கலைஞர் உயிர் காக்கும் திட்டம் தொடர்பான விளம்பரத்தில் எம தர்மனின் படத்தை வெளியிட்டதன் மூலம் முதல்வர் கருணாநிதியின் கடவுள் நம்பிக்கை வெளிப்பட்டுள்ளது. இதன் மூலம் தன் முகமூடியை தானே கிழித்துக் கொண்டுள்ளார் கருணாநிதி என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பெரியாரின் பகுத்தறிவுப் பாசறையில் படித்தவர், காஞ்சிப் பாசறையில் வளர்ந்தவர் என்று தனக்குத்தானே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் கருணாநிதி, தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தில் எமதர்மர் உயிரைப் பறிப்பதைப் போலவும், அதை இவர் தடுப்பது போலவும் சித்தரித்து தன்னுடைய முகமூடியை தானே கிழித்துக் கொண்டு தன்னுடைய சுயரூபத்தை தன்னுடைய உண்மைத் தன்மையை தானே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
குங்குமப் பொட்டு வைத்துக் கொள்ளும் திமுகவினரையும், தீ மிதிக்கும் கட்சிக்காரர்கள் மற்றும் அமைச்சர்களையும் அவ்வப்போது கண்டிப்பதோடு மட்டுமல்லாமல், இந்து சமயக் கடவுள்களை கொச்சைப் படுத்தியும், நிந்தித்தும் தன்னை ஒரு நாத்திகர் போல் காட்டிக் கொண்டிருந்தார் கருணாநிதி.
ஆனால் கருணாநிதி குடும்பத்தினரோ இறைவழிபாட்டில் தனிக் கவனம் செலுத்துவதிலும், ஜோதிடர்களை கலந்தாலோசித்து அவர்கள் சொல்லும் பரிகாரங்கள் அத்தனையையும் செய்வதிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்து வருகின்றனர்.
கருணாநிதி மஞ்சள் துண்டு அணிவதும் இதனால் ஏற்பட்டதே. அதனால்தான் மஞ்சள் துண்டு அணிவதன் மர்மத்தை கருணாநிதி இன்று வரை வெளிப்படுத்தவில்லை. பகுத்தறிவு பாசறையில் வளர்ந்தவர் என்றால் கருப்பு துண்டுதானே அணிய வேண்டும் என்று பலர் வினாக்களை எழுப்பியும் அதற்கு சரியான விளக்கத்தை கருணாநிதி இன்று வரை அளிக்கவில்லை.
கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் குலதெய்வம் கோயிலுக்குச் சென்று வழிபட்டதை பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டன.
இவருடைய வேடத்தை மெய்ப்பிக்கும் விதமாக திருக்குவளையில் உள்ள அங்காளபரமேஸ்வரி கோயில் சார்பில் அளிக்கப்பட்ட பூரண கும்ப மரியாதையை கருணாநிதி பெற்றுக் கொண்ட காட்சிகள் புகைப்படத்துடன் பத்திரிகைகளில் வெளிவந்தன.
ஆனால் தற்போது பகுத்தறிவுக் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிராக எமதர்மர் உயிரை பறிப்பது போலவும், அதை கருணாநிதி தடுப்பது போலவும் தமிழக அரசு சார்பில் விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது.
இவ்வளவு நாள் இலைமறை, காய்மறையாக இருந்த கருணாநிதியின் கடவுள் நம்பிக்கை தற்போது வெட்டவெளிச் சத்திற்கு வந்திருக்கிறது. தனது முகமூடியை தானே கிழித்துக் கொண்டிருக்கிறார்.
தானும், தன் குடும்ப உறுப்பினர்களும் தொடர்ந்து வளம் கொழிக்கும் அரசுப் பதவிகளை வகிக்க வேண்டும். அதன் மூலம் உலகப் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் இடம் பெற வேண்டும், என்பதுதான் கருணாநிதியின் ஒரே குறிக்கோள், ஒரே கொள்கை.
இதற்காக எந்தக் கொள்கையையும் கருணாநிதி விட்டுவிடத் தயாராக இருக்கிறார் என்பது அவருடைய நடவடிக்கைகளின் மூலம் தெளிவாகத் தெரிகிறது. அதனுடைய உச்சக்கட்டம்தான் உயிரைப் பறிக்கும் எமதர்மனையே தடுப்பவராக தன்னை காட்டிக் கொண்டிருக்கிறார். இதன் மூலம்தான் கொள்கை பிடிப்பு இல்லாதவர், உறுதியற்ற தன்மை உடையவர் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார்.
தான் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காக அண்ணாவின் கொள்கைகளையும், பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளையும், ஜனநாயகக் கோட்பாடுகளையும், தமிழர்களின் உரிமைகளையும் குழிதோண்டிப் புதைத்துக் கொண்டிருப்பவர் தானே கருணாநிதி .கருணாநிதியின் இந்த இரட்டை வேடத்தை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? என்று கேட்டுள்ளார் ஜெயலலிதா
செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்
Sunday, October 25, 2009
தன் முகமூடியை தானே கிழித்த கருணாநிதி - ஜெ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment