Tuesday, August 25, 2009

அனைத்து பள்ளிகளிலும் இந்தி - கபில் சிபல்

"அனைத்து பள்ளிகளிலும் இந்தியை கற்றுக் கொடுப்பதன் மூலம், அனைவரிடமும் ஒருங்கிணைப்பு ஏற்படும். அது நம்மை அறிவில் சிறந்தவர்களாக வெளியுலகிற்கு அடையாளம் காட்டும்' என, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் தெரிவித்துள்ளார்.


டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பங்கேற்ற கபில்சிபல், மேலும் பேசியதாவது:

கல்விமுறையில் நமது பழைய நடைமுறைகளை மாற்றி, புதிய முறையில் சிந்திக்கத் தூண்டும் கல்வியே இப்போது தேவை. அறிவு சார்ந்த உலகை நாம் உருவாக்குவதன் மூலம், அதிலிருந்து மற்றவர்களும் கற்றுக் கொள்வர். பள்ளிகளில், மற்ற மொழிகளை கற்றுத் தருவது போல், இந்தி மொழியையும் கற்றுத் தரவேண்டும். பெரும்பாலான குழந்தைகள், தங்களது தாய்மொழியில் புலமை பெற்றவர்களாக உள்ளனர். அவர்கள், மற்ற மொழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும். எதிர்காலம் வளமாக அமைய, கல்விமுறையில், அடிப்படையான, அவசியமான மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியம்.


இந்தி மொழியை மாணவ மாணவிகள் கற்பதன் மூலம், நாட்டில் உள்ள மற்றவர்களுடன் அவர்களால் எளிதாக உரையாட முடியும். இதன் மூலம் சமூக ஒருங்கிணைப்பு ஏற்படும். அதுபோலவே, ஆங்கில மொழியையும் கற்று, உலக நாடுகளுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நம்மிடையே உள்ள திட்டவரையறைகளை குழந்தைகள் மீது திணிக்காமல், அவர்களது நலனில் ஒவ்வொருவரும் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு கபில் சிபல் பேசினார்.

செய்தி: நன்றி: தினமலர்

Thatstamil

No comments: