Thursday, February 21, 2008

ராமதாஸ் கருணாநிதி சந்திப்பு




2009 மக்களவை தேர்தலிலும் திமுகவுடனான தமது கட்சி கூட்டணி தொடரும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார். ஆளும் கட்சியுடன் ஏற்பட்ட மோதலுக்கு பின்னர் இன்று ராமதாஸ் முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேசிய பிறகு இவ்வாறு கூறினார்.

வேளாண்மை, மகளிர் முன்னேற்றம், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றுக்கு தனித்தனி பட்ஜெட் சமர்ப்பிக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

பல்வேறு பிரச்சனைகளில் முதல்வர் கருணாநிதிக்கும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும் மோதல் ஏற்பட்டது. கூட்டணியில் பிளவு ஏற்படும் நிலைமை ஏற்பட்டது.
இந்த நிலையில் முதலமைச்சர் கருணாநிதியை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று சந்தித்து பேசினார்.

கருணாநிதியை சென்னையில் உள்ள அவரது கோபாலபுரம் இல்லத்தில் இன்று காலை 9.05 மணியளவில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சந்தித்துப் பேசினார். 9.45 மணி வரை சுமார் 40 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களுக்கு ராமதாஸ் பேட்டி அளித்தார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தற்போதைய திமுக கூட்டணியிலேயே பாமக நீடிக்கும் என்று அதன் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.

நடைபெறவுள்ள நாடாளு மன்ற தேர்தலில் இதே கூட்டணியில் பாமக நீடிக்குமா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ராமதாஸ் இவ்வாறு கூறினார்.

"நூற்றுக்கு இருநூறு சதவீதம் உறுதியாகச் சொல்கிறேன். வரும் நாடாளுமன்ற தேர்தலில் இதே திமுக கூட்டணியில்தான் பாமக நீடிக்கும் என்று நான் பல முறை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அதனை இப்போதும் உறுதிப்படுத்துகிறேன்'' என்று ராமதாஸ் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: முதலமைச்சர் கருணாநிதியை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க போவதாக ஏற்கனவே நான் அறிவித்திருந்தேன். தமிழகம் முழுவதும் கட்அவுட்கள், விளம்பர பேனர்கள், சுவரொட்டிகள் என பட்டித்தொட்டி முதல் சிற்×ர், பேரூர் வரை நீக்கமற நிறைந்து தமிழகத்திற்கு தலைக்குனிவை ஏற்படுத்தும் சூழல் உருவாகி உள்ளது.

இதனைக் கண்டித்து முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டபோது நான் அவரை நேரில் சந்தித்து பாராட்டும், நன்றியும் தெரிவிப்பேன் என்று அறிவித்ததற்கு இணங்க இன்று நான் முதல்வரை சந்தித்தேன்.

வரும் 26ந் தேதி முதல் மார்ச் 1ந் தேதி வரை தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு மது ஒழிப்பு பிரச்சார இயக்கம் நடத்த உள்ளேன். இது குறித்தும் படிப்படியாக மதுவை தமிழ்நாட்டில் முழுமையாக ஒழிப்பது குறித்தும் முதலமைச்சரிடம் சில ஆலோசனைகளை தெரிவித்தேன்.

மது ஒழிப்பு தொடர்பாக மகாராஷ்டிரா மாநிலம் வெளியிட்டுள்ள அரசாணை ஒன்றையும் முதலமைச்சரிடம் வழங்கி இதே அடிப்படையில் தமிழகத்தில் நாமும் மது ஒழிப்பு நடவடிக்கையை பின்பற்ற வேண்டும் என்று கூறினேன்.

இது தவிர, 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடம் என்ற தமிழக அரசின் அறிவிப்பு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் உறுதிபடுத்தப்பட்டிருப்பது நமக்கு கிடைத்த வெற்றி. எனவே இதற்காகவும் முதல்வருக்கு நன்றியையும், பாராட்டையும் தெரிவித்தேன்.

மொழிப் பாடங்களைத் தவிர அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட மற்ற பாடங்களையும் தமிழ் வழியில் கற்பிக்க வேண்டும் என்ற கருத்தை முதலமைச்சரிடம் வலியுறுத்தினேன்.
இந்தியாவின் 18 தேசிய மொழிகளை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்ற கருத்து மத்திய அரசின் செயல் திட்டத்தில் அப்படியே உள்ளது; இன்னும் அது நடைமுறைப்படுத்தப் படவில்லை.

எனவே நீங்கள் (முதலமைச்சர்) முயற்சி எடுத்தால்தான் இதனை செயல்படுத்த முடியும்; உடனே முயற்சி மேற்கொள்ளுங்கள் என்றும் முதல்வரிடம் கூறினேன். விரைவில் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாகவும் இரண்டு, மூன்று யோசனைகளை முதலமைச்சரிடம் தெரிவித்தேன்.

மத்திய பட்ஜெட் தாக்கலாகும் முன்பு நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்வார்கள். அதே போல ஒரு வரைவு அறிக்கையை நாமும் தயார் செய்து பட்ஜெட்டிற்கு முன்பு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறினேன். அதற்கு, பார்க்கலாம் என்று முதலமைச்சர் விடை அளித்தார்.

மேலும் விவசாயம், மகளிர் முன்னேற்றம், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றுக்கு தனித்தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சரிடம் ஆலோசனை தெரிவித்தேன்.

தேசிய அனல் மின் கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டிற்கு ஒரு மின் உற்பத்தி நிலையம் கூட அறிவிக்கப்படவில்லை. தற்போது சங்கரலிங்கம் என்ற தமிழர்தான் அதன் தலைவராக இருக்கிறார். இதனைப் பயன்படுத்தி தமிழகத்திற்கு புதிய அனல் மின் நிலையம் கொண்டு வர வேண்டும் என்ற கருத்தையும் முதலமைச்சரிடம் நான் கூறினேன்.

தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டின் துவக்க நாளாக தமிழக அரசு அறிவித்ததற்கும் முதலமைச்சருக்கு நன்றி கூறினேன். பெட்ரோல், டீசல் விலைகளை மத்திய அரசு உயர்த்தினாலும் தமிழ் நாட்டில் பேருந்து கட்டணங்களை உயர்த்த வேண்டாம் என்றும் முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்தேன் என்றார் ராமதாஸ்.


செய்தி: நன்றி: மாலைச்சுடர்

No comments: