Tuesday, August 19, 2008

ஆன்மீகம் அவசியம்: கனிமொழி

மனிதர்கள் மூலம் ஏற்படும் தடைகளை ஆன்மீகத்தால் தகர்த்தெறிய முடியும். மனிதன் மனிதனாக இருக்க ஆன்மீகம் அவசியம் என்று திமுக ராஜ்யசபா எம்பி கனிமொழி கூறியுள்ளார்.

வேலூர் அடுத்த திருமலைக்கோடி ஓம்சக்தி நாராயணி பீடம் சார்பில் ஏழை எளிய மாணவ-மாணவிகளுக்கு ரூ.75 லட்சம் மதிப்பில் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா நடந்தது. பீடத்தின் தலைவரான சக்தி அம்மா தலைமை வகித்தார்.

மதம் வேறு - ஆன்மீகம் வேறு

திமுக எம்பி கனிமொழி கலந்து கொண்டு மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், எனக்கு மத நம்பிக்கைக் கிடையாது. மதத்துக்கும் ஆன்மீகத்துக்கும் வேறுபாடு உள்ளது என்று என் தந்தை கருணாநிதி சொன்ன புனித வழியில் நான் சென்று கொண்டிருக்கிறேன்.

மதம் வாழ்க்கையை நெறிப்படுத்தும். சில நேரம் மதம் 'மத'மாக மாறி விடுகிறது.

சேது சமுத்திர திட்டம் தொடர்பாக முதல்வர் கருணாநிதி பல இடங்களில் பேசி வருகிறார். ஆனால் சேது திட்டம் இப்போது மதமாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால் மக்களுக்கு கிடைக்கக் கூடிய நியாயமான பலன்கள் மதத்தின் பெயரால் மறுக்கப்பட்டு வருகிறது.

மறுக்கப்பட்ட பலன்களை பெற்றுத் தர போராடினால் நாத்திகன் என்கின்றனர். கசப்பு மருந்தில் இனிப்பு தடவி ஆன்மீகம் என்கின்றனர். நாங்கள் வேறு வகையில் இனிப்பு என்ற மேல் பூச்சுத் தடவுகிறோம்.

மாணவர்கள் நலனுக்காக இலவச பஸ் பாஸ், சைக்கிள், கல்வி உதவித் தொகை போன்றவற்றை அரசு வழங்கி வருகிறது. மக்கள் தொகை அதிகமுள்ள நம் நாட்டில் அனைத்து உதவிகளையும் அரசே செய்து விட முடியாது.

சக்தி அம்மா போன்றவர்கள் இதுபோன்ற உதவிகள் செய்வதன் மூலம் இந்த சமுதாயம் முற்றிலும் மாறும் நிலை உருவாகியுள்ளது.

கல்வி உதவி பெறும் மாணவர்கள் நன்றாக படித்து உயர்நிலைக்கு வர வேண்டும். அவர்களும் மற்றவர்களுக்கு இதேபோல உதவிகளை செய்ய வேண்டும். சமுதாயத்தில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.

மனிதனால் மட்டுமே இந்த பூமியை சூறையாட முடியும். விலங்குகளை அழிக்க முடியும். ஆனால் மனிதர்கள் மூலம் ஏற்படும் தடைகளை ஆன்மீகத்தால் தகர்த்தெறிய முடியும். மனிதன் மனிதனாக இருக்க ஆன்மீகம் அவசியம் என்றார் கனிமொழி.


செய்தி: நன்றி: Thatstamil

Thursday, August 14, 2008

தினமலரே வெளியிட்டுள்ள அந்துமணி ஃபோட்டோ




யாருன்னு கண்டுபிடியுங்க பாப்பம் ? படத்தைப் பற்றிய தினமலர் குறிப்பிலேயே க்ளூ உள்ளது.

(ரிப்பனை வெட்டுபவர் - கலெக்டர் ஜவகர்)

படம்: நன்றி: தினமலர்

----------------------------------------------------------------
பி.கு: நீங்கள் கூகிள் ரீடர் அல்லது அது போன்ற செயலிகளால் பதிவுகளைப் படிப்பவரா ? வலைப்பதிவில் புதிதாக இடப்பட்டுள்ள 'சொன்னாங்க..சொன்னாங்க,,!!' மற்றும் 'படம்..பப்படம்' பகுதியைக் காண வலைப்பதிவு முகவரிக்கு செல்லவும்.

Sunday, August 10, 2008

சென்னை திரும்பினார் ஜெயலலிதா

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, 4 மாத ஓய்வுக்கு பின் நேற்றிரவு சென்னை திரும்பினார்.

இதெல்லாம் செய்தியா என கேட்கக்கூடாது :-) இனிமேல் அறிக்கைகளும் விவாதங்களும் தமிழக அரசியல் களமும் இன்னும் சூடு பெறலாம். Watch out this space..!




கடந்த ஏப்ரல் 7ம் தேதி கோடநாடு சென்றார். அங்கு சுமார் 4 மாதம் ஓய்வுக்குப் பின் நேற்றிரவு கோவையில் இருந்து பாரமவுண்ட் பயணிகள் விமானம் மூலம் சென்னைக்கு 9.05 மணிக்கு வந்து சேர்ந்தார்.

காரில் வெளியே வந்த அவருக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன், ஜெயக்குமார், செங்கோட்டையன், முத்துச்சாமி, தம்பிதுரை மற்றும் கட்சி நிர்வாகிகள் சேகர்பாபு, கலைராஜன், மைத்ரேயன், சுலோச்சனா சம்பத் உள்ளிட்டோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். ஜெயலிதாவுடன் சசிகலா, பாதுகாப்பு அதிகாரி பெருமாள்சாமி, உதவியாளர் பூங்குன்றன் உள்ளிட்டோர் வந்தனர்.

செய்தி: படம்: நன்றி: தினகரன் 11 ஆகஸ்டு 2008

பி.கு: நீங்கள் கூகிள் ரீடர் அல்லது அது போன்ற செயலிகளால் பதிவுகளைப் படிப்பவரா ? வலைப்பதிவில் புதிதாக இடப்பட்டுள்ள 'சொன்னாங்க..சொன்னாங்க,,!!' மற்றும் 'படம்..பப்படம்' பகுதியைக் காண வலைப்பதிவு முகவரிக்கு செல்லவும்.

Thursday, August 7, 2008

அழகிரி 'அஞ்சாநெஞ்சன்' - கருணாநிதி மகிழ்ச்சி

மதுரை மக்கள் மு.க.அழகிரியை அஞ்சாநெஞ்சன் என்று பாராட்டுவதைக் கேட்க மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது என்று தமிழக முதல்வர் மு.கருணாநிதி கூறினார்.

பழம்பெரும் பின்னணிப் பாடகர் டி.எம். சவுந்திரராஜன், பாடகி பி.சுசீலா ஆகியோருக்கு மதுரை தமுக்கம் மைதானத்தில் பிரமாண்ட பாராட்டு விழா நடந்தது. முதல்வரின் மூத்த மகன் மு.க. அழகிரி இந்த விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.

மு.க.அழகிரி கல்வி அறக்கட்டளை சார்பில் டி.எம். சவுந்திரராஜனுக்கு ரூ.5 லட்சமும், சுசீலாவுக்கு ரூ.3 லட்சமும் பொற்கிழியாக இந்த விழாவில் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

மு.க.அழகிரிக்கு இன்னொரு பெயர் உண்டு. அது அஞ்சா நெஞ்சன். அப்படி அழைத்தே பழக்கப்பட்டவர்கள் மதுரை மக்கள். அழகிரிக்கு அஞ்சா நெஞ்சன் என்ற பட்டப் பெயர் வந்ததற்கு ஒரு காரணம் உண்டு.

திருவாரூரில் அழகிரி பிறந்து, குழந்தையாக அறைக்குள்ளே கிடத்தப்பட்டிருந்தபோது, என் வீட்டுக்கு வந்தார் பெரியார்.

குழந்தைக்கு என்ன பெயர் வைத்திருக்கிறாய், என்றார். நான் உடனே அழகிரி என்றேன். சரியான முரட்டுப் பெயரைத்தான் வைத்திருக்கிறாய் என்று அன்றைக்கே பெரியார் சொல்லிவிட்டார். மதுரை மாவட்டத்தில் உள்ள காளையர்களும் தோழர்களும் அதை உறுதி செய்திருக்கிறீர்கள்.

இதைக் கண்டு உள்ளம் பூரிக்கிறேன். பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.
எதற்கு அஞ்சாவிட்டாலும் கூட, ஏழைகளின் கண்ணீருக்கு அஞ்சவேண்டும் என்றான் ஒரு கவிஞன். அந்தப் பெருமையும் அழகிரிக்கு உண்டு. அந்த உள்ளம் வளர வாழ்த்துகிறேன்.

தமிழ்த்தாயின் நன்றி!

நண்பர் சவுந்திர்ராஜனுக்கு மிகச் சிறப்பான முறையில் பாராட்டுவிழா எடுத்திருக்கிறார் அழகிரி. அதை நினைக்கும் போதே எனக்குப் பெருமையாக இருக்கிறது. இந்த அளவு கூட்டத்தைப் பார்க்கும்போதே பிரமிப்பாக இருக்கிறது. அதுதான் அஞ்சாநெஞ்சனின் ஆற்றல்.

டிஎம்எஸ் என்னோடு நெருங்கிப் பழகியவர். 1969-லே நான் முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொண்டபிறகு, தமிழ்த்தாய் வாழ்த்தாக தமிழர் நிகழ்வுகளிலெல்லாம் ஒலிக்கக்கூடிய ஒரு பாடலை உருவாக்க வேண்டும் என அனைவரும் விரும்பினர்.

உடனே நான் மனோன்மணீயம் சுந்தரனாரின் நீராரும் கடலுடுத்த... பாடலின் சில பொதுவாக பகுதிகளை எடுத்து, யாருக்கும் பாதிப்பில்லாத வகையிலே தமிழ்த்தாய் வாழ்த்தாக்க முடிவு செய்து, சில பாடகர்களைப் பாடித்தருமாறு அழைத்தோம்.

ஆனால் அந்தப் பாடலைப் பாட பலர் பயந்து கொண்டு வரமறுத்தார்கள். ஆனால் நண்பர் சவுந்திர்ராஜனும், பி.சுசீலாவும் சொன்ன வாக்கை மதித்துப் பாடிக் கொடுத்தார்கள். விஸ்வநாதன் –ராமமூர்த்தி இருவரும் அற்புதமாக மெட்டமைத்துக் கொடுத்தார்கள்.

தமிழ் உள்ளளவும் உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல் இது. இதற்காக அந்த மாபெரும் இசைக் கலைஞர்களுக்கு தமிழ்த்தாய் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

டிஎம்எஸ் ஒரு தமிழன்...

இது டி. எம். சவுந்திர்ராஜனின் சொந்த ஊர். அவர் பிறந்த வகுப்பு மற்றும் அந்த வகுப்பினர் அவர்பால் வைத்துள்ள பாசம் பற்றியெல்லாம் சொன்னார்கள். அவர் எந்த சமுதாயத்தில் பிறந்திருந்தாலும், அவர் ஒரு தமிழர் என்றுதான் என்னால் பார்க்க முடிகிறது. ஒரு தமிழன் இந்த அளவு திரைத் துறையில் கீர்த்தி பெற்றிருப்பது என்னை நெஞ்சு நிமிர வைக்கிறது.

இவ்வளவு பெரிய விழா எடுத்த அழகிரியை மீண்டும் மீண்டும் பாராட்டாமல் இருக்க முடியாது. அவரைப் போற்றுகிறேன்.

இந்த விழாவிலே அழகிரிதான் நன்றி கூறினார். ஆனால் அந்த நன்றியில் என் நன்றியும் கலந்திருக்கிறது, என்றார் கருண்நிதி.

இயக்குநர்கள் கே.பாலச்சந்தர், இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் விழாவில் பங்கேற்றுப் பேசினர்.

மு.க.அழகிரி அனைவரையும் வரவேற்றார்.


செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்

Wednesday, July 23, 2008

இன்று ! மன்மோகன் சிங் - அத்வானி



இதுவல்லவோ டெல்லி அரசியல் தலைவர்களின் கலாச்சாரம் ?

நேற்று பாராளுமன்றத்தில் ஒருவரை ஒருவர் ஏசிவிட்டு இன்று பாலகங்காதர திலகர் விழாவில் பிரதமரும் அத்வானியும்.

படம்: நன்றி: என்.டி.டி.வி

Monday, July 21, 2008

தயாநிதி மாறனுக்கு கி.வீரமணி பாராட்டு

மத்திய அரசுக்கு ஆதரவாகத்தான் வாக்களிப்பேன் என்று அறிவித்ததற்காக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு தி.க. தலைவர் கி.வீரமணி பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 22ம் தேதி நாடாளுமன்றத்தில் சந்திக்கவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில், “ஆட்சிக்கு ஆதரவாகத்தான் வாக்களிப்பேன், திமுக கட்சிக்கும், தலைமைக்கும் விரோதமாக நான் ஒருபோதும் நடந்து கொள்ள மாட்டேன்’’ என்று திமுகவின் மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அறிவித்ததை, திராவிடர் கழகம் வரவேற்று மகிழ்கிறது, பாராட்டுகிறது.

‘அண்ணா சொன்ன, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றில் இருந்து நழுவ மாட்டேன்’ என்று அவர் கூறியிருப்பது மிகச் சரியானது. ‘நீர் அடித்து நீர் விலகாது’ என்பது பழமொழி. விலகக் கூடாது என்பது நியாயமும்கூட. ‘திமுகவை அழிக்க, வேறு எவராலும் முடியாது. ஆனால், அவர்களுக்குள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்’ என்று 1969ல் பெரியார் கூறிய அறிவுரை, காலத்தினால் செதுக்கப்பட்ட கல்வெட்டு ஆகும். அது என்றும் பொருந்தும்.

தயாநிதி மாறனின் இந்த தெளிந்த நிலைப்பாட்டினை, அவர் தொடர்புள்ள ஊடகங்களும் பின்பற்ற வேண்டும். அதன் மூலம், முதல்வரின் நல்லாட்சியின் பயன்கள் மேலும் தொடர வழி வகுக்கும் என்ற வேண்டுகோளையும் திராவிடர் கழகம் விடுக்கிறது. அண்ணா சொன்னது போல், நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.


செய்தி: நன்றி: தினகரன் 22 ஜூலை 2008 (சென்னை பதிப்பு)

பேரன்களை வாழ்த்துவது ஆபத்து: கருணாநிதி

இப்போதெல்லாம் பேரன்களை வாழ்த்துவது ஆபத்தில் முடிகிறது. ஆனாலும் இந்தப் பேரன் எனக்கு எதிராகப் போய்விட மாட்டான் என்ற நம்பிக்கையில் வாழ்த்துகிறேன் என்று மு.க.முத்துவின் மகன் முத்து அறிவுநிதியை வாழ்த்தினார் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதி.

சென்னையில் நேற்று நடந்த ஒரு திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் அவர் பேசியதாவது:

இன்று திரைப்படத் தணிக்கை என்பது அத்தனை சிரமமான விஷயமில்லை. ஆனால் நான் கதை-வசனம் எழுத ஆரம்பித்த ஆரம்ப நாட்களில் தணிக்கைத் துறைதான் திரைப்படத் துறைக்கு பெரும் சவாலாகத் திகழ்ந்தது.

அந்தக் கால கட்டத்தில் நான் அதிகம் சங்கடப்பட்டது சென்சாரிடம்தான். திரும்பிப்பார் என்றொரு படம். சிவாஜி நடித்தது. நான்தான் வசனம் எழுதினேன். அந்தப் படத்தின் தணிக்கையின்போது 4 ஆயிரம் அடிகளை வெட்டச் சொல்லி விட்டார்கள். எந்தக் காட்சியை வெட்ட வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள நானும் படத்தின் இயக்குநர் காசிலிங்கமும் தினமும் 5 மாடிகளைக் கடந்து செல்ல வேண்டும்.

ஒரு நாள் அந்த சென்சார் அதிகாரியிடம், தினமும் இத்தனை மாடிகளை ஏறி வருகிறோமே, இதைப் பார்த்தும்கூட உங்களுக்குக் கருணை வரவில்லையா, என்று கேட்டேன். திருப்பதி மலைக்கு வந்து போவதைப் போல நினைத்துக் கொள்ளுங்கள். அந்த அளவு புண்ணிய இடம்தான் இதுவும் என்றார் என் கொள்கைகளைத் தெரிந்து கொண்டே.

பதிலுக்கு நான், அங்கும் இங்கும் ஒரே ரிசல்ட்தான் என்றேன். கடைசியில் பலரும் சொன்னதற்குப் பிறகு 2 ஆயிரம் அடி வெட்டினார்கள்.

நான் வசனம் எழுதிய எந்தப் படமும் சென்சாருக்குத் தப்பியதே இல்லை.

இன்று அந்த அளவு நெருக்கடி இல்லை. நினைப்பதை, நாட்டில் நடக்கும் விஷயங்களைத் திரையில் காட்டுமளவுக்கு சுதந்திரம் இருக்கிறது. அதை அருமையாகப் பயன்படுத்தி வருகிறார்கள் திரையுலகினர்.

நாளை உண்ணாவிரதம் என்று அறிவித்துவிட்டு, இங்கே திரைப்பட விழாவில் இவர் உற்சாகமாகக் கலந்து கொள்கிறாரே என்று கூட கண்டனங்கள் எழலாம். ஆனால் அதையும்கூட உங்களுக்காகச் செய்கிற ஒரு தியாகமாகக் கருதி தாங்கிக் கொள்கிறேன்.

தமிழ்ப் பெயர்

இன்றைக்கு இந்தியாவிலேயே முழு வரிவிலக்கு பெற்ற திரைப்படங்களைக் காணுகிறீர்கள். ராஜாஜி மண்டபத்தில் படப்பிடிப்பு நடத்த முன்பு ஒரு லட்ச ரூபாய் கட்டணம். இப்போது அது வெறும் ஆயிரம் ரூபாயாகக் குறைக்கப்பட்டுவிட்டது.

இவ்வளவுக்கும் பிறகு நான் உங்களைக் கேட்பதென்ன....? நல்ல தமிழில் தலைப்புகளைச் சூட்டுங்கள் என்றுதானே. இதைக் கூடக் கேட்கக் கூடாதா... இவ்வளவு சலுகைகள் அளித்தும் கூட தமிழில் பெயர் வைக்காமல் ஏபிசிடி என்றெல்லாம் பெயர் சூட்டுகிறார்கள்.

சமீபத்தில் 70 படங்களுக்கு மானியம் அளிக்கப்பட்டது. இதில் 10க்கும் மேற்பட்டவை ஆங்கிலம் அல்லது பிற மொழித் தலைப்புகள் கொண்டவை.

இனிமேலாவது நல்ல தூய தமிழில் இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் தமிழ் என்று ஒப்புக் கொள்ளும் அளவுக்கு தலைப்புகளை வைப்போம். எதிர்காலத்தில் முழுக்க முழுக்க தமிழிலேயே படங்களை எடுப்போம். தமிழ்ப் பண்பாட்டைக் காப்போம் என்ற உறுதியைத் திரைத் துறையினர் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பேரனை வாழ்த்துவது ஆபத்து!

இந்தப் படத்தில் என் பேரன் அறிவுநிதி ஒரு பாடல் பாடி இருக்கிறான். அவன் மேலும் மேலும் இந்தத் துறையில் புகழ் பெற வாழ்த்துகிறேன். இப்போதெல்லாம் பேரன்களை வாழ்த்துவதே ஆபத்தாக முடிகிறது.

இருந்தாலும்கூட, இந்தப் பேரன் அப்படியெல்லாம் நடந்து கொள்ளமாட்டான் என்ற நம்பிக்கையோடு, நல்ல முறையில் வாழ்வான், என்னுடைய நிலையில் இவன் ஒருவனாவது நின்று என் பெயரைச் சொல்வான் என்ற நம்பிக்கையோடு வாழ்த்துகிறேன் என்றார்.


செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்