Wednesday, February 27, 2008

தயாநிதிக்கு கருணாநிதி எச்சரிக்கை

அண்மையில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் சந்தித்து பேசியதைத் தொடர்ந்து அவருக்கு முதலமைச்சர் கருணாநிதி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

"தோளில் தூக்கி வளர்த்தோரும் வாளைத் தூக்குகின்றார்; வசைமாரி பொழிகின்றார்' என்று அவரை மிக கடுமையாக சாடியுள்ள கருணாநிதி, திராவிட இயக்க தருவை வீழ்த்த நினைத்தால் கண்ணில் விரலை விட்டு ஆட்ட கழக பாசறை வீரர்கள் உண்டு என எச்சரித்துள்ளார்.

முதலமைச்சர் கருணாநிதியின் குடும்பத்திற்கும், மறைந்த முரசொலிமாறன் குடும்பத்திற்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. சுமங்கலி கேபிள் விஷன் (எஸ்சிவி) நிறுவனத்திற்கும், ஹாத்வே நிறுவனத்திற்கும் இடையே ஏற்பட்ட போட்டியில் போலீசார் எஸ்சிவி கேபிள் டிவி ஆபரேட்டர்களை கடத்திச் சென்று மிரட்டுவதாக அண்மையில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து டெல்லிக்கு சென்ற அவர் காங்கிரஸ் தலைவர் சோனியாவை நேரில் சந்தித்து இது பற்றி அவரிடம் விளக்கியதாக கூறப்படுகிறது. கேபிள் டிவி பிரச்சனையில் தனக்கும் தன்னுடைய சகோதரர் கலாநிதி மாறனுக்கும் தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்ப தாகவும், அதனால் தங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என சோனியாவிடம் கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில், தயாநிதி மாறனுக்கு முதலமைச்சர் கருணாநிதி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக திமுகவின் கட்சி பத்திரிகையான முரசொலி நாளிதழில் அவர் கவிதை ஒன்றை எழுதியுள்ளார். அந்த கவிதையில், "நான் பெற்ற பிள்ளையை தூற்றும் பிரகலாதன்' என்று தயாநிதிமாறனை பெயர் குறிப்பிடாமல் முதலமைச்சர் கருணாநிதி மிகக்கடுமையாக சாடியுள்ளார்.

தோளில் தூக்கி வளர்த்த மாறன் சகோதரர்கள் திமுகவுக்கு எதிராக செயல்படுவது குறித்து குறிப்பிட்டுள்ள கருணாநிதி, திராவிட இயக்கத்தை வீழ்த்த நினைத்து கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு அலைந்தால், அவர்களது கண்ணில் திமுகவினர் விரலை விட்டு ஆட்ட நேரிடுமென எச்சரித்துள்ளார்.

தயாநிதிமாறனுக்கு எச்சரிக்கை விடுத்து கருணாநிதி எழுதியுள்ள கவிதை வருமாறு:

நாடு போற்றிய நல்லறிவாளனே

ஏடு புகழ் என்னருங் கண்மணியே!

தோகாவில் திறன்காட்டி இந்தியத் திருநாட்டின் கீர்த்தி

தொல் புவியில் நிலைநாட்டியவனே!

இங்கிலாந்துப் பிரதமரை சந்தித்துப் பேசியபின்;

"இத்தனைக்கும் காரணம் இந்த மாமன் தான்' என்று;

எழுதி நீ அனுப்பிய கடிதத்தில்

இறுதி வாசகமாய் "நான் உங்கள் வளர்ப்பன்றோ' என்று

அன்றைக்கு நீ இலண்டன் மாநகர் இருந்து மடல் எழுதி

நன்றியினைக் குன்றின் மேல் இட்ட விளக்காக

ஏற்றி வைத்து; இன்றைக்கும் எனை அழவைக்கும் அன்பே, ஆரமுதே!

தூற்றுகின்றான் நான் பெற்ற பிள்ளையினை; நீ பெற்ற பிரகலாதன்!மகனே
ஆயினும் தவறு செய்யின் மன்னிக்காமல் கண்டிக்கின்ற

மனு நீதிச் சோழன் பிறந்த மண்ணுக்குச் சொந்தக்காரன் நான்;

தோளுக்கு நிகராக வளர்ந்தோரின் பகை கண்டுள்ளேன் இன்று நான்

தோளில் தூக்கி வளர்த்தோரும் வாளைத் தூக்குகின்றார்;

வசைமாரி பொழிகின்றார்

மானம் போற்றுதற்கும் திருக்குறள் தரும் மறை நீதி

மறையாமல் காப்பதற்கும் இந்தத் தமிழ்

மண்ணில் நிலைத்த திராவிட இயக்கத் தருவை வீழ்த்த நினைத்து

கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு அலைவோரின்

கண்ணில் விரலை விட்டு ஆட்டுதற்கும் கழகப் பாசறை வீரர்கள்

எண்ணற்றோர் உண்டு; எதிரிகள் ஓடி ஒளியட்டும் இதனை

எச்சரிக்கையாகக் கொண்டு!



செய்தி: நன்றி:
மாலைச்சுடர்

No comments: