையுமே திருப்திப் படுத்த முடியாது. ஆங்காங்கே சில குறைபாடுகள் எழுவதற்கு வாய்ப்புண்டு. நல்ல முறையில் வழிகாட்ட தோழர்களும், மக்கள் பிரதிநிதிகளும் இருக்க வேண்டும்.

மேலும் இதைவிட காரியங்கள் செய்கிறோம் என்று யாராவது வந்தால் என்னால் முடிந்தது இதுதான் என்று நான் விலகிக்கொண்டு அவர்களை வரவேற்று பாராட்டி, புகழ் மாலை சூட்ட தயாராக இருக்கிறோம்.

இந்த ஆட்சி பொறுப்பேற்ற 11 மாத காலத்திற்குள் 11 தொழிற்சாலை களை இந்த அரசு கொண்டுவந்து இருக்கிறது. இதனால் எனக்கு கர்வமோ, பெருமையோ, இறுமாப்போ இல்லை. ஆனால், இதற்கு ஒத்துழைக்க மறுக்கின் றனரே என்ற மனவேதனைதான் உண்டு.

ஒரு தொழிற்சாலையை கொண்டு வருவதற்கு எத்தனை தடைகளை கடந்து வர வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும். வடமாநிலங் களிலே இது போன்ற புதிய தொழிற்சாலைகள் வரும்போது சில பிற்போக்குவாதிகள் ஏழை விவசாயிகளை தூண்டிவிட்டு ரத்த வெள்ளம் ஓடச் செய்கிறார்கள்.

ஒரு அரசு நல்ல முடிவு எடுத்து மக்களின் நல்வாழ்வுக்காக புதிய தொழில்களை தொடங்க முன் வந்தால் மக்கள் அதற்கு ஆதரவு அளிக்க வேண்டும். ஆனால், இதுபோன்ற விஷயத்தில் மக்களை தூண்டிவிடும் விஷமிகளும், சமுதாய கிருமிகளும் நாட்டில் உள்ளன.

இவைகளை எல்லாம் சமாளித்து தான் தொழில்வளங்களை உருவாக்க ஒரு அரசு நேரத்தையும், உழைப்பை யும், பணத்தை யும் செலவழிக்க வேண்டும். அரசு செய்யும் காரியங்களை தடுப்பவர்களுக்கு இடைக்கால மாக நாம் நினைத்த காரியத்தை முடித் தோம் என்ற ஆறுதல் கிடைக்கலாம். அதனால் மக்களுக்கு எந்த பயனும் கிடைக்காது.

ஒரு நல்ல அரசு மக்களுக்கு செய்கிற நல்ல காரியங்களுக்கு துணை இருக்க வேண்டியது நண்பர்கள், தோழர் களின் கடமையாகும். இதை தடுத்து விட்டோம் என்கிற கித்தாப்பு கூடாது.
வா, வந்து பார் என்று நினைக்கிற அரசாக இருந்தால் நான் எடுத்த காரியத்தை முடித்தே தீருவேன் என்று பிடிவாதம் காட்டலாம். இங்கு எந்தவித கலவரமும் நடக்கக் கூடாது.

அமைதிக்கு பங்கம் வரக்கூடாது என்று நினைக்கும் என்னைப் போன்றவர்கள் உங்கள் பாடு, மக்கள் பாடு என்று ஒதுங்கிக்கொள்ள தயார். நல்ல காரியங்களை நடத்துவதற்கு தடையாக இருக்கிறார்களே என்கிற ஆதங்கமும், வேதனையும் தான் என்கு உள்ளது. தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பில் இருக்க வேண்டும் என்று நான் எண்ணுபவன் அல்ல.

நான் பிறந்த போது முதலமைச்சர் ஆவேன் என்று நினைத்து வந்தவன் அல்ல. காலத்தின் கோலம், சமுதாயத்தின் நிலை, மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என்ற ஆர்வம், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் போன்றவர்களின் வழி காட்டுதல் ஒரு காரணமாக இருக்கலாம்.

இப்படி அவர்கள் காட்டிய தியாக வழியில் நான் நடப்பதும் எனக்காக அல்ல; உங்களுக்காக; உங்களுடைய வாழ்க்கை நலனுக்காகத்தான். என்னுடைய வார்த்தையை நம்பினால் உங்களோடு இருப்பதில் அர்த்தமுண்டு. இல்லை என்றால் மக்களிடம் சொல்லிவிட்டு விடை பெறுகிறேன். இவ்வாறு முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.

இந்த விழாவுக்கு மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமை தாங்கினார். தலைமைச் செயலாளர் திரிபாதி வரவேற்று பேசினார். சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் மற்றும் உயர் அதிகாரிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Nandri: Source: Maalaisudar

1 comment:

bala said...

மஞ்ச துண்டு அய்யாவின் தன்னலமற்ற செயல்பாடு மெய்சிலிர்க்கவைக்கிறது.