Friday, February 8, 2008

ஞாநி குமுதத்திலா? ஓ... !!

இப்போது என் கருத்தை வெளியிட முடியாத நிலை விகடனில் வந்ததால், நான் குமுதத்தில் எழுத வந்திருக்கிறேன்.




ஓ பக்கங்கள் பகுதி, நம்மை ‘ஓ’ என்று சொல்லவைக்கும் பல்வேறு வகையான விஷயங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான பகுதி என்று சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆனந்த விகடனில் இதை எழுதத் தொடங்கியபோது அறிவித்திருந்தேன்.

சென்ற வார குமுதம் முதல் பக்க அறிவிப்பைக் கண்டதும் ‘ஞாநி குமுதத்திலா? ஓ!’ என்று பல வட்டாரங்களிலிருந்தும் மாறுபட்ட தொனிகளில் பலரும் ‘ஓ’ போடுகிறார்கள்! நியாயம்தான். குமுதம் 61 வருடங்களாக வெளிவந்துகொண்டிருக்கும் பத்திரிகை. நான் 33 வருடங்களாக முழு நேர எழுத்தாளனாக இருப்பவன். இதுவரை குமுதத்தில் நான் கதை, கவிதை, கட்டுரை, துணுக்கு எதுவும் எழுதியதில்லை. ஒரே ஒரு கடிதம் எழுதியிருக்கிறேன், சுமார் 30 வருடங்களுக்கு முன்னால்! அதுவும் குமுதத்தில் வெளியான தமிழ் நாடகத் துறை பற்றிய சுஜாதாவின் கட்டுரையைக் கண்டித்து! அந்தக் கடிதத்தை குமுதம் 16.8.1979 இதழில் என் புகைப்படத்துடன் கட்டுரை போல வெளியிட்டதால், எனக்கு இந்தியன் எக்ஸ்பிரஸில் வேலை பறிக்கப்பட்டது !

இனி ஆங்கில நிருபர் வேலை வேண்டாமென்றும் முழு நேர தமிழ் எழுத்தாளனாவதென்றும் முடிவு செய்தேன். அப்போது புதிய பத்திரிகையான ஜூனியர் விகடனில் வேலைக்குச் சேர்ந்தேன். என் வேலை நீக்கத்துக்கு எதிராக எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்தபோது அன்றைய குமுதம் உதவி ஆசிரியர் எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன், ‘நான் குமுதத்துக்கு கடிதம்தான் எழுதினேனே தவிர, கட்டுரை எதுவும் எழுதவில்லை’ என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு ஒரு சாட்சிக் கடிதம் கொடுத்தார். நான்கு வருடம் நடந்த வழக்கில் நான் ஜெயித்தேன்.

அப்போது என் கருத்தை குமுதம் வெளியிட்டதால், என் எக்ஸ்பிரஸ் நிருபர் வேலை போயிற்று. இப்போது என் கருத்தை வெளியிட முடியாத நிலை விகடனில் வந்ததால், நான் குமுதத்தில் எழுத வந்திருக்கிறேன். கடைசியாக நான் ஜல்லிக்கட்டு பற்றி எழுதிய ‘ஓ’ பக்கக் கட்டுரை, கடைசி நிமிடத்தில் அச்சாகாமல் நிறுத்தப்பட்டது. காரணம் பப்ளிக் செண்ட்டிமெண்ட்டுக்கு விரோதமாக அது இருந்ததாம். அது மட்டுமா? நான் எழுதிய, எழுதுகிற, எழுதப் போகும் பல விஷயங்கள் அப்படித்தானே! எந்த செண்ட்டிமெண்ட்டுக்கும் விரோதமாக இருப்பதைப் பற்றிக் கவலைப்படுவது ஒரு எழுத்தாளனின் வேலை அல்ல. பகுத்தறிவுக்கும் பொதுநலனுக்கும் விரோதமாக எது இருந்தாலும் அதை உரக்கச் சொல்வதே நம் பணி.

அப்படி உரக்கச் சொல்வதுதான் சிலருக்கு சங்கடமாக இருக்கிறது. சில மாதங்கள் முன்பு என் ‘ஓ’ பக்கக் கட்டுரையைக் கண்டித்து, தி.மு.க.வின் புதிய நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவரான கவிஞர் தமிழச்சி ஏற்பாட்டில் ஓர் அரங்கக் கூட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவில் சுமார் மூன்று மணி நேரம் எனக்கு நடத்தப்பட்ட அந்த சஹஸ்ரநாம லட்சார்ச்சனையில், ஒரே ஒருவர்தான் என்னைக் கண்டிக்கும் சக்திகளின் அசலான பிரச்னை என்ன என்பதைத் தன் பேச்சில் தொட்டதாக எனக்குப் பட்டது.
எல்லாருக்கும் புரிகிற மாதிரி நான் எழுதுவதுதான் (அவர்களுக்கு) ஆபத்து என்றார் அவர். பத்தாயிரம் பிரதிகளுக்கு மேல் விற்காத பத்திரிகைகளில் மட்டுமே நான் எழுதுவதுதான் ( அவர்களுக்கு) நல்லது என்றார். லட்சக்கணக்கான பிரதிகள் விற்கும் பத்திரிகைகளில் நான் எழுதுவதுதான் அவர்களுக்கு சிக்கலாக இருக்கிறது என்ற பின்னணியில் நான் இடப்பெயர்ச்சியானதற்கு, பாவம் ஜல்லிக்கட்டு மாடுகள் என்ன செய்யும் ?!

முழு நேரப் பத்திரிகையாளனாகப் பணி புரியும் இந்த 33 வருடங்களிலும் சென்னையில் பெரும்பாலும் வாடகை வீடுகளில்தான் வசித்து வருகிறேன். கீழ்ப்பாக்கத்தில் ஒரு மாதம். மேற்கு மாம்பலத்தில் ஒரு வருடம். ராயப்பேட்டையில் சுமார் 20 வருடங்கள். அடுத்த மூன்றாண்டுகள் திருவான்மியூரில் சொந்த வீடு. பிறகு மறுபடியும் 3 வருடம் அடையாறில் வாடகை வீடு. மறுபடியும் 3 வருடம் சொந்த வீடு. கடன்கள் இல்லாத வாழ்க்கைக் கனவுக்காக அதை விற்றுவிட்டு திரும்பவும் அடையாறு, திருவல்லிக்கேணி என்று மாறி மாறி வாடகை வீடுகள்.

வசதிகளும் சிரமங்களும் வாடகை வீட்டிலும் உண்டு; சொந்த வீட்டிலும் உண்டு. நாம் விரும்பிய மாதிரியான சொந்த வீடோ வாடகை வீடோ அமைய, நாம் தரவேண்டிய விலை மிகப் பெரியது. ஒவ்வொரு உரிமையாளரும் ஒரு விதம்; இது உங்க வீடு மாதிரி என்று வாடகைதாரரிடம் முழு அன்புடன் வீட்டை ஒப்படைக்கும் அபூர்வங்கள் முதல், ஏரியா தாதாக்களுக்கு பயந்து கொண்டு தன் சொந்த வீட்டில் யாரையாவது குடி வைப்பதற்குக் கூட அனுமதி கேட்கும் கோழைகள் வரை பல ரகம்.

புது வீட்டுக்குக் குடி வந்ததும், ‘ஓவரா ஆணி அடிக்காதே’, ‘ஓவரா சத்தம் போடாதே’, ‘டேங்க்கை ஒரு தடவையாவது நிரப்பாம, வெறுமே அஞ்சு நிமிஷத்துல அணைச்சா எப்பிடி’ முதலான முணுமுணுப்புகள் இரு தரப்பிலும் ஒலிக்கத்தான் செய்யும். ‘உங்களைப் பாக்க வரணும்னா ரெண்டு மணி நேரம் ஆகும், இப்ப சிட்டி செண்ட்டருக்கு வந்துட்டீங்களா, அடிக்கடி பாக்க முடியுது’, ‘தொலைவா இருந்தாலும் சுத்தமான காத்து, நல்ல தண்ணி’ போன்ற விதவிதமான சந்தோஷங்களும் இருக்கத்தான் செய்யும்.

எழுத்தாளனுக்குப் பத்திரிகை என்பது வாடகை வீடு. வீட்டுக்காரருக்கும் குடியிருப்பவருக்கும் இசைந்து வராத சமயங்களில் இடப்பெயர்ச்சிகள் தவிர்க்க முடியாதவை.

காதல்

பொங்கல் நேரத்து ஜல்லிக்கட்டு வீரம் சீசன் முடிந்து இப்போது பிப்ரவரி 14 காதல் சீசன் தொடங்குகிறது.

தமிழர்களின் வாழ்க்கையில் காதலும் வீரமும்தான் எல்லாம்; சங்க இலக்கியமே சாட்சி என்று நெடுங்காலமாக சொல்லப்பட்டு வருகிறது. இன்றைய வீரம் மாட்டுடன் மோதுவதில் இல்லை. இரட்டை டம்ளர் டீக்கடைகளுடன் மோதுவதுதான் அசல் வீரம்.

ஜல்லிக்கட்டை வீரத்தின் அடையாளமாகக் கருதி உச்ச நீதிமன்றம் வரை சென்று மத அடிப்படையில் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும்படி மன்றாடி, நூற்றுக்கணக்கான இளைஞர்களைப் படுகாயத்துக்குள்ளாக்கி, வீரத்துக்கு ‘மரியாதை’ செலுத்தியிருக்கும் தி.மு.க. அரசு, காதலுக்கு என்ன மரியாதை செய்திருக்கிறது ? அல்லது செய்யப்போகிறது ?

காதலைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும், நிறையவே காதலித்திருக்கிறேன். என்னை விட நன்றாகக் காதலை அறிந்திருக்கக் கூடியவர் முதலமைச்சர் கலைஞர். திருமணத்துக்குப் பிறகு கூட காதலிலிருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை. அவருடைய அன்றைய காதலி, (தற்போது துணைவி) அவர் மனைவியிடம் நடிகை மனோரமாவால் அம்பலப்படுத்தப்பட்ட வரலாற்று நிகழ்ச்சியை அண்மையில் அவரே பொது மேடையில் நினைவு கூர்ந்தார்.

காதலின் வலிமையையும் வலியையும் அவர் அறிந்திருந்தால் போதுமா? இன்று தமிழ்க் காதலர்களின் நிலை என்ன?

ஒரு பூங்காவிலும், ஒரு கடற்கரையிலும் காதலர்களுக்கு நிம்மதியான இடம் இல்லை. சென்னை மெரீனாவில் காலம் காலமாக இருந்து வந்த லவ்வர்ஸ் வாக் எனப்படும் காதலர் பாதை என்ற உட்சாலையை, பியூட்டிஃபிகேஷன் என்ற பெயரில் ஒழித்தே விட்டார்கள்.

பதினெட்டு வயதில் தேசத்தின் ஆட்சியை யாரிடம் ஒப்படைக்கலாம் என்று தீர்மானிக்கும் உரிமை உள்ள நம் இளைஞர்களுக்கு தங்கள் வாழ்க்கைத் துணையைத் தீர்மானிக்கும் உரிமையோ துணிச்சலோ இல்லை. காவல் நிலையங்களில் தஞ்சம் புகும் காதலர்களுக்கு உதவ வேண்டாம் என்று வாய்மொழி உத்தரவு போடப்படுகிறது.

என்றேனும் ஒரு நாள் முற்றிலுமாக ஜாதியை ஒழிக்க ஒரே சிறந்த வழி காதல் மட்டும்தான்.எனவே ஜாதி மீறிய காதல் திருமணம் செய்வோருக்கும் அவர்கள் வாரிசுகளுக்கும் கல்வி, வேலை வாய்ப்பு, வங்கிக் கடன், வீட்டு வசதி என்று அனைத்துத் துறைகளிலும் தனியே கணிசமான இட ஒதுக்கீட்டை கலைஞர் கருணாநிதி அறிவிக்க வேண்டும்.

முதலில் நம் கல்லூரிப் பாடப் புத்தகங்களில் திருக்குறளின் இன்பத்துப் பாலுக்கு இருந்து வரும் நடைமுறைத் தடையை நீக்க வேண்டும். காதல் என்றால் என்ன என்று தெரியாமல், வணிக சினிமா காட்டும் வக்கிரக் காதலால் குழம்பித் தடுமாறி ஆண் பெண் உறவுகளை சிக்கலாக்கிக் கொள்ளும் நம் இளைஞர்களுக்கு உதவுவதற்காக +2 முதல் கல்லூரி வரை கல்வி வளாகங்களில் உளநல ஆலோசகர்களை அரசு செலவில் நியமிக்க வேண்டும். தொடர்ந்து தங்கள் குடும்பங்களில் காதல் திருமணங்களை ஊக்குவிக்கும் குடும்பங்களை ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து தமிழ்நாட்டின் சிறந்த குடும்ப விருது வழங்க வேண்டும்.

இந்த யோசனைகளில் பாதியையாவது பிப்ரவரி _ 14 காதலர் தினத்தன்று அரசு ஆணையாக அறிவித்தால், நிச்சயம் அந்த வாரப் பூச்செண்டை கலைஞர் கருணாநிதிக்கே தருவேன் என்று காதல் நெஞ்சங்களின் சார்பில் உறுதியளிக்கிறேன்..

செய்தி: படம் நன்றி: Kumudam

1 comment:

Sri Srinivasan V said...

sabbash.
Kudos to Jnani.
Thanks for uploading this post.
God Bless you.
regards,
srini.