Monday, October 15, 2007

ஜெ. மறு பரிசீலனைக்குத் தயாராக வேண்டும்

நான் நினைத்தேன். இந்த வார குமுதத்தில் சாவித்திரி கண்ணன் எழுதிவிட்டார்.

என்னைக் கேட்டால் பேசாமல் அதிமுகவினர் விஜய்காந்தை தலைவராக்கிவிடலாம். எம்.ஜி.ஆரின் வழி என்றும் சொல்லிக் கொள்ளலாம். திமுக எதிர்ப்பிலும் வீரியம் இருக்கும். மக்கள் ஆதரவும் இருக்கும். ஞாநி ஏன் இதைப் பற்றி எழுதல ? :-)

செய்தி / நன்றி: குமுதம்
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
ஜெ. மறு பரிசீலனைக்குத் தயாராக வேண்டும் - சாவித்திரி கண்ணன்

தமிழகத்தின் பிரதான கட்சிகள் இரண்டில் ஒன்று அ.தி.மு.க. இன்று அது பலமான ஒரு எதிர்க்கட்சி. ஆனால் அந்த எதிர்க்கட்சிப் பாத்திரம் இன்று அதனிடமிருந்து பறி போய்விட்டது... என்று எண்ண வேண்டியுள்ளது.

பல நேரங்களில் ஜெயலலிதா எங்கேயிருக்கிறார்? என்ன செய்கிறார்...? தங்களை பாதிக்கும் சில பிரச்னைகளில் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன? என்பவை மக்களுக்கு அறிந்துகொள்ள முடியாத ரகசியமாக இருக்கிறது.

சேது சமுத்திரத் திட்ட விவகாரத்தில் சில இந்து இயக்கங்கள் நீதிமன்றம் சென்றபிறகு அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் அதிரடியாக களத்தில் இறங்கினர். உச்சநீதிமன்றம் சென்று பந்துக்கு தடை பெற்றனர்.

கருணாநிதி பந்த் நடத்தவில்லை என்று பணிவாகப் பின்வாங்கி, உண்ணாவிரதம், பந்த் என இரண்டையும் ஒரு சேர நடத்திவிட்டார். திங்கட்கிழமை நடந்து முடிந்த இந்தச் சம்பவத்திற்கு சனிக்கிழமை விலாவாரியாக அறிக்கை தருகிறார் ஜெயலலிதா.

இத்தனை தாமதம் ஏன்? தமிழகமக்களுக்கு ஜெயலலிதாவிடமிருந்து விடை கிடைக்காத கேள்வி களில் இதுவும் ஒன்று.

இதில் மட்டும் என்றில்லை, இந்த ஆண்டு இந்த ஆட்சியில் மக்கள் சந்தித்த மாநகராட்சிக்கு நடந்த மறுதேர்தல், குளறுபடியான கூட்டுறவு தேர்தல், சேலம் கோட்டம், முல்லைப்பெயரியாறு விவகாரம், பாலாறு பிரச்சினை, தூத்துக்குடி டைட்டானியம் ஆலை பிரச்னை...என எல்லாவற்றிலுமே அவர் மிக காலதாமதமாகவே தமது கருத்துக்களை பிரசவித்தார்.

சென்னை மாநகராட்சித் தேர்தலிலும், கூட்டுறவு தேர்தல்களிலும் அ.தி.மு.க. அங்கத்தினர்கள் பங்கேற்காமல் தவிர்த்தது அக்கட்சியை மக்களிடமிருந்து அந்நியப்படுத்தி யுள்ளது. இது ஜனநாயக அமைப்பில் சந்திக்க வேண்டிய சவால்களிலிருந்து ஓடி ஒளிவதற்கு ஒப்பாகும்.

இதுவரை தமிழக அரசியலில் தி.மு.க. மற்றும் கருணாநிதி மீதான அதிருப்தியே ஜெயலலிதாவிற்கு அதிர்ஷ்டமாக கைகொடுத்துள்ளது. ஆனால் இன்று, ‘கருணாநிதியை விட் டால் ஜெயலலிதாதான்’ என்ற நிலைமை அடுத்த தேர்தல் வருவதற்குள்ளாகவே அடியோடு மாறிவிடக்கூடிய அறிகுறிகள் தென்படுகின்றன. விஸ்வரூபமெடுத்துக் கொண்டிருக்கும் விஜயகாந்தும், சலசலப்பேற்படுத்திக் கொண்டிருக்கும் சரக்குமாரும் மாற்றுக்கட்சிகளையெல்லாம் தங்கள் அணுகுமுறையில் மாற்றம் செய்து கொள்ள நிர்பந்தித்துள்ளனர்.

ஒரு அரசியல் தலைவர் என்பவர் அணுகுவதற்கு எளிதானவராக இருக்க வேண்டும். அவரது கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களாலே கூட அவரை அணுகுவது சுலபமில்லை. கூட்டணிகட்சித் தலைவர்களுக்கம் எளிதில் சாத்தியமில்லை.

உள்ளாட்சித் தேர்தல்களில் ஒதுக்கப்பட்ட இடங்களில் கூட போட்டியிட வழியில்லாமல் அ.தி.மு.க.வினரால் தடுக்கப்பட்டனர் விடுதலைச் சிறுத்தைகள். மூன்று நாள் முயற்சி எடுத்தும் கூட்டணிக் கட்சித் தலைவியிடம் புகார் செய்யக்கூட வகையின்றி புறக்கணிக்கப்பட்டார் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன். எனவே திசைமாறி பறந்துவிட்டார். சமீபத்தில் அகில இந்திய தலைவர்களில் ஒருவரான அத்வானி, அ.தி.மு.க. தலைவரை சந்தித்துப் பேச ஆசைப்பட்டார். அனுமதி மறுக்கப்பட்டது.

அகில இந்திய அளவில் மூன்றாம் அணி அமைத்தார் ஜெயலலிதா. அந்த மூன்றாம் அணித்தலைவர்களில் சிலரும் இப்படிப்பட்ட மூக்கறுப்புகளை சந்திக்க வேண்டியுள்ளது என பகிரங்கமாக அறிக்கை தந்தனர்.

அறிக்கைகளின் மூலம் மட் டுமே அறியப்படுபவராக ஒரு கட்சித்தலைவர் இருந்தால் அவர் மக்களிடமிருந்து அந்நியப்பட்டுள்ளார் என்பதே அர்த்தம்!.

அறிஞர் அண்ணாவிற்குப் பிறகு தி.மு.க.வும், எம்.ஜி.ஆருக்குப் பிறகு அதி.மு.க.வும் அழியாமல் தொடர்கிறதென்றால் அதற்கு அவர்கள் கட்சியை மக்கள் இயக்கமாக வளர்த்தெடுத்ததுதான் காரணம். நெடுஞ்செழியன், கே.ஏ. மதியழகன், என்.வி.நடராஜன், சி.பி.சிற்றரசு, அன்பழகன், கருணாநிதி என்ற அடுத்த கட்டத் தலைவர்களைஅண்ணா அரவணைத்து தயார் செய்யா விட்டால் தி.மு.க. என்ற இயக்கம் அவரோடு தீர்ந்துபோயிருக்கும். அதே போல எம்.ஜி.ஆரும் எண்ணற்ற இரண்டாம் கட்டத் தலைவர்களை எழுச்சியோடு உருவாக்கினார்.

ஆனால் எம்.ஜி.ஆருக்குப்பிறகு அ.தி.மு.க.விற்கு தலைமை தாங்கிய ஜெயலலிதா அந்த இயக்கத்தை அடிமைகளின் கூடாரமாக வைத்திருக்கவே ஆசைப்படுகிறார். எம்.ஜி.ஆர். கட்சியையே குடும்பமாக பாவித்தார். ஜெயலலிதாவோ தன் தோழியின் குடும்பத்திற்கே இன்று கட்சியை அர்ப்பணித்துவிட்டார்.

கடந்த இருபதாண்டுகளில் அ.தி.மு.க. இழந்து வந்த தலைவர்கள் மற்றும் தளபதிகளின் பட்டியல் வெகு நீளமானது. அடுத்தடுத்த கட்டங்களாக க.ராஜாராம், பண்ருட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசர், கோவைத் தம்பி, ஆர்.எம்.வீரப்பன், அரங்கநாயகம் போன்ற மூத்தத் தலைவர்கள் ஒதுக்கப்பட்டனர். இப்போதும் பொன்னையன் போன்ற பல திறமையாளர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர்.

ஜெயலலிதாவிற்கு தன் செல்வாக்கு மற்றும் திறமையில் மட்டுமே அதீத நம்பிக்கை இருக்கலாம். உண்மையில் அவரது தன்நம்பிக்கைதான் அவருடைய பலம். அதுவே பலவீனமும் கூட! நினைத்ததை பேசும் மனோதிடம் உள்ளவர்தான்! சினிமாவில் வேஷமிட்டவர்தான் எனினும் நிஜத்தில் வேஷத்தை விரும்பாதவர். அவருக்கு எதிரி என்றால் எதிரிதான்! எதிரியிடம் நண்பனாக நடிக்கும் அரசியல் அவரால் முடியாது. இந்து மதத்தில் அவருக்கு மரியாதை உண்டு. கடவுள் நம்பிக்கையையும் எதற்காகவும் ஒளித்துக் கொண்ட தில்லை ஜெயலலிதா. ஆனால் ஒட்டு வங்கிக்காக மதவெறி அரசியலை கையியெலடுக்க விரும்பாதவர். இப்படி சில சிறப்புகள் அவருக்கு இருந்தாலும் வரலாற்றில் எந்த தனிப்பட்ட தலைவர் ஒருவரின் வெற்றிக்கும் அவர் தன்னைச் சார்ந்து வருபவர்களின் உழைப் பையும், திறமைகளையும் சாத்தியப்படுத்திக்கொண்டதே காரணமாயிருந்துள்ளது. ஜெயலலிதா தன்னையும், இயக்கச் செயல்பாடுகளையும் மறுபரிசீலினைக்கு உட்படுத்தியே ஆகவேண்டும். இல்லையெனில் அவருக்கும், அ.தி.மு.க.வுக்கும் உள்ள செல்வாக்கு மக்களின் பரிசீலனைக்கு உட்பட்டே தீரும்..

3 comments:

RATHNESH said...

//ஞாநி ஏன் இதைப் பற்றி எழுதல ? :-)//

சாம்பார் வடை சார், மனசாட்சியுடன் மாரைத் தொட்டுச் சொல்லுங்க, நிஜம்மாவே தெரியாதோ உங்களுக்கு?

Sambar Vadai said...

ஜெயா டிவில ஞாநி அடிக்கடி வர்ராறு. அதுனாலயா ?

RATHNESH said...

"இணையதளத்தின் இணையற்ற அப்பாவி" என்கிற பட்டத்தை மூன்று நூல்களில் சுற்றி உங்களுக்குத் தரலாம் என்று நினைக்கிறேன்.