Wednesday, May 14, 2008

கூட இருந்தே குழி பறிப்போர் : கருணாநிதி

"நாடு வாழ நாலைந்து பேராகக் கூட்டணி சேர்ந்து, நமக்கு நாமே என்று நற்செயல் புரியலாம் என்றால்; கூட இருந்தே குழி பறிப்போர் சிலரின் தோழமை தான் கிட்டுகிறது, சேது சமுத்திரத் திட்டமும் தொங்கலில் விடப்பட்டுக் கிடக்கிறது, தாயக நலத் துக்காக உயிரையும் துறப்போர் என்ற பீடும் பெருமிதமும் வாய்க்கும் வரையில், எனக்கு ஏன் பிறந்த நாள் விழா' என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.


முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை : தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவர்களால் வலியுறுத்தப் பெற்றதும், எதிர்காலத் தமிழகம் ஏற்றம் கண்டிட எல்லாக் கட்சியினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு அறிவிக்கப் பட்ட சேது சமுத்திரத் திட்டம், தொங்கலில் விடப்பட்டுக் கிடக்கிறது. இன்னும் எத்தனை காலம் வாழப் போகிறோம் என்ற கேள்விக்குப் பதில் தேடிய நாட்கள் ஓடிப் போய், செத்துச் செத்துப் பிழைக்கிற நேரத்தை நினைத்தவாறு நடுங்கச் செய்யும் தீவிரவாத மிரட்டலுக்கிடையே தேசத்தைக் காப்பதா, தேகத் தைத் துளைத்துக் கூறு போடும் குண்டு மழைக்கிடையே குழந்தை குட்டிகளோடு கிடந்து தவிப்பதா? அதுவும் இப்போதா அல்லது எப்போதோ என்று வினாத் தொடுக்கும் விபரீதத் தீவிரவாதம் தலை விரித்தாடிக் கொண்டிருக்கிறது.


நாடு வாழ, நலிவு தீர, நானிலம் தழைக்க நாலைந்து பேராகக் கூட்டணி சேர்ந்து, "நமக்கு நாமே' என்று நற்செயல் புரியலாம் என்றால், கூட இருந்தே குழி பறிப்போர் சிலரின் தோழமை தான் கிட்டுகிறது. இந்நிலையில் அவர்கள் விருந்துக்கு அழைத்தால், அது வேம்பாய்க் கசக்கிறது. என்னுடன் இருப்போர் தன்னலம் மறப்போர், தாயக நலத்துக்காக உயிரையும் துறப்போர் என்ற பீடும் பெருமிதமும் வாய்க்கும் வரையில், எனக்கு ஏன் பிறந்த நாள் விழா? பிறந்த நாள் என ஒரு நாள் வருவது எதற்காக என்ற ஏக்கப் பெருமூச் சினை வெளிப்படுத்துவதே, "பிறந்த நாள் கொண்டாட வேண்டாம்' என்ற என் வேண்டுகோளுக்கு முக்கிய காரணம். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.


செய்தி: நன்றி: தினமலர்

2 comments:

வாசகன் said...

அம்மணி,திறந்த மனத்துடன் இருக்காங்க...

சிவபார்கவி said...

ஆஉறா.. உங்களைப்போன்று திறந்த மனதுடன் சேவை செய்வதைப் கண்டிப்பா பெரிய மனது பண்ணி பாராட்டியே தீரனும், சாம்பார் வடை மேல் துாவப்பட்ட காரப்பூந்தி போல் இனிமேலும் இந்த திறந்த மனது சேவைத் தொடரட்டும்.