Monday, July 21, 2008

பேரன்களை வாழ்த்துவது ஆபத்து: கருணாநிதி

இப்போதெல்லாம் பேரன்களை வாழ்த்துவது ஆபத்தில் முடிகிறது. ஆனாலும் இந்தப் பேரன் எனக்கு எதிராகப் போய்விட மாட்டான் என்ற நம்பிக்கையில் வாழ்த்துகிறேன் என்று மு.க.முத்துவின் மகன் முத்து அறிவுநிதியை வாழ்த்தினார் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதி.

சென்னையில் நேற்று நடந்த ஒரு திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் அவர் பேசியதாவது:

இன்று திரைப்படத் தணிக்கை என்பது அத்தனை சிரமமான விஷயமில்லை. ஆனால் நான் கதை-வசனம் எழுத ஆரம்பித்த ஆரம்ப நாட்களில் தணிக்கைத் துறைதான் திரைப்படத் துறைக்கு பெரும் சவாலாகத் திகழ்ந்தது.

அந்தக் கால கட்டத்தில் நான் அதிகம் சங்கடப்பட்டது சென்சாரிடம்தான். திரும்பிப்பார் என்றொரு படம். சிவாஜி நடித்தது. நான்தான் வசனம் எழுதினேன். அந்தப் படத்தின் தணிக்கையின்போது 4 ஆயிரம் அடிகளை வெட்டச் சொல்லி விட்டார்கள். எந்தக் காட்சியை வெட்ட வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள நானும் படத்தின் இயக்குநர் காசிலிங்கமும் தினமும் 5 மாடிகளைக் கடந்து செல்ல வேண்டும்.

ஒரு நாள் அந்த சென்சார் அதிகாரியிடம், தினமும் இத்தனை மாடிகளை ஏறி வருகிறோமே, இதைப் பார்த்தும்கூட உங்களுக்குக் கருணை வரவில்லையா, என்று கேட்டேன். திருப்பதி மலைக்கு வந்து போவதைப் போல நினைத்துக் கொள்ளுங்கள். அந்த அளவு புண்ணிய இடம்தான் இதுவும் என்றார் என் கொள்கைகளைத் தெரிந்து கொண்டே.

பதிலுக்கு நான், அங்கும் இங்கும் ஒரே ரிசல்ட்தான் என்றேன். கடைசியில் பலரும் சொன்னதற்குப் பிறகு 2 ஆயிரம் அடி வெட்டினார்கள்.

நான் வசனம் எழுதிய எந்தப் படமும் சென்சாருக்குத் தப்பியதே இல்லை.

இன்று அந்த அளவு நெருக்கடி இல்லை. நினைப்பதை, நாட்டில் நடக்கும் விஷயங்களைத் திரையில் காட்டுமளவுக்கு சுதந்திரம் இருக்கிறது. அதை அருமையாகப் பயன்படுத்தி வருகிறார்கள் திரையுலகினர்.

நாளை உண்ணாவிரதம் என்று அறிவித்துவிட்டு, இங்கே திரைப்பட விழாவில் இவர் உற்சாகமாகக் கலந்து கொள்கிறாரே என்று கூட கண்டனங்கள் எழலாம். ஆனால் அதையும்கூட உங்களுக்காகச் செய்கிற ஒரு தியாகமாகக் கருதி தாங்கிக் கொள்கிறேன்.

தமிழ்ப் பெயர்

இன்றைக்கு இந்தியாவிலேயே முழு வரிவிலக்கு பெற்ற திரைப்படங்களைக் காணுகிறீர்கள். ராஜாஜி மண்டபத்தில் படப்பிடிப்பு நடத்த முன்பு ஒரு லட்ச ரூபாய் கட்டணம். இப்போது அது வெறும் ஆயிரம் ரூபாயாகக் குறைக்கப்பட்டுவிட்டது.

இவ்வளவுக்கும் பிறகு நான் உங்களைக் கேட்பதென்ன....? நல்ல தமிழில் தலைப்புகளைச் சூட்டுங்கள் என்றுதானே. இதைக் கூடக் கேட்கக் கூடாதா... இவ்வளவு சலுகைகள் அளித்தும் கூட தமிழில் பெயர் வைக்காமல் ஏபிசிடி என்றெல்லாம் பெயர் சூட்டுகிறார்கள்.

சமீபத்தில் 70 படங்களுக்கு மானியம் அளிக்கப்பட்டது. இதில் 10க்கும் மேற்பட்டவை ஆங்கிலம் அல்லது பிற மொழித் தலைப்புகள் கொண்டவை.

இனிமேலாவது நல்ல தூய தமிழில் இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் தமிழ் என்று ஒப்புக் கொள்ளும் அளவுக்கு தலைப்புகளை வைப்போம். எதிர்காலத்தில் முழுக்க முழுக்க தமிழிலேயே படங்களை எடுப்போம். தமிழ்ப் பண்பாட்டைக் காப்போம் என்ற உறுதியைத் திரைத் துறையினர் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பேரனை வாழ்த்துவது ஆபத்து!

இந்தப் படத்தில் என் பேரன் அறிவுநிதி ஒரு பாடல் பாடி இருக்கிறான். அவன் மேலும் மேலும் இந்தத் துறையில் புகழ் பெற வாழ்த்துகிறேன். இப்போதெல்லாம் பேரன்களை வாழ்த்துவதே ஆபத்தாக முடிகிறது.

இருந்தாலும்கூட, இந்தப் பேரன் அப்படியெல்லாம் நடந்து கொள்ளமாட்டான் என்ற நம்பிக்கையோடு, நல்ல முறையில் வாழ்வான், என்னுடைய நிலையில் இவன் ஒருவனாவது நின்று என் பெயரைச் சொல்வான் என்ற நம்பிக்கையோடு வாழ்த்துகிறேன் என்றார்.


செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்

1 comment:

Darren said...

//இப்போதெல்லாம் பேரன்களை வாழ்த்துவதே ஆபத்தாக முடிகிறது//

பேரனை விலக்கி வைப்பதுதான் ஆபத்து.