Friday, February 15, 2008

வீரமணிக்கு வசந்தகுமார் கண்டனம்

பெரியார் , திராவிட கழகத்திற்கு சேர்த்து வைத்துள்ள சொத்தை சுகபோகமாகவும், சொகுசாகவும் அனுபவிப்பதற்காகவே பிறந்து வளர்ந்துள்ள வீரமணி மாநிலத்தில் யார் ஆட்சியில் அமர்ந்துள்ளார்களோ அவர்களுக்கு வெண்ஜாமரம் வீசுவது வீரமணி கண்ட பகுத்தறிவு கொள்கையாகும்.

சென்னை, பிப்.15: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் தந்தை சுதந்திர போராட்ட வீரர். தேசப்பக்தி குடும்பத்தில் பிறந்த விஜயகாந்தோடு காங்கிரஸ் தலைவர் ஒருவர் பேசுவது தேசவிரோத செயல் அல்ல என்று வர்த்தக காங்கிரஸ் தலைவரும், சட்டமன்ற உறுப்பி னருமான எச்.வசந்தகுமார் கூறியிருக்கிறார்.
.
இந்த சந்திப்பை குறை கூறிய திராவிட கழக பொதுச் செயலாளர் வீரமணிக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். எச்.வசந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

தமிழக காங்கிரஸ் மேலிட பார்வையாளர் அருண் குமார்விமான பயணத்தின் போது தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை ஏதேச்சையாக விமானத்தில் சந்தித்துள்ளார்.
இரண்டு அரசியல் முக்கிய தலைவர்கள் முதல் முறையாக சந்திக்கிற போது நாட்டைபற்றி பேசிக்கொள்வது வழக்கமான ஒன்றுதான்.

இதுகூட புரிந்து கொள்ள இயலாத பகுத்தறிவு காவலர் கி. வீரமணி , அவர்களுடைய சந்திப்பிற்கு புதிய காரணம் கண்டுபிடித்து அங்கலாய்த்து இருக்கிறார். மத்தியில் ஆளும் ஐக்கிய முன்னணியிலோ, தமிழகத்தில் ஆளும் ஜனநாயக முற்போக்கு கூட்டணியிலோ அங்கம் வகிக்காத வீரமணி, தமிழக காங்கிரஸ் மேலிட பார்வையாளர் அருண் குமார் பற்றி பேசுவதற்கு எந்தவித அருகதையும் அற்றவர்.

சுயமரியாதை சுடர் தந்தை பெரியார் , திராவிட கழகத்திற்கு சேர்த்து வைத்துள்ள சொத்தை சுகபோகமாகவும், சொகுசாகவும் அனுபவிப்பதற்காகவே பிறந்து வளர்ந்துள்ள வீரமணி மாநிலத்தில் யார் ஆட்சியில் அமர்ந்துள்ளார்களோ அவர்களுக்கு வெண்ஜாமரம் வீசுவது வீரமணி கண்ட பகுத்தறிவு கொள்கையாகும்.

கடந்த ஆட்சியின் போது முதல்வராக இருந்த ஜெயலலிதா சட்டப்பேரவை யிலேயே நான் பாப்பாத்தி தான் என்று பேசியபோது ஆனந்தப்பட்ட வீரமணி, ஏதேச்சையாக விமானப் பயணத்தின் போது சந்தித்த தலைவர் அருண் குமாரை பார்ப்பனர் என்று குறிப்பிட்டிருப்பது அவருடைய பெரியாரிச தத்துவத்தின் மேதாவி தனத்தை காட்டுகிறது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் தந்தை சுதந்திர போராட்ட வீரர். தேசபக்தி குடும்பத்தில் பிறந்தவர் விஜயகாந்த். அவரோடு காங்கிரஸ் தலைவர் ஒருவர் பேசுவது தேச விரோத செயல் அல்ல.

காங்கிரஸ் பேரியக்கத்தின் வளர்ச்சியையும் காங்கிரஸ் தொண்டர்களிடையே எழுச்சியையும் உருவாக்கு வதற்காகவே பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர் அருண் குமார்.
கூட்டணி பற்றி முடிவு எடுப்பது, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியாதான்.
ஏதேச்சையாக விமான பயணத்தில் விஜயகாந்த்தை சந்தித்ததனாலேயே கூட்டணி மாறிவிடும். அல்லது கூட்டணிக்கு துரோகம் செய்கிறார் என்ற அபூர்வ கண்டுபிடிப்பு வீரமணியின் பகுத்தறிவை பறைசாற்றுவதாக உள்ளது.

கருணாநிதியின் கவனத்தை ஈர்க்க கருணாநிதியுடைய எத்தனையோ சாதனைகளை பாராட்டுவதை விட்டுவிட்டு, விமான பயணத்தின் போது சந்தித்துக்கொண்ட தலைவர்களின் நற்பண்பை கலகம் மூட்டும் விதமாக கருத்து வெளியிட்டிருப்பது பகுத்தறிவு வாதிக்கு உகந்ததல்ல என்பதை வீரமணி உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

News: Maalaisudar

No comments: