Wednesday, May 14, 2008

பூங்கோதை ராஜினாமா - வீ: சுப்பிரமணியசாமி

சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்திருப்பதாக சட்டசபையில் முதலமைச்சர் கருணாநிதி கூறினார். தமிழ்நாடு மின்வாரியத்தில் உதவி மின் பொறியாளராக பணியாற்றிய தமது உறவினர் ஜவஹர், லஞ்சம் பெற்றதற்காக நடவடிக்கைக்கு ஆட்பட்டு இருக்கும் நிலையில் அவரை காப்பாற்றும் முயற்சியில் அமைச்சர் பூங்கோதை ஈடுபட்டதாக ஆதாரத்துடன் செய்திகள் வெளியாகின.

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியுடன் அமைச்சர் பூங்கோதை தொலைபேசியில் பேசிய விவரங்களும் பத்திரிகைகளில் வெளியாகின.

இது குறித்து இன்று சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு பிரச்சனையை எழுப்பி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

கடந்த 3 நாட்களாக தமிழக மக்களிடையே ஒரு பரபரப்பான செய்தி உலாவருகிறது. சமூக நலத்துறை அமைச்சர் தம்முடைய உறவினர் ஒருவரை காப்பாற்று வதற்காக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியுடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார்.

அமைச்சர் பொறுப்பை ஏற்கும் ஒருவர் இந்திய அரசமைப்பு சட்டத்தின்படி தாம் ஏற்றுக் கொண்ட நன்னடத்தை உறுதிமொழியை மீறி செயல்படக் கூடாது. ஆனால் இந்த அமைச்சர், மின்துறையில் லஞ்சம் வாங்கி கையுங்களவுமாக பிடிபட்ட தமது உறவினர் ஜவஹர் என்பவரை காப்பாற்றுவதற்கு லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியை வலியுறுத்தி இருக்கிறார். இது அதிகாரதுஷ் பிரயோகமாகும்.

இதன் மூலம் ஆளும் கட்சி எந்த அளவுக்கு அதிகாரதுஷ்பிர யோகத்தில் ஈடுபடுகிறது என்பது வெட்டவெளிச்சமாகிறது. இந்த பிரச்சனையை ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி கவர்னரிடமும் புகாராக அளித்திருக்கிறார்.

ஒழுங்கு நடவடிக்கை அல்லது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதை விட சம்பந்தப்பட்ட அமைச்சரே இதற்கு பரிகாரம் தேடுவது சரியாக இருக்கும். இந்த பிரச்சனையில் அரசு என்ன நடவடிக்கை எடுக்க உள்ளது என அறிய விரும்புகிறேன். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

இதற்கு முதலமைச்சர் கருணாநிதி பதிலளித்து கூறியதாவது: எதிர்க்கட்சி துணைத் தலைவர் இந்த அவையில் எடுத்து வைக்க வேண்டிய ஒரு கருத்தை அவருக்கே உரிய அமைதியான முறையில் எடுத்து வைத்துள்ளார். அதற்காக அவரை பாராட்டுகிறேன்; நன்றி தெரிவிக்கிறேன்.

எதிர்க்கட்சியின் பணியை நிறைவேற்ற வேண்டுமென்ற உணர்வோடு இதை அவர் செய்துள்ளார். "இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்' என்ற குறளுக்கேற்ப இங்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் தமது கடமையை ஆற்றியிருக்கிறார்.

அவருடைய பாணியில் அமைதியான முறையிலே இதற்கு நான் விளக்கமளிக்க விரும்புகிறேன். ஏற்கனவே தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரம் பத்திரிகைகளில் வெளியானது. தலைமை செயலாளரும், வேறொரு அதிகாரியும் பேசிக் கொண்ட அந்த விவரம் குறித்து விசாரிப்பதற்கு நீதிபதி சண்முகம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இந்த விஞ்ஞான யுகத்தில் ஒருவர் பேசுவதை மற்றொருவர் பதிவு செய்வது மிகவும் சுலபம். நமது கையிலே உள்ள செல்போன் மூலம் இருவர் பேசிக் கொண்டிருப்பதை அவர்கள் அறியாமலேயே கூட போட்டோ எடுத்து விட முடியும். அந்த அளவுக்கு விஞ்ஞான வளர்ச்சி இப்போது ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே விசாரணைக் குழு, தலைமை செயலாளர் மற்றும் அதிகாரி ஒருவர் பேசியது தொடர்பான விசாரணையை இன்னும் முடிக்கவில்லை. அந்த பணி நடைபெற்று கொண்டு இருக்கும் போதே இடையில் இப்படியொரு செய்தி வந்திருக்கிறது. இதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.

இந்த செய்தி வருவதற்கு காரணமாக இருந்தவர்களில் ஒருவர் அமைச்சர் என்பதால் நான் மிகவும் வேதனைப்படுகிறேன். இதற்காக விளக்கத்தை தெரிவிப்பதற்கு முன் இந்த பிரச்சனையையும் ஏற்கனவே உள்ள விசாரணைக் குழுவில் சேர்க்கலாமா என நினைத் திருக்கிறோம்.

இதற்கிடையே அந்த அம்மையார் (பூங்கோதை) ராஜினாமா கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அவர் செயல்பட்டது சட்ட விரோதமான ஒன்றுதான். அவர்களின் பேச்சு குறித்து இப்போது சொன்னால் விசாரணைக்கு முன்பே கூறியதாக ஆகி விடும்.

ஏற்கனவே நடைபெற்று வரும் விசாரணையை பொறுத்த அளவில் அதில் எந்தவித ரகசியமும் இல்லை. தேச விரோத செயலோ, அரசுக்கு விரோதமான கருத்துக்களோ அதில் இல்லை.

ஆனால் இந்த விஷயத்தை பொறுத்தவரை லஞ்சம் வாங்கிய தமது சொந்தக்காரரை பாதுகாக்கும் முயற்சியாகும். இது உண்மையிலேயே நான் வெட்கப்படும் ஒன்று. அதை நிச்சயம் ஏற்கவில்லை. அவரும் (பூங்கோதை) தவறை உணர்ந்து எனக்கு கடிதம் எழுதியுள்ளார்.

"எனது உறவினர் ஜவஹர் விவகாரத்தில் நான் அதிகாரியை தொடர்பு கொண்டு பேசியதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை. என் செல்வாக்கை பயன்படுத்தும் எண்ணமும் கிஞ்சித்தும் கிடையாது. ஒரு கோரிக்கை என்ற முறையில்தான் அதை நான் எடுத்துச் சொன்னேன். ஆனாலும் இது தவறு என்று உணருகிறேன். இதற்கு பரிகாரமாக நான் ராஜினாமா செய்கிறேன்' என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நான் இந்த ராஜினாமா கடிதம் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. இது குறித்து ஆலோசனை செய்து வருகிறேன். அதற்குள் இந்த ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக ஆராய வேண்டும்; உளவுத்துறை இது குறித்து வேகமாக செயல்பட வேண்டும் என்று கருதுகிறேன்.

இது குறித்து வேறொரு விசாரணைக் குழு தேவையா? அல்லது இப்போதுள்ள குழுவே விசாரிக்கட்டுமா? என்பது குறித்து யோசிக்கிறோம். நிச்சயம் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை மன்னிக்க மாட்டோம்; அதுவும் லஞ்சம் வாங்குவோருக்கு ஆதரவாக செயல்படுவது என்பது குற்றம் என்பதை உணருகிறோம்.

இது குறித்து அடுத்தடுத்து எடுக்கும் அரசின் நடவடிக்கைகள் இந்த அவைக்கு தெரியப்படுத்தப்படும். இவ்வாறு முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.

செய்தி: நன்றி: மாலைசுடர்

No comments: