முதல்வர் கருணாநிதி தனது பிறந்த நாளன்று தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெற சம்மதம் தெரிவித்துள்ளார்.
வரும் ஜூன் 3ம் தேதியன்று முதல்வருக்கு 84 வயது முடிந்து 85 வயது பிறக்கிறது.
உடல் நலம், மனநலம் சரியில்லாததால் இந்த ஆண்டு பிறந்த நாளை கொண்டாடப் போவதில்லை, பிறந்த நாளன்று வாழ்த்து தெரிவிக்க, தன்னை சந்திக்க தொண்டர்கள் வர வேண்டாம் என்று கருணாநிதி அறிவித்திருந்தார். ஆனால், வழக்கம்போல தொண்டர்கள் சந்தித்து முதல்வர் தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்று நிதியமைச்சர் அன்பழகன் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதேபோல தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் பலரும் முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து, அமைச்சர் அன்பழகன் ஆணையையும், தொண்டர்கள் ஆணையையும் மீற முடியாமல், தொண்டர்கள் வாழ்த்துக்களை ஏற்க தயாராக உள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட கவிதை:
முத்தமிழ் வித்தகராம்
நல்லோர்க்கும் முதுபெரும்
புலமையில் வல்லோர்க்கும்
முரசு கொட்டி மொழிப் போரில்
அணிவகுத்தோர் அனைவர்க்கும்
அரசொன்று வருமென்று கருதிடாமல்
அறப்போர்களிலே ஆவிதனை அர்பணித்தோர்க்கும்;
அகவை எண்பத்தி ஐந்தில் அன்பு குழைத்து;
அய்யன்மீர் வீரவணக்கம் செலுத்துகின்றேன்.
வழிதோன்றல்களாய் அவர்க்கு வாய்த்த குடும்பத்தார்க்கும்
கழிபேருவகைப் பொங்கி வழிந்திட நன்றிகளைக் குவிக்கின்றேன்;
அலைஅலையாய்ப் பெருகி அணிவகுத்துத்
திராவிட இயக்க அரண் காத்திட ஆர்த்தெழாமல்
அன்றைக்கு அயர்ந்திருப்பின் தீரா விடமன்றோ
நம்மினத்தைத் தீர்த்துக் கட்டியிருக்கும்
ஈரோடு சிங்கமன்றோ எழுந்து முழங்கிற்று!
போராட வா தம்பியென்று காஞ்சியின் புறநானூறும்
அழைத்தபோது வேரோடு தமிழினம் வீழாமல் காப்பதற்கு;
வெகுண்டெழுந்து வந்தவரில் ஒருவன் நான்!
பகுத்துணர்ந்து பல்லாண்டுகளாக இனமுழக்கம் செய்கின்ற
பண்பாளர் எனக்கு மூத்த பேராசிரியர் பழகு தமிழில் ஆணையிட்டு
அழைத்த பிறகும் பகுத்தறிவுப் பாசறையாம் பழைய
தாய்க் கழகத்து வீர மணிக் குரலும் விரிவானமாய்
மனம் தோய்ந்து பல்லாயிரம், பல லட்சம்
உடன்பிறப்பாளர் பாசத்தை வெள்ளமாய்ப்
பாய விட்டுப் ‘‘பணிந்திடுக எம் அன்புக்கு’’ என
ஆணையிட்ட பின்னும் துணிந்து நான் துண்டிக்க முடியுமோ
உடன்பிறப்புத் தொடர்பையெல்லாம்;
அதனாலே பாவேந்தர் பாடல் வரி போல
‘‘தொந்தரவுக்குள்ளே நான் சுகம் காண’’
ஒப்பிவிட்டேன். உன் வாழ்த்தினையேற்று
என் வணக்கமும் வாழ்த்தும்
வட்டியும் முதலுமாய் வழங்குவதற்கே.
செய்தி: நன்றி: தினகரன்
தினகரனின் உரைநடைபோல வெளியிடப்பட்டுள்ளதை கவிதை என்று கூறியிருந்ததால் நானே வரிகளை உடைத்து கவிதையாக்கிவிட்டேன்.கவிதையை வெட்டி ஒட்டியதில் வரிகள்/வார்த்தகள் வரி மாறி வந்திருந்தால் அதற்கு பொறுப்பு நானே :-)
Thursday, May 22, 2008
பிறந்தாள் கொண்டாட தயார் - கருணாநிதி
Wednesday, May 21, 2008
தமிழக அமைச்சர்கள் - ரேங்க் பட்டியல்
தமிழக முதல்வர் கருணாநிதி இன்று முதல் அனைத்து துறைகளையும் மதிப்பீடு செய்ய இருக்கிறார். எந்த அமைச்சகம் சிறப்பாக பணியாற்றியது என அவர் புள்ளிவிபரங்களுடன் மதிப்பெண்களும் தரலாம். அதனால் அமைச்சரவையில் சில மாற்றங்களும் ஏற்படலாம். அதற்கு முன்னர் ஒரு சாமானியனின் அமைச்சர்கள் பற்றிய ரேங்க் பட்டியல் இதோ.
இப்பட்டியல் அறிவியல் முறையில் ஆய்ந்தெல்லாம் போடப்பட்டதல்ல. மண்டபத்துல யாரோ எழுதிக்கொடுத்ததும் அல்ல.
பொதுவாக இந்தியா டுடே போன்ற ஆங்கில ஏடுகளில் வருஷத்துக்கு ஒரு முறை மத்திய அமைச்சர்களின் பணி பற்றி பட்டியல் போட்டு யார் யாருக்கு எந்த ரேங்க் என வெளியிடுவார்கள். ஆனால் அந்த மாதிரி வெளியிட தமிழக ஏடுகள் பயப்படும். ஒரு சர்வே (உள்நோக்கத்துடன் இருந்தாலும்) வெளியிட்டதற்கே தினகரன் பலியானது. இப்படிப்பட்ட நிலையில் நமது பார்வையில் யார் யார் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் என்ற கருத்தே இது.
உங்கள் கருத்தை பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம். இந்தப் பட்டியலிலுள்ள அமைச்சர்கள் யாரேனும் ரொம்ப நல்லாவே பணிபுரிந்து ஆனால் கடை 10(9)ல் இருந்தால் சொல்லவும். மாற்றிவிடலாம்.
டாப் 10 அமைச்சர்கள்:
1. தங்கம் தென்னரசு (பள்ளிக் கல்வித்துறை)
2. மு.க.ஸ்டாலின் (உள்ளாட்சித்துறை, ஊரக வளர்ச்சி)
3. கே.என்.நேரு (போக்குவரத்து)
4. க.அன்பழகன் (நிதி)
5. துரைமுருகன் (பொதுப்பணித்துறை, சட்டம்)
6. பொன்முடி (உயர்கல்வித்துறை)
7. எ.வ.வேலு (உணவு)
8. பரிதி இளம்வழுதி
9. எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் (சுகாதாரம்)
10. கே.ஆர்.பெரியகருப்பன் (இந்து அறநிலையத்துறை)
அடுத்த 10:
11. வெள்ளக்கோயில் சாமிநாதன் (நெடுஞ்சாலைத்துறை)
12. க.ராமச்சந்திரன் (கதர்)
13. பொங்கலூர் பழனிச்சாமி (கால்நடைத்துறை)
14. ஐ.பெரியசாமி (வருவாய், வீட்டுவசதி)
15. சுப.தங்கவேலன் (குடிசை மாற்று)
16. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் (பிற்படுத்தப்பட்டோர் நலம்)
17. தா.மோ.அன்பரசன் (தொழிலாளர் நலம்)
18. ஆற்காடு வீராசாமி (மின்சாரம்)
19. வீரபாண்டி ஆறுமுகம் (விவசாயம்)
20. சுரேஷ் ராஜன் (சுற்றுலா)
கடை 10 (9?):
21. என்.கே.கே.பி.ராஜா (கைத்தறித் துறை)
22. எஸ்.என்.எம்.உபயதுல்லா (வணிகவரித்துறை)
23. மொய்தீன்கான் (சுற்றுச் சூழல்)
24. செல்வராஜ் (வன வளம்)
25. கீதா ஜீவன்
26. தமிழரசி (ஆதிதிராவிடர் நலம்)
27. மதிவாணன் (பால்)
28. கே.பி.பி சாமி (மீன்வளத்துறை)
29. கோ.சி. மணி (கூட்டுறவு)
Monday, May 19, 2008
மலைவாழ் பெண்களுடன் ஜெயலலிதா நடனம்
இப்படி மலர்ந்த சிரிப்புடன் ஜெ. - அதிசயம் மற்றும் ஆச்சரியம். எங்கே போயிருந்தது இந்த மலர்ச்சி ?
சுண்டட்டி கோயிலில் சாமி தரிசனம் மலைவாழ் பெண்களுடன் ஜெயலலிதா நடனம்
ஊட்டி, மே 20: சுண்டட்டி ரங்கநாதர் கோயிலில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று தரிசனம் செய்தார். படுகர் இன பெண்களுடன் ஒரு நிமிடம் நடனமாடினார்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகேயுள்ள கோடநாடு எஸ்டேட் பங்களாவில், கடந்த மாதம் 8ம் தேதி முதல், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஓய்வெடுத்து வருகிறார். தோழி சசிகலாவும் வந்துள்ளார்.
கோத்தகிரி அருகே சுண்டட்டி ஆலமலை ரங்கநாதர் கோயில் உள்ளது. இக்கோயில் விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும். பவுர்ணமி மற்றும் வைகாசி விசாக தினமான நேற்று இங்கு ஜெயலலிதா வழிபடுவதற்கு வருவதாக முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்படி நேற்று மதியம் 12.40 மணிக்கு காரில் ஜெயலலிதா, தோழி சசிகலா ஆகியோர் இக்கோயிலுக்கு வந்தனர்.
கோயில் நிர்வாகிகள் படுகர் இன பாரம்பரிய முறைப்படி வெள்ளை சால்வை அணிவித்து (முண்டு போர்த்தி) கோயிலுக்குள் அழைத்து சென்றனர். ஜெயலலிதா, சசிகலா, 5 நிமிடங்கள் ரங்கநாதரை வழிபட்டனர். கோயில் நுழைவாயில் வெளியே அமைக்கப்பட்டிருந்த மேடையில் இருவரும் அமர்ந்தனர். மேடை முன்புற மைதானத்தில் படுகர் இன பெண்கள் பாரம்பரிய நடனமாடினர். இதை ரசித்த ஜெயலலிதா, மேடையை விட்டு கீழிறங்கி ஒரு நிமிடம் நடனமாடி அவர்களை உற்சாகப்படுத்தினார்.
விசேஷங்களுக்கு வரும் பிரமுகர்களுக்கு வெல்லம் கலந்த காபி, பொரி ஆகியவற்றை வழங்குவது படுகர் இன மக்களின் பாரம்பரிய வழக்கம். நேற்று ஜெயலலிதாவுக்கு காபி, பொரி ஆகியவற்றை அளித்தனர். காபியை ஜெயலலிதா குடித்தார். மதியம் 12.55 மணிக்கு ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் கோயிலில் இருந்து காரில் கோடநாடு எஸ்டேட் திரும்பினர்.
செய்தி: படம்: நன்றி: தினகரன் (சென்னை பதிப்பு - 20 மே 2008)
Thursday, May 15, 2008
மருத்துவமனையில் கருணாநிதி அனுமதி
முதலமைச்சர் கருணாநிதி இன்று காலை திடீரென போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்றார். யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் அவர் மருத்துவமனைக்கு சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முதலமைச்சர் கருணாநிதி கழுத்து வலி மற்றும் முதுகுவலி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் பூரண குணமடைந்து திரும்பும் வரை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நிதியமைச்சர் அன்பழகன் கேட்டுக் கொண்டுள்ளார்.
மருத்துவ பரிசோதனைக்காக சென்றாரா அல்லது அங்கு அனுமதிக்கப்பட்ட யாரையாவது பார்க்க சென்றாரா என்று பத்திரிகை வட்டாரத்தில் பல்வேறு கேள்விகள் கிளம்பியது.
இதனிடையே இந்த தகவல் கேள்விப்பட்டு, அமைச்சர்கள் பலர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு விரைந்தனர். அமைச்சர்களின் வருகையால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் கழுத்து வலி மற்றும் முதுகு வலி சிகிச்சைக்காக முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும், அவர் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் சில நாட்கள் அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் என்றும், அவரை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் நிதியமைச்சர் அன்பழகன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: முதல்வர் கருணாநிதி கடந்த சில நாட்களாக கழுத்துவலி மற்றும் முதுகுவலியால் பாதிப்புக்குள்ளாகி இருந்தார்.
மருத்துவமனையில் சில நாட்களேனும் தங்கியிருந்து உரிய சிகிச்சையை பெற வேண்டுமென்று மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தி சொன்னதன் காரணமாக இன்று போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை யில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனவே சிகிச்சை நிறைவடைந்து திரும்பும் வரை அவரை யாரும் தொந்தரவு செய்திட வேண்டாம் என்றும், அவர் நலம் பெற முழு ஒத்துழைப்பை நல்கிட வேண்டும் என்றும் அனைவரையும் வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
செய்தி: நன்றி: மாலைசுடர்
உண்மை கசக்கத்தான் செய்யும் - ராமதாஸ்
குறைகளை சுட்டிக்காட்டினால் குழிபறிக்கிறோம் என்பதா ? - ராமதாஸ் கேள்வி
அரசின் குறைகளை சுட்டிக்காட்டி, நல்வழிகாட்ட ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை தெரிவிப்பவர்களுக்கு 'கூட இருந்தே குழி பறிக்கும் தோழமை' என்று பழி சுமத்துவதா என்று பாமக நிறுவனர ராமதாஸ் முதல்வர் கருணாநிதிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை,
3ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக அரசின் மீது 61 குற்றச்சாட்டுகளை அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா சுமத்தியுள்ளார். இதற்கு, எதிர்கட்சியாக அரசின் குறைகளை இடித்து சொல்லுகின்ற கடமையை திறம்பட ஆற்றுவதாக அதிமுகவுக்கு பாராட்டுரை வழங்கியுள்ளார் முதல்வர் கருணாநிதி.
அதே நேரத்தில் அரசின் குறைகளை சுட்டிக்காட்டி, நல்வழிகாட்ட ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை தெரிவிப்பவர்களுக்கு 'கூட இருந்தே குழி பறிக்கும் தோழமை' என்று பழி சுமத்துகிறார். ஆக்கப்பூர்வமான அரசியல் கட்சி என்ற முறையில் ஜனநாயக கடமையை செய்வதால் குழி பறிக்கும் செயல் என்று பழி சுமத்துவதன் மூலம் எங்களை திசை திருப்பிவிட முடியாது.
"நீங்கள் எங்களின் துணை கட்சிகள். கை கட்டி, வாய் பொத்தி எங்கள் முன்னால் நிற்க வேண்டுமே தவிர கருத்துக்களை தெரிவிக்கக் கூடாது. அதுதான் தோழமைக்கு இலக்கணம். தவறுகளை சுட்டிக்காட்டினால் குழி பறிக்கும் செயல் என்று பழி சுமத்துவோம். தாங்கிக் கொள்ள வேண்டும் என்று சொன்னால், அதை ஏற்றுக் கொள்ள நாங்கள் தயாராக இல்லை"
மாநிலத்தில் உள்ள 5 அரசு கல்லூரிகள் உள்பட 7 கல்லூரிகளை பல்கலைகழகங்களாக மாற்றுவது என்று முடிவெடுத்த ஒரு வாரத்தில் 5 அரசு கல்லூரிகளை கிடப்பில் போட்டுவிட்டு, கோவை மற்றும் மதுரையில் உள்ள 2 தனியார் கல்லூரிகளை மட்டும் பல்கலைகழகங்களாக மாற்ற மசோதா கொண்டு வந்தது ஏன்? எதிர்கட்சிகள் விழிப்பாக இருந்ததால் அந்த மசோதாக்கள் ஆய்வுக்குழு பரிசீலனைக்கு அனுப்பு வைக்கப்பட்டுள்ளன. இந்த 2 மசோதாக்களையும் அரசு திரும்ப பெற வேண்டும்.
தேர்தலில் திமுகவுடன் கூட்டணி சேர்ந்ததால் இதுபற்றி விளக்கம் கேட்க உரிமை இல்லையா? தோழமை என்பதால் உயர்கல்வித் துறையில் நடக்கும் குளறுபடிகளை பொறுத்துக் கொள்ள வேண்டுமா? பள்ளிக் கல்வித்துறை செயல்பாடுகளை முதல்வரை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளேன்.
ஆனால் உயர்கல்வி துறை செயல்பாட்டில் கடந்த ஆட்சிக்கும் இந்த ஆட்சிக்கும் வித்தியாசமில்லை. உயர்கல்வியில் வியாபாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து அரசின் பங்களிப்பு குறைந்து கொண்டே வருகிறது. கட்டண கொள்ளையும், கட்டாய நன்கொடையும் தடுக்கும் சட்டங்கள் கோட்டை அறையில் தூங்கிக் கொண்டிருக்கின்றன.
இதையெல்லாம் சுட்டிக்காட்டினால் கூட இருந்தே குழி பறிக்கும் தோழமை என்று பழி சுமத்தினால் அதை உலகம் எப்படி ஏற்கும். நட்பு செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று; நெறி கடந்து செல்லும்போது முற்பட்டு சென்று இடித்துரைப்பதற்காகும் என்பது வள்ளுவரின் வாக்கு.
விருந்தும் கசக்கிறது என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். சில நேரத்தில் உண்மையே கசக்கத்தான் செய்யும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்
செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்
Wednesday, May 14, 2008
கூட இருந்தே குழி பறிப்போர் : கருணாநிதி
"நாடு வாழ நாலைந்து பேராகக் கூட்டணி சேர்ந்து, நமக்கு நாமே என்று நற்செயல் புரியலாம் என்றால்; கூட இருந்தே குழி பறிப்போர் சிலரின் தோழமை தான் கிட்டுகிறது, சேது சமுத்திரத் திட்டமும் தொங்கலில் விடப்பட்டுக் கிடக்கிறது, தாயக நலத் துக்காக உயிரையும் துறப்போர் என்ற பீடும் பெருமிதமும் வாய்க்கும் வரையில், எனக்கு ஏன் பிறந்த நாள் விழா' என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை : தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவர்களால் வலியுறுத்தப் பெற்றதும், எதிர்காலத் தமிழகம் ஏற்றம் கண்டிட எல்லாக் கட்சியினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு அறிவிக்கப் பட்ட சேது சமுத்திரத் திட்டம், தொங்கலில் விடப்பட்டுக் கிடக்கிறது. இன்னும் எத்தனை காலம் வாழப் போகிறோம் என்ற கேள்விக்குப் பதில் தேடிய நாட்கள் ஓடிப் போய், செத்துச் செத்துப் பிழைக்கிற நேரத்தை நினைத்தவாறு நடுங்கச் செய்யும் தீவிரவாத மிரட்டலுக்கிடையே தேசத்தைக் காப்பதா, தேகத் தைத் துளைத்துக் கூறு போடும் குண்டு மழைக்கிடையே குழந்தை குட்டிகளோடு கிடந்து தவிப்பதா? அதுவும் இப்போதா அல்லது எப்போதோ என்று வினாத் தொடுக்கும் விபரீதத் தீவிரவாதம் தலை விரித்தாடிக் கொண்டிருக்கிறது.
நாடு வாழ, நலிவு தீர, நானிலம் தழைக்க நாலைந்து பேராகக் கூட்டணி சேர்ந்து, "நமக்கு நாமே' என்று நற்செயல் புரியலாம் என்றால், கூட இருந்தே குழி பறிப்போர் சிலரின் தோழமை தான் கிட்டுகிறது. இந்நிலையில் அவர்கள் விருந்துக்கு அழைத்தால், அது வேம்பாய்க் கசக்கிறது. என்னுடன் இருப்போர் தன்னலம் மறப்போர், தாயக நலத்துக்காக உயிரையும் துறப்போர் என்ற பீடும் பெருமிதமும் வாய்க்கும் வரையில், எனக்கு ஏன் பிறந்த நாள் விழா? பிறந்த நாள் என ஒரு நாள் வருவது எதற்காக என்ற ஏக்கப் பெருமூச் சினை வெளிப்படுத்துவதே, "பிறந்த நாள் கொண்டாட வேண்டாம்' என்ற என் வேண்டுகோளுக்கு முக்கிய காரணம். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
செய்தி: நன்றி: தினமலர்
பூங்கோதை ராஜினாமா - வீ: சுப்பிரமணியசாமி
சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்திருப்பதாக சட்டசபையில் முதலமைச்சர் கருணாநிதி கூறினார். தமிழ்நாடு மின்வாரியத்தில் உதவி மின் பொறியாளராக பணியாற்றிய தமது உறவினர் ஜவஹர், லஞ்சம் பெற்றதற்காக நடவடிக்கைக்கு ஆட்பட்டு இருக்கும் நிலையில் அவரை காப்பாற்றும் முயற்சியில் அமைச்சர் பூங்கோதை ஈடுபட்டதாக ஆதாரத்துடன் செய்திகள் வெளியாகின.
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியுடன் அமைச்சர் பூங்கோதை தொலைபேசியில் பேசிய விவரங்களும் பத்திரிகைகளில் வெளியாகின.
இது குறித்து இன்று சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு பிரச்சனையை எழுப்பி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
கடந்த 3 நாட்களாக தமிழக மக்களிடையே ஒரு பரபரப்பான செய்தி உலாவருகிறது. சமூக நலத்துறை அமைச்சர் தம்முடைய உறவினர் ஒருவரை காப்பாற்று வதற்காக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியுடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார்.
அமைச்சர் பொறுப்பை ஏற்கும் ஒருவர் இந்திய அரசமைப்பு சட்டத்தின்படி தாம் ஏற்றுக் கொண்ட நன்னடத்தை உறுதிமொழியை மீறி செயல்படக் கூடாது. ஆனால் இந்த அமைச்சர், மின்துறையில் லஞ்சம் வாங்கி கையுங்களவுமாக பிடிபட்ட தமது உறவினர் ஜவஹர் என்பவரை காப்பாற்றுவதற்கு லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியை வலியுறுத்தி இருக்கிறார். இது அதிகாரதுஷ் பிரயோகமாகும்.
இதன் மூலம் ஆளும் கட்சி எந்த அளவுக்கு அதிகாரதுஷ்பிர யோகத்தில் ஈடுபடுகிறது என்பது வெட்டவெளிச்சமாகிறது. இந்த பிரச்சனையை ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி கவர்னரிடமும் புகாராக அளித்திருக்கிறார்.
ஒழுங்கு நடவடிக்கை அல்லது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதை விட சம்பந்தப்பட்ட அமைச்சரே இதற்கு பரிகாரம் தேடுவது சரியாக இருக்கும். இந்த பிரச்சனையில் அரசு என்ன நடவடிக்கை எடுக்க உள்ளது என அறிய விரும்புகிறேன். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
இதற்கு முதலமைச்சர் கருணாநிதி பதிலளித்து கூறியதாவது: எதிர்க்கட்சி துணைத் தலைவர் இந்த அவையில் எடுத்து வைக்க வேண்டிய ஒரு கருத்தை அவருக்கே உரிய அமைதியான முறையில் எடுத்து வைத்துள்ளார். அதற்காக அவரை பாராட்டுகிறேன்; நன்றி தெரிவிக்கிறேன்.
எதிர்க்கட்சியின் பணியை நிறைவேற்ற வேண்டுமென்ற உணர்வோடு இதை அவர் செய்துள்ளார். "இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்' என்ற குறளுக்கேற்ப இங்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் தமது கடமையை ஆற்றியிருக்கிறார்.
அவருடைய பாணியில் அமைதியான முறையிலே இதற்கு நான் விளக்கமளிக்க விரும்புகிறேன். ஏற்கனவே தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரம் பத்திரிகைகளில் வெளியானது. தலைமை செயலாளரும், வேறொரு அதிகாரியும் பேசிக் கொண்ட அந்த விவரம் குறித்து விசாரிப்பதற்கு நீதிபதி சண்முகம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இந்த விஞ்ஞான யுகத்தில் ஒருவர் பேசுவதை மற்றொருவர் பதிவு செய்வது மிகவும் சுலபம். நமது கையிலே உள்ள செல்போன் மூலம் இருவர் பேசிக் கொண்டிருப்பதை அவர்கள் அறியாமலேயே கூட போட்டோ எடுத்து விட முடியும். அந்த அளவுக்கு விஞ்ஞான வளர்ச்சி இப்போது ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே விசாரணைக் குழு, தலைமை செயலாளர் மற்றும் அதிகாரி ஒருவர் பேசியது தொடர்பான விசாரணையை இன்னும் முடிக்கவில்லை. அந்த பணி நடைபெற்று கொண்டு இருக்கும் போதே இடையில் இப்படியொரு செய்தி வந்திருக்கிறது. இதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.
இந்த செய்தி வருவதற்கு காரணமாக இருந்தவர்களில் ஒருவர் அமைச்சர் என்பதால் நான் மிகவும் வேதனைப்படுகிறேன். இதற்காக விளக்கத்தை தெரிவிப்பதற்கு முன் இந்த பிரச்சனையையும் ஏற்கனவே உள்ள விசாரணைக் குழுவில் சேர்க்கலாமா என நினைத் திருக்கிறோம்.
இதற்கிடையே அந்த அம்மையார் (பூங்கோதை) ராஜினாமா கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அவர் செயல்பட்டது சட்ட விரோதமான ஒன்றுதான். அவர்களின் பேச்சு குறித்து இப்போது சொன்னால் விசாரணைக்கு முன்பே கூறியதாக ஆகி விடும்.
ஏற்கனவே நடைபெற்று வரும் விசாரணையை பொறுத்த அளவில் அதில் எந்தவித ரகசியமும் இல்லை. தேச விரோத செயலோ, அரசுக்கு விரோதமான கருத்துக்களோ அதில் இல்லை.
ஆனால் இந்த விஷயத்தை பொறுத்தவரை லஞ்சம் வாங்கிய தமது சொந்தக்காரரை பாதுகாக்கும் முயற்சியாகும். இது உண்மையிலேயே நான் வெட்கப்படும் ஒன்று. அதை நிச்சயம் ஏற்கவில்லை. அவரும் (பூங்கோதை) தவறை உணர்ந்து எனக்கு கடிதம் எழுதியுள்ளார்.
"எனது உறவினர் ஜவஹர் விவகாரத்தில் நான் அதிகாரியை தொடர்பு கொண்டு பேசியதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை. என் செல்வாக்கை பயன்படுத்தும் எண்ணமும் கிஞ்சித்தும் கிடையாது. ஒரு கோரிக்கை என்ற முறையில்தான் அதை நான் எடுத்துச் சொன்னேன். ஆனாலும் இது தவறு என்று உணருகிறேன். இதற்கு பரிகாரமாக நான் ராஜினாமா செய்கிறேன்' என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நான் இந்த ராஜினாமா கடிதம் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. இது குறித்து ஆலோசனை செய்து வருகிறேன். அதற்குள் இந்த ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக ஆராய வேண்டும்; உளவுத்துறை இது குறித்து வேகமாக செயல்பட வேண்டும் என்று கருதுகிறேன்.
இது குறித்து வேறொரு விசாரணைக் குழு தேவையா? அல்லது இப்போதுள்ள குழுவே விசாரிக்கட்டுமா? என்பது குறித்து யோசிக்கிறோம். நிச்சயம் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை மன்னிக்க மாட்டோம்; அதுவும் லஞ்சம் வாங்குவோருக்கு ஆதரவாக செயல்படுவது என்பது குற்றம் என்பதை உணருகிறோம்.
இது குறித்து அடுத்தடுத்து எடுக்கும் அரசின் நடவடிக்கைகள் இந்த அவைக்கு தெரியப்படுத்தப்படும். இவ்வாறு முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.
செய்தி: நன்றி: மாலைசுடர்
Thursday, May 8, 2008
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் மு.க அழகிரி விடுதலை
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் மு.க அழகிரி உட்பட அனைவரும் விடுதலை
வேலூர் : தமிழக முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன்,படுகொலை செய்யப் பட்ட வழக்கில் முதல்வர் கருணாநிதியின் மகன் அழகிரி, மதுரை துணை மேயர் மன்னன் உள்ளிட்ட 13 பேர் நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி ஆந்திர மாநிலம் சித்தூர் செஷன்ஸ் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. விசாரணை முடிந்து வழக்கில் இன்று மாலை 4.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. இன்று கோர்ட்டில் மு.க அழகிரி உட்பட 13 பேரும் ஆஜராகி இருந்தனர். கோர்ட் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருபந்தது.
மே 08,2008,16:30 நன்றி: தினமலர்
Thursday, May 1, 2008
கருணாநிதி, ஜெயலலிதாவை அழைக்க நடிகர் சங்கம் முடிவு
தமிழ் திரையுலகின் 75ம் ஆண்டு நிறைவு விழா சென்னையில் நடக்க உள்ளது. அதில் கலந்துகொள்ள, முதல்வர் கருணாநிதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரை அழைக்க உள்ளோம்
75ம் ஆண்டு சினிமா நிறைவு விழா
சென்னை, மே 1: சென்னையில் நடக்கும் தமிழ் திரையுலகின் 75ம் ஆண்டு நிறைவு விழாÕவுக்கு முதல்வர் கருணாநிதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருவரையும் அழைக்க தென்னிந்திய நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளது.
நலிந்த கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் நிகழ்ச்சி, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் நேற்று நடந்தது. நடிகர்கள் என்னத்தே கண்ணையா, எம்.எல்.ஏ. தங்கராஜ், குள்ளமணி உட்பட 50 பேர் ஓய்வூதியம் பெற்றனர். நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் அளித்த பேட்டி:
நடிகர் சங்க அறக்கட்டளை சார்பில் நடிப்பு பயிற்சிக் கூடம் தொடங்கப்படுகிறது. மே 15ம் தேதி விண்ணப்பம் வழங்கப்படுகிறது. ஜூலை 15ல் வகுப்புகள் தொடங்கும். ஓராண்டு பயிற்சியில், நடிப்பு சம்பந்தமான கலைகள் கற்றுத்தரப்படும்.
ஆகஸ்ட் மாதம் நாடகப் போட்டி நடக்கிறது. இந்த முறை, முன்னணி நடிகர்கள் பங்கேற்கும் நாடகங்களும் நடக்கும். நானும் ஒரு நாடகத்தில் நடிக்கிறேன்.
நடிகர் சங்கமும் ஜேப்பியார் அறக்கட்டளையும் இணைந்து, 194 பேருக்கு ஓய்வூதியம் வழங்குகிறது. நடிகர் சங்கத்தில் இப்போது ரூ.3.12 கோடி இருப்பு உள்ளது. இதைப் பயன்படுத்தாமல், வேறுவகையில் நிதி திரட்டி, நடிகர் சங்க புதிய கட்டிடம் கட்டப்படும். வெளிநாட்டில் கலை நிகழ்ச்சி நடத்தி நிதி திரட்டுவதற்கு துணைபுரிந்த சன் டி.வி. மற்றும் ராடன் நிறுவனங்களுக்கு நன்றி.
வெளிநாட்டில் மட்டும் நிகழ்ச்சி நடத்துகிறீர்கள். இங்கு நடத்தமாட்டீர்களா? என்று பலர் கேட்கிறார்கள். தமிழ் திரையுலகின் 75ம் ஆண்டு நிறைவு விழா சென்னையில் நடக்க உள்ளது. அதில் கலந்துகொள்ள, முதல்வர் கருணாநிதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரை அழைக்க உள்ளோம். இவ்வாறு சரத்குமார் கூறினார்.
செய்தி: நன்றி: தினகரன்