Monday, May 19, 2008

மலைவாழ் பெண்களுடன் ஜெயலலிதா நடனம்



இப்படி மலர்ந்த சிரிப்புடன் ஜெ. - அதிசயம் மற்றும் ஆச்சரியம். எங்கே போயிருந்தது இந்த மலர்ச்சி ?

சுண்டட்டி கோயிலில் சாமி தரிசனம் மலைவாழ் பெண்களுடன் ஜெயலலிதா நடனம்


ஊட்டி, மே 20: சுண்டட்டி ரங்கநாதர் கோயிலில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று தரிசனம் செய்தார். படுகர் இன பெண்களுடன் ஒரு நிமிடம் நடனமாடினார்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகேயுள்ள கோடநாடு எஸ்டேட் பங்களாவில், கடந்த மாதம் 8ம் தேதி முதல், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஓய்வெடுத்து வருகிறார். தோழி சசிகலாவும் வந்துள்ளார்.

கோத்தகிரி அருகே சுண்டட்டி ஆலமலை ரங்கநாதர் கோயில் உள்ளது. இக்கோயில் விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும். பவுர்ணமி மற்றும் வைகாசி விசாக தினமான நேற்று இங்கு ஜெயலலிதா வழிபடுவதற்கு வருவதாக முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்படி நேற்று மதியம் 12.40 மணிக்கு காரில் ஜெயலலிதா, தோழி சசிகலா ஆகியோர் இக்கோயிலுக்கு வந்தனர்.

கோயில் நிர்வாகிகள் படுகர் இன பாரம்பரிய முறைப்படி வெள்ளை சால்வை அணிவித்து (முண்டு போர்த்தி) கோயிலுக்குள் அழைத்து சென்றனர். ஜெயலலிதா, சசிகலா, 5 நிமிடங்கள் ரங்கநாதரை வழிபட்டனர். கோயில் நுழைவாயில் வெளியே அமைக்கப்பட்டிருந்த மேடையில் இருவரும் அமர்ந்தனர். மேடை முன்புற மைதானத்தில் படுகர் இன பெண்கள் பாரம்பரிய நடனமாடினர். இதை ரசித்த ஜெயலலிதா, மேடையை விட்டு கீழிறங்கி ஒரு நிமிடம் நடனமாடி அவர்களை உற்சாகப்படுத்தினார்.

விசேஷங்களுக்கு வரும் பிரமுகர்களுக்கு வெல்லம் கலந்த காபி, பொரி ஆகியவற்றை வழங்குவது படுகர் இன மக்களின் பாரம்பரிய வழக்கம். நேற்று ஜெயலலிதாவுக்கு காபி, பொரி ஆகியவற்றை அளித்தனர். காபியை ஜெயலலிதா குடித்தார். மதியம் 12.55 மணிக்கு ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் கோயிலில் இருந்து காரில் கோடநாடு எஸ்டேட் திரும்பினர்.

செய்தி: படம்: நன்றி: தினகரன் (சென்னை பதிப்பு - 20 மே 2008)

No comments: