சிதம்பரம் நடராஜர் கோவிலில், முதல்வர் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி, தனது பேரனுடன் சாமி தரிசனம் செய்தார்.
முதல்வர் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி, தனது பேரனும், கனிமொழியின் மகனுமான ஆதித்யனுடன் நேற்று சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தார்.
தி.மு.க., நகரச் செயலர் செந்தில்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அவரை வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர்.
கோவிலில் சிற்றம்பல மேடையில் ஏறி சாமி தரிசனம் செய்தார். பின், கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தராஜ பெருமாள், ஆதிமூலநாதர் உள்ளிட்ட சன்னிதிகளுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு புறப்பட்டு சென்றார்.
செய்தி: நன்றி: தினமலர்
Sunday, November 22, 2009
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ராசாத்தி சாமி தரிசனம்
Thursday, November 19, 2009
தனக்கு வந்தால் 'அலறல் வலி'.. பிறர்க்கு வந்தால் 'மெளன வலியா?'- ஜெ. கேள்வி
தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் கருணாநிதிக்கு அது 'மௌன வலி'யாகத்தான் இருக்கும். தனக்கும், தன் குடும்பத்திற்கும் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அது டெல்லி வரை ஓங்கி ஒலிக்கக் கூடிய 'அலறல் வலி'யாக இருக்கும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், நம் மௌன வலி யாருக்கு தெரியப் போகிறது என்று கூறியிருந்தார்.
இதையடுத்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
'நம் மௌன வலி; யாருக்குத் தெரியப் போகிறது?' என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டு தான் முன்னுக்குப் பின் முரணாகப் பேசும் சந்தர்ப்பவாதி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் முதல்வர் கருணாநிதி.
தன்னுடைய அறிக்கையில் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளைத் தூக்கி எறிந்ததாக கருணாநிதி தெரிவித்திருக்கிறார். சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் நின்றால் தோல்வி நிச்சயம் என்பதை உணர்ந்த கருணாநிதி, 1983ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக என்று கூறி தான் வகித்துவந்த சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு 1984ம் ஆண்டு சட்டமன்ற மேலவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.
இதிலிருந்தே தேர்தல் தோல்வியில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக சுயநலத்துடன் கருணாநிதியால் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் அது என்பது தெளிவாகிறது.
1991ம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் எனது தலைமையில் அதிமுக 164 இடங்களைக் கைப்பற்றி மகத்தான வெற்றி அடைந்த நேரத்தில், ஒற்றை எண்ணில் ஒரே இடத்தில் வெற்றி பெற்று படுதோல்வியை தழுவிய கருணாநிதி, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
அப்போதும் அவமானம் தாங்காமல் தனி நபராக ஆளும் கட்சியை எதிர்கொள்ள துணிவில்லாமல் கருணாநிதி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தாரே தவிர எந்த லட்சியத் திற்காகவோ கொள்கைக்காகவோ தியாகம் செய்யவில்லை.
அடுத்ததாக இலங்கைத் தமிழர்களுக்காக இருமுறை ஆட்சியை இழந்ததாக கூறியிருக்கிறார் கருணாநிதி. உண்மை நிலை என்ன வென்றால் 1976ம் ஆண்டு ஊழல் புரிந்ததற்காகவும், 1991ம் ஆண்டு இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதற்காகவும் தான் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.
இவ்வளவு வாய்கிழியப் பேசும் கருணாநிதி, 2008ம் ஆண்டு தான் தாங்கிக் கொண்டிருக்கும் மத்திய அரசின் உதவியோடு இலங்கை ராணுவம் அங்குள்ள தமிழர்களை கொன்று குவித்தபோது என்ன செய்து கொண்டிருந்தார் என்பது பற்றி ஒருவரி கூட தெரிவிக்கவில்லையே.
ஒரு வேளை அவர் நடத்திய கபட நாடகங்களான அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம், மனிதச் சங்கிலி போராட்டம் என்று அறிவித்து அனைவரையும் கொட்டும் மழையில் நனையவிட்டு தான் மட்டும் தன் மகனுடன் சீருந்தில் பவனி வந்தது; பிரதமருக்கு தந்தி கொடுங்கள் என்று அறிவித்தது,
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா என அறிவித்தது, ராஜினாமா கடிதங்களை தானே பெற்றுக் கொண்டது; உலகத்தில் இதுவரை யாருமே நடத்தியிராத 3 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் ஆகியவற்றை மனதில் வைத்துத்தான் அறப் போராட்டங்கள் நடத்தியதாக தனது அறிக்கையில் கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறார் போலும்.
கருணாநிதிக்கு உண்மையான தமிழர் பற்று இருந்திருக்குமானால், 2008ம் ஆண்டு துவக்கத்திலேயே இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றிருக்க வேண்டும். இதை கருணாநிதி செய்திருப்பாரேயானால் அப்பொழுதே இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கும். தமிழினம் அழிவது தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும்.
தன்னலம் காரணமாக தன் மீது ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைக்கும் வகையில் பிரபாகரன் தீவிரவாதி அல்ல, என் நண்பன் என்று தான் கூறியதையும், நாங்களே அடிமைகளாக இருக்கிறோம் என்று கூறி இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையில் தன்னுடைய இயலாமையை தெரிவித்ததையும் மறந்து தற்போது பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி.
வீரம் என்கிற போராடும் மன வலிமை தன்னிடம் இல்லை என்பதையும், தன் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் செயல்படும் விவேகம் தன்னிடத்தில் மேலோங்கி நிற்பதையும் தனது அறிக்கையின் மூலம் கருணாநிதி தெளிவுபட கூறியிருக்கிறார்.
தமிழர்களுக்கு தமிழினத்திற்கு பாதிப்பு ஏற்பட்டால் கருணாநிதிக்கு அது 'மௌன வலி' ஆகத்தான் இருக்கும். தனக்கும், தன் குடும்பத்திற்கும் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அது டெல்லி வரை ஓங்கி ஒலிக்கக் கூடிய 'அலறல் வலி' ஆக இருக்கும். இதுதான் கருணாநிதியின் தத்துவம்.
இந்த மௌன வலியை மக்கள் நம்பத் தயாராக இல்லை. தமிழனத்திற்கு கருணாநிதி இழைத்த துரோகத்தை மக்கள் மறக்க மாட்டார்கள் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா
செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்
Tuesday, November 17, 2009
விடுதலைப் புலிகள் - விளைவுகளை எண்ணி மவுனமாக அழுகிறோம் - கருணாநிதி
முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை:
ஈழத் தந்தை செல்வாவின் குரலோடு இணைந்து 1956 முதல் இலங்கை பிரச்னைக்காக திமுக குரல் எழுப்பியதோடு நில்லாமல், இலங்கையில் ஜனநாயகம் மலர வேண்டும் என்பதற்காக எடுத்து வைத்த வாதங்களும் நடத்திய அறப்போராட்டங்களும் சிறைகளை நிரப்பிய தியாகச் செயல்களும் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை தூக்கி எறிந்த நிகழ்வுகளும் இரு முறை ஆட்சியையே இழந்த சம்பவங்களும் நடந்தன. தி.மு.க. சார்பில் நிதியாக தமிழர்களிடமிருந்து சேர்த்துக் கொடுத்த மாசறு காசுகள் செல்லாக் காசுகளாக மாறிய நிகழ்ச்சியும்; டெசோ இயக்கத்தின் சார்பில் நானும், வீரமணியும், பழ. நெடுமாறன், அய்யணன் அம்பலம் ஆகியோரும் பேரணிகளை நடத்தியதை தொடர்ந்து மதுரையில் டி.யு.எல்.எப். சார்பாக அமிர்தலிங்கம், புரோடெக் சார்பாக சந்திரகாசன், ஈராஸ் ரத்தின சபாபதி, டி.இ.எல்.எப். ஈழவேந்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். வரதராஜப்பெருமாள், பிளாட் வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்ட மாநாட்டில் என்.டி. ராமராவ், வாஜ்பய், பகுகுணா, ராம்வாலியா, உபேந்திரா, உன்னிகிருஷ்ணன், சுப்பிரமணியம் சுவாமி மற்றும் பலர் போராளிகளிடையே சகோதர ஒற்றுமை வேண்டுமென்று வலியுறுத்தினார்கள். அந்த மாநாட்டிற்கு எல்.டி.டி.ஈ. சார்பாக திலகர் என்பவர் வந்திருந்தாரே தவிர, பிரபாகரன் வரவில்லை.
முதலமைச்சராக இருந்து கொண்டே, இந்தியாவிற்கு திரும்பி வந்த அமைதிப் படையை வரவேற்கச் செல்லாமல் புறக்கணித்து, தமிழ்நாட்டின் உணர்வை நான் வெளிப்படுத்திய நிகழ்வு இலங்கையில் நடந்த விடுதலைப் போராட்டத்திற்கு நமது தாய் மண்ணிலிருந்து நீட்டப்பட்ட ஆதரவுக் கரம் என்பதை யாரும் மறந்துவிட முடியாது. ஆனால் அங்கிருந்த ஒரு சிலருக்கு நாமே வலுவில் சென்று வழங்கிய ஆதரவு மிக லேசாகவே தெரிந்தது. வீரத்தை பயன்படுத்திய அளவுக்கு போர் முனையில் விவேகத்தையும் பயன்படுத்தவேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தியதை அலட்சியப்படுத்தி விட்டார்கள். ஜனநாயக ரீதியான ஒரு வாய்ப்பு வாசற்படி வரையில் வந்தபோது, அதை எட்டி உதைத்து விட்டனர்.
அண்மையில் சென்னை வந்த இலங்கை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கே நக்கீரன் இதழுக்கு அளித்த பேட்டியில், ‘‘இந்தப் போரின் விளைவுகளுக்கு ஒரு வகையில் பிரபாகரனும் காரணம். தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வுகாண முயற்சி நடந்த போதெல்லாம் அதனை தவிர்த்தார். 2003ல் நடந்த அமைதிப் பேச்சு வார்த்தையிலிருந்து தானாக வெளியேறினார். 2005 டோக்கியோ பேச்சுவார்த்தையிலும் தமிழர் கோரிக்கைகள் என்னவென்பதை தெரிவிக்காமலே இழுத்தடித்தார். அதில் கலந்து கொள்வதை தவிர்த்தார். 2005 அதிபர் தேர்தலில் தமிழர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கச் செய்தார். தேர்தலில் பங்கேற்று இருந்தால் தமிழர் மனநிலை என்ன என்பதை நாடு அறிந்து கொள்ள முடிந்திருக்கும். அந்த ஜனநாயக வாய்ப்பை தமிழ் மக்களுக்கு தர பிரபாகரன் தவறி விட்டார்’’ என்று கூறியிருக்கிறார்.
அதை கூர்ந்து கவனித்தால் விடுதலைப் புலிகள் போர் தந்திரத்தை எதிர்கால கணிப்போடு கையாளவில்லை என்பதை புரிந்து கொள்ள முடியும். சகோதர யுத்தத்தின் காரணமாக மாத்தையாவிற்கு மரண தண்டனை நிறைவேற்றியும், டெலோ சிறீ சபாரத்தினத்தை சவமாக ஆக்கியும், பத்மநாபாவை கொன்றும், தொடக்கத்திலிருந்து போராளி துணைவராக விளங்கிய அமிர்தலிங்கத்தையும் யோகேஸ்வரனையும் பலியாக்கியும், ரெலோ இயக்கத்தை சேர்ந்த மனோ மாஸ்டர் என்ற பஞ்சலிங்கத்தையும் தலைவர் குலசேகரம் தேவசேகரத்தையும், தலைசிறந்த அரசியல் அறிஞர் நீலன் திருச்செல்வத்தையும், சுந்தரம் எனப்பட்ட சிவசண்முகமூர்த்தியையும், ஜார்ஜ், சபாலிங்கம், சாம் தம்பிமுத்து, கலா தம்பிமுத்து மற்றும் பிளாட் இயக்க யோதீஸ்வரனையும், வாசுதேவாவையும் மரணக் குழியிலே தள்ளியும் விடுதலை புலிகள் தங்கள் துணைகளை தாங்களே திட்டமிட்டு தொலைத்துவிட்ட காரியங்களாக அமைந்தன என்பதை இந்த போர்முனை சரித்திரம் சொல்லி புலம்பிக் கொண்டுதானிருக்கிறது. யார் மீதும் குற்றம் சொல்வதற்காக நான் இதை எழுதவில்லை. இலங்கையில் 2004 தேர்தல் முடிந்து புதிய அரசு அமைந்த ஒரு சில நாட்களுக்குள் கிழக்கு இலங்கையில் பிரபாகரன், கருணா படைகளிடையே யுத்தம் ஏற்பட்டு அதிலே 20 போராளிகளும் 2 சிவிலியன்களும் கொல்லப்பட்டார்கள்.
நம்மை நாமே கொன்று குவித்துக் கொண்டது மாத்திரமல்ல. முறையாக திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொள்ள தவறிய காரணத்தால் நம் பலத்தையும், மாற்றார் பலத்தையும் துல்லியமாக கணிக்காத காரணத்தால் நம் தமிழ் மக்கள் எத்தனை பேர் மாற்றாரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரை இழக்க நேரிட்டது?
இளம் சிறார்கள் எத்தனை பேர் பிஞ்சு வயதிலேயே வெந்து மாண்டனர்? அவர்களுடைய பெற்றோர் எத்தனை வேதனைப்பட்டிருப்பார்கள்? எத்தனை பேர் தங்கள் சொத்து சுகங்களை இழந்து நாடு விட்டு நாடு பஞ்சைகளாக, பராரிகளாக செல்ல நேரிட்டது? தங்கள் வாழ்க்கையை தொடர அவர்கள் எங்கெங்கு அலைந்து திரிய வேண்டியதாயிற்று? எத்தனை பேர் அகதிகள் முகாம்களில் ஆண்டுக்கணக்கில் வாட நேர்ந்தது? இதற்கெல்லாம் காரணம் என்ன?
பிரபாகரன் மனைவி மக்கள் கதிதான் என்ன? இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து தமிழர் உயர்வுக்காக பாடுபட வேண்டியவர்கள் அற்ப ஆயுளில் போய் விட்டார்களே என்ற ஆதங்கத்தில்தான் இதனை எழுத நேரிட்டது.
என்னையும், தம்பி மாறனையும் 1989ல் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி டெல்லிக்கு அழைத்து ஈழப் பிரச்னை குறித்து இரண்டு நாள் உரையாடி, ‘நீங்களும், மாறனும், வைகோவும் இலங்கை சென்று கொழும்பிலோ அல்லது உங்களுக்கு விருப்பமான இடத்திலோ முகாமிட்டு பிரபாகரனுடன் பேசுங்கள். எத்தனை நாள் வேண்டுமானாலும் செலவிடுங்கள். தேவையான ஏற்பாடுகளை செய்து தருகிறேன். அவர் கோரிக்கை என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இலங்கை தமிழ் மக்களின் உரிமைகளை நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேன்’ என்றெல்லாம் எங்களுக்கு சொல்லி உறுதியளித்தார். அந்த இளந்தலைவர் இந்திய மண்ணில் அதுவும் தமிழ் மண்ணிலேயே கொலையுண்டார் என்பது ஒரு மாபெரும் சோகச் சம்பவம். அது ஈழ விடுதலைப் போராட்ட தீயில் தண்ணீர் விட்டு அணைத்தது போல் ஆயிற்று.
அடுத்து 2005ல் இலங்கை அதிபர் தேர்தல் நடைபெற்றது. பிரதமராக இருந்த மகிந்த ராஜபட்சேவும் அவரை எதிர்த்து முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் போட்டியிட்டார்கள். தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் புலிகளுடன் அமைதிப் பேச்சை தொடருவேன் என்றார் ரணில்.
அந்த தேர்தலை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டுமென்று விடுதலைப் புலிகள் அறிவுறுத்தினர். அப்போது ரணில் சொன்னதைதான் இப்போது பேட்டியிலும் குறிப்பிட்டுள்ளார். அந்த தேர்தலில் ராஜபக்சே வெற்றி பெற்றார். அவருக்கு 48,87,152 (50.29 சதவிகிதம்) வாக்குகளும், ரணிலுக்கு 47,06,366 (48.43 சதவிகிதம்) வாக்குகளும் கிடைத்தன. 1 லட்சத்து 81 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ரணில் தோல்வி அடைந்தார். ஏழு இலட்சம் தமிழ் வாக்காளர்கள் தேர்தலை புறக்கணித்த காரணத்தால் ஏற்பட்ட முடிவை பார்த்தால், விடுதலைப் புலிகள் அவசரப்பட்டு அன்று எடுத்த அரசியல் முடிவின் விளைவுகள் எங்கே போய் முடிந்தன என்பது புரியும். அதை எண்ணிப் பார்த்து நாம் மௌனமாக அழுவது யார் காதில் விழப் போகிறது? நம் மௌன வலிதான் யாருக்கு தெரியப் போகிறது? இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.
செய்தி: நன்றி:தினகரன்
Tuesday, November 10, 2009
கருணாநிதிக்கு நோபல் பரிசு தர வேண்டும்: துரைமுருகன்
ஜாதிகளை ஒழிக்கப் பாடுபட்ட முதல்வர் கருணாநிதிக்கு நோபல் பரிசு தர வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் 100 வீடுகள் கொண்ட சமத்துவப்புரத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொட்டும் மழையில் நேற்று திறந்து வைத்தார்.
இந்த விழாவில் பேசிய துரைமுருகன்,
ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி கூட தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துக்கொண்டு ஆலய பிரவேசம் செய்தார். இப்படி பல தலைவர்கள் ஜாதியை ஒழிக்க வேண்டும் என ஒவ்வொரு விதத்தில் போராடி விட்டு அவர்கள் தங்களது இடங்களுக்கே திரும்பி சென்று விட்டனர்.
ஆனால் தமிழக முதல்வர் கருணாநிதி மட்டும்தான் இதிலிருந்து வித்தியாசமாக யோசித்து சமத்துவபுரம் என்ற உன்னதத் திட்டத்தை கொண்டு வந்து எல்லா ஜாதி மக்களையும் ஒரே இடத்தில் குடியமர்த்தி ஜாதி ஒழிக்க பாடுபடுகிறார்.
இதற்காக முதல்வர் கருணாநிதிக்கு நோபல் பரிசு தர வேண்டும். ஆனால் தரமாட்டார்கள். காரணம் இவர் தமிழன் என்பதால்தான்.
ஏன்?, இந்தியாவில் தரப்படும் சாகித்ய அகடாமி விருதுக்கு கூட தகுதியானவர் தான் கருணாநிதி. அவர் எழுதாத இலக்கியங்களா... அவரைப் போல யார் எழுதியிருக்கிறார்கள்?. அப்படிப்பட்ட தலைவருக்கு அவ்விருது கூட வழங்கப்படவில்லை. காரணம் இவர் தமிழன்.
மு.க.ஸ்டாலினை பாரட்டும் தகுதி எனக்கு இருக்கிறது. சிறு வயது முதலே அவரது வளர்ச்சியை, நடவடிக்கையை பார்த்து வருபவன் நான். அண்ணா, கலைஞருடன் இருந்திருக்கிறேன். தற்போது ஸ்டாலினுடன் இருப்பதை பெருமையாக இருப்பதை கருதுகிறேன். வேறு கட்சி நிழல் கூட படாமல், வளர்ந்து விட்டவன் நான் என்றார்.
செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்
Tuesday, November 3, 2009
செயல்படாத எதிர்கட்சித் தலைவர்கள் - முதலிடம் ஜெ.
இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் வரலாறு காணாத வகையில் செயலிழந்து போயுள்ளன அல்லது சிதறிப் போய்க் கிடக்கின்றன. இதனால் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் ஆளுங்கட்களின் செயல்பாடுகள் கேட்க நாதியில்லாமல் இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
உட்கட்சிப் பூசல், கூட்டணிக் கட்சிகளை சமாளிப்பதில் ஏற்படும் சிரமங்கள், ஆளுங்கட்சிகளின் ஆதிக்கம் அதிகரித்திருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் எதிர்க்கட்சிகளுக்கு இப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டிருப்பதாக அரசியல் திறனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து டெல்லி பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறை தலைவர் பித்யூத் சக்ரவர்த்தி கூறுகையில், இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் முழுமையாக சிதறிப் போய்க் கிடக்கின்றன.
மத்தியிலும் கூட இதே நிலைதான். எதிர்க்கட்சி என்பது அரசைக் கட்டுப்படுத்துவதில், கண்காணிப்பதில் கடிவாளம் போல இருக்கும் என்ற தோற்றம் தற்போது மறைந்து விட்டது. மத்தியிலும் சரி, மாநிலங்களிலும் சரி எதிர்க்கட்சிகள் செயலிழந்து போய்க் கிடக்கின்றன.
மத்தியப் பிரதேசத்தில், 2வது முறையாக பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆனால் திறமையாக செயல்பட வேண்டிய காங்கிரஸ் அங்கு உட்கட்சிப் பூசலில் சிக்கித் தவிப்பதால் எதிர்க்கட்சியாக அதன் செயல்பாடு பூஜ்யமாக உள்ளது.
ராஜஸ்தானில், அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசின் செயல்பாடுகளுக்கு நிகராக எதிர்க்கட்சியான பாஜக இல்லை. தேங்கிப் போய்க் கிடக்கிறது பாஜக.
தமிழகத்தில் நிலைமை மிக மோசமாக உள்ளது. இங்கு கிட்டத்தட்ட எதிர்க்கட்சியே இல்லாத அளவுக்கு தோற்றம் அளிக்கிறது. வழக்கமான முறையிலான எதிர்ப்புகளையோ அல்லது போராட்டங்களையோ, அரசின் மீதான விமர்சனங்களோ கூட இங்கு கேட்பதில்லை. அடுத்து வரப் போகும் சட்டசபைத் தேர்தல் குறித்தும், இடைத் தேர்தல் குறித்தும், கூட்டணிகள் குறித்துமே அத்தனை பேரும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த ஆறு மாதங்களாகவே முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவின் தலைவர் சென்னையில் இல்லை. சமீபத்தில்தான் அவர் கொடநாடு போய் திரும்பி வந்தார்.
பிரதான எதிர்க்கட்சியின் செயல்பாடு கடந்த ஆறு மாதங்களாக இல்லாததால் திமுக அரசின் செயல்பாடு எந்தவிதத்திலும் பாதிப்பை சந்திக்கவில்லை. கிட்டத்தட்ட எதிர்ப்பே இல்லாமல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது திமுக. மேலும் வெற்று அறிக்கைகள் மூலம் மட்டுமே அரசை விமர்சித்து வரும் ஜெயலலிதாவால் ஆளும் கட்சி்க்கு எந்த நெருக்கடியும் இல்லை.
இதேபோல கர்நாடகத்திலும், ஆந்திராவிலும் முறையே காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகியவை திறமையான எதிர்க்கட்சிகளாக செயல்படாத நிலை காணப்படுகிறது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் இன்னும் முழுமையான எதிர்க்கட்சியாக செயல்படாமலேயே உள்ளது என்றார் சக்ரவர்த்தி.
அதேசமயம், மேற்கு வங்கம், உ.பி ஆகிய மாநிலங்களில் எதிர்க்கட்களின் செயல்பாடுகள் சுறுசுறுப்பாக உள்ளன. ஆனால், திரிணமூல் காங்கிரஸ் அரசின் தவறுகளை விமர்சிப்பதற்குப் பதில், வளர்ச்சி நடவடிக்கைகளை ஸ்தம்பிக்க வைக்கும் வகையில் செயல்படுவதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதேபோலத்தான் உ.பியில் சமாஜ்வாடிக் கட்சி ஆக்கப்பூர்வமாக செயல்படாமல், வளர்ச்சி நடவடிக்கைகளே செயல்படாத வகையில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
மேற்கு வங்க அரசு எதைச் செய்தாலும் அதைக் கடுமையாக எதிர்க்கிறார் மமதா பானர்ஜி. இதனால் அங்கு வளர்ச்சி நடவடிக்கைள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.
இந்தியாவிலேயே உருப்படியான எதிர்க்கட்சி உள்ள மாநிலம் எது என்றால் ஜம்மு காஷ்மீரைத்தான் சொல்கிறார்கள் அரசியல் நிபுணர்கள். அங்கு மெஹபூபா முக்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி தேவையில்லாத பிரச்சினகைளுக்கெல்லாம் போராட்டம் நடத்தாமல், மக்கள் விரோத நடவடிக்கைகளை மட்டுமே எதிர்த்து அரசியல் செய்து வருகிறது.
தீவிரவாத மனப்போக்குள்ளவர்களையும், தேசியத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களையும் அனுசரித்து நடந்து கொள்கிறது மக்கள் ஜனநாயகக் கட்சி. இன்னும் சொல்லப் போனால் தீவிரவாத மனப்போக்குள்ளவர்களை மாற்றி தேசியத்திற்கு அது அழைத்து வரும் பணியையும் கூடவே செய்கிறது.
மக்கள் ஜனநாயகக் கட்சி எப்போதும் விழிப்புடன் இருப்பதால் ஆளுங்கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சி தவறுகள் செய்யாமல் தவிர்ப்பதில் அக்கறையுடன் உள்ளது. இப்படி ஆளுங்கட்சி தனது பணியில் கவனத்துடன் இருப்பதாலும், எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி ஆளுங்கட்சியை தொடர்ந்து கண்காணித்து வருவதாலும் அங்கு தவறுகள் நடப்பது வெகுவாக குறைந்துள்ளது.
கடந்த 2002ம் ஆண்டிலிருந்தே ஜம்மு காஷ்மீரில் எதிர்கட்சிகளின் செயல்பாடுகள் சிறப்பாகவே உள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
செய்தி: நன்றி:தட்ஸ்தமிழ்