Wednesday, June 17, 2009

ஸ்டாலினுக்கு தங்கப் பதக்கம் - ராமநாதபுரம் குடிநீர் திட்டம்

குடிநீர் திட்டத்தை விரைந்து முடித்த ஸ்டாலினுக்கு தங்கப்பதக்கம் அணிவித்தார் கருணாநிதி


சென்னை, ஜூன் 17: ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரைந்து முடித்ததற்காக, தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை முதல்வர் கருணாநிதி பாராட்டி தங்கப் பதக்கம் அணிவித்தார். சான்றிதழும் வழங்கினார்.



அதைத் தொடர்ந்து துணை முதல்வரின் செயலர் தீனபந்து, குடிநீர் வழங்கல் செயலர் நிரஞ்சன் மார்டி, குடிநீர் வடிகால் வாரிய தலைவர் ஸ்வரண் சிங் ஆகியோருக்கும் முதல்வர் கருணாநிதி பாராட்டு சான்றிதழும், பதக்கமும் அணிவித்தார்.

இத்திட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் 220 பேருக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சான்றிதழும், பதக்கமும் வழங்கி பேசியதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நிலத்தடி நீர் உப்புத்தன்மை உடையது. இங்கு குடிநீர் ஆதாரங்கள் இல்லாத நிலையில், தொடர்ந்து அப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை இருந்து வந்துள்ளது. முதல்வர் கருணாநிதி, மக்களின் குறையை அறிந்து பிரச்னையை முழுவதுமாக நீக்குவதற்கு 30-01-07 அன்று அடிக்கல் நாட்டினார். கடந்த 11ம் தேதி திட்டத்தை தொடங்கியும் வைத்து விட்டார்.

திருச்சி காவிரி ஆற்றுப் பகுதியை நீர் ஆதாரமாக கொண்டு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மற்றும் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் சில பகுதியிலும் உள்ள மக்கள் இத்திட்டத்தில் பயன் பெறுவார்கள்.

இத்திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய முதல்வர், இந்த திட்டத்தை 3 ஆண்டுகளுக்கு பதில் 2 ஆண்டுகளில் நிறைவேற்றினால், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு பரிசளிப்பதாக அறிவித்தார். அதேபோல விரைவாக முடிக்க செயல்பட்டவர்களுக்காக இன்று முதல்வர் பதக்கங்களையும், பாராட்டு சான்றிதழையும் வழங்கி உள்ளார்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

செய்தி: படம்: நன்றி: தினகரன்

Monday, June 15, 2009

காங்கிரசுக்கு தமிழக ஆட்சியில் பங்கு தர முடிவு ?

தமிழக ஆட்சியில் பங்கு கேட்பது குறித்து காங்கிரஸ் மேலிடம் உறுதியாக இருப்பதாகவும், இதனை யடுத்து காங்கிரஸ் கட்சியில் முக்கியமான சிலருக்கு அமைச்சர் பதவி அளிக்க திமுக இறங்கி வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு ஏதுவாக திமுகவில் சில அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப் படும் என்றும் இலாகாக்கள் மாற்றப் படும் என்றும் கூறப்படுகிறது.

தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு பங்கு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுப்பப் பட்டு, அது தற்போது வலுவடைந்துள்ளது. இது குறித்து விவாதிக்க சென்னையில் இன்று நடக்கவிருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

எம்எல்ஏக்கள் கூடி விவாதிப்பதற்கு பதிலாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் உள்ளிட்டோர் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு அதுபற்றி விவாதிக்கப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல், தமிழ்நாடு காங்கிரசுக்கு பொறுப்பு வகிக்கும் மேலிட பார்வையாளர் குலாம்நபி ஆசாத் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது.

தமிழக அரசில் பங்கு கேட்க காங்கிரஸ் மேலிடமும் தற்போது விரும்புவதாகவும், அதுபற்றி ஆலோசனை நடத்தி திமுக தலைமைக்கு தெரிவிப்பது என்றும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

மத்திய அரசில் 7 அமைச்சர்களை பெற்றுள்ள திமுகவும், காங்கிரசுக்கு தமிழக அமைச்சரவையில் பங்கு கொடுக்க முடிவு செய்து தனது நிலையிலிருந்து இறங்கி வந்திருப்பதாகத் தெரிகிறது.

தற்போதைய நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் நடைபெறும் திமுக அரசில் காங்கிரசும் பங்கு பெற்றால், அரசு மட்டுமல்லாமல் கூட்டணியும் வலுவடையும் என்றும், இதனைக் கொண்டு அடுத்த சட்டமன்ற தேர்தலை சுலபமாக எதிர்கொள்ளலாம் என்றும் திமுக கருதுவதாக தெரிகிறது.

திமுக அரசுக்கு மிகவும் இணக்கமாக செயல்படும் காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் டி.சுதர்சனம், கொறடா பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட முக்கிய சில எம்எல்ஏக் களுக்கு அமைச்சர் பதவி அளிக்க திமுக மேலிடம் முன்வந்துள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

காங்கிரசை அரசில் சேர்க்கும் போது திமுகவைச் சேர்ந்த சில அமைச்சர் களின் பதவிகளும் பறிக்கப்படுவது தவிர்க்க இயலாததாக உள்ளது. ஏற்கனவே சில அமைச்சர்களின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ள முதலமைச்சர், அந்த அமைச்சர்களின் பதவிகளை பறிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் அமைச்சர்களின் இலாகாப் பொறுப்புக்களில் அதிரடி மாற்றங்களும் செய்யப்படவுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன. கோ.சி. மணி, பொங்கலூர் பழனிச்சாமி, பரிதி இளம்வழுதி, கா. ராமச்சந்திரன் உள்ளிட்ட சிலர் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படு வார்கள் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உடல்நலக்குறைவு காரணமாக கோ.சி. மணி அமைச்சர் பதவி யிலிருந்து நீக்கப்படலாம் என தெரிகிறது. பொங்கலூர் பழனிச் சாமியின் செயல்பாடுகள் அவரது சொந்த மாவட்டத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதால் கடந்த தேர்தலில் திமுக கூட்டணி கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங் களில் தோல்வி அடைய நேர்ந்ததாக கருதப்படுகிறது. இதன் காரணமாக அவரதுபதவிக்கு ஆபத்து ஏற்படும் என தெரிகிறது.

அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்து செல்லும் செய்தி விளம்பரத் துறை சரியாக செயல்படவில்லை என்ற புகாரை அடுத்து, அதற்கு பொறுப்பான பரிதி இளம்வழுதி மீது அதிருப்தி ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் கா. ராமச்சந்திரனின் செயல்பாடுகள் பொது மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல், கட்சியினர் மத்தி யிலும் அதிருப்தியை ஏற்படுத்தி யிருப்பதாக கூறப்படுகிறது. இதுபோல மேலும் சில அமைச்சர் களின் தலைகளும் உருளலாம் எனத் தெரிகிறது. சட்டமன்ற கூட்டத் தொடர் அடுத்த வாரம் தொடங்க உள்ள நிலையில், இந்த மாற்றங்கள் கூட்டத் தொடர் முடிந்ததும் நிகழலாம் எனக் கூறப்படுகிறது.

செய்தி: நன்றி: மாலைச்சுடர்

Thursday, June 11, 2009

சென்னை மெட்ரோ: 2014-2015

சென்னையில் ரூ.14,600 கோடி செலவில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான பணிகளை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். 5 ஆண்டுகளில் பணிகள் முடிந்து ரயில் ஓடத் தொடங்கும் என்று அவர் தெரிவித்தார்.

சென்னையில் மக்கள் நெருக்கம், வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு தரைக்கு அடியில் செல்லும் வகையில், டெல்லியில் உள்ளதுபோல் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது.

இத்திட்டத்தின்படி, இரண்டு பாதைகளில் மெட்ரோ ரயில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் திட்டப் பணிகள் தொடக்க விழா, கோயம்பேட்டில் நேற்று நடந்தது. துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். கொடி அசைத்து திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். விழாவில் தலைமைச் செயலர் ஸ்ரீபதி, மேயர் மா.சுப்பிரமணியன், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் சோமநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் ரூ.14,600 கோடியில் செயல்படுத்தப்படும். இதில் 59 சதவீதத்தை ஜப்பான் வழங்கும். இதற்கான ஒப்பந்தம் 21-11-2008ல் டோக்கியோவில் கையெழுத்தானது. மத்திய அரசு 20 சதவீதம் வழங்கும்.

இந்த திட்டப்படி 2 வழித்தடங்கள் அமையும்.

முதல் வழித்தடம் வண்ணாரப்பேட்டையிலிருந்து அண்ணா சாலை வழியாக விமான நிலையம் வரை 23.1 கி.மீ. நீளம் அமையும். வண்ணாரப்பேட்டையிலிருந்து சைதாப்பேட்டை வரை, 20 அடி ஆழ சுரங்கப்பாதையிலும் மீதி தூரம் மேம்பாலத்திலும் ரயில் செல்லும்.

2ம் வழித்தடம் சென்னை சென்ட்ரலில் இருந்து அண்ணா நகர், கோயம்பேடு வழியாக புனித தோமையர் மலையை அடையும். இதன் நீளம் 22 கி.மீ. அண்ணா நகர் வரை சுரங்கப்பாதையிலும் மீதி தூரம் மேம்பாலத்திலும் ரயில் செல்லும். திட்ட ஆலோசகர்களாக இந்தியா, பிரான்ஸ், ஹாங்காங், ஜப்பான் நிபுணர்கள் இருப்பார்கள்.

கோயம்பேட்டிலிருந்து அசோக் நகர் வரை மேம்பாலம் அமைக்கும் பணி ரூ.199.20 கோடியில் நடைபெறும். இந்த பணி இன்று தொடங்கப்பட்டு உள்ளது. நூறு அடி சாலையின் மத்தியில் இதற்கான தூண்கள் அமைக்கப்பட்டு மேம்பாலம் அமைக்கப்படும். 5 ஆண்டுகளில் பணிகள் முடிந்து மெட்ரோ ரயில் ஓடத் தொடங்கும். குறிப்பிட்ட காலத்தில் பணிகள் முடியும்.

திருவொற்றியூர் வரை மெட்ரோ ரயிலை நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு பரிசீலிக்கும். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

செய்தி: படம்: நன்றி: தினகரன்

மெட்ரோ ரயில் பாதை





Chenai Metro Website