இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் வரலாறு காணாத வகையில் செயலிழந்து போயுள்ளன அல்லது சிதறிப் போய்க் கிடக்கின்றன. இதனால் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் ஆளுங்கட்களின் செயல்பாடுகள் கேட்க நாதியில்லாமல் இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
உட்கட்சிப் பூசல், கூட்டணிக் கட்சிகளை சமாளிப்பதில் ஏற்படும் சிரமங்கள், ஆளுங்கட்சிகளின் ஆதிக்கம் அதிகரித்திருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் எதிர்க்கட்சிகளுக்கு இப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டிருப்பதாக அரசியல் திறனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து டெல்லி பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறை தலைவர் பித்யூத் சக்ரவர்த்தி கூறுகையில், இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் முழுமையாக சிதறிப் போய்க் கிடக்கின்றன.
மத்தியிலும் கூட இதே நிலைதான். எதிர்க்கட்சி என்பது அரசைக் கட்டுப்படுத்துவதில், கண்காணிப்பதில் கடிவாளம் போல இருக்கும் என்ற தோற்றம் தற்போது மறைந்து விட்டது. மத்தியிலும் சரி, மாநிலங்களிலும் சரி எதிர்க்கட்சிகள் செயலிழந்து போய்க் கிடக்கின்றன.
மத்தியப் பிரதேசத்தில், 2வது முறையாக பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆனால் திறமையாக செயல்பட வேண்டிய காங்கிரஸ் அங்கு உட்கட்சிப் பூசலில் சிக்கித் தவிப்பதால் எதிர்க்கட்சியாக அதன் செயல்பாடு பூஜ்யமாக உள்ளது.
ராஜஸ்தானில், அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசின் செயல்பாடுகளுக்கு நிகராக எதிர்க்கட்சியான பாஜக இல்லை. தேங்கிப் போய்க் கிடக்கிறது பாஜக.
தமிழகத்தில் நிலைமை மிக மோசமாக உள்ளது. இங்கு கிட்டத்தட்ட எதிர்க்கட்சியே இல்லாத அளவுக்கு தோற்றம் அளிக்கிறது. வழக்கமான முறையிலான எதிர்ப்புகளையோ அல்லது போராட்டங்களையோ, அரசின் மீதான விமர்சனங்களோ கூட இங்கு கேட்பதில்லை. அடுத்து வரப் போகும் சட்டசபைத் தேர்தல் குறித்தும், இடைத் தேர்தல் குறித்தும், கூட்டணிகள் குறித்துமே அத்தனை பேரும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த ஆறு மாதங்களாகவே முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவின் தலைவர் சென்னையில் இல்லை. சமீபத்தில்தான் அவர் கொடநாடு போய் திரும்பி வந்தார்.
பிரதான எதிர்க்கட்சியின் செயல்பாடு கடந்த ஆறு மாதங்களாக இல்லாததால் திமுக அரசின் செயல்பாடு எந்தவிதத்திலும் பாதிப்பை சந்திக்கவில்லை. கிட்டத்தட்ட எதிர்ப்பே இல்லாமல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது திமுக. மேலும் வெற்று அறிக்கைகள் மூலம் மட்டுமே அரசை விமர்சித்து வரும் ஜெயலலிதாவால் ஆளும் கட்சி்க்கு எந்த நெருக்கடியும் இல்லை.
இதேபோல கர்நாடகத்திலும், ஆந்திராவிலும் முறையே காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகியவை திறமையான எதிர்க்கட்சிகளாக செயல்படாத நிலை காணப்படுகிறது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் இன்னும் முழுமையான எதிர்க்கட்சியாக செயல்படாமலேயே உள்ளது என்றார் சக்ரவர்த்தி.
அதேசமயம், மேற்கு வங்கம், உ.பி ஆகிய மாநிலங்களில் எதிர்க்கட்களின் செயல்பாடுகள் சுறுசுறுப்பாக உள்ளன. ஆனால், திரிணமூல் காங்கிரஸ் அரசின் தவறுகளை விமர்சிப்பதற்குப் பதில், வளர்ச்சி நடவடிக்கைகளை ஸ்தம்பிக்க வைக்கும் வகையில் செயல்படுவதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதேபோலத்தான் உ.பியில் சமாஜ்வாடிக் கட்சி ஆக்கப்பூர்வமாக செயல்படாமல், வளர்ச்சி நடவடிக்கைகளே செயல்படாத வகையில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
மேற்கு வங்க அரசு எதைச் செய்தாலும் அதைக் கடுமையாக எதிர்க்கிறார் மமதா பானர்ஜி. இதனால் அங்கு வளர்ச்சி நடவடிக்கைள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.
இந்தியாவிலேயே உருப்படியான எதிர்க்கட்சி உள்ள மாநிலம் எது என்றால் ஜம்மு காஷ்மீரைத்தான் சொல்கிறார்கள் அரசியல் நிபுணர்கள். அங்கு மெஹபூபா முக்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி தேவையில்லாத பிரச்சினகைளுக்கெல்லாம் போராட்டம் நடத்தாமல், மக்கள் விரோத நடவடிக்கைகளை மட்டுமே எதிர்த்து அரசியல் செய்து வருகிறது.
தீவிரவாத மனப்போக்குள்ளவர்களையும், தேசியத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களையும் அனுசரித்து நடந்து கொள்கிறது மக்கள் ஜனநாயகக் கட்சி. இன்னும் சொல்லப் போனால் தீவிரவாத மனப்போக்குள்ளவர்களை மாற்றி தேசியத்திற்கு அது அழைத்து வரும் பணியையும் கூடவே செய்கிறது.
மக்கள் ஜனநாயகக் கட்சி எப்போதும் விழிப்புடன் இருப்பதால் ஆளுங்கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சி தவறுகள் செய்யாமல் தவிர்ப்பதில் அக்கறையுடன் உள்ளது. இப்படி ஆளுங்கட்சி தனது பணியில் கவனத்துடன் இருப்பதாலும், எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி ஆளுங்கட்சியை தொடர்ந்து கண்காணித்து வருவதாலும் அங்கு தவறுகள் நடப்பது வெகுவாக குறைந்துள்ளது.
கடந்த 2002ம் ஆண்டிலிருந்தே ஜம்மு காஷ்மீரில் எதிர்கட்சிகளின் செயல்பாடுகள் சிறப்பாகவே உள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
செய்தி: நன்றி:தட்ஸ்தமிழ்
Tuesday, November 3, 2009
செயல்படாத எதிர்கட்சித் தலைவர்கள் - முதலிடம் ஜெ.
Labels:
எதிர்க்கட்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment