'வாஞ்சிநாதன்' எஸ்.வி.சேகர்..கருணாநிதி:
எஸ்.வி.சேகர் (அதிருப்தி அதிமுக): 2006ம் ஆண்டு ஆடி அமாவாசை அன்று நான் பேசினேன். அதற்கு பிறகு உங்களுடைய கருணையால் இப்போது பேச வாய்ப்பு கிடைத்துள்ளது, நன்றி. இறந்துபோன என்னுடைய தந்தையின் நினைவு நாளான இன்று பேசவாய்ப்பு கிடைத்துள்ளது. முதலில் நான் பேசியபோது, மயானத்தில் பணியாற்றும் வெட்டியான்களை அரசு ஊழியர்களாக ஆக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தேன். அதை பத்தே நாட்களில் செய்து கொடுத்த துணை முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி.
சமூகநீதி மாநிலமாக இருக்கும் தமிழகத்திலே, சமூகநீதி காவலராக இருக்கும் முதல்வர் கருணாநிதியை பாராட்டுகிறேன். ஆளும் கட்சிக்காரர்கள்தான் தன்னை பாராட்டக்கூடாது என்று முதல்வர் சொன்னார். நான் பாராட்டுவதில் தவறில்லை. இதர பிரிவினர் நலவாரியம் ஒன்றையும் அமைத்துக் கொடுத்தால் மக்கள் அனைவருமே மகிழ்ச்சியோடு இருப்பார்கள்.
முதல்வர் கருணாநிதி: நம்முடைய சட்டமன்றத்தின் 'வாஞ்சிநாதன்' எஸ்.வி.சேகருடைய முறையீடும் கவனிக்கப்படும், பரிசீலிக்கப்படும்.
சென்னை அருகே சோளிங்கநல்லூரில் வீட்டுவசதி வாரியத்திற்குச் சொந்தமான இடத்தில் எம்எல்ஏக்களுக்கு அரசு விலையில் இரண்டரை கிரவுண்ட் நிலம் வழங்கப்படவுள்ளது.
சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம்:
திமுக எம்எல்ஏ பெரியண்ணன்: கடையேழு வள்ளல்களிலே முதல்வராக விளங்கிக் கொண்டிருக்கின்ற தமிழ் இனத்தின் தலைவரும், தமிழகத்தின் பொற்கால ஆட்சியில் கதாநாயகனாக இருக்கும் தலைவருடைய ஆட்சியில் தனி ஒரு மனிதர் யாரும் பலனடையாதவர்களே இல்லை என்ற நிலை உள்ளது. பெண்ணாகரம் ஒன்றியம் நாகரசம்பட்டி கிராமத்திலே பட்டாசு தொழிற்சாலையில் தீப்பற்றி ஒரு பெண்மணி இறந்துவிட்டார். அவருக்கு உதவி அளிக்கப்படுமா?
முதல்வர் கருணாநிதி: ஏதே ஒரு விபத்திலே இறந்துவிட்ட செய்தியை சொல்வதற்கும், அவர்களுக்கு நிதி கிடைக்குமா என்று கேட்பதற்கும் இவ்வளவு நேரம் என்னைப் புகழ வேண்டிய அவசியமில்லை. நான் திமுக எம்எல்ஏக்கள், தோழமை கட்சி எம்எல்ஏக்களுக்கு சொல்லிக் கொள்வது, உங்களுக்கு பேச கொடுக்கப்படும் நேரமே குறைவு, அதிலே எங்களைப் புகழ்வதற்கு ஒரு பகுதியை எடுத்துக்கொண்டால் யாருக்கும் பயன் இல்லை.
`இந்திரனே, சந்திரனே' என்று புகழ்ந்து பேசுவதால் காரியம் ஒன்றும் நடந்து விடாது. தயவு செய்து என்னையோ, அமைச்சர்களையோ நீங்கள் புகழ்வதை தவிர்க்க முடியா சந்தர்ப்பம் வந்தால் மட்டும் பயன்படுத்துங்கள். எப்போதும், கேள்வி கேட்கும் நேரத்தில் கூட, `உலகப் புகழ் பெற்ற தமிழர்களுடைய தலைவராக இருக்கின்ற கலைஞர் அவர்களே' என்று எங்களை புகழ்ந்து, எங்கள் ஊரில் பாலம் கட்டப்படுமா? என்று கேட்பதில் அர்த்தமில்லை என்றார்.
எம்எல்ஏக்களுக்கு வீட்டுமனை:
ஞானசேகரன் (காங்கிரஸ்): சோளிங்கநல்லூரில் வீட்டுவசதி வாரியத்திற்குச் சொந்தமான இடத்தில் எம்எல்ஏக்கள் யார் யார் கேட்கிறார்களோ, அவர்களுக்கு அரசு நிர்ணயிக்கின்ற நியாயமான விலைக்கு இரண்டரை கிரவுண்ட் நிலத்தை வழங்க வேண்டும்.
முதல்வர் கருணாநிதி: நீங்கள் குறிப்பிடுகின்ற இடத்தில் நீங்கள் ஒருவர் மாத்திரம் வீடு கட்டிப் பயன் எதுவும் இல்லை. ஒரு நூறு சட்டமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துக்களையாவது பெற்று என்னிடம் தந்தால், அந்த நூறு பேருக்கான வசதி மிக்க வீடுகளை அமைப்பதற்கு போதுமான இடம் உங்களுக்கு வழங்கப்படும்.
பாலபாரதி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்):- ஞானசேகரன் கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்ற வேண்டுமானால் மாநிலத்தின் நிதி முழுவதும் எம்எல்ஏக்களுக்கே தேவைப்படும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உறுப்பினர்கள் அந்த விண்ணப்பத்தில் கையெழுத்து போட வேண்டாம். எம்எல்ஏக்களுக்கு எல்லாம் வீடு இருக்கிறது. முதல்வர் அத்தியாவசிய தேவைகளை புரிந்து நிறைவேற்றி, அதிகபட்ச தேவைகளை நிராகரிக்க வேண்டும் என்றார்.
30 நிமிடத்தில் 105 எம்எல்ஏக்கள் கையெழுத்து:
100 பேரிடமாவது கையெழுத்து வாங்கி வாருங்கள் என்று முதல்வர் சொல்லி முடித்த 30 நிமிடத்தில், மின்னல் வேகத்தில் 105 எம்எல்ஏக்கள் இது தொடர்பான மனுவில் கையெழுத்து போட்டு அதை ஞானசேகரனிடம் தந்துவிட்டனர்.
ஆனால், அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இதில் கையெழுத்து போடவில்லை.
இன்று நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டு நிலம் ஒதுக்கப்படும் என்று நிதியமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார்.
செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்
No comments:
Post a Comment