Tuesday, August 19, 2008

ஆன்மீகம் அவசியம்: கனிமொழி

மனிதர்கள் மூலம் ஏற்படும் தடைகளை ஆன்மீகத்தால் தகர்த்தெறிய முடியும். மனிதன் மனிதனாக இருக்க ஆன்மீகம் அவசியம் என்று திமுக ராஜ்யசபா எம்பி கனிமொழி கூறியுள்ளார்.

வேலூர் அடுத்த திருமலைக்கோடி ஓம்சக்தி நாராயணி பீடம் சார்பில் ஏழை எளிய மாணவ-மாணவிகளுக்கு ரூ.75 லட்சம் மதிப்பில் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா நடந்தது. பீடத்தின் தலைவரான சக்தி அம்மா தலைமை வகித்தார்.

மதம் வேறு - ஆன்மீகம் வேறு

திமுக எம்பி கனிமொழி கலந்து கொண்டு மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், எனக்கு மத நம்பிக்கைக் கிடையாது. மதத்துக்கும் ஆன்மீகத்துக்கும் வேறுபாடு உள்ளது என்று என் தந்தை கருணாநிதி சொன்ன புனித வழியில் நான் சென்று கொண்டிருக்கிறேன்.

மதம் வாழ்க்கையை நெறிப்படுத்தும். சில நேரம் மதம் 'மத'மாக மாறி விடுகிறது.

சேது சமுத்திர திட்டம் தொடர்பாக முதல்வர் கருணாநிதி பல இடங்களில் பேசி வருகிறார். ஆனால் சேது திட்டம் இப்போது மதமாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால் மக்களுக்கு கிடைக்கக் கூடிய நியாயமான பலன்கள் மதத்தின் பெயரால் மறுக்கப்பட்டு வருகிறது.

மறுக்கப்பட்ட பலன்களை பெற்றுத் தர போராடினால் நாத்திகன் என்கின்றனர். கசப்பு மருந்தில் இனிப்பு தடவி ஆன்மீகம் என்கின்றனர். நாங்கள் வேறு வகையில் இனிப்பு என்ற மேல் பூச்சுத் தடவுகிறோம்.

மாணவர்கள் நலனுக்காக இலவச பஸ் பாஸ், சைக்கிள், கல்வி உதவித் தொகை போன்றவற்றை அரசு வழங்கி வருகிறது. மக்கள் தொகை அதிகமுள்ள நம் நாட்டில் அனைத்து உதவிகளையும் அரசே செய்து விட முடியாது.

சக்தி அம்மா போன்றவர்கள் இதுபோன்ற உதவிகள் செய்வதன் மூலம் இந்த சமுதாயம் முற்றிலும் மாறும் நிலை உருவாகியுள்ளது.

கல்வி உதவி பெறும் மாணவர்கள் நன்றாக படித்து உயர்நிலைக்கு வர வேண்டும். அவர்களும் மற்றவர்களுக்கு இதேபோல உதவிகளை செய்ய வேண்டும். சமுதாயத்தில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.

மனிதனால் மட்டுமே இந்த பூமியை சூறையாட முடியும். விலங்குகளை அழிக்க முடியும். ஆனால் மனிதர்கள் மூலம் ஏற்படும் தடைகளை ஆன்மீகத்தால் தகர்த்தெறிய முடியும். மனிதன் மனிதனாக இருக்க ஆன்மீகம் அவசியம் என்றார் கனிமொழி.


செய்தி: நன்றி: Thatstamil

2 comments:

Robin said...

மற்றவர்களைப் போல் வேஷம் போடாமல் உண்மையை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட கனிமொழிக்கு பாராட்டுக்கள்.

கரிகாலன் said...

கேட்பவருக்கு விளங்காமல் பேசுவது அறிக்கை விடுவது போன்ற செயல்களின் மூலம்
கணிமொழி கலைஞரின் வாரிசு என்பதை நிறுபித்துவிட்டார்.

அம்மா தாயே! நீங்க ஆத்திகரா? நாத்திகரா?

குண்டுமணி மணி அளவு தங்கம் வாங்க முடியாம திருமணத்திற்கு காத்திருக்கும் பல பெண்கள் நாட்டில் உள்ளனர். பொறுப்பில்லாம் ஊதாரித்தனமாக கோடிக்கணக்குல செலவு செய்து தங்கக் கோயில் கட்டி பிழைப்பு நடத்தும் சாமியார்களை தந்தைவழியில் தாங்கிப்பிடிக்கும் கணிமொழியார் அவர்களே வாழ்க நீவீர் வல்லாண்டு...