சேது சமுத்திர திட்டம் தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி எழுப்பிய கேள்விகளுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பதில் அளித்துள்ளார்.
யாருடைய மத உணர்வுகளையும் புண்படுத்தாமல், அதே நேரத்தில் பெரிய கப்பல்கள் போகும் வகையில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் குறித்து முதலமைச்சர் கருணாநிதிக்கு சில கேள்விகளை விடுத்து, என் குற்றச்சாட்டை அவர் மறுத்து நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன் என்று செப்டம்பர் 30ம் தேதி சென்னையில் நான் பேசியதற்கு முதலமைச்சர் கருணாநிதி, என் குற்றச்சாட்டை மறுக்க முடியாமல் சாமர்த்தியமாக திசை திருப்பி ஒரு விளக்கத்தை அளித்து உள்ளார்.
என் கேள்வி இதுதான், அண்ணா மறைந்த பின்பு 69 முதல் 98 செப்டம்பர் வரை கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலங்களில் எந்தப் பிரதமரிடமாவது டெல்லியில் சேதுகால்வாய்த் திட்டம் தமிழ்நாட்டுக்குத் தேவை என்று எழுத்து மூலமாக வற்புறுத்தி நேரடியாகப் பேசி இருக்கிறாரா? 69ல், 71ல், 89ல், 96ல் நான்கு முறை முதல்வரானபோது இந்தத் திட்டத்தை வலியுறுத்தி எந்தப் பிரதமரிடமும் இவர் கோரிக்கை வைக்கவே இல்லை.
தமிழர்களின் நூற்றாண்டு காலக்கோரிக்கையான அண்ணாவின் கனவுத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வற்புறுத்தினாரா? கிடையவே கிடையாது. தமிழ்நாட்டுக்கு ஆற்ற வேண்டிய கடமையை அவர் செய்யவே இல்லை என்பது தான் என் குற்றச்சாட்டு.
அப்படி அவர் இதற்காக வாதாடியதாக நிரூபித்தால், நான் அரசியலை விட்டே விலகிக் கொள்கிறேன்' என அறிவித்தேன். தமிழக முதல்வர் 7ம் தேதி அன்று விடுத்துள்ள அறிக்கையில், என் கேள்வியையே திரித்து, "சேதுத் திட்டத்துக்காக கருணாநிதி இதுவரை எந்தப் பிரதமரிடமாவது எழுத்து மூலமாக கோரிக்கை வைத்ததை நிரூபித்தால், நான் அரசியலைவிட்டே விலகிக் கொள்கிறேன்' என்று நான் பேசியதாகக் கூறி விளக்கம் அளித்து உள்ளார்.
2002, மே 8ம் தேதி, அவர் பிரதமர் வாஜ்பாய்க்கு எழுதிய கடிதத்தையும், 2002, அக்டோபர் 15ல் எழுதிய கடிதத்தையும் சாட்சிக்கு அழைத்து உள்ளார். இதனால் ஒன்று தெளிவு ஆகிறது. என் குற்றச்சாட்டை அவரால் மறுக்க முடியவில்லை. அதனால்தான் 1998ல் பிரதமர் வாஜ்பாய் அறிவித்த திட்டம் குறித்து, நான்கு ஆண்டுகள் கழித்து 2002ல் அவர் கடிதம் எழுதியதைக் காட்டுகிறார்.
ஆனால் அவரிடம் அரசியல் பெருந்தன்மை அணு அளவும் கிடையாது என்பதால்தான் அவர் எழுதிய அந்தக் கடிதத்தில் கூட 98ஆம் ஆண்டு, செப்டம்பர் 15ல் திமுக நடத்திய அண்ணாபெரியார் பிறந்தநாள் விழாப் பேரணியில், சென்னைக் கடற்கரையில் பிரதமர் வாஜ்பாய் "சேதுக் கால்வாய்த் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றும்' என்று உறுதி அளித்ததைக் குறிப்பிடவே இல்லை.
நான் எழுப்பிய இன்னொரு குற்றச்சாட்டுக்கும், கேள்விக்கும் முதல்வரிடம் பதிலே இல்லை. அதுதான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு. 2004ல் அமைந்தபோது அதற்கான குறைந்தபட்ச செயல்திட்டத்தை மன்மோகன் சிங்கும், பிரணாப் முகர்ஜியும் தயாரித்த போது, நான் நேரடியாக அவர்களைச் சந்தித்து சேதுக்கால்வாய்த் திட்டத்தை அக்குறைந்தபட்ச செயல்திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தி எழுத்து மூலமாக கோரிக்கை விண்ணப்பம் தந்து, அதில் இடம்பெறச் செய்தேன். ஆனால் சேதுக் கால்வாய்த் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்ற குறைந்தபட்ச செயல்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என கருணாநிதி சொல்லவும் இல்லை, கோரிக்கை தரவும் இல்லை. இதுகுறித்து மன்மோகன் சிங்கிடம் பேசவும் இல்லை.
ஆனால் அண்மையில் புதுக்கோட்டையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் நாகூசாமல் மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிடம், சேதுக்கால்வாய்த் திட்டத்தை வற்புறுத்தியதாக ஒரு பச்சைப் பொய்யைத் துணிந்து அவிழ்த்து விட்டார். அன்றுவரை அவர் எங்கும் பேசாத ஒன்று இது. அப்படி அவ்வாறு மன்மோகன் சிங் அரசிடம் வற்புறுத்தியதாக நிரூபித்தால், நான் பொதுவாழ்வை விட்டே விலகுகிறேன் என அறைகூவல் விடுத்து இருந்தேன். முதலமைச்சர்
கருணாநிதி தந்து உள்ள விளக்கங்களில் இதற்குப் பதிலே இல்லை.
வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப் போல வளமான வர்ணனை வார்த்தைகளுக்கு இடையில் பொய்களைச் சொருகுவதில் ஈடு இணையற்ற வல்லவர் கருணாநிதி ஆவார். அதனால்தான் 2002 மே மாதம் 8ந் தேதி பிரதமர் வாஜ்பாய்க்கு எழுதிய கடிதத்தில் "நான் பல சமயங்களில் பொறுப்பில் இருந்த பல பிரதமர்களிடம் இதைக் குறித்து வலியுறுத்தி உள்ளேன்' என்று அப்பட்டமான ஐமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யைப் பதித்து விட்டார்.
சேதுக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றுவதில் துளி அளவும் கருணாநிதிக்கு அக்கறை இல்லை என்பதால்தான் 2001, பிப்ரவரி 1ம் தேதி, சென்னையில் எண்ணூர் துணைத் துறைமுகத்தை பிரதமர் வாஜ்பாய் தொடங்கி வைத்த விழாவில், பங்கு ஏற்றுப் பேசிய அன்றைய முதல்வர் கருணாநிதி, தனது உரையில் துறைமுகங்களைப் பற்றிப் பேசுகையில், சேது சமுத்திரத் திட்டத்தைப் பற்றி வலியுறுத்தவும் இல்லை. அதுபற்றிக் குறிப்பிடவும் இல்லை.
இத்திட்டம் குறித்துப் பேச வேண்டிய பொருத்தமான இடம் என்பதையும் பிரதமரிடம் வற்புறுத்த வேண்டியது கடமை என்பதையும், திட்டமிட்டே நிராகரித்து விட்டார் என்பது தான் உண்மை. ஆனால் கருணாநிதி தன் கடமையை மறந்தாலும், சேதுக் கால்வாய்த் திட்டத்தை அங்கே நினைவுறுத்தத் தவறினாலும், வாஜ்பாய் தன்னுடைய உரையில், "தமிழக மக்களின் நீண்டநாள் கனவாக இருந்துவரும் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்தோம். அந்த உறுதியை நாங்கள் மறக்கவில்லை. நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று குறிப்பிட்டார்.
சேதுக் கால்வாய்த் திட்டம் எப்படியும் நிறைவேற்றப்பட்டே ஆக வேண்டும். எந்த மதத்தினரின் உள்ளத்தையும் புண்படுத்திப் பேசாமல், கருமமே கண்ணாகச் செயல் ஆற்றுவது தான் இந்த வேளையில் தேவையான அணுகுமுறை ஆகும். உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இத்திட்டம் குறித்து மாற்று வழியைப் பரிசீலிப்பதாகச் சொல்லி மூன்று மாத காலம் அவகாசம் பெற்று இருக்கிறது. மாற்று வழி என்ற யோசனையையும் புறக்கணிக்கவில்லை' என்று ஒரு கட்டத்தில் தமிழக முதல்வருக்கு கூறினார்.
அமைக்கப்படுகின்றன சேதுக்கால்வாய் 14 மீட்டர் முதல் 15 மீட்டர் ஆழத்துக்குக் குறையாமல் அமைந்தால் தான் பெரிய கப்பல்கள் அக்கால்வாயில் செல்ல முடியும். ஆனால் தற்போது அமைக்கப்படுகிற சேது சமுத்திரக் கால்வாய் 10 மீட்டர் முதல் 12 மீட்டர் வரைதான் ஆழப்படுத்தப்படுவதாகத் தெரிய வருகிறது.
அப்படியானால் 80,000 டன் முதல், ஒரு லட்சம் டன் எடை உள்ள கப்பல்கள், பன்னாட்டுக் கப்பல்கள் இக்கால்வாய் வழியாகச் செல்லவே முடியாது. 30,000 அல்லது அதிகபட்சம் 40,000 டன் எடை உள்ள சிறிய கப்பல்கள் மட்டுமே இக்கால்வாயில் செல்ல முடியும் என்பதால், எந்த நோக்கத்துக்காக சேதுக் கால்வாய்த் திட்டம் அமைக்கப்படுகிறதோ, அந்த நோக்கமே நிறைவேறாமல் போய்விடும்.
மீனவ மக்களின் கவலையையும், ஐயத்தையும் போக்கிடும் வகையில், தகுந்த விளக்கங்களைத் தருவதுடன், பெரிய கப்பல்கள் செல்லுகிற விதத்தில் சேதுக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றி தமிழகத்தின் பொருளாதாரத்துக்கு வளம் சேர்க்க வழி காண வேண்டும்.
Source / Nandri: Maalaisudar
Tuesday, October 9, 2007
முதல்வருக்கு வைகோ பதிலடி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment