Tuesday, July 28, 2009

ஆத்துல ஒரு அம்மாமி - கருணாநிதி

நானும் ஒரு பத்திரிகைக்காரன் என்ற முறையில் பத்திரிகைகளிடம் பகைமை பாராட்டுவதில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அருகில் இருந்தும், தொலைவில் இருந்தும் உடன் பிறப்புகள் என் மீது அன்பைப் பொழிந்து கொண்டும், அண்ணனே, உனக்காக உயிரையே தரத் தயாராக இருக்கிறேன் என்ற உறுதிமொழிகளை வழங்கிக் கொண்டும், என் நாடி நரம்புகளில் பாசப்பெரு வெள்ளமாய் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, சில வார ஏடுகள் (எல்லா ஏடுகளும் அல்ல) என்னைக் கேலி செய்தும், என் எழுத்துக்களை இழிவுபடுத்தி விமர்சித்தும், கட்டுரைகள், கேலிச் சித்திரங்கள் என ''கான மயிலாட கண்டிருந்த வான்கோழிபோல'' ஆடிப்பார்க்கும் அவலட்சணத்தின் அநாகரீகத்தின் உச்சமே அந்த ஏட்டாளர்களுக்கு மிச்சம்.

இதோ!. என் துணைவி தயாளு அம்மையாரைப் பற்றி கேலிச் சித்திரம் போடவும், தயங்கிடவில்லை என்பதற்கு அடையாளமாக 24-6-2009 தேதிய ஆனந்த விகடனில் "கன்னா பின்னா'' கார்ட்டூன்களில் ஒன்று வெளிவந்துள்ளது.

அக்ரகாரத்துக்கு எவ்வளவு ஆணவம் பார்த்தாயா? ''நாமும் கார்ட்டூன் வரைந்திட அவா ஆத்துல ஒரு அம்மாமி கிடைக்காமலா போய்டுவா?''.

என்னிடத்தில் ஆழ்ந்த அன்பும் பற்றும் பாசமும் கொண்ட இளங்கவிஞர் தமிழ்தாசன் இந்தப் படங்கள் குறித்தே ஒரு கண்டனக் கடிதத்தை எனக்கெழுதி, அதே ஆனந்த விகடன் 25-4-1954ல் எழுதிய 'மனோகரா' திரைப்பட விமர்சனத்தையும் அந்த ஏட்டிலிருந்தே எடுத்து எனக்கு அனுப்பியுள்ளார். அதை அப்படியே இந்தக் கடிதத்துடன் இணைத்திருக்கிறேன். அதன் விவரம்:

"தாயைத் தெய்வமாகக் கொண்டாடும், அவளை வழிபட்டு வணங்கும் தமிழ்ப் பெரு மரபிலே, ஒரு தமிழ் மகன் எத்தனை வீறுகொண்டு எழுந்தாலும், எப்பேர்ப்பட்ட எரிமலை போல் குமுறிக் கிளம்பினாலும், 'தாய்' என்ற ஒரே ஒரு மந்திரச் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அடங்குவான்.

இந்த மகத்தான உண்மையை வற்புறுத்துகிறது 'மனோகரா'.

மனோகரனைச் சங்கிலிகளால் கட்டிச் சபை நடுவே இழுத்து வரச்செய்து, வசந்தசேனையிடம் மன்னிப்புக் கேட்கச் சொல்கிறான் மன்னன். "என்ன குற்றம் செய்தேன், அரசே! பதில் சொல்லும்'' என்று இடி முழக்கம் செய்த இளவரசன், சங்கிலிகளை அறுத்துக் கொண்டு கத்தியை ஓங்கியவாறு சண்டமாருதமென முன்னேறும் சமயம், "இனி இந்தச் சூறாவளியை யாரால் நிறுத்த முடியும்? தொலைந்து போனான் அரசன்!'' என்று நாம் முடிவு கட்டும்போது, "என் மார்பிலே உன் கத்தியை முதலில் பாய்ச்சு! பிறகு என் சவத்தின் மீது நின்று கொண்டு உன் தந்தையுடன் சண்டை போடு!'' என்று கூறுகிறாள் அந்தப் பதிவிரதா ரத்னம்.

தாய்மையின் வெற்றி மனோகரனை அடக்குவதுடன் மட்டும் நின்றுவிடவில்லை. அவனை வீரனாக்கி, மாசற்ற மனம் படைத்தவனாகவும் ஆக்குகிறது.

மனோகரனைத் தூணிலே சங்கிலியால் கட்டியிருக்கிறது. சாட்டை கொண்டு அவனை அடிக்கிறான் ஒரு பாதகன். வசந்தசேனையும் அவள் ஆரம்பக் காதலனும் மனோகரனின் பச்சிளம் பாலகனை எடுத்துவரச் செய்து, அவன் கண்ணெதிரிலேயே கத்திக்கு பலியாக்க விழைகிறார்கள்.

எந்தக் கணவனை உத்தேசித்து இதுவரை பொறுமையை மேற்கொண்டாளோ, அவனே சிறையிலே விழுந்துவிட்ட பின், பொறுமையைக் கைவிடும்படி மகனுக்கு ஆக்ஞை கொடுக்கிறாள் தாய்.

"மகனே, பொறுத்தது போதும்... பொங்கியெழு!'' என்று அவள் கூறியதும், எதிர்பார்த்தது நடைபெறுகிறது. சங்கிலி அறுகிறது; தாயின் துயர் துடைக்க, தாய் நாட்டை மீட்க, கொந்தளித்துக் கொண்டு பாய்கிறான் மனோகரன்.

தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையிலே போட்டா போட்டி! தர்மம் சளைத்து விட்டது போன்று காண்கிறது; அதர்மம் வலுவடைந்து வருவது போலும் தோன்றுகிறது. கடைசியில் தர்மம் வென்று, அதர்மம் புல் முளைத்துப் போகிறது.

சிவாஜி கணேசனும், கண்ணாம்பாவும் இவ்விரு பாத்திரங்களை ஏற்று, அவற்றிலே ஊறி, படமெங்கும் தங்கள் ஒளியைப் பரவி வீசிவிட்டார்கள்.

வசந்த சேனை (டி.ஆர்.ராஜகுமாரி) கல் நெஞ்சம் படைத்த வஞ்சகி. ஹாஸ்ய பாத்திரமாக வரும் வஸந்தன் (எஸ்.ராதாகிருஷ்ணன்) பைத்தியக்காரன். அரசன் புருஷோத்தமன் (சதாசிவராவ்) நூற்றுக்கு நூறு மோகாந்த காரத்தில் மூழ்கிப் போனவன். இந்த பாகங்களை ஏற்று நடிப்பவர்கள் பிரதான பாத்திரங்களுடைய தரத்தைக் குன்றச் செய்யாமல் இருப்பது, இந்தப் படத்திலே ஒரு சிறந்த அம்சம்.

நல்ல கதையாக இருந்தால், ஜீவசக்தியுள்ள சம்பாஷணைகள் இருந்தால், பிரதான நடிகர்கள் நன்றாக நடித்துவிட்டால், பொது ஜன அபிமானம் கிட்டாமல் போகாது என்பதற்கு "மனோகரா''வை எடுத்துக் காட்டலாம்.'' இவ்வாறு விகடன் விமர்சனம் எழுதியது 1954ல்!.

வசனகர்த்தாவின் பெயரை மறைத்த விகடன்..

அந்தத் தம்பியின் கடிதத்தின் முடிவில் அந்தத் தம்பியே எழுதியிருக்கிறார் -மனோகரா வசனங்களைப் புகழ்ந்துவிட்டு அந்த வசனங்களை எழுதியுள்ள உங்கள் பெயரை அந்த ஏடு வெளியிடவே இல்லையே என்று ஆதங்கப்பட்டிருக்கிறார் தம்பி தமிழ்தாசன்!.

தம்பி தமிழ்தாசனுக்குச் சொல்கிறேன், மற்ற தம்பிமார்களுக்கும் கவனமூட்டுகிறேன். அந்த ஏடு 'மனோகரா' படத்துக்கு வசனம் எழுதிய என் பெயரையே மறைத்துவிட்டது என்ற கோபம் எனக்கு இருந்திருந்தால் அதே ஏடு நடத்திய ஐம்பதாம் ஆண்டு பொன்விழாவுக்கு நான் சென்றிருப்பேனா?.

அதேபோல, ஆனந்த விகடன் சார்பில் வெளியிட்ட 'பிரிட்டானிகா தகவல் களஞ்சியம்' என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள குடியரசு தலைவராக இருந்த அப்துல்கலாம் வர மறுத்த நிலையிலும்கூட, நான் அந்த விழாவிலே கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் அரசு நூலகங்களில் எல்லாம் அந்தப் புத்தகங்களை முப்பது லட்சம் ரூபாய்க்கு வாங்கிட வேண்டுமென்றும் ஆணையிட்டிருப்பேனா?

அது மாத்திரமல்ல, ஆனந்த விகடன் ஆசிரியராக இருந்த பாலசுப்பிரமணியம் மீது தமிழகச் சட்டமன்றத்தின் சார்பில், அதிமுக ஆட்சியிலே நடவடிக்கை எடுத்து, அவரை கைது செய்யும் அளவிற்கு நிலைமை சென்ற நேரத்தில், அந்தச்செய்தியினை வெளியூருக்கு காரிலே சென்று கொண்டிருந்த நான் வானொலியிலே கேட்டு விட்டு- உடனடியாக திண்டிவனத்திலே என் காரை நிறுத்தச் சொல்லி -அந்தச் செய்கையைக் கண்டித்து அங்கிருந்தே அறிக்கை கொடுத்திருப்பேனா?.


நானும் ஒரு பத்திரிகைக்காரன் என்ற முறையில் பத்திரிகைகளிடம் பகைமை பாராட்டுவதில்லை. அப்படிப் பாராட்டும் பண்பு எனக்கு இல்லாமல் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்து கொண்டிருப்பேனா? என்று கூறியுள்ளார் கருணாநிதி.


செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்

No comments: