தி.மு.க. அரசு நல்ல காரியம் செய்யவில்லையா? சாதனைகளை பட்டியலிட்டு முதல்வர் கருணாநிதி பதில்
படம் நன்றி: தினகரன்
பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா வரும் 9ம் தேதி நடக்கிறது. சிலை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை அங்கு தங்கியுள்ள முதல்வர் கருணாநிதியை சந்தித்து, கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் ஆச்சார்யா நேற்று வழங்கினார். அருகில் பெங்களூர் போலீஸ் கமிஷனர் சங்கர்பத்ரி, கன்னட மற்றும் பண்பாடு இயக்குனர் மனோபலேகர்.
சென்னை, ஆக. 6: முதல்வர் கருணாநிதி பெங்களூரில் ஓய்வு எடுத்து வருகிறார். கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:
தி.மு.க.வின் மூன்றரை ஆண்டு கால ஆட்சிக்கு நீங்கள் எவ்வளவு மார்க் போடுவீர்கள் என்ற கேள்விக்கு, மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாத தி.மு.க. அரசுக்குப் பூஜ்யம் மதிப்பெண்தான் கொடுப்பேன் என்று விஜயகாந்த் சொல்லியிருக்கிறார். அவரது கேள்விகளுக்கு பொதுவாக நீங்கள் பதில் சொல்வதில்லையென்ற போதிலும், ஐந்து தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் மக்களுக்கு தெளிவுபடுத்தவாவது என்ன நல்ல காரியங்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்று விளக்கலாம் அல்லவா?
தி.மு.க. ஆட்சி அமைந்த போதெல்லாம் ஆற்றிய பணிகள் சிலவற்றை மட்டும் தருகிறேன். அவை நல்ல காரியங்களா அல்லவா என்பதை மக்களே கூறட்டும்.
மெட்ராஸ் ஸ்டேட் என்பதற்குத் தமிழ்நாடு என்ற பெயர்,
சுயமரியாதைத் திருமணச் சட்டம்,
பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு அமைத்து, அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 25 லிருந்து 31 சதவீதமாகவும் தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 16 லிருந்து 18 சதவீதமாகவும் உயர்த்தியது.
வன்னியர், சீர்மரபினர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டோர்க்கு தனியாக 20 சதவீத இடஒதுக்கீடு,
பழங்குடியினர்க்கு தனியாக ஒரு சதவீதம்,
மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கும் வருமான வரம்பிற்குட்பட்டு பிற்படுத்தப் பட்ட வகுப்பினர்க்கும் பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி,
தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்கும், வருமான வரம்பிற்குட்பட்டு பெண்களுக்கும் பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி.
பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம்,
உருது அகாடமி,
சென்னை திரைப்பட நகருக்கு எம்.ஜி.ஆர். பெயர்,
தென் குமரியில் அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவியது,
தை திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கும் நாள் என சட்டம் இயற்றப்பட்டு; தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் திருநாளைக் கொண்டாட எல்லா குடும்பங்களுக்கும் சர்க்கரைப் பொங்கல் தயாரிப்பதற்கான இலவச பொருட்கள் வழங்கப்பட்டது.
காமராஜர் பிறந்த நாள்,பள்ளிகளில் கல்வி விழா கொண்டாடப்படுகிறது.
முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதமும் அருந்ததியருக்கு 3 சதவீதமும் உள்ஒதுக்கீடு.
அனைத்துச் சாதியாரும் அர்ச்சகராகும் சட்டம்.
கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் ரத்து.
பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கிடச் சட்டம்.
அரசுப்பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு,
உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு,
10 லட்சம் மகளிர் பயன்பெறும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் திட்டம்.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டத்தின்கீழ் நிதியுதவி 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.
ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்தின்கீழ் 10 லட்சத்து 78 ஆயிரத்து 612 ஏழை மகளிருக்கு ரூ.487 கோடியே 56 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது;
ஆனால் தே.மு.தி.க. தலைவர், ஒரு கர்ப்பிணிக்குக் கூட உதவி செய்யவில்லை என்று பேட்டி கொடுத்துள்ளார்.
10 லட்சத்து 48 ஆயிரம் மகளிர் உறுப்பினரைக் கொண்ட 61 ஆயிரத்து 687 புதிய மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு, மொத்தம் ரூ.4 ஆயிரத்து 126 கோடியே 78 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
தமிழை செம்மொழியாக அறிவிக்கச் செய்தது,
நூறாண்டுக் கனவை நனவாக்கி செம்மொழித் தமிழாய்வு மையம் சென்னையில் அமைப்பு.
தமிழ் வழியில் பயிலும் 50 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவியர்க்கு அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் சிறப்புக் கட்டணங்களும், 10, 12ம் வகுப்புகளின் அரசுத் தேர்வு கட்டணங்களும் ரத்து.
தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமை, விருதுகள் வழங்குதல், பரிவுத் தொகைகள் வழங்குதல்.
பேருந்துகள் நாட்டுடைமை, போக்குவரத்துக் கழகங்கள் உருவாக்கம்,
1500 மக்கள் தொகை கொண்ட கிராமங்களை முக்கியமான சாலைகளோடு இணைக்க இணைப்புச் சாலைதிட்டம்.
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுக்கு இந்தியாவிலேயே முதன் முதலாக நிதி ஒதுக்கும் திட்டம்,
1 கோடியே 85 லட்சம் குடும்பங்களுக்கு கிலோ அரிசி 1 ரூபாய் வீதம் மாதம் 20 கிலோ அரிசி.
ரேஷன் கடைகளில் பாமாயில் எண்ணெய், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, மைதா, கோதுமை மாவு குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.
ரூ.70 மதிப்புடைய 10 சமையல் பொருள்கள், ரூ.50க்கு வழங்கப்படுகிறது.
வருமுன் காப்போம் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டு 8 ஆயிரத்து 361 மருத்துவ முகாம்களில் 84 லட்சத்து 71 ஆயிரத்து 493 ஏழைகள் பயன்.
598 சிறார்களுக்கு அரசு மருத்துவமனை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட 17 தனியார் மருத்துவமனைகளின் மூலம் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
கடும் ஊனமுற்றோருக்கான உதவித் தொகை மாதம் 200 ரூபாய் என்பது 500 ரூபாய் என உயர்த்தப்பட்டது.
ரூ.1,524 கோடி செலவில் 7 ஆயிரத்து 585 கிராம ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.
அதேபோல, அனைத்துப் பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.140 கோடி செலவில் 280 பேரூராட்சிகளிலும், நிதிநிலையில் நலிந்த 30 நகராட்சிகளிலும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் 343 பாலங்கள் ரூ.214 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளன;
ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி நகராட்சிகள் மாநகராட்சிகளாக நிலை உயர்த்தப்பட்டுள்ளன.
அரியலூர், திருப்பூர் புதிய மாவட்டங்களாக உதயம்;
சென்னையில் உலகத் தரத்திலான ரூ.150 கோடி மதிப்பீட்டில் மாநில நூலகம்,
ரூ.400 கோடி செலவில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய சட்டமன்ற தலைமைச்செயலக வளாகம்,
ரூ.100 கோடி ரூபாய் செலவில் அடையாறு பூங்காத் திட்டம்.
வட சென்னை மீஞ்சூரில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்.
ரூ.908 கோடி நிதியுதவியுடன் தென் சென்னையில் நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்.
ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கி நிதியுதவியுடன் ரூ.14 ஆயிரத்து 600 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம்;
ரூ.1330 கோடி மதிப்பீட்டில் ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்,
ரூ.630 கோடி செலவில் ராமநாதபுரம் பரமக்குடி கூட்டுக் குடிநீர்த் திட்டம்.
சென்னையில் டைடல் பூங்கா அமைத்தது.
குடிசை மாற்று வாரியம்,
குடிநீர் வடிகால் வாரியம்,
கண்ணொளி வழங்கும் திட்டம்,
பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம்,
கை ரிக்ஷாக்களை ஒழித்து இலவச சைக்கிள் ரிக்ஷாக்கள் வழங்கும் திட்டம்,
ஊனமுற்றோர் நல்வாழ்வுத் திட்டம்.
தாழ்த்தப்பட்டோர்க்கு இலவச கான்கிரீட் வீடுகள்,
இலவச வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகள்,
எரிவாயு இணைப்புடன் இலவச எரிவாயு அடுப்பு ஆகியவை வழங்கப்பட்டுள்ளன;
புன்செய் நிலவரி அறவே நீக்கம்,
உழவர் சந்தைகள் திட்டம்.
ரூ.7 ஆயிரம் கோடி கூட்டுறவுக் கடன் தள்ளுபடி,
விவசாயக் கடன் வட்டி4 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
1 லட்சத்து 74 ஆயிரத்து 941 நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்கள் விவசாயிகள் குடும்பங்களுக்கு 2 லட்சத்து 10 ஆயிரத்து 134 ஏக்கர் இலவச நிலம் வழங்கப்பட்டுள்ளது;
6 லட்சத்து 50 ஆயிரத்து 517 ஏழைக் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 3 லட்சம் படித்த இளைஞர்களுக்கு அரசு அலுவலகங்களில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
சத்துணவுடன் வாரம் 3 முறை முட்டைகள்.
தொழிற்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ரத்து.
கோவை, திருச்சி, நெல்லை ஆகிய இடங்களில் மூன்று புதிய அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக் கழகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்திற்கொரு மருத்துவக் கல்லூரி என்ற கோட்பாட்டின்படி விழுப்புரம், திருவாரூர், தருமபுரி, சிவகங்கை, பெரம்பலூர் ஆகிய இடங்களில் 5 மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கம்.
திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, அரியலூர், திருக்குவளை, இராமநாதபுரம் ஆகிய 6 இடங்களில் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்திய வரலாற்றிலேயே எந்தவொரு மாநிலத்திலும் செய்யப்படாத அளவிற்கு ஒரு கோடி ஏழை மக்களுக்கு உதவிடும் வகையில் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் இந்த ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது.
இந்த அரசு ஏதாவது நல்ல காரியம் செய்திருக்கிறதா என்று கேள்வி கேட்டுள்ள தே.மு.தி.க. தலைவருக்கு இந்த விளக்கங்கள் போதும் என்று நினைக்கிறேன்.
செய்தி: நன்றி: தினகரன்
No comments:
Post a Comment