நோபல் பரிசு பெற்ற தமிழ் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் பிறந்து, பரோடா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் பி.எஸ்.சி. பட்டம் பெற்று, பின்னர் அமெரிக்க நாட்டிலுள்ள ஓகையோ பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. ஆய்வு முடித்து, முனைவர் பட்டம் பெற்றவர் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்.
அமெரிக்க நாட்டில் வாழும் இவர் இங்கிலாந்து நாட்டிலுள்ள கேம்பிரிட்ஜ் நகரில் எம்.ஆர். மூலக்கூறு உயிரியல் ஆய்வுக் கூடத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றுகிறார்.
இவர் உயிரினங்கள் அனைத்திலும் வேதியியல் நிகழ்வுகளைக் கட்டுப்படுத்துகிற புரோட்டின்களை உருவாக்கும் ரிபோசெம் செயல்பாடுகள் குறித்து அமெரிக்க நாட்டைச் சேர்ந்த தாமஸ் ஏ.ஸ்டெல்ட்ஸ், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி ஆடா இயோனத் ஆகியோருடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
இந்த ஆய்வின் மூலம் நோய்களை எதிர்க்கும் புதிய நச்சு நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளை உருவாக்குதல் தொடர்பான இவரது கண்டு பிடிப்புக்காக 2009-ம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரெட் நோபல் நினைவாக நிறுவப்பட்டுள்ள நோபல் பரிசுக் குழு அறிவித்துள்ளது.
பெருமைக்குரிய இச்செய்தி கேட்டு முதல்-அமைச்சர் கருணாநிதி மிகுந்த மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைந்து, விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனை மனதாரப் பாராட்டுவதாக அறிவித்துள்ளார்.
மேலும் ஏற்கனவே நோபல் பரிசு பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த சர்.சி.வி.ராமன், சந்திரசேகர் ஆகிய 2 விஞ்ஞானிகளை அடுத்து 3-வது தமிழ் விஞ்ஞானியாக வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் உலகில் வழங்கப்படும் மிக உயரிய விருதாகிய நோபல் பரிசினைப் பெற்றுள்ளதன் மூலம் தமிழ்ச் சமுதாயமே மிகவும் பெருமையடைகிறது என்றும், இப்பெருமைக்குரிய விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு தமிழக அரசின் சார்பில் தனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்வதாகவும் முதல்-அமைச்சர் கருணாநிதி தனது பாராட்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
செய்தி: நன்றி: மாலைமலர்
வேதியியலில் நோபல் பரிசு: சாதனையின் சிகரத்தில் தமிழர் ராமகிருஷ்ணன்
அமெரிக்கர்களையும், ஐரோப்பியர்களையும் மட்டுமே அதிக அளவில் எட்டிப்பார்த்து வந்த நோபல்பரிசை தன்பக்கம் ஈர்த்து வெற்றி கண்டிருக்கிறார் தமிழரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்.
இதுவரை 5 இந்தியர்கள் மட்டுமே இந்த பரிசை பெற்றிருந்த நிலையில் 6-வது நபராக ராமகிருஷ்ணன் சேர்ந்துள்ளார். ஏற்கனவே விருது பெற்ற வர்களில் சர்.சி.வி.ராமன், சந்திரசேகர் ஆகியோர் தமிழர்கள். ராமகிருஷ்ணனும் இதில் இடம் பிடித்துள்ளார்.
மற்ற இந்தியர்கள் வேறு துறைகளில் நோபல் பரிசு பெற்றிருக்கும் நிலையில் தமிழர்கள் 3 பேருமே அறிவியல் துறை ஆராய்ச்சி மூலம் நோபல் பரிசு பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதில் ராமகிருஷ்ணன் வேதியியல் துறையில் பெற்றுள்ளார். ராமகிருஷ்ணனின் ஆராய்ச்சி சாதாரணமானது அல்லது. உலகில் மிக உயரிய ஆராய்ச்சிகளில் இதுவும் ஒன்று என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பலகோடி செல்களை கொண்டதுதான் நமது உடல். மைக்ராஸ்கோப் மூலம் மட்டுமே பார்க்கக்கூடிய இந்த செல்லில் நியூகிளியஸ், நியூகிளியோலஸ், விசிகில், வேக்குல் உள்ளிட்ட 13 வகையான பொருட்கள் உண்டு. அதில் ரிபோசம் என்ற பொருளும் ஒன்று.
இந்த பொருட்கள் ஒவ் வொன்றும் ஒவ்வொரு வேலையை செய்கின்றன. அதில் ரிபோசம் புரோட்டீனை உற்பத்தி செய்யும். இதுதான் உடல்கூறு வேதியியல் பணிகளை கட்டுப்படுத்துகிறது. இது எப்படி வேலை செய்கிறது என்பதை கண்டுபிடித்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு மருந்துகளை உருவாக்க முடியும்.
எனவே ரிபோசம் செயல் பாட்டை ராமகிருஷ்ணன் யாடோயோனத், தாமஸ் ஸ்டீட்ஸ் ஆகிய விஞ்ஞானிகளுடன் சேர்ந்து ஆய்வு செய்தார்.
அதில் ரிபோசம் செயல்பாட்டை முழுமையாக கண்டுபிடித்து அது தொடர்பான முப்பரிமாண வரை படத்தை அவர்கள் உருவாக்கி உள்ளனர்.
ரிபோசம் 25 நானோ மீட்டர் அளவு கொண்டது. அதாவது 1 மில்லி மீட்டரில் 10 லட்சம் பங்கில் ஒன்றுதான் 25 நானோ மீட்டர். இவ்வளவு குறுகிய அளவுள்ள பொருளின் பணியை துல்லியமாக கணித்து முப்பரிமாண படம் உருவாக்கி இருப்பது பெரும் சாதனையாக கருதப்படுகிறது. எனவேதான் 3 விஞ்ஞானிகளுக்கும் உலகில் உயரிய விருதான நோபல் பரிசை வழங்கி இருக்கிறார்கள்.
ராமகிருஷ்ணனின் சொந்த ஊர் கடலூர் மாவட்டம் சிதம்பரம். அங்குள்ள அக்ரகாரத்தில் அவரது வீடு உள்ளது. பள்ளி பருவத்திலேயே சிறந்த மாணவராக திகழ்ந்து உள்ளார்.
1952-ம் ஆண்டு பிறந்த ராமகிருஷ்ணன் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பி.யூ.சி. படித்துள்ளார். குஜராத் மாநிலம் பரோடா பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. படித்தார். அடுத்து அமெரிக்காவுக்கு மேல்படிப்புக்காக சென்றவர் ஓகியோ பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பி.எச்.டி. டாக்டர் பட்டம் பெற்றார்.
அடுத்து கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணியாற்றியதுடன் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார். பின்னர் யேல் பல்கலைக்கழகம், புரூக்கெலன் தேசிய ஆய்வுக்கூடம், யாத் பல்கலைக்கழகம் ஆகிய வற்றிலும் பணியாற்றினார்.
1999-ம் ஆண்டு இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பணியில் சேர்ந்த அவர் அங்கு ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இதில் ரிபோசம் பற்றி தனது குழுவினருடன் 9 ஆண்டுகளாக ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இதில்தான் அவருக்கு நோபல் பரிசு கிடைத்து உள்ளது.
ராமகிருஷ்ணன் 1977-ம் ஆண்டில் இருந்து இதுவரை 95 ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிட்டு உள்ளார். ரிபோசம் பற்றி மட்டும் 3 கட்டுரைகள் எழுதி உள்ளார்.
நோபல் பரிசு கிடைத்து இருப்பது பற்றி ராமகிருஷ்ணன் கூறியதாவது:-
வேதியியல் ஆராய்ச்சியில் பங்களிப்பு செய்தவர்கள் நிறைய பேர் உள்ளனர். இத்துறையில் நோபல் பரிசு பெறும் மூவரில் என்னையும் தேர்ந்தெடுத்தது வியப்பு அளிக்கிறது. இந்த பரிசால் நான் கவுரவிக்கப்பட்டதாக உணர்கிறேன்.
மரபணுக்களில் உள்ள தகவல்கள் மூலம் புரதங்களை எவ்வாறு உருவாக் குவது என்பதை கண்டறிந்துள்ளேன். இந்த கண்டு பிடிப்பு பல நோய் எதிர்ப்பு மருந்துகளை தயாரிக்க உதவும். இந்த பரிசுக்காக எனது பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர் களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
சிதம்பரத்தில் உள்ள அனந்தீஸ்வரர் கோவில் அக்ரஹாரத்தில் எங்கள் வீடு உள்ளது. 3 வயது வரை சிதம்பரத்தில் இருந்தேன். அதன் பிறகு எனது தந்தைக்கு பரோடாவில் வேலை கிடைத்ததால் எனது பள்ளிப்படிப்பு, கல்லூரிப் படிப்பை பரோடாவில் படித்தேன். 2 ஆண்டுகளுக்கு முன்பு எனது தந்தையுடன் சிதம்பரத்தில் உள்ள பிறந்த வீட்டை சென்று பார்த்தேன்.
எனது மகள் டாக்டராகவும், மகன் இசைக்கலைஞராகவும் உள்ளனர். இருவரும் அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள்.
இந்திய அறிவியல் துறை சிறப்பாக செயல்பட்டு வருவதாக உணர்கிறேன். இந்திய அரசு அடிப்படை அறிவியல் துறைகளில் ஆராய்ச்சிகளுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும். அதன் மூலம் சுகாதாரம், தொழில் நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகள் சாத்தியமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Thursday, October 8, 2009
நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு கருணாநிதி பாராட்டு
Labels:
கருணாநிதி,
நோபல்,
வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment