Tuesday, October 6, 2009

ஜெயலலிதா மீது ராமதாஸ் குற்றச்சாட்டு

பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்த பா.ம.க. அந்த கூட்டணியில் இருந்து விலகியது. நேற்று முன்தினம் திண்டிவனத்தில் நடந்த அவசர பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் 1967 முதல் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி உருவாக்கப்பட்டு உள்ளது. இன்றுவரை கட்சிகள் கூட்டணி அமைத்துதான் தேர்தலை சந்திக்கின்றன.

ஒரு தேர்தலில் ஒரு கட்சியோடு கூட்டணி அமைத்த கட்சி மறுதேர்தலில் இன்னொரு கட்சியோடு கூட்டணி அமைக்கும் காட்சிகள் நடந்துள்ளன. பா.ம.க. அந்த வகையில்தான் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தை சந்தித்து வந்துள்ளது.

2006 சட்டசபை தேர்தலின்போது திண்டிவனம் தொகுதியில் பா.ம.க. வேட்பாளராக எங்கள் கட்சியை சேர்ந்த கருணாநிதி போட்டியிட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சண்முகம் போட்டியிட்டார்.

வாக்குப்பதிவு நாளன்று சண்முகத்தின் ஊரில் ஏற்பட்ட தகராறில் அவரது உறவினர் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் முதல் குற்றவாளியாக நானும், 2-வது குற்றவாளியாக எனது மகனும், 3-வது, 4-வது, 5-வது குற்றவாளிகளாக எனது பேரன், மற்றும் உறவினர்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டன.

6-வது குற்றவாளியாக வேட்பாளர் கருணாநிதியின் பெயரும், 7-வது குற்றவாளியாக ரகு என்பவரின் பெயரும் சேர்க்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு பின்னர் 7-வது குற்றவாளியான ரகு முதல் குற்றவாளியாக மாற்றப்பட்டார். இந்த வழக்கு தற்போது ஐகோர்ட்டு விசாரணையில் உள்ளது. இதில் 4 வாரங்களுக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

இதற்கிடையே கொடநாட்டில் தங்கி இருக்கும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை எங்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணியும், முன்னாள் எம்.பி. தன்ராஜ்யும் சந்தித்து பேசினர். அப்போது இந்த பிரச்சினை குறித்து கூறப்பட்டபோது இதுபற்றி பின்னர் பார்த்து கொள்ளலாம் என்று அவர் கூறி உள்ளார்.

ஆனால் நாங்கள் உட்கட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த நிர்வாககுழு கூட்டத்தை கூட்டினோம். அதில் பங்கேற்ற பலரும் அ.தி.மு.க. கூட்டணியில் சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படும் நிலையில் தொடரக்கூடாது என்று நிர்பந்தித்தனர்.

சுயமரியாதையை விட்டுக்கொடுக்க முடியாது என்பதற்காகவே அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறினோம். 2001-ல் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தபோதும் 3 மாதத்தில் வெளியே வந்தோம். அதன்பின்பு தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து 3 வருடங்களுக்கு பிறகு வெளியே வந்தோம்.

2001-ம் ஆண்டுக்கு முன்னர் அ.தி.மு.க., தொண்டர்கள் பலத்துடன் பலமான கட்சியாக இருந்தது. தற்போது அந்த கட்சி பலவீனமாக ஆகிவிட்டது. ஏராளமான தலைவர்களுடன் கோஷ்டி பூசல்களும் சேர்ந்து கொள்ள தொண்டர்கள் சோர்ந்து போய்விட்டனர்.

கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது இக்கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் கூட பணத்துக்கு விலைபோய் விட்டதாக இக்கட்சியின் பொதுச் செயலாளரே பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இது ஒன்றே அக்கட்சியின் நிலையை தெளிவாக எடுத்து காட்டிவிடும்.

இப்போது அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு தலைமை பண்பும், ஆளுமை திறனும் இல்லாமல் போய்விட்டது. இதனால் கட்சி கலகலத்து காணப்படுகிறது. பாராளுமனற தேர்தல் முடிந்த பின்பு அவரை நான் நேரில் சந்திக்கவில்லை. டெலிபோனில்தான் பேசினேன்.


ஆனால் முதல்- அமைச்சர் கருணாநிதியை சந்திக்க விரும்பினால் 2 நிமிடத்திலும், பிரதமரை சந்திக்க விரும்பினால் 10 நிமிடத்திலும் பார்த்து விடலாம். ஆனால் ஜெயலலிதாவை மட்டும் சந்திக்க முடியாது.

தமிழ்நாட்டில் தேசிய கட்சிகள் அனைத்தும் தி.மு.க. அல்லது அ.தி.மு.க.வுடன்தான் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்கும் நிர்பந்தத்தில் உள்ளன. நாங்கள் கட்சி தொடங்கிய பின்பு 1989, 1991, 1996 ஆகிய தேர்தல்களை தனித்தே சந்தித்தோம். 1996-ல் 4 தொகுதிகளை கைப்பற்றிய பின்புதான் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தோம்.

அப்போது எங்களது கொள்கையோடு தி.மு.க.வின் கொள்கை ஒத்து போனதால் அ.தி.மு.க.வை விட்டு விலகி தி.மு.க. கூட்டணியில் சேர்ந்தோம். அதன் பின்பு தி.மு.க. தலைவர் எங்களை போயஸ் தோட்டத்துக்கு தள்ளிவிட்டார்.


இப்போது அ.தி.மு.க. கூட்டணியில் இருந்தும் விலகிவிட்டோம். இனிவரும் தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்தனியாக தேர்தலை சந்தித்தால் நாங்களும் தேர்தலில் தனித்து போட்டியிவோம். அல்லது தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி முடிவு செய்வோம். இல்லையேல் 3-வது அணியை அமைக்க நடவடிக்கை மேற்கொள்வோம்.


அதுவரை எதிர்க்கட்சியாக எங்களின் கடமையை செய்வோம். முல்லை பெரியார் பிரச்சினையில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டை அணுகி இருப்பது தாமதமான நடவடிக்கை. இருந்தாலும் அதனை வரவேற்கிறோம். தமிழகம் அண்டை மாநிலங்களை சகோதர மனப்பான்மையுடன்தான் பார்க்கிறது. ஆனால் கேரள அரசு அப்படி நடந்து கொள்வதில்லை. நதிநீர் இணைப்பு பிரச்சினைக்கு கர்நாடக மாநிலம்தான் எதிராக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

செய்தி: நன்றி: மாலைமலர்

AIADMK in shambles: Ramadoss (from Malaisudar)

Launching a tirade against AIADMK general secretary J Jayalalithaa, PMK founder S Ramadoss, who walked out of the AIADMK-led alliance on Sunday, today said that the former Chief Minister lacked leadership qualities and the party led by her was in a shambles.

No comments: