Monday, October 29, 2007

கொடியும் மஞ்சள் !

இதை Innovation என்று சொல்வதா இல்லை Lateral thinking என்று சொல்வதா ? ஒரு தண்ணி லாரி முன்பு மக்கள் அலைமோதுவதும், அதற்காக பெரிய க்யூவில் நிற்பதும், அதனால் வரும் தள்ளு முள்ளுகளும் பலருக்கும் தெரிந்திருக்கும். அந்த வித தள்ளுமுள்ளுகளை கொஞ்சம் தவிர்க்க நிச்சயம் இந்த 17 பேர் ஒரே நேரத்தில் தண்ணீர் பிடிக்க உதவும் அமைப்பு உதவும். மேலும் குடத்தை வைக்க சிறிய பிளாட்ஃபார்ம் இருப்பதால் அங்கிருந்து தூக்கி நேரே இடுப்பில் வைக்கவும் இலகுவாக இருக்கும்.

பாராட்ட வேண்டிய டிசைன். இதுதான் இந்தியா / தமிழகம் போன்ற பகுதிகளுக்குத் தேவையான மக்களுக்கு உதவும் Innovation.

செய்தி / படங்கள் நன்றி: தினமலர்








செய்தி / படங்கள் நன்றி: தினமலர்

சென்னை: சத்ய சாய் அறக்கட்டளை சார்பாக சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் வாகனத்தை முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்தார்.

கிருஷ்ணா நதிநீர் திட்டம் கடந்த 1983ம் ஆண்டு துவக்கப்பட்டது. எனினும், செப்டம்பர் 1996ல் சென்னைக்கு கிருஷ்ணா நீர் வந்து சேர்ந்தது. அப்போது முதல் இந்த ஆண்டு ஜனவரி 17ம் தேதி வரை 27.07 டி.எம்.சி., தண்ணீர் பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்காக ரூ.512 கோடியை தமிழக அரசு தன் பங்காக ஆந்திரா அரசுக்கு வழங்கி உள்ளது. மேலும், தமிழகத்தில் நடந்த பணிகளுக்காக ரூ.214 கோடியை செலவு செய்துள்ளது.

கிருஷ்ணா நதிநீர் திட்டப்படி 1996 முதல் கணக்கிட்டால் ஆண்டுக்கு 12 டி.எம்.சி., தண்ணீர் வீதம் 120 டி.எம்.சி., தண்ணீர் தமிழகத்துக்கு கிடைத்திருக்க வேண்டும். 27.07 டி.எம்.சி., தான் கிடைத்துள்ளது. இதற்கு காரணம், ஆந்திரா மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழக எல்லை வரையிலான 151 கி.மீ., துார கால்வாயில் ஏற்பட்ட உடைப்புகளால் ஏராளமான தண்ணீர் வீணாகியது தான்.

கண்டலேறு அணையில் துவங்கி தமிழக எல்லை வரையிலான கால்வாய்களில் ஏற்படும் இழப்பை தடுக்க வேண்டியது அவசியம் என்ற கருத்து சத்ய சாய் பாபாவை ஈர்த்தது. அதனடிப்படையில் இந்த கால்வாயை பலப்படுத்தும் பணியில் சத்ய சாய் நிறுவனம் இறங்கியது. ரூ.200 கோடி செலவில் 18 மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட இப்பணிகளால் ஒரு சொட்டு நீர் கூட சேதாரமின்றி தமிழக எல்லைக்கு வந்து சேர காரணமாய் அமைந்தது. இதன்மூலம் சென்னை நகர மக்களின் தாகம் தீர்க்க நிரந்தர தீர்வாகவும் இது அமைந்தது.

இதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக இந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து `ஜீரோ பாயின்ட்' முதல் பூண்டி நீர்த்தேக்கம் வரையிலான 25 கி.மீ., துாரம் கால்வாயையும், சத்ய சாய் நிறுவனம் ஏற்றுக் கொண்டு பணிகள் நடந்து வருகின்றன. தொடர்ச்சியாக போரூர், செம்பரம்பாக்கம், ரெட்ஹில்ஸ் ஏரிகளின் கரைகளையும் பலப்படுத்தித் தர சத்ய சாய் நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. சென்னையின் சில மேடான பகுதிகளில், குறிப்பாக குடிசைப் பகுதிகளில், சென்னை குடிநீர் வாரியம், வாகனங்கள் மூலமாக அன்றாடம் குடிநீர் வழங்கிக் கொண்டு இருக்கிறது. தினமும் ஒன்பதாயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள 850 லாரி நடைகள் மற்றும் ஆறாயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள 400 லாரி நடைகள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

இவ்வாறு குடிநீர் வழங்குவதற்காக சத்யசாய் பாபா, குடிநீர் வழங்கும் வாகனத்தை குடிசை வாழ் மக்களுக்காக வழங்கி உள்ளார். ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்த டேங்கர் வாகனத்தைச் சுற்றி 17 குழாய்கள் மற்றும் மேடை அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் குடங்களை மேடையில் வைத்து குழாய் மூலம் தண்ணீர் பெறலாம். இந்த அமைப்பில் ஒரே நேரத்தில் 17 பேர் துளி நீர் கூட சிந்தாமல், வீணாக்காமல் குடிநீர் பெறலாம்.

தற்போது சென்னை எட்டாவது மண்டலத்தில், 116வது வட்டத்தில் உள்ள சாய் நகர் (பக்ஸ் சாலை) பகுதிக்கு சென்னை குடிநீர் வாரியம் தினமும் ஆறு ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நான்கு லாரி நடைகள் மூலம் குடிநீர் வழங்கி வருகிறது. இப்பணியை தற்போது சத்ய சாய் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. சென்னை குடிநீர் வாரியத்தில் இருந்து குடிநீரை பெற்று ஆறாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த வாகனம் மூலம் 116வது வார்டு பகுதியில் சாய் நகர் பகுதிக்கு நான்கு நடைகள் இலவசமாக வழங்க உள்ளது. இதனால், சாய் நகர் பகுதியில் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் 200 குடும்பங்கள் பயன்பெறும். இந்த வாகனத்தின் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதி நேற்று துவக்கி வைத்தார். தொடர்ந்து உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் இந்த வாகனத்தில் இருந்து குடத்தில் தண்ணீர் பிடித்தார். நிகழ்ச்சியின் போது, தலைமைச் செயலர் திரிபாதி, நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் தீனபந்து ஆகியோர் உடனிருந்தனர்.சத்ய சாய் அறக்கட்டளையைச் சேர்ந்த சீனிவாசன், ரமணி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

No comments: