Thursday, July 5, 2007

பாமக நிறுத்தாது: ராமதாஸ் ஆவேசம்

பாமக போராட்டம் நடத்துவதும், கருத்துக்களை வெளியிடுவதும் அரசு இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற ஆசையில்தான். இவையெல்லாம் மக்கள் பிரச்சனை கள். இதில் அரசியல் எதுவும் இல்லை - ராமதாஸ்

மக்களுக்காக போராடுவதை பாமக நிறுத்தாது: ராமதாஸ் ஆவேசம் தேர்தலுடன் உடன்பாடு முடிந்து விட்டது

விழுப்புரம், ஜூலை 5:

மக்கள் பிரச்சனைக்காக வாதாடு வதையும், போராடுவதையும் பாமக நிறுத்திக் கொள்ளாது என்று அக்கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார். பாமகவுக்கும், திமுகவுக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாடு தேர்தலுடன் முடிந்து விட்டது. இப்போது எங்கள் கட்சி எதிர்க்கட்சி என்றும் அவர் கூறியிருக்கிறார். அரசுக்கு ஆதரவு அளிக்கிறோம் என்பதற்காக இந்த அரசு செய்கிற அனைத்தையும் ஆதரிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

திமுகவுக்கும், பாமகவுக்கும் இடையே நடைபெற்று வரும் மறைமுக யுத்தத்தின் தொடர்ச்சியாக இன்று பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் இன்று நிருபர்களுக்கு பரபரப்பான பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பொது மக்களுக்கும் மற்றும் சம்பந்தப் பட்ட எல்லோருக்கும் குறிப்பாக பத்திரிகை நண்பர்களுக்கும் சில பிரச்சனைகளில் நிலைமைகளை விளக்கி கூற வேண்டியது அவசியமாகிறது. பாமகவுக்கும், திமுகவுக்கும் இடையே ஏற்பட்ட தோழமை என்பது தேர்தல் நேரத்தில் தொகுதிகளைப் பங்கிட்டுக் கொண்டு போட்டியிடுவது என்ற அடிப்படையில் அமைந்ததாகும்.

இந்த உறவு கொள்கை அடிப் படையிலோ அல்லது குறைந்தபட்சத் திட்டத்தின் அடிப்படையிலோ அல்லது ஆட்சியில் பங்கு பெறுவது என்ற அடிப்படையிலோ அமைந்த தல்ல. வெற்றி வாய்ப்புள்ள தொகுதி களைப் பங்கிட்டுக் கொண்டு போட்டியிட்ட தேர்தல் உடன்பாடு. அது தேர்தலுடன் முடிந்துவிட்டது.

தேர்தலுக்குப் பிறகு திமுக ஆளும் கட்சி, பாமக எதிர்க்கட்சி. ஆனால் எதிரி கட்சி அல்ல. நட்புடன் கூடிய எதிர்கட்சி. ஆளும் கட்சியான திமுகவுக்கு பேரவையில் பெரும்பான்மை இல்லை. அந்தப் பெரும்பான்மையை அளிக்கக் கூடிய நட்பு கட்சியாக பாமக இருக்கிறது. தொடர்ந்து இருக்கும்.இதில் எந்த மாற்றமும் இல்லை. வேண்டுமானால் இதனை எழுதிக் கொடுக்கவும் தயார்.

அதே நேரத்தில் எதிர்கட்சி என்ற முறையில் தவறு என்று நாங்கள் கருதுகிற அல்லது மற்றவர்களால் எங்களது கவனத்திற்குக் கொண்டு வரப்படுகிற பிரச்சனைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

பேரவை நடக்கும் போது அங்கே பேசி அரசின் கவனத்தை ஈர்க்கிறோம். பேரவை நடக்காத நாட்களில் முடிந்தால் முதல்வரையோ அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சரையோ சந்தித்து முறையிடுகிறோம்.

தேவைப்பட்டால் கடிதம் வாயிலாகவும் முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்கிறோம். ஆனால் சில பொது பிரச்சனைகள் அவசர முக்கியத்துவம் வாய்ந்தவை. அரசின் கவனத்திற்கு உடனடியாகச் செல்ல வேண்டியவை. அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறோம் என்று பொது மக்களும் அறிய வேண்டியவை.

அப்படிப்பட்ட பிரச்சனைகளை செய்தியாளர்களின் மூலமாக செய்தித்தாள்கள் மூலமாக அரசின் கவனத்தை ஈர்க்கிறோம். இதை வைத்துக் கொண்டு அப்படி இருக்குமோ? இப்படி இருக்குமோ? பாமக அங்கே போய்விடுமோ? என்றெல்லாம் செய்தியாளர்கள் எந்த முடிவுக்கும் வந்துவிட வேண்டாம்.

அப்படி வந்துவிட்டதன் விளைவாக இரண்டு தினங்களுக்கு முன்பு இப்படிப் பட்ட கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. பாமகவைப் பொறுத்தவரையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முடிவில் எந்த மாற்றமும் இல்லை. அதே நேரத்தில் மக்கள் பிரச்சனைகளுக்காக வாதாடுவதையும், அதற்காகப் போராடுவதையும் பாமக நிறுத்திக் கொள்ளாது. அது எங்களது ஜனநாயகக் கடமை. எல்லா காலக் கட்டத்திலும், எல்லா கட்சிகளும் இப்படித் தான் செயல்பட்டு வந்திருக்கின்றன.

திமுகவும் இப்படிசெயல்பட்டு வந்திருக்கிறது என்பதற்கு எத்தனையோ உதாரணங்களைக் காட்ட முடியும். வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் திமுக பங்கு பெற்றிருந்தபோது, பெட்ரோல், டீசல் விலையை எதிர்த்து திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது.

பொடா சட்டத்தை எதிர்த்து பேரணி நடத்தி இருக்கிறது. அதுமட்டுமல்ல, பொடா சட்டத்தைக் கைவிட வேண்டும் என்ற கையெழுத்து இயக்கத்தைக் கருணாநிதி தொடங்கி வைத்திருக்கிறார். அதில் முதல் கையெழுத்துப் போட்டிருக்கிறார். 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்காக பேரணி, ஆர்ப்பாட்டங்களைத் திமுக நடத்தியிருக்கிறது.

மத்தியில் ஆட்சியில் இருந்து கொண்டே இத்தகைய போராட்டங்களை இங்கே திமுக நடத்தியிருக்கிறது. இது தோழமைக்கு உகந்ததல்ல என்று அப்போது யாரும் சொல்லவில்லை. திமுக அதன் ஜனநாயகக் கடமையை ஆற்றுகிறது என்று தான் எடுத்துக் கொள்ளப்பட்டது.

அது போல தான் பாமகவும் இப்போது தனது ஜனநாயகக் கடமையை ஆற்றுகிறது. மேற்கு வங்காளத்தில் இடதுசாரி கட்சிகள் குறைந்தபட்ச திட்டத்தின் அடிப்படையிலும், பொதுவான சில கொள்கைகளின் அடிப்படையிலும் கூட்டணி அமைத்து கொண்டிருக்கின்றன.

பெரிய கட்சியான மார்க்சிஸ்ட் கட்சிக்குத் தனியாக ஆட்சி அமைக்கும் அளவுக்குப் பேரவையில் பெரும்பான்மை பலம் இருந்தாலும் குறைந்தபட்சத் திட்டம், பொதுவான கொள்கை அடிப்படையில் கூட்டணி என்பதால் இதர தோழமை கட்சிகளுக்கும் அமைச்சரவையில் பங்களித்திருக்கிறார்கள்.

அப்படி இருந்தாலும் அந்தக் கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள கட்சிகளே சில சமயம் அரசின் திட்டங்களுக்கு எதிராகவும், மார்க்சிஸ்ட் கட்சியின் நடைமுறைக்கு எதிராகவும் குரல் கொடுக்கின்றன. போராட்டங்களைக் கூட நடத்துகின்றன. (நந்திகிராம், டாடா சிறு கார் தொழிற்சாலை போன்ற பிரச்சனைகளில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக சிபிஐ, ஆர்எஸ்பி, பார்வர்டு பிளாக் போன்றவை அறிக்கைகள் விட்டு மிரட்டி வந்தன).

ஆனால் தமிழகத்தில் அப்படியல்ல. ஆளும் கட்சியான திமுகவுக்குப் பெரும்பான்மை பலம் இல்லை. குறைந்தபட்சத் திட்ட அடிப்படையில் அமையாத கூட்டணி என்பதால் பெரிய கட்சி என்ற முறையில் அக்கட்சி ஆட்சியை அமைக்கவும், மற்றவர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்ற ரீதியில் இங்கே செயல்படுகிறோம். இந்த அடிப்படையை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.

அரசுக்கு ஆதரவு அளிக்கிறோம் என்பதற்காக இந்த அரசு செய்கிற அனைத்தையும் ஆதரிக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. தவறு என்று தெரிவதைச் சுட்டிக்காட்டுவதற்கு எங்களுக்கு ஜனநாயக உரிமை இருக்கிறது. அப்படிச் சுட்டிக்காட்டுவது தோழமை உணர்வுக்கு உகந்த செயலாக இருக்க முடியாது என்று கருத தேவையில்லை.

தவறு என்று நாங்கள் கருதுவதை எடுத்துச் சொல்கிறோம். தவறு இல்லை என்றால் ஆட்சியில் இருப்பவர்கள் விளக்கலாம். அதற்காக விதண்டாவாதங்கள் கூடாது. ஏட்டிக்குப் போட்டி என்ற ரீதியில் பதில் அமையக் கூடாது. அப்படி அமைவது தான் தோழமை உணர்வுக்கு உகந்த செயலாகாது.

கல்விக் கூடங்கள் திறக்கப் பட்டிருக்கின்றன. மாணவர் சேர்க்கை தொடங்கியிருக்கிறது. எல்.கே.ஜியில் இருந்து பட்ட மேற்படிப்பு வரையில் கல்வி அறுவடை தடையின்றி நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால் இத்தகைய தவறுகள் நடக்கின்றன என்பதை சம்பந்தப் பட்ட அமைச்சர் ஒப்புக்கொள்கிறார். முதலமைச்சர் கருணாநிதியும் தவறே நடக்கவில்லை என்று அமைச்சர் எப்போதும் கூறவில்லை என்று சொல்கிறார்.

தவறு நடப்பதற்கான ஆதாரத்தையும், புகாரையும் பாதிக்கப்பட்டவர்கள் கொடுக்க வேண்டும் என்றும், அந்தப் புகாரை அரசின் கவனத்திற்குக் கொண்டு வருகிற இராமதாசு கொடுக்க வேண்டும் என்கிற போதுதான் பிரச்சனை வருகிறது.

மாணவர்களும் பெற்றோர்களும் ஆதாரத்தைக் கொடுக்க வேண்டும் அல்லது அவர்களிடமிருந்து ஆதாரத்தை நான் பெற்று தரவேண்டும் என்று சொன்னால் பிரச்சனையைத் திசை திருப்புகிற செயல் என்று தானே அர்த்தம்?

எங்களிடம் கல்லூரி நிர்வாகத்தினர் கட்டாயமாக நன்கொடை வாங்கினார்கள் என்று மாணவர்கள் புகார் கொடுத்தால் அந்த மாணவர்களின் எதிர்காலம் என்ன ஆகும்? கல்லூரி நிர்வாகம் பழிவாங்காதா? பழிவாங்காது என்று அரசு உத்தரவாதம் தருமா? புகார் கொடுத்ததற்காகப் பழிவாங்கப் பட்டால் அத்தகைய மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்திலும், அரசு பொறியியல் கல்லூரிகளிலும் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் இடம் தருகிறோம் என்று அரசு அறிவித்தால் மாணவர்கள் துணிந்து புகார் கொடுப்பார்கள்.

அப்படி ஒரு உத்தரவாதத்தை அரசு கொடுக்குமா? கொடுத்தால் ஆயிரக்கணக்கான மாணவர்களையும் பெற்றோர்களையும் புகார் கொடுக்க வரிசையில் நிறுத்தத் தயார். ஆதாரத்தைக் கொடுங்கள் என்று அமைச்சரும் கேட்கிறார். முதலமைச்சரும் அப்படி கேட்கிறார். அப்படியானால் இந்தத் தவறைத் தடுக்க வேறு வழியே இல்லையா? வேறு நடைமுறை இல்லையா? அரசுக்கு அதிகாரமே இல்லையா? அத்தனையும் இருக்கிறது.

1992ஆம் ஆண்டில் தமிழக அரசு கட்டாய நன்கொடை தடை சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இதில் அடிக்கோடிட்டுக் கவனிக்க வேண்டியது, புகார் என்று கருதுவதற்குக் காரணம் இருக்கும் பட்சத்தில் அல்லது இந்தச்சட்ட விதிகள் மீறப்பட்டிருக்கிறது என்று கருதுவதற்கு காரணம் இருக்குமெனில் சம்பந்தபட்ட அதிகாரிகள் மற்றவர்கள் புகார் தர வேண்டும் என்று காத்திருக்காமல் தானே கல்லூரிகளுக்குச்சென்று சோதனை போட அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது என்பதாகும்.

ஆனால் இந்த அதிகாரத்தைக் கடந்த 15 ஆண்டுகளாக எந்த ஆட்சியும் பயன்படுத்தவில்லை. நடவடிக்கை எடுக்கவில்லை. ஆதாரத்தைத் தாருங்கள் என்று கேட்பதற்குப் பதிலாக இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுத்திருந்தால் கட்டாய நன்கொடை ஓரளவு கட்டுப் படுத்தப்பட்டிருக்கும். சட்டத்தில் கொண்டு வந்ததில் இருந்த வேகம் அதனை அமல்படுத்துவதில் இல்லை யென்பது வேதனை அளிக்கக் கூடியதாகும்.

சில்லரை வணிகம், பொருளாதார மண்டலம் போன்ற பிரச்சனைகளில் பாமக போராட்டம் நடத்துவதும், கருத்துக்களை வெளியிடுவதும் அரசு இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற ஆசையில்தான். இவையெல்லாம் மக்கள் பிரச்சனைகள். இதில் அரசியல் எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Nandri: Maalaisudar

No comments: